கோவையில் மருந்துக் கடைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து கத்தியைக் காட்டி 100 ரூபாய் பணத்தையும்,
கைக்கடிகாரத்தையும் திருடிய இருவருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து கோவை கோர்ட் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
2010ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இரவு சரவணன் என்பவர் செல்வபுரம் முத்துச்சாமி காலனி பகுதியில் ஒரு மருந்துக் கடைக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை தனிமையான ஒரு இடத்தில் வைத்து ராஜேந்திரன் மற்றும் அஸ்கர் அலி ஆகிய இருவரும் மடக்கினர்.
பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி சரவணன் வைத்திருந்த 100 ரூபாய் பணம் மற்றும் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து சரவணன் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் ராஜேந்திரன், அஸ்கர் அலியைப் பிடித்தனர்.
இருவர் மீதும் கோவை நான்காவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை கடந்த 2 வருடமாக இந்த கோர்ட் விசாரித்து வந்தது.
விசாரணையின் இறுதியில் அப்போது இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
நூறு ரூபாய் பணத்தையும், கைக்கடிகாரத்தையும் திருடிய இருவருக்கு ஜட்ஜ் 7 ஆண்டு தண்டனை கொடுத்துள்ளார் என்ற தகவல் பரவியதும்
கோர்ட் வளாகமே பரபரப்பானது. கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் சாதாரண திருட்டுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று வியப்புடன் கேட்டனர்.
இந்த அதிரடித் தீர்ப்பு குறித்து வக்கீல்கள் சிலர் கூறுகையில், இது சரியான தண்டனைதான். நீதிபதி மிகச் சரியான தீர்ப்பை அளித்துள்ளார்.
அந்த இருவர் மீதும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 392வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது. அந்த சட்டப் பிரிவின்படி,
வழிப்பறிக் குற்றத்தில் ஈடுபடும் நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அதிகபட்சம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
இங்கு திருடப்பட்ட தொகை எவ்வளவு என்பது முக்கியமில்லை. ஒரு ரூபாய் திருடியிருந்தாலும் அதற்கும் கூட இந்த அளவுக்கு
பெரிய தண்டனை கொடுக்க இந்த சட்டப் பிரிவு வகை செய்கிறது. மேலும் கத்தியைக் காட்டி அவர்கள் திருடியுள்ளனர்.
எனவே இது மிகப் பெரிய குற்றம். எனவேதான் இந்த அளவுக்குப் பெரிய தண்டனையை நீதிபதி கொடுத்துள்ளார் என்றனர்.
ம்...பொறந்தா..ஊழல் புரிந்தா..பிறர் சொத்தை திருடினா...ஒரு அரசியல்வாதியாய் இருக்கணும்..அப்பத்தான் தண்டனையிலிருந்து தப்பலாம்...எங்கேயோ ஒரு குரல் கேட்கிறது.
No comments:
Post a Comment