Sunday, March 18, 2012

தினமணி தலையங்கம்...கண்டிப்பாக படிக்கவும்



இந்தியாவில் ஏறக்குறைய பாதி வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. ஆனால், பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைபேசி (பெரும்பாலும் செல்போன்) உள்ளது என்பது 2011   மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள புள்ளிவிவரம்.
 இந்தியாவில் உள்ள வீடுகளின் வகைப்பாடு, வசிப்போரின் வாழ்க்கைத்தரம் ஆகியவைபற்றி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள புள்ளிவிவரம்: இந்தியாவில் உள்ள மொத்த வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாமல் திறந்தவெளியைப் பயன்படுத்துவோர் 49.8% பேர். ஆனால், செல்போன் வசதி பெற்ற வீடுகள் 63.2%. என்ன முரண்!
 கழிப்பறை வசதிகள் இல்லாத வீட்டில் வசிப்போர் திறந்தவெளிகளைத் தங்கள் இயற்கையின்அழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கழிப்பறை வசதி இல்லாத வீடுகளைச் சேர்ந்த 3.2% பேர் மட்டுமே பொது கட்டணக் கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
 தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டாலும், கழிப்பறையைப் பொருத்தவரை ஏறக்குறைய இதே நிலைமைதான். தேசிய அளவில் 49.8% பேர் திறந்தவெளியைப் பயன்படுத்தினால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை 45.7% பேரின் நிலைமை அதுதான்.
 தகவல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளது என்பதற்காக மகிழ்ச்சிகொள்ளும் அதே நேரத்தில், சுகாதாரம் குறித்த அடிப்படை விஷயத்தில் இன்னமும் நாம் பின்தங்கிக் கிடக்கிறோம் என்பது வேதனைதான்.
 இந்தியாவில் உள்ள 47.2% வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி போய்ச் சேர்ந்துள்ளது. 63% வீடுகளுக்கு செல்போன் சென்று சேர்ந்துள்ளது. ஆனால், கழிப்பறை மட்டும் திறந்தவெளியாகவே இருக்கிறது என்றால் இதற்குக் காரணம், அரசாங்கத்தைவிட மக்களின் அறியாமை, அலட்சியம் ஆகியவைதான்.
 பெருநகரங்களில் வசிக்கும் நடைபாதைவாசிகளில் பெரும்பாலோர் கட்டணக் கழிப்பறைகளையே பயன்படுத்துகின்றனர். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம்தான் இன்னும் கழிப்பறை குறித்த விழிப்புணர்வு சென்று சேரவில்லை.
 இந்தியாவில் உள்ள 25 லட்சம் கிராமங்களில் வெறும் 25,000 கிராமங்கள் மட்டுமே கழிப்பறை வசதிகளைக் கொண்டவையாக, திறந்தவெளியைப் பயன்படுத்தாத கிராமங்களாக உள்ளன என்பது மூக்கை மூடிக்கொள்ள வேண்டிய அவமானம்தான்.
 ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி இருப்பதைக் கட்டாயமாக்கவும், கழிப்பறை வசதிகள் இல்லாத வீட்டை, ஒரு குடியிருப்புக்குத் தகுதி இல்லாத இடமாகக் கருதி, குடும்ப அட்டைகள் வழங்கப்படாது என்று அறிவிப்பு செய்வதாலும் இந்தக் குறையை ஒரு சில மாதங்களில் மாற்றிவிட முடியும். ஆனால், கழிப்பறை இல்லாமல் இருப்பது விழிப்புணர்வு இல்லாமையால் மட்டுமல்ல, வசதி இல்லாமையும்கூடத்தான் அதற்குக் காரணம்.
 கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிவறைகள் அமைக்கப்பட்டால் அந்தக் கழிவுகள் தானாகவே மக்கி உரமாகும் வகையில், இரண்டு சேமிப்புத் தொட்டிகள் - ஒரு தொட்டி நிரம்பியதும் மற்றொரு தொட்டிக்குக் கழிவுகளை மாற்றிவிட்டு, நிரம்பிய கழிவுகள் மக்கி உரமாகும் - வசதி கொண்ட கழிப்பறைகளை வெறும் ரூ.5,000-க்கு மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் புதைசாக்கடை இல்லாத பகுதிகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவை. இதில் 50 விழுக்காடு மானியம் வேறு. மீதமுள்ள தொகையை தவணை முறையில் உள்ளாட்சியில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் கட்டவும் வகை செய்யப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் சரியான முறையில் கொண்டுசெல்லப்படவில்லை. அதைத்தான் இப்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பில் நாம் வெளிப்படையாகக் காண்கின்றோம்.
 ஒரு வீட்டுக்கு கழிப்பறை தேவை இல்லை என்ற எண்ணம் கிராம மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது. காலம்காலமாக இருந்து வரும் பழக்கமாக இருந்தாலும், நவீன உலகின் போக்குக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள். இதற்காக அரசு ஒதுக்கிய நிதி, மானியம் அனைத்தையும் சரியான முறையில் உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தவில்லை. கிராமப்புற மக்களுக்கு மானியம் தரப்படுவது பற்றியோ, கழிப்பறையின் இன்றியமையாமை பற்றியோ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் இதில் அக்கறை காட்டவே இல்லை. வாய்ப்புகளை இன்னமும்கூட நழுவவிடுகின்றனர்.
 பொதுக்கழிப்பிடம் அல்லது இலவச சிறுநீர் கழிப்பிடங்களை எடுத்துக்கொண்டால், இதை அடுத்தவரும் பயன்படுத்துவார் என்ற எண்ணமே இல்லாமல், அதை அடுத்தவர் நுழையவும் தகுதியற்றதாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவர்களாக நமது மக்கள் இருக்கிறார்கள். இதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய உள்ளாட்சித் துறைகள் இந்த பொது சுகாதார நிலையங்களை உருவாக்கிய பிறகு, அதன் ஊழியர்களை எட்டிப்பார்க்கவும்கூட செய்வதில்லை.
 ஏலம் விட்டு வருமானம் பெறவும், ஆளும் கட்சிக்கு வேண்டிய ஒருவருக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் அவருக்கு வருமானம் கிடைக்கவும் மட்டுமே பொதுக் கழிப்பறைகள் என்கிற மனப்போக்குதான் காணப்படுகிறது.
 அதனால்தான் கட்டணக் கழிப்பறைகள் அருவருப்பான சூழலில் உள்ளன. இந்தியாவில் உள்ள எந்தக் கழிப்பறை வாசலிலும், உள்ளாட்சி அறிவிப்பு இருக்கும். அதில் கட்டணம் என்பது அழிக்கப்பட்டு இருக்கும். அல்லது அதில் ரூ.1 என்று இருந்தாலும், அங்கே கட்டணம் வசூலிப்பவர் ரூ.4 வசூலிப்பார். இவ்வளவு அதிகத் தொகை செலுத்த மனமில்லாதவர்களும் வழியில்லாதவர்களும் தெருக்களை, வழியோர மறைவிடங்களைப் பயன்படுத்துகிறார்கள். அல்லது அவர்கள் அவ்வாறு கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.
 ஓர் ஆரோக்கியமான நகரத்தின் முதல் அடையாளம் தூய்மையான கழிவறை. அது வீடு என்றாலும் சரி, சாலை என்றாலும் சரி. தெருவுக்கு ஒரு கட்டணக் கழிப்பிடம் அமைத்து அதைத் தூய்மையாகவும் குறைந்த கட்டணத்திலும் நடத்தக்கூட சுதந்திர இந்தியாவால் முடியவில்லை என்றால் வெட்கக்கேடு.
 அதைக்கூட நம்மால் தரமுடியாவிட்டால், எதற்காக மாநகராட்சிகளும், உள்ளாட்சி அமைப்புகளும்?


டிஸ்கி - இன்றைய தினசரியில் ஒரு செய்தி..
கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால்...தாய் வீடு திரும்பிய இளம் பெண்ணுக்கு கிராம சுகாதார விழிப்புணர்வு விருது...மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விருது வழங்குகிறார்.இது போபால் அருகே ஒரு கிராமத்தில் நடந்தது.

3 comments:

Anonymous said...

விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரை

goma said...

மற்றொரு சர்வேயும் பண்ணனும்
திறந்தவெளியில் கழிப்பறை...உபயோகிப்போர்.
மூடிய அறைக்குள் செல்ஃபோன் உபயோகிப்போர் என்று பார்த்தால்....தலை சுற்றும்

Unknown said...

ஒரு முக்கியமான பதிவு இது.ஆனா யாரும் இதை கவனத்திற்கு எடுத்து செயல் படுத்த ஆர்வம் காட்டுவது இல்லை.இதில் 2020இந்தியா வல்லரசு.இதில் ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டிய முக்கியமான மின்சாரம் ஏனோ இதுவரை நமக்கு கிடைப்பதில்லை.இதனால் தொழில் எவ்வளவு நலிவடைகிறது தெரியுமா ?