‘சாம்பு’ நாடகம் பிறந்த பின்புலத்தை விவரிக்கிறார் ‘சாம்பு’ என்.எஸ். நடராஜன். அவர் 1972-இல் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:
திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் கிளப் மிகச் சிறந்த முறையில் நாடகங்கள் நடத்திப் பேரும், புகழும் அடைந்ததற்கு முக்கிய காரணம் திரு.தேவன் எழுதிக் கொடுத்த ‘மைதிலி’, ‘கோமதியின் காதலன்’, மிஸ் ஜானகி’, ‘துப்பறியும் சாம்பு’, ‘கல்யாணி’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘பார்வதியின் சங்கல்பம்’ நாடகங்கள் தாம். இந்த நாடகங்கள் சுமார் 500 தடவைகள் நடிக்கப்பட்டு ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டவை.
அவர் எழுதிய உன்னதப் படைப்பான ‘துப்பறியும் சாம்பு’ தொடர்கதையை நாடகமாக்க முடியுமா என்ற ஐயம் தேவனுக்கு ஏற்பட்டு அவர் என்னிடம் யோசனை கேட்டார். நாங்கள் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, அதை நாடகமாக்க முடியும் என்று முடிவெடுத்தோம். ஆனால் அவர் எனக்கு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, ‘சாம்பு’ பாத்திரத்தை நானே ஏற்று நடிக்க வேண்டுமென்பதுதான் . அதற்கு முதலில் நான் சம்மதிக்கவில்லை. காரணம், அந்த நாடகத்தை நல்ல முறையில் அரங்கேற்ற வேண்டுமானால், பயிற்சியாளன் என்ற முறையில் நான் அவர் எழுத்தோவியத்திற்கு உயிர் ஊட்டவேண்டும். அப்படியிருக்க, நானே பயிற்சியாளனாகவும், கதாநாயகனாகவும் பணியாற்ற முடியுமா என்று திகைத்தேன் ஆனால் அவர் என்னை ஊக்குவித்து அவர் விருப்பத்தைச் சாதித்துக் கொண்டார். எனக்குச் ‘சாம்பு’ என்ற பட்டமும் பெறக் காரணமாக இருந்து, நான் ‘சாம்பு’ நடராஜன் ஆனேன்
(நன்றி - http://s-pasupathy.blogspot.com)