(தினமணியின் எல்லா செய்திகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை எனினும்..இந்த தலையங்கம் எனக்குப் பிடித்திருந்தது.அதனால். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அன்றைய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு இருந்ததால் அவரையும் முறைகேட்டுக்கு உடந்தையானவராகக் கருதி வழக்கில் எதிரியாக இணைக்க வேண்டும் என்கிற சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை நிராகரித்து விட்டார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி. ஒரு சிலர் லாபமடைந்தனர் என்பதாலும், அரசுக்குப் பேரிழப்பு ஏற்பட்டு விட்டது என்பதாலும் மட்டுமே ஓர் அரசு ஊழியர் எடுத்த கொள்கை முடிவில் குற்றம் காண முடியாது என்கிறது நீதிபதி ஓ.பி. சைனியின் தீர்ப்பு.
இப்படி தீர்ப்பளித்திருக்கும் அதே நேரத்தில், இன்னொரு கருத்தையும் அந்தத் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். 2001-ல் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்திருந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணய முறையில் மாற்றம் தேவையில்லை என்று அன்றைய தகவல், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவிடம் அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார் என்பதற்கும், அந்த முடிவு பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது என்பதற்கும் தெளிவுகள் இருப்பதாக அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் செயல்படத் தொடங்குவதற்கு முன்பே தங்களது பங்குகளை இன்னொருவருக்கு விற்றதும்கூட அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்குத் தெரிந்துதான் நடந்திருப்பதையும் நீதிபதி ஓ.பி. சைனி ஏற்றுக் கொள்கிறார்.
இவ்வளவையும் தனது தீர்ப்பில் கூறிவிட்டு, அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எந்தவித உள்நோக்கத்துடனும் செயல்படவில்லை என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனைய 17 எதிரிகளின் மீது சிபிஐ தாக்கல் செய்திருக்கும் சாட்சியங்களைப் போல ப. சிதம்பரம் மீது எதுவும் தரப்படவில்லை என்றும் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
நீதிபதி ஓ.பி. சைனியின் தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது. அதில் முக்கியமான கேள்வி, ஏனைய 17 எதிரிகள் மீதும் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவண சாட்சியங்கள் ப. சிதம்பரம் மீது ஏன் இல்லாமல் போனது என்பதுதான். ஆ. ராசாவின் மீது வழக்குத் தொடரப் பிரதமர் அலுவலகத்துடன் போராடி, அது கிடைக்காத நிலையில் நீதிமன்றங்களின் படிகளில் செருப்புத் தேய ஏறி இறங்கிக் கடைசியில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ செயல்படத் தொடங்கிய பிறகுதான் ஆ. ராசா உள்ளிட்ட 17 பேர் மீதும் ஆவணங்களுடனான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய முடிந்தது. சிபிஐ அதிகாரிகளின் பதவி உயர்வை நிர்ணயம் செய்யும் உள்துறை அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர வாய்ப்பளிக்கப்படாமல், அவருக்கு எதிரான சாட்சியங்களை சுப்பிரமணியன் சுவாமியோ, சிபிஐயோ எப்படித் தாக்கல் செய்ய முடியும் என்பதை நீதிபதி ஓ.பி. சைனி ஏன் யோசிக்கவில்லை என்பது தெரியவில்லை.
ப. சிதம்பரத்துக்கு எதிராக சுவாமி தொடர்ந்திருக்கும் வழக்கின் அடிப்படையே, எந்தெந்தக் குற்றங்களுக்காக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறாரோ, அந்தக் காரணங்கள் அனைத்தும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விலை நிர்ணயத்தை அங்கீகரித்த அன்றைய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்துக்கும் பொருந்தும் என்பதுதான். அப்படிப் பார்த்தால், ப. சிதம்பரம் குற்றவாளியல்ல என்பதற்கு நீதிபதி ஓ.பி. சைனி கூறும் வாதம் ஆ. ராசாவுக்கும் பொருந்துமே என்கிற வாதம் எழக் கூடும்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது ஒரு நிர்வாக முடிவு. அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயமும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளைக் கொள்ளை லாபத்துக்கு இன்னொருவருக்கு விற்றதும் சட்டப்படி முறைகேடானதல்ல என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் நீதிபதி ஓ.பி. சைனி. முதலில் ஒரு நிர்வாக முடிவில் நீதித் துறை கருத்துக் கூற முடியுமா என்பது சட்ட வல்லுநர்கள் தெளிவுபடுத்த வேண்டிய ஒன்று. இரண்டாவது, இதே வாதம் ஆ. ராசாவுக்கும்தான் பொருந்தும் என்பதால் அவர் மட்டும் காராகிரகத்தில் அடைக்கப்பட்டுக் கிடப்பானேன்?
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும், அதன் விலை நிர்ணயத்திலும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் கொள்ளை லாபத்தில் தங்கள் பங்குகளை விற்று லாபம் சம்பாதித்ததிலும் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதும், அதனால் அரசுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டிருப்பதும் சிபிஐ நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மை. அதற்கான அடிப்படைக் காரணங்கள் இருப்பதால்தான் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடரவே அனுமதிக்கப்பட்டார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், அரசாங்கம் என்றுதான் கூறுகிறதே தவிர அது தனிக்கட்சி அரசா, கூட்டணி அரசா என்று இனம் பிரிப்பதில்லை. அரசின் முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு அமைச்சரவை கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதுதான் அரசியல் அமைப்பு. இப்படிப்பட்ட ஒரு அமைப்பில், 2ஜி அலைக்கற்றை உரிமத்துக்கான விலை நிர்ணயத்தை அறிவித்த அமைச்சர் ஆ. ராசா குற்றவாளி, ஆனால் அங்கீகாரம் அளித்த அன்றைய நிதியமைச்சரோ, அமைச்சரவையின் முடிவுக்குத் தலைமை வகிக்கும் பிரதமரோ பொறுப்பல்ல என்பதை எப்படி ஏற்க முடியும்?
முறைகேட்டில் சம்பந்தம் இருப்பதற்கான காரணங்கள் இருக்கிறதா என்பதுதான் நீதிபதி ஓ.பி. சைனியின் பரிசீலனையில் இருந்திருக்க வேண்டுமே தவிர அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதல்ல. ஆதாரங்கள் வழக்கு விசாரணையின்போது முன்வைக்கப்படுபவை. உரிமம் வழங்குவதில் ஆ. ராசாவுடன் ப. சிதம்பரத்துக்கும் பங்கு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் நீதிபதி ஓ.பி. சைனி அவர்மீது குற்றம் காண அடிப்படைக் காரணமில்லை என்று கூறியிருப்பது மேல் முறையீட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தோன்றவில்லை.
தீர்ப்புகள் திருத்தப்படக் கூடியவை என்பதற்காகத்தான் மேல் முறையீடு முறையே இருக்கிறது.
4 comments:
தற்போது நடைபெறும் தேர்தலில் இருந்து முதலில் தப்பிக்க வேண்டும். அதுதான் காங்கிரஸின் முதல் நோக்கம். பிரியங்காவின் இந்திராகாந்தி போல் சிகை அலங்காரம் எதற்காக?
அருமையான விரிவான அலசலுடன் கூடிய தலையங்கம்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
வருகைக்கு நன்றி ramalingam
வருகைக்கு நன்றி ramani
Post a Comment