Tuesday, June 30, 2020

#TVR தமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் -8



1928ல் பிறந்தவர் வெங்கட் ரமணி.

இவரது1953ஆம் ஆண்டு கோவிந்தன் எனும் இவர் உறவினர் ஒருவர் திருமணத்திற்கு திருவாரூர் சென்ற இவர் தாத்தாவிடம் Joy this year.Boy next year ' என்று அலங்கார எழுத்துகளில் ஒரு வாழ்த்துமடலை எழுதி கோவிந்தனிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பினார்.

அந்தத் திருமணத்திற்கு விகடன் அதிபர் எஸ் எஸ் வாசனும் சென்றிருந்தார்.அவரிடம் தாத்தா நடேச ஐயர், பேறன் வரைந்திருந்த அழைப்பிதழினைக் காட்டி.."ஏன் பேரன் எழுதியது..எவ்வளவு அழகாக எழுதியிருக்கின்றான் பாருங்கள்" என்று சொன்னதுடன் நிற்காது, "அவனுக்கு உங்க விகடனில் ஒரு வேலைப் போட்டுத் தாருங்களேன்" என்றிருக்கிறார்.

வாசனும், "அதற்கென்ன ..கொடுத்தால் போயிற்று..நாளைக்கு காலை 8 மணிக்கு அனுப்பி வையுங்க" என்றுருக்கிறார்.

உடனே தாத்தா..பேரனுக்கு தந்தையடித்து..வரச் சொல்ல, வெங்கட் ரமணியும் வந்தார்..

அவரைப் பார்த்த வாசன்,''உன் படங்கள் எல்லாம் பார்த்தேன். நன்றாக இருந்தது. தேவனிடம் சொல்லியிருக்கிறேன். நீ நேரே ஆனந்த விகடன் ஆபீசுக்குப் போய் தேவனைப் பார்!'' என்றார் .

அங்கு,தேவனின் அறைக்கு. சற்றுத் தள்ளி ஒரு ஷெட்டில் கோபுலு, சித்ரலேகா, சில்பி, சிம்ஹா, ஸாரதி ஆகிய ஓவியர்கள் இருந்தார்கள். அங்கேயே இவருக்கும் ஒரு மேஜை, நாற்காலி போட்டுக் கொடுத்தார்கள். சுற்றி இருந்தவர்களோ ஓவிய உலகில் பெரிய ஜாம்பவான்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு கொசு மாதிரி இவர் ஒடுங்கி உட்கார்ந்தார்.

இவர் பெயர் வெங்கடரமணி என்பதால், 'ரமணி’ என்ற பெயரில் அந்தப் படத்தை வரைந்திருந்தார். ஆனால், அந்தக் காலத்தில் ரமணி என்று வேறு ஒரு புகழ்பெற்ற ஓவியர் இருந்தார். அவர் பெயர் சுப்பிரமணி. அவர் சுப்பு என்ற பெயரிலும், ரமணி என்ற பெயரிலும் படங்கள் வரைவார். அதனால், இவரை வேறு பெயரில் வரையச் சொன்னார் தேவன். 

''நீங்களே ஏதாவது பெயர் சொல்லுங்களேன், சார்!'' என்று கேட்டார் இவர்.உடன் இவரின் ஆங்கிலப் பெயரில் முதல் எழுத்தையும் கடைசி மூன்று எழுத்துக்களையும் சேர்த்து, வாணி என்று வைத்துவிட்டார்



சில்பி இவர் படம் வரைவதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருப்பாராம். அவர் பார்க்கிறார் என்று தெரிந்ததும் இவருக்கு உள்ளுக்குள் உதறலாக இருக்கும். ஒரு நாள் அவர் இவரைக் கூப்பிட்டு, ''எத்தனை நாளைக்குத்தான் ரூமுக்குள்ளேயே இருந்து வரைவாய்? வெளியே நாலு இடங்களுக்குப் போய் நேரடியாகப் பார்த்து லைஃப் ஸ்கெட்ச் பண்ணு. அப்பத்தான் கை பழகும்'' என்று சொன்னாராம்.. அதன்படியே விகடன் அலுவலகத்தில் அலவன்ஸ் வாங்கிக் கொண்டு வெளியே போய் வரையத் தொடங்கினார். வரைந்ததை மறுநாள் ஓவியர் கோபுலுவிடம் கொண்டு வந்து காண்பிப்பார். அவர் இன்னின்ன இடத்தில் இப்படி வரையணும் என்று சொல்லிக் கொடுத்துத் திருத்தித் தருவாராம்..

ஆர்ட்ஸ் ஸ்கூல் எதிலும் சேர்ந்து இவர் படிக்கவில்லை.சித்திரமும் கைப் பழக்கம் என்பது இவருக்கு சரியாய் இருக்கும்


எங்கே படம் வரையச் சென்றாலும், சில்பிஇவரையும் உடன் அழைத்துப் போவார். அவர் வரைவதை அருகிலிருந்து கவனிக்கச் சொல்வார். கரன்ட் கம்பம், எருமை மாடு, சைக்கிள் ரிக்ஷா என்று கண்ணில் பட்டதையெல்லாம் வரையச் சொல்வார். 'சைக்கிள் ரிக்ஷா தலைகீழாகப் புரண்டிருந்தால் எப்படி இருக்கும்னு வரை, பார்க்கலாம்!’ என்பார்.

'என்ன சார் இது, எப்படி வரைய முடியும்?’ என்பார் வாணி புரியாமல்.

 'சைக்கிள் ரிக்க்ஷா அடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு வரை!’ என்பாராம் சில்பி.. 'ஒரு கதையில் இருவர் சைக்கிள் ரிக்க்ஷாவில் போகும்போது விபத்து ஏற்பட்டு, ரிக்க்ஷா உருண்டு புரண்டுவிட்டது என்று சீன் வந்தால் எப்படி வரைவாய்? அதனால், இப்போதே  வரைந்து பழகிக்கொள்ள வேண்டும்’ என்பாராம். அதே போல், 'ஒரு சிம்னி விளக்கை வரைவதானால், வெறுமே அதை நேராக அப்படியே வரையாதே! படுக்கப்போட்டு வரை. முதுகுப்புறம் இருந்து வரை. இப்படிப் பல ஆங்கிளில் வரைந்தால்தான் அதன் உருவம் மனதில் பிடிபடும்’ என்பாராஒரு நாள் தேவன் இவரைக் கூப்பிட்டு, ஒரு சிறுகதைக்குப் படம் வரையச் சொன்னார். சித்தார்த்தன் என்கிற எழுத்தாளர் எழுதிய 'கோமதியின் நெஞ்சம்’ என்கிற கதை. அதை எடுத்துக்கொண்டு போய் கோபுலுவிடம் கொடுத்து, ''சார், இதுக்கு என்னைப் படம் போடச் சொல்லியிருக்கிறார். எப்படிப் போடணும்னு சொல்லித் தாங்களேன்'' என்று கேட்டார் வாணி

 அவரும் ரஃப் ஸ்கெட்ச் செய்து காண்பித்து, ''இப்படிப் போடு'' என்று ஐடியா கொடுத்தார்.

அதை அப்படியே வாங்கி, அதன் மீதே அழகாக வரைந்து எடுத்துக்கொண்டு போய் தேவனிடம் கொடுத்தார் ''பிரமாதமா வரைஞ்சிருக்கியே!'' என்று பாராட்டினார். அந்த வார ஆனந்த விகடனில் அந்தப் படம் பிரசுரமாயிற்று. ஆனந்த விகடனில் இவர்வரைந்த முதல் படம் அது.

பின்னர் வாணிக்கு ஏறுமுகம்தான்.

தொடர்கதைகள்,சிறுகதைகள்,இவரே ஜோக்ஸ் எழுதி வரைந்த ஓவியங்கள் என விகடனை அலங்ககரிக்கத் தொடங்கின இவரது ஓவியங்கள்.மணியன்,மெரீனா உட்பட பல பிரபலங்களின் படைப்புகளுக்கு இவர் ஓவியம் வரைந்தார்
.

விகடன் வளர்ச்சிக்கு எழுத்தாளர்கள் மட்டுமின்றி..ஓவியர்களும் பெரும் பங்குப் பெற்றனர் என்பதற்கு வாணியும் ஒரு உதாரணம் ஆகும்.
2017ஆம் ஆண்டு அமரர் ஆனார்.

Sunday, June 28, 2020

#TVR தமிழ் இதழை அலங்கரித்த ஓவியர்கள் 7- மாலி

மாலி என்று அறியப்பட்ட மூத்த ஓவியராய் திகழப்பட்ட மகாலிங்கம் ஆனந்த விகடனுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.

ஆனந்த விகடன் என்பது எப்படிப்பட்ட பத்திரிகை..அதன் காரெக்டர் என்ன என்பதில் தொடங்கி இன்றுவரை நம் கைகளில் தவழும் விகடனுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தவர் இவர்தான்.

ஸ்ரீனிவாசன் என்பவரை சில்பியாக மாற்றியவர் இவர்

கோபாலனை, கோபுலுவாக்கியவர் இவர்

நாராயணசாமியை ராஜு என்று ஆக்கியவர்

கிருஷ்ணமூர்த்தி என்பவரை வாண்டுமாமா ( கௌசிகன்) வாக்கி பல குழந்தைகளுக்கான சித்திரக்கதைகளை எழுத வைத்தவர்.

மாலி, அரசியல், சித்திரம், ஃபோட்டோ,நேர்காணல் என அணைத்திலும் திறமையுடையவராய்த் திகழ்ந்தார்.

பிரபல கவிஞர் வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.சிறுவயதில் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவராய்த் திகழ்ந்த இவர்...மாலியின்மீது உள்ள ஆர்வத்தில் அவரைப் போல ஆகவேண்டும் என எண்ணி
தன் நண்பன் சொல்லியபடி தன் பெயரை வாலி என மாற்றிக் கொண்டார்

மாலி,உயிரும், உணர்ச்சியும் கொண்ட சித்திரங்களைப் போல கர்நாடக சங்கீத வித்வான்களை நம் கண்முன் நிறுத்தியவர் ஆவார்,இதற்குமுன் எந்த தமிழ் இதழ்களிலும் இப்படிப்பட்ட ஓவியங்கள் வந்ததில்லை எனலாம்.

27-3-1928ல் சி வி மார்கன் ஒரு ஜோக்கர் விகடனார் படத்தை வரைந்தார்.அதுதான் இன்றைய விகடன் தாத்தாவின் முதல் ஓவியம் ஆகும்.அடுத்த ஆண்டு தாத்தாவின் உருவத்தில் லேசாக மாற்றம் செய்து அவரது நெற்றியில் இருந்த சந்தனத்துக்குப் பதிலாக விபூதி..குங்குமம் இடப்பட்டது.அவர்தான் "விகடனார்" என்பதற்கு அவரது சட்டையில்"ஆனந்த விகடன்" என எழுதப்பட்டது.

நான்கு மாதங்களுக்குப் பிறகு..விபூதி, குங்குமத்திற்குப் பதிலாக நாமம் வரையப்பட்டது..

1932ல் மாலி ஜோக்கர் தொப்பியை எடுத்துவிட்டு விகடனாரைக் குடுமி வைத்த தாத்தாவாக்கினார்.1933ஆம் ஆண்டு செப்டெம்பர் 10ஆம் நாள் உருவம் உருவானது.

இப்படி ஆனந்தவிகடன் என்றாலே..அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியா சக்தியாய் விளங்கியவர் மாலி ஆகும்.

Friday, June 26, 2020

#TVR தமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் - 6- கல்பனா



பல எழுத்தாளர்கள் படைக்கும் பாத்திரங்களை வர்ணிப்பதற்கேற்ப ஓவியங்களை வரைந்து, அவர்களின் படைப்புகளுக்கு அழ்கினை சேர்ப்பவர்கள் ஓவியர்கள்.

ஆனால், எழுத்தாளர்களை அறியும் நம்மால் அதேபோல  ஓவியர்களை அறிகிறோமா? என்பதற்கு, 'இல்லை" என்று வருத்த்ஸ்த்துடனேயே பதிலைத் தரவேண்டியுள்ளது.

அப்படி நாம் மறந்த ஒரு ஓவியர்..கல்கியில் ஓவியங்களை வரைந்து வந்த "கல்பனா" ஆவார்.

வினு வின் கலகட்டத்திலேயே இவரும் ஓவியங்களை வரிந்துள்ளார்.

ஜெகசிற்பியனின் "கிளிஞ்சல் கோபுரம்" "ஜீவ கீதம்"

உமாசந்திரனின்"முள்ளும் மலரும் " (பின்னர் இக்கதை திரைப்படமானபோது..காளி, வள்ளி பாத்திரத்தில் நடித்தவர்கள்..அப்படியே கல்பனாவின் ஓவியத்தில் இருந்தவர்களைப் போலவே இருந்தனர்)

கு அழகிரிசாமியின் "தீராத விளையாட்டு"

கல்கி ராஜேந்திரனின் "ஸைக்கோ சாரநாதன்"

ஆகிய தொடர்களுக்கு கல்பனா ஓவியம் வரைந்துள்ளார்.

அவரைப் பற்றிய அதிக விவரங்கள் தெரியவில்லை.ஏதேனும் புதிதாகத் தெரிந்தவர்கள்பின்னூட்டம் இட்டால்..அவற்றை பதில் சேர்த்துவிடுகின்றேன். 

Thursday, June 25, 2020

#TVRதமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் 5 - வினு



அந்தக் காலக் கட்டத்தில் காஞ்சிமடம் வெளியிட்ட பாவனி அம்மன் படத்தில் குங்குமப் பொட்டினையோ..அல்லது சந்தனைப் பொட்டினையோ தொடர்ந்து வைத்து வழிபட்டால் வேண்டுவன கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்து வந்தது.

அந்த நம்பிக்கையை ஓவியர் வினுவின் கைவண்ணத்தில் உருவான ஆஞ்சனேயர் ஓவியமும் மக்களுக்கு ஊட்டியது.ஆஞ்சனேயரின் வால்..அவரது தலைக்கு மேல் வளைந்து முடிந்த படம் அது.(கீழே புகைப்படம்).கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இப்படம் இருந்தது.

வினு கல்கியின் ஆஸ்தான ஓவியரில் ஒருவராகத் திகழ்ந்தார்.

நான் கல்கி படிக்கத் தொடங்கிய சிறுவயதில் என்னை மயக்கிய ஓவியர் வினு.அவர் ஓவியம் வரைந்த கதைகளைப் படிப்பதில் முன்னுரிமைக் கொடுத்தவன்.

"மலைச்சாரல் மாதவி" என்ற ஆனந்தி எழுதியத் தொடரில் அவர் வரைந்திருந்த மாதவி கொள்ளை அழகு.இன்னமும் அந்த அழகிய முகம் என் மனக்கண்களை விட்டு மறையாத ஒன்று.

வினுவின் கைவண்ணம் சரித்திர ,சமுக, ஆன்மீக தொடர்களில் மட்டுமின்றி குழந்தைகளுக்கான சித்திரத் தொடர்களிலும் மிளிர்ந்தது.

1968-72 கால்கட்டத்தில் பொன்னியின் செல்வன் மீண்டும் வெளியானபோது வினு ஓவியங்களை வரைந்தார்.வந்தியத்தேவன், குந்தவை,நந்தினிவானதி,பூங்குழலி,ஆழ்வார்க்கடியான்,பெரிய பழுவேட்டரையர் என அனைவரின் ஓவியங்களையும் அருமையாய் வரைந்திருந்த வினுவை வாழ்த்த வார்த்தைகளே இல்லை எனலாம்.

மேலும் ஜெகசிற்பியனின் "பத்தினிக் கோட்டம்",,கௌசிகனின் "பாமினிப் பாவை",அகிலனின் "கயல்விழி",நாபாவின் குறிஞ்சி மலர்,பொன் விலங்கு,சத்திய வெள்ளம்,ர சு நல்லபெருமாளின் "கல்லுக்குள் ஈரம்"..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..வினு வரைந்த தொடர்களின் வரிசையை.

ராஜாஜியின் மகாபாரதம், ராமாயணம்..மற்றும் ரா.கணபதியின் "காற்றினிலே வரும் கீதம் ஆகியவை வினுவின் கைவண்ணத்தில் மிளிர்ந்தன.

குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை வினு. வீர விஜயன்,நரிக் கோட்டை,மரகதச் சிலை, 007 பாலு போன்ற ஏராளமான சித்திரக்கதைகளுக்கு ஒவியம் இவரே.

பூந்தளிர் சிறுவர் இதழில் ஆனந்தி எழுதிய சித்திரக் கதைகளின் ஓவியர் இவரே.

இதையெல்லாம் எழுதும் போது..இன்றைய சிறுவர்கள்/இளம்தலைமுறையினரின்  இதையெல்லாம் இழந்து விட்டனரே என்ற வருத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

Wednesday, June 24, 2020

#TVRதமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் 4 -கோபுலு






1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம்நாள் தஞ்சாவூரில் பிறந்தவர் கோபாலன்.இளம் வயதில் ஓவியத்தின் மீதான ஆர்வத்தால் குடந்தை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்தி அவற்றில் கார்ட்டூன் வரைந்தார்.மாலியின் ஓவியங்களால் லவரப்பட்டு அவரை குருவாக ஏற்றுக்கொண்டார்.1941ஆம் ஆண்டு மாலியை சந்தித்து அவரது ஆதரவில் ஓவியர் ஆனார்.திருவையாறு தியாகராயரின் வீட்டில் அவர் பூஜை செய்த இராமர் பட்டாபிஷேகப் படத்தை அங்கிருந்தே நேரடியாக வரையச் சொன்னார் மாலி.1942ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இந்த ஓவியம் இடம் பெற்றது.கோபாலனை கோபுலுவாக்கினார் மாலி.

1945 முதல் ஆனந்த விகடனில் முழுநேரப்பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் அங்கு பணி புரிந்தார்.இவரின், ஆனந்தவிகடன் அட்டைப்பட ஜோக்குகள் பிரபலமானவை.நாடு சுதந்திரம் அடைந்த போது, அதைக் கொண்டாடும்விதமாக ஆனந்த விகடன் அட்டைப்படத்தை வரைந்தார்.

தேவனின் துப்பறியும் சாம்பு சித்திரக் கதைகளுக்கும் அவரது ஏனைய புதினங்களுக்கும் ஓவியங்கள் வரைந்தார்.கொத்தமங்கலம் சுப்புவின்,ராவ் பகதூர் சிங்காரம், தில்லானா மோகனாம்பாள் புதினத்துக்கு ஓவியங்கள் வரைந்து உயிரூட்டினார்.விகடன் ஆசிரியர் சேவற்கொடியோன் என்ற பெயரில் எழுதிய "உன் கண்ணில் நீர் வழிந்தால்" ,சாவியின் வாஷிங்டனில் திருமணம்.விசிறிவாழை,வழிப்போக்கன் தொடர்களுக்கு உயிரோட்டமுள்ள கேரிகேச்சர்-களை வரைந்து புகழ்பெற்றார். எழுத்தாளர் சாவி எழுதிய பயண இலக்கியத் தொடருக்காக அவருடன் இணைந்து அஜந்தா குகைகள்,எல்லோரா,தில்லை,ஜெய்ப்பூர் மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களுக்கு சென்றார்.

இருபதாயிரம் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளை வெளிக் கொணர்ந்துள்ளார்.

ஜெயகாந்தனின், ஒருமனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சிலநேரங்களில் சில மனிதர்கள், பாரீசுக்குப் போ, ஜெகசிற்பியனின் ஆலவாய் அழகன்,திருச்சிற்ரம்பலம், நா பார்த்தசாரதியின் நித்திலவல்லி ஆகியவற்றிற்கும் இவர் ஓவியமே!

1963இல் பத்திரிக்கைத் துறையிலிருந்து விளம்பரத் துறைக்கு மாறினார். 1972 ஆம் ஆண்டில் கோபுலு ஆட் வேவ் அட்வெர்ட்டைசிங் என்ற பெயரில் சொந்த விளம்பர நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். குங்குமம் இதழுக்கும், சன் தொலைக்காட்சிக்கும் சின்னங்களை வரைந்து கொடுத்தார். பின்னர், விளம்பரத் துறையில் இருந்து விலகி,  கல்கிஅமுதசுரபி, ஆனந்த விகடன், குங்குமம் ஆங்கியவற்றுக்கு ஓவியங்கள் வரைந்தார்.ஆமுதசுரபியின் தீபாவளிமலர்களுக்கு முகப்பு  அட்டையினை தொடர்ந்து வரைந்தார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது,முரசொலி விருது,எம் ஏ சிதம்பரம் செட்டியார் விருது,பகடிப்பட ஓவியர்களுக்கான இந்தியக் கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றார் இவர்

ஸ்ட்ரோக் வந்து மருத்துவமனையில் இவர் இருந்த போது நண்பர்களிடம்"என் பாணியை கோபுலுவின் ஸ்ட்ரோக் என்பார்கள்.இப்போது கோபுலுவுக்கே ஸ்ட்ரோக் வந்துவிட்டது"என்றாராம். வலதுகைதானே வரைய முடியாது, இடது கையால் வரைகிறேன் என பின்னர் ஓவியங்களை வரைந்தார்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் நாள் அமரர் ஆனார்.

Tuesday, June 23, 2020

#TVR தமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள்..சில்பி - 3





1919ஆம் ஆண்டில் நாமக்கல்லில் பிறந்தவர் ஸ்ரீனிவாசன்.இளம் வயதிலேயே ஓவியத்துறையிலேயே  அதிகம் ஈடுபாடு கொண்டவராய்த் திகழ்ந்தார்.

தேசியக் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஒரு மிகச் சிறந்த ஓவியரும் கூட.அவர் ஸ்ரீனிவாசனின் திறமைகளைப் பார்த்து, அவரை சென்னை எழும்பூரிலுள்ள ஓவியக் கலைக் கல்லூரியில் சேர்த்தார்.

ஆறாண்டுகாலப் பயிற்சியில், அவரது ஆர்வத்தையும், தகுதியையும் கண்ட கல்லூரி முதல்வர் திரு டி பி ராய் சௌத்திரி, அவரை இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே நான்காம் ஆண்டிற்கு உயர்த்தினார்.பேனாவும், மையும் கொண்டு எழுதும் சித்திரக்கோடுகள் ஸ்ரீனிவாசனுக்கு எளிதில் கைவந்தன.மேல்நாட்டு ஓவியர்கள் பலரையும் மிஞ்சும் வகையில் அவரது ஓவியங்கள் இருந்தன.

ஸ்ரீனிவாசன், மாணவனாய் இ ருந்தபோதே ஓவியர் "மாலி" அவர்களின் கேலிச் சித்திரங்களால் மிகவும் கவரப்பட்டார்.அதேபோல ஸ்ரீ னிவாசனின் ஓவியங்கள் மாலியையும் கவர்ந்தன. இதுவே..இவர்கள் இருவரும் ஆனந்த விகடனில் 22 ஆண்டுகள் பணிபுரியும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தன எனலாம்.

ஸ்ரீனிவாசனுக்கு இயல்பாகவே   முகங்களைத் தீட்டுவதிலும், கட்டிடங்களை ஓவியமாக்குவதிலுமே அதிக ஆர்வம் இருந்ததால், அதைப் பயன் படுத்திக் கொள்ள விரும்பிய மாலி, ஸ்ரீனிவாசனுக்கு "சில்பி" எனும் பெயரினைச் சூட்டி, தெய்வ வடிவங்களையும்,திருக்கோயில்களையும் தீட்டும் பணிக்கு அவரை ஆயத்தம் செய்தார்.

கல்லில் சிற்பி செதுக்கிய சிற்பங்களுக்கு மூன்று பரிமாணங்கள்..அதை சில்பி வரையும் தெய்வச் சிற்பங்களில் காணமுடிந்தது.

தெய்வத்தின் அருள் முகத்தை எப்படி இவ்வளவு தெளிவாக..தெய்வீகமாக வரைய முடிகிறது என்ற கேள்விக்கு சிற்பியின் பதில், "வண்ணத்தின் கலவைகளை சரியான அளவில் அமைத்துக் கொள்வதுதான்..என் செயல்.காட்சி கொடுக்கும் அந்த தெய்வந்தான் என் விரல்களோடு இணைந்து தன்னை எழுதி வைத்துக் கொள்கிறது.படைப்பின் முழுமைக்கும் காரணம் அந்தப் பரம் பொருள்தான்.நான் வெறும் கருவி!அவ்வளவுதான்.."

கர்ப்பகிருஹத்திலுள்ள மூல மூர்த்தியை வரையும் முன், அதன் ஆபரணங்களைத் தனியே ஒரு தாளில் முதலில் வரைபட நகல் எடுத்து,அந்தந்தக் கற்களின் வண்ணங்களையும் குறித்துக்கொண்டு மூர்த்தியைப் பூர்த்தி செய்கையில் அந்தநத ஆபரணங்களை வரைந்து அதனைத் தானே இறைவனுக்கு அணிவிப்பது போல பரவசமடைவார்.

தமிழகத்தில் இவர் பயணம் செய்யாத கோயில்களே இல்லை எனலாம்.1947 முதல் 1960 வரை இவர் வரைந்த ஓவியங்கள் "தென்னாட்டுக் கலைச் செல்வங்கள்" என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வாரம் தோறும் வெளி வந்தன.

ஒவ்வொரு ஆலயத்தை வரையும் முன் அந்த ஆலயத்தைச் சுற்றி வலம் வருவார்.எந்தக் கோணத்தில் ஆலயம் முழுதாகவும் தெரிகிறது என்பதை உறுதி செய்து கொள்வார்.பின்னர், கூட்டமில்லாத பகல் நேரத்தில் ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றத்தை வரைவார். உட்புறம் இருக்கும் தெய்வத் திருவுருவங்களை பெரும்பாலும் இரவுப் பொழுதில்தான் வரைவார்.அந்நாட்களில் கர்ப்பக்கிரகங்களில் மின்விளக்குகள் கிடையாது.சிறிய திரிவிளக்குகளே இருக்கும்.அவற்றின் மங்களான விளக்கொளியில் உருவங்களை உற்று நோக்கி வரைவார்.

படங்களை வரைந்து முடிந்த பின்னர் காஞ்சி பரமாச்சாரியிரடம் எடுத்துச் சென்று அவரது பூரண ஆசியுடன் வீட்டுக்குக் கொண்டு வந்து விசேஷ பூஜைகள் செய்வார்.

ஆனந்த விகடனில் இருந்து விலகிய பின்பு பவன்ஸ் ஜர்னலில் பணிபுரிந்தார்.மேலும் கலைமகள்,தினமணி கதிர்,இதயம் பேசுகிறது,அமுதசுரபி ஆகிய பல தமிழ்ப் பத்திரிகைகளிலும் அவர் நிறைய கோயில் சிற்பங்களை வரைந்துள்ளார்.

சிற்பியின் மனைவி பத்மா சிறுவயதிலேயே 1968ல் அமரர் ஆனார்.அவர்களுக்கு மகாலிங்கம் என்ற மகனும், சாரதா எனும் பெண்ணும் உள்ளனர்.

சில்பி...தனக்குப் பின் ஒரு சீடனை நீண்ட நாட்கள் தேடிக் கொள்ளவில்லை.1981 ஆம் ஆண்டு கிரிதரன் எனும் சிறுவன், அவனது தந்தையுடன் அவரைக் காண வந்தான்.

அச்சிறுவனே பத்மவாசன் எனும் பெயரில் ஓவியங்களை வரைபவர் ஆவார்.

Monday, June 22, 2020

#TVRதமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் 2 -கே.மாதவன்





1906ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்தவர் கே.மாதவன்.

இவரது தந்தை கேசவன் ஆசாரி தாய் காளியம்மாள் ஆவர்.

இவரது தாத்தா ஸ்ரீ அனந்தபத்மனாப ஆசாரி, திருவாங்கூர் அரசபரம்பரையினரின் ஆதரவினைப் பெற்று,அவர்களின் அரண்மனையினைப் பராமரிக்கும் பணியினையும், ஸ்ரீ பத்மனபசுவாமி கோயிலை பராமரிக்கும் பணியினையும் மேற்கொண்டு வந்தார்.இவரது மாமா கலைப்பள்ளி ஒன்றிற்கு பிரினிசிபாலாய் இருந்துவந்தமையால்..ஆரம்பகால கல்வியினை அங்குக் கற்றார்.

இவரது அபாரத் திறமையினைக் கண்ட இவரது தமையனார், இவரை சென்னைக்கு அனுப்பினார்.

சென்னையில் பிரபலமாய் இருந்த கன்னையா நாடகக்குழுத் தலைவர் கன்னையாவின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.அக்குழுவினர் நாடகங்களுக்கு படுதாக்களை வரையும் பணியினை ஏற்றார்.

பின்னர்,என் எஸ் கே நாடகக்குழு,டி கே எஸ் குழு ஆகியவற்றிற்கும் சீன் வரையும் பணி இவரைச் சேர்ந்தது.

பின்னர் ஜெமினி வாசன் இவரை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தார்.விளம்பரத்திற்காக இவர் வரைந்த பேனர்கள் எங்கும் பேசப்பட்டன.ஜெமினி வாசன் இவரை "Father of Movie Banners" என அறிவித்தார்.

இயற்கியச் சித்திரங்கள்,புராண சித்திரங்கள்,சரித்திரச் சித்திரங்கள் என தனி ஆளுமையினைப் பெற்றார் மாதவன்.

ஆனந்த் திரையரங்க உரிமையாளராய் இருந்த ஜி.உமாபதி நடத்திவந்த் "உமா" என்ற பத்திரிகைன் முகப்பு அட்டைகளை வரைந்தார்.

உமா, முத்தாரம்,கலைமகள்,காவேரி,சாவி,கல்கி, ஆனந்தவிகடன், அமுத சுரபி,தாமரை ஆகிய அனைத்து பத்திரிகைகளிலும் இவரது ஓவியங்கள் வந்தன.இவர் ஓவியம் இல்லா தீபாவளி மலர்களே இல்லை என்ற நிலை.

நாடக திரைசீலைகள் (சீன்), சினிமா பேனர்கள், வாழ்த்து அட்டைகள்,காலண்டர் ஆர்ட்ஸ் என எல்லாவற்றிலும் மாதவன் கோலோச்சினார்

முதல் உலகத் த்மிழ் மகாநாட்டு மலர் முதல்,வாழ்த்துஅட்டை வரை மாதவனிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவர் வரைந்த பிரபலத் தலைவர்கள், காந்தி,நேரு,இந்திரா காந்தி,ராஜாஜி, காமராஜர்,அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் படங்க
ள் ராஜாஜி ஹாலில் மாட்டப்பட்டன.

இவரது புகழ் சிங்கப்பூர்,மலேஷியா, ஸ்ரீ லங்கா, லண்டன் எனப் பரவின.

இவர் வரைந்த ஓவியங்கள் ஆனந்த் திரையரங்கையும் அலங்கரித்தன.

முதல்வராய் இருந்த அண்ணா,இவருக்கு "ஓவிய மன்னர்" என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தார்.

1977ஆம் ஆண்டு அமரர் ஆனார் மாதவன்.

ஓவியர் மணியம்













டி யூ சுப்பிரமணியம் என்பவர் 1924ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் பிறந்தவர்.கல்கி பத்திரிகையின் தொடக்கம் முதல் அப்பத்திரிகையின் பிரதான ஓவியர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

கல்கியின் "பொன்னியின் செல்வன்","சிவகாமியின் சபதம்" ஆகிய புதினங்களுக்கு மணியம் எனும் பெயரில் ஓவியம் வரைந்தார்.அந்தப் புதினங்களின் பாத்திரங்கள் ஒவ்வொருவரையும் அருமையாக, வேறுபடுத்தி வரைந்த பெருமைக்குரியவர்.

இதிலென்ன பெருமை என்கிறீர்களா?

பொன்னியின் செல்வன் நவீனம் கல்கி பத்திரிகையில் 1950ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி இதழில் ஆரம்பித்து, 1954வரை வெளி வந்தது.அது நடைபெறும் இடங்களாக கல்கி எழுதிய இடங்களுக்கு எல்லாம் கல்கியுடன் மணியமும் சென்று..அந்தந்த இடங்களுக்கான சிற்பங்களை வரைந்தார்.அப்புதினத்தில் மொத்தம் 42 முக்கியக் கதாபாத்திரங்கள்.ஒவ்வொரு பாத்திரத்தையும்..பார்த்ததும்..இது இவர்தான் என நாம் உணரும் வண்ணம் வேறுபடுத்தி வரைவது என்பது சாமான்யமா? அதித்தவிர உதிரி பாத்திரங்கள் வேறு.

பொன்னியின் செல்வன்   மீண்டும் கல்கியில் வந்தபோது..மணியம் மீண்டும் ஒரு முறையும்,வினு ஒரு முறையும், பத்மவாசன் ஒருமுறையும்வேதா ஒருமுறையும் ஓவியம் வரையும் பொறுப்பினை ஏற்றனர்.ஆனால்..அவர்கள் மணியம் வரைந்த மூல ஓவியத்தை வைத்தே வரைந்தனர்.

அதை விடுத்து கல்கி பத்திரிகையில் வெளி வந்த பல சமூக/சரித்திர நாவல்களூக்கு மணியம் ஓவியராய் இருந்துள்ளார்.

’பொன்னியின் செல்வன்’ நூலின் முன்னுரையில் இராஜாஜி, ஓவியர் மணியத்தின் ஓவியங்கள் நல்லவர்களையும் திருடத் தூண்டும் அளவு சிறப்பாக உள்ளதால், நூல்களை பத்திரமாக பாதுகாக்கும்படி நூலகர்களையும், புத்தகத்தை படித்துவிட்டு திருப்பித் தர வாடகைக்குக் கொடுப்பவர்களுக்கும் நகைச்சுவையாக அறிவுறுத்தும் பெருமை பெற்றவை இவரது ஓவியங்கள்.என்றுள்ளதே இவர் ஓவியத்துக்கு கிடைத்துள்ள பெரிய சான்றிதழ் அல்லவா?

கல்கி தீபாவளி மலர்கள் இவரது ஓவியத்தை முகப்பு அட்டையாகக் கொண்டு வந்தன.நாடு சுதந்திரம் அடைந்து வந்த கல்கி இதழில் பொருளடக்கம் பகுதியில் அவர் வரைந்ததைப் புகைப்படமாக கீழே கொடுத்துள்ளேன்.மற்றொன்று பொன்னியின் செல்வனின் ஒரு காட்சி பத்திரிகையின் அட்டையில் ஓவியமாக வந்துள்ளது.

ராஜாஜி, கல்கியில் எழுதி வந்த "சக்ரவர்த்தித் திருமகன்" என்ற வால்மீகி ராமாயணத்திற்கு மணியம் வரைந்த ஓவியங்கள் போற்றப்பட வேண்டியன ஆகும்.

கல்கியை விடுத்து, பகீரதன் நடத்தி வந்த "கங்கை" எனும் பத்திரிகையிலும் ஓவியங்கள் வரைந்துள்ளார்.

1968 தனது 44ஆம் வயதில் அமரர ஆனார்

இவரது மகன் மணியம் செல்வனும் ஓவியர் ஆவார்.


Saturday, June 20, 2020

அப்பா - 4

கடந்த 3 பதிவுகள் அப்பாவைப் பற்றிய பொதுவான விஷயங்களை எழுதினேன்..இனி..என் அப்பா பற்றி..

அன்றைய பம்பாயில் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தார் அப்பா.பின்..அக்கம்பெனி மூடப்பட சென்னை ,எண்ணூரில் அசோக் மோடார்ஸ் (இன்றைய அஷோக் லெய்லண்ட்)..அடுத்து தன்னுடன் வேலை செய்த பம்பாய் நண்பர்கள் அம்பத்தூர் டி ஐ சைக்கிள்ஸ் வேலை செய்வதை அறிந்து அங்கு மாறினார்.

குடும்பம் அம்பத்தூருக்குக் குடி பெயர்ந்தது.

எங்களது படிப்பெல்லாம் அம்பத்தூரில்.

அப்பாவுக்கு நல்ல சம்பளம் வந்தாலும், குடும்பம் பெரியது.வரவுக்கும்..செலவுக்கும் சரியாகவே இருந்தது.உண்மையைச் சொல்ல வேண்டுமானால்..வறுமைப் பேய் எங்கள் குடும்பத்தைவிட்டு ஓட விரும்பவில்லை.

ஆனாலும்..அப்பா...அது எல்லாம் தெரியாமல் எங்களை வளர்த்தார்.நாங்கள் கேட்டது உடனே கிடைக்காது..ஆனால் கண்டிப்பாக சில நாட்களில் கிடைத்துவிடும்.

பள்ளி படிப்பத் தவிர்த்து தினமும் ஹிந்து பத்திரிகை படிக்க வேண்டும் என்றார்.அன்று மாலை அலுவலகம்விட்டு வந்ததும், அன்று தினசரியில் வந்த செய்திகளை அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கண்ணன்,கல்கண்டு, கல்கி,குமுதம், ஆனந்தவிகடன், கலைமகள்,அமுதசுரபி என எல்லா பத்திரிகைகளூம் வாங்கினார் (தன் சக்திக்கு மீறி).எங்களையும் படிக்கச் சொல்லுவார்.அம்மாவும்  அதற்குத் தடையாய் இருந்ததில்லை.

இன்று ஓரளவு என்னால் எழுத முடிகிறது என்றால் அது எனக்கு என் தந்தை போட்டப் பிச்சை.இந்த வரிகளை..கண்களில் கண்ணீர் கொப்பளிக்க எழுதுகிறேன்.

அடிக்கிற கைகள்தான் அணைக்கும் என்பார்கள்.சிறு தவறு செய்தாலும் அப்பாவால் பொறுக்கமுடியாது.கத்துவார்..கண்டிப்பார்..சில வேளைகளில் அடித்தும் இருக்கிறார். ஆனால்..அதே கைகளால் அணைத்தும் தன் பாசத்தைக் காட்டியுள்ளார்.குழந்தைகளிடம் கோபம் இருப்பது போல நடிப்பார்..எங்களுக்குப் பின்னால் எங்களைப் பற்றி அம்மாவிடம் சொல்லிச் சொல்லி மகிழ்வார்.

கோபிக்கும் போதெல்லாம், கண்டிக்கும்போதெல்லாம், மனம் அப்பாவை வெறுக்கும்..ஆனால்..நான் தந்தையானதும்தான்,  கோபம் வரும் அப்பாவை புரிந்து கொள்ள முடிந்தது என்னால்..

மரணம் தவிர்க்க முடியாதது உயிரினங்கள் அனைத்துக்கும்.

நமக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த, தியாகச் செம்மல்களான தந்தையும்,தாயையும்..இயற்கை என்றாவது நமக்கு மீண்டும் காட்டலாமே..
 என்ற கோபம் இயற்கையின் மேல் இருக்கத்தான் செய்கிறது.

இது ஒரு பைத்தியக்காரத்தனமாய்த் தோன்றலாம்..ஆனால்..அனைவருக்கும் இந்த ஆசை இல்லாமல் போகாது.

Friday, June 19, 2020

அப்பா- 1

"அப்பா"க்கள் மிகவும் பாவம்.

அம்மாவிற்குக் கொடுக்கக்கூடிய பாசத்தில் பாதியளவும் அப்பாக்களுக்கு மகன்கள் கொடுப்பதில்லை.இதை..அவர்கள் அப்பாவாகும் போதுதான் உணருகிறார்கள்.

பத்துமாதம் அன்னை கருவில் சுமக்கிறாள் குழந்தையை.அது உண்மை.அது இயற்கையும் கூட.ஒவ்வொரு மக்கப்பேறின் போதும் உடலில் ஒரே நேரம் 22 எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் எவ்வளவு வேதனையோ, அவ்வளவு வேதனையை ஒரு அன்னை அந்த நேரத்தில் அனுபவிக்கிறாள்.அவளுக்கு ஒவ்வொரு மகப்பேறும் ஒரு மறுபிறவிதான்.இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஆனால்..தந்தையின் பங்கு வாழ்க்கையில் என்ன? வாழ்நாள் முழுதும் அவர் தன் பெற்ற மழலைகளை நெஞ்சில் சுமக்கிறார்.

அவனுக்காக,அவளுக்காக..அவர் எதிர் காலத்திற்காக உழைக்கிறார்.ஒளிமயமான அவர்கள் வாழ்விற்காக நல்ல கல்வியினை அளிக்கின்றான்.தன் சக்திக்கு மீறி அவர்களை செலவு செய்து படிக்க வைக்கின்றான்.கடனே வாங்காதவன் வாழ்நாள் கடனாளி ஆகின்றான்.

இப்படியெல்லாம் தன் குடும்பத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைக்கும் அவனுக்கோ அதற்கான அதிகாரம் குறைவாகவே உள்ளது.

மகனிடம் மனம் விட்டு அவனால் பேச முடிவதில்லை.

மகனும், தாயிடம் பேசும் அளவோ, இல்லை தாயிடம் இருக்கும் பாசத்தின் அளவோ தந்தையிடம் வைப்பதில்லை.

இது தந்தையர் வாங்கி வந்த வரம்.

(தொடரும்)

அப்பா - 2

கடல்..கரையில் ஆரவாரத்துடன் அலைகளாக வந்து..வந்து ஆர்ப்பரிக்கிறது.

ஆனால்..ஆழ்கடல்..எவ்வளவு ஆழம் என தெரியாமல்..ஆரவாரம் இன்றி கிடக்கிறது.

தந்தையும்..அப்படித்தான்..பார்க்க சந்தோஷமாக ..அலைகடல் போல் ஆர்பரித்துக் காணப்பட்டாலும்..அவர் ஆழ்மனதில்..குடும்பத்தைப் பற்றி, தம் மக்கள் பற்றி..எவ்வளவு பொறுப்புகள், சிந்தனைகள்,ஆசைகள், தியாகங்கள் ஓடிக்கொண்டிருக்கும் தெரியுமா?

அதன் ஆழம் கடலாழம் போல..

குடும்பத்தை ஒரு பெரிய தழைத்தோங்கும் மரத்துக்கு ஒப்பிட்டால்..அம்மரத்தைத் தாங்கிப் பிடிக்கும் வேர் நம் கண்களுக்குத் தெரியவில்லை.மரத்தின் அழகே தெரிகிறது.ஆம்..தந்தை மரத்தின் வேரினைப் போலத்தான்.

ஒரு அழகான வீடு கட்டுகிறோம்.அந்த அழகினை அனைவரும் வந்து ரசிக்கிறார்கள்.அருமையான் பிளான்..அழகாய் மாடி, படுக்கை அறை, சமையல் அறை, பூஜை அறை என்றெல்லாம் பாராட்டப்படும் அவ்வீட்டினை சுமந்து நிற்பது கண்ணுக்குத் தெரியா அஸ்திவாரம்.அந்த அஸ்திவாரம் ஆட்டங்கண்டால்? என்னவாகும்.
தந்தையும்..அழகிய குடும்பத்தின் அஸ்திவாரம் போலத்தான்.

சுமைதாங்கிகள் சுமையின் பாரத்தைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.அப்பாவும் குடும்பத்தின் சுமைதாங்கி.

கண்ணின் இமை போன்றவர் அப்பா..கண்களைக் காக்க வேண்டிய இமையைக் காப்பது யார்?

இப்படி அப்பாக்களின் பெருமையை சொல்லிக் கொண்டேப் போகலாம்.

(தொடரும்)

Thursday, June 18, 2020

அப்பா - 3

ஒரு பெரிய கருங்கல்..

அதை எடுக்கின்றான் ஒரு சிற்பி.உளியால் அடித்து..அடித்து..செதுக்கித் செதுக்கி ஒரு அழகான சிலையாக வடிக்கின்றான்.பார்ப்பவர் வியக்கின்றனர்.தெய்வத்தன்மை உள்ளதாக அனைவராலும் போற்றப்படுகின்றது.

தந்தையும் அப்படித்தான்.தன் மகனிடம் உள்ள திறமையை உணர்கிறார்.இவனை உருவாக்கும் விதத்தில் உருவாக்கினால்..பெரிய ஆளாய் வருவான் எனத் தோன்றுகிறது.அந்த சிற்பியினைப் போல ஆகிறார் அப்பா..

ஆனால்.அதை உணராது..அவர் சொல்வதைக் கேட்காது..காயப்படுத்துகிறோம்.அப்போது அதைத்  தவறு என நாம் உணர்வதில்லை.

தூக்கி வளர்த்தவனை..நம்மை ஆக்கி விடப்போகிறவரை..பாசத்துடன் அணுக மறுக்கிறோம்.

நம் பெயருக்கு முன்னால் அவன் எழுத்தைத்தான் இனிஷியலாய் போட்டுள்ளோம் என்பதை மறக்கின்றோம்.

பெற்றதுடன் நில்லாது,நமக்கு கல்வியினையும் தந்து,நம்மைச் சுற்றியுள்ளோர் நம்மை மதிக்கும் படியும் செய்கின்றார் தந்தை.

உளியின் அடிகளைத் தாங்கியப் பின்னர்தான் ஒரு கல்லினால் வணங்கும்  தெய்வசிற்பமாக முடிகிறது.அதுபோல, ஒரு தந்தையின் கண்டிப்பினால்தான் அவனால் நல்ல குடிமகனாக ஆக முடியும்.

நம்மை செதுக்கி செதுக்கி அழகான, அன்பான, பொறுப்புள்ள குடிமகானய் மாற்ற..அந்த தந்தை தன் வாழ்நாளில் செய்யும் தியாகங்கள் எவ்வளவு..எவ்வளவு?

(தொடரும்)   

Thursday, June 4, 2020

வள்ளுவர் இலக்கியவாதியா?

இந்த வள்ளுவர் இருக்கிறாரே..சரியான புரியாத புதிராய் இருந்திருப்பார். என்றே தோன்றுகிறது

ஏன் சொல்கிறேன் என்றால்..ஏற்கனவே குறள் ஒன்றே முக்கால் அடி..அதையும் புரிந்து கொள்ள முடியாதபடி சொல்வதில் வல்லவர்.

முதல் இலக்கியவாதி இவராய்த்தான் இருந்திருக்க வேண்டும்.

பின் பாருங்களேன்..இந்த  திருக்குறளை..

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது (101)

இதைப் படிப்பவர்களுக்கு , அது என்ன செய்யாமல் செய்த உதவி .ஒரு உதவியை..செய்யாமல் எப்படி செய்ய முடியும் ?எனக் குழப்பம் ஏற்படும்

ஒரு சிறு  சம்பவத்தின் மூலம் விளக்குகின்றேன்..

கந்தனுக்கு பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டிய கடைசி நாள்.ஐநூறு ரூபாய் குறைகிறது.மணியினிடம் அதிகப்படியாக ஆயிரம் ரூபாய் இருந்தது.ஆனாலும், கந்தன் கேட்டதற்கு தன்னிடம் பணமே இல்லை என்றுவிட்டான்.இங்கு கந்தனுக்கு,மணி உதவவில்லை

பிறிதொரு சமயம், மணிக்கு உடல்நலமில்லை.உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.கையிலோ காசில்லை.அப்போது கந்தனிடம் பணம் இருக்க, கந்தன் "மணி தனக்கு உதவி செய்யாத போதும் அவனுக்கு  உதவினான்"

இதுதான் மணி செய்யாமல் கந்தன் அவனுக்கு செய்த உதவி

இதைத்தான் வள்ளுவர்.. மேற்கண்ட குறளில் சொல்லியுள்ளார்.

முன்னர் உதவி செய்யாதவர்க்கு ஒருவன் செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும்,விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடகாது.

Wednesday, June 3, 2020

வள்ளுவர் பெண்களைப் போற்றவில்லையா - 7

இன்று சொல்ல்ப போகும் திருக்குறள்.."தெய்வம் தொழாஅள் " போல ஒன்று.

இந்தக் குறளையும் சொல்லி, பெண்ணியம் பேசுவோர், வள்ளுவர் பெண்களை இழிவுப் ப்டுத்துகிறார் என்பார்கள்.

அக்குறளைப் பார்க்குமுன்..திருவாசகப் பாடல் ஒன்றினைப் பார்ப்போம்..

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

பொருள்-

குழந்தைக்கு வேண்டிய பாலை எப்போது தர வேண்டும் என்று நினைத்து நினைந்து தருபவள் தாய். அந்த தாயை விட என் மேல் அன்பு செலுத்தி, நீ என்னுடைய உடலை உருக்கி, எனக்குள் இருக்கும் ஒளியை பெருக்கி, அழிவு இல்லாத தேனினை தந்து, வெளியில் இருந்த செல்வமான சிவ பெருமானே, நான் உன்னை தொடர்ந்து வந்து இறுக்கப் பிடித்துக் கொண்டேன்.


அது ஒருகைக்குழந்தை.அது பசிக்கு அழும்போது..தாய்க்கு அவளறியாது தாய்மை அவள் மார்பகங்களில் பாலினை சுரக்க வைக்கின்றது.மார்பகங்கள் கனக்கும்.பெண்மைக்கு ,உயிர் காக்கும் அவயமாக இயற்கை படைத்துள்ளது மார்பகங்கள்.

அதை கவர்ச்சியாக்கியது..மனிதனின் காம எண்ணங்கள்.

ஆனால்..மார்பகங்கள்,உயிர் வளர தாய்மைக்கு இயற்கையின் வரப்பிரசாதம்.

வள்ளுவரும் அந்த எண்னத்திலேயே இக்குறளைச் சொல்லியுள்ளார்.

இப்போது படியுங்கள் இக்குறளை.விரசம் தோன்றாது.

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று  (402)

 கல்லாதவனின் சொல் கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண் மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

சுருங்கச் சொன்னால்..கல்லாதவன் சொல் கேட்பது என்பது..பிஞ்சு உயிரின் உயிர் காக்கும் (மார்பகங்கள் அற்ற..அதவது)தாய்மை குணம் இல்லாத பெண்ணைப் போல விரும்பத்தாகதது எனக் கொள்ளலாம்.

வள்ளுவர் தாய்மையை, பெண்மையை போற்றவே செய்கிறார் இக்குறள் மூலமும்.



"பாசிடிவ் ரங்கநாதன்"

என் பெயர் ரங்கநாதன்.

ஆனால், நட்பு வட்டத்தில் என்னை "பாசிடிவ்" ரங்கநாதன் என்றால்தான் தெரியும்.

ஏனெனில் "ஏந்த ஒரு விஷயத்தினையும்.."பாசிடிவ்" வாக நினைத்தால்தான்..நம்மால் அவ்வேலையில் வெற்றி பெற முடியும்..என்பதனை உறுதியாய் நம்புபவன் நான்.அதையே மற்றவருக்கும் போதிப்பவன்.ஆகவே நண்பர்கள் "பாசிடிவ்" எனும் அடைமொழியுடன் என்னை அழைத்தனர்.

அதில் சிலர் கிண்டலுக்காகக் கூட அப்படி அழைப்பதுண்டு.

அன்று அப்படித்தான்.எனதுஅலுவலகத்தில் ஒரு நண்பருக்கு, அதிகாரி.. புதிய வேலை ஒன்றை செய்யச் சொன்னார்.அந்த நண்பர் பயந்தார்..தன்னால் முடியுமா? என என்னிடம் கேட்டார்.

நானும் எல்லோருக்கும் சொல்வது போல, அவரிடமும் பாசிடிவாக உன்னால் முடியும் என்று நினை..கண்டிப்பாக முடியும் என்றேன்.

நண்பரும், அப்படியே எண்ணியதால், அந்த வேலை அவருக்கு எளிதில் முடிந்தது.

அவ்வளவு ஏன்..என் மகனுக்கும், அவன் நண்பர்களைப் போல கணக்குப் பரிட்சையில், நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஆசை.உன்னால் நூறு மதிப்பெண்கள் பெறமுடியும் என "பாசிடிவாக"  எண்ணச் சொன்னேன்.என் மகனும் அப்படியே எண்ணி அடுத்து நூறு மதிப்பெண்களைப் பெற்றான்.

ஒருநாள் என் மற்றொரு நண்பர் "எல்லோரையும் "பாசிடிவ்..பாசிடிவ்:"னு திங்க் பண்னச்சொல்கிறீர்களே.ஒருநாள் "நெகடிவ்" என்னும் சொல்லை நீங்கள் சொல்வீர்கள்" என்றார்.

என் வாழ்வில் நெகடிவ்வே கிடையாது என்றேன்.

ஆனால் இப்போது..

"கொரோனா தாக்கியிருக்கக்கூடும் "ஏன் என்னை பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"இறைவா..ரிசல்ட் "நெகடிவ்" வாக் இருக்கட்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கின்றேன் இந்த "பாசிடிவ்" ரங்கநாதன். 

Monday, June 1, 2020

வள்ளுவர் பெண்களைப் போற்றவில்லையா - 6

கணவனும், மனைவியும் இல்வாழ்க்கையில் இணைந்து, மகிழ்ந்து இல்வாழ்க்கையில் சிறந்த பேறாக நல்ல அறிவில் சிறந்த பிள்ளைகளை பெற்றெடுக்கிறார்கள்.

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்ந்து உடலுக்கு இன்பத்தையும்,அக்குழந்தைகளின் மழலை மொழி கேட்டு செவிக்கு இன்பத்தினையும் பெறுகின்றனர்.

குழலோசை, யாழோசையை விட தம் மக்கள் மழலை இனிமை வாய்ந்ததாய் எண்ணுகின்றனர்.

 குழந்தை வளர்கிறது.இப்போது, தந்தை மகனுக்குக் கல்வி கற்க வைத்து, அறிஞர்கள் நிறைந்த அவையில் தன் மகனையும் அறிவிற் சிறந்தவனாய் புகழுடன் விளங்க வைக்கும் பொறுப்பினை ஏற்கின்றான்.

அம்மகனை ஊரார் சான்றோன் என பாராட்டுகிறார்கள்.அப்போது அவனது தாய் அவனை ஈன்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட பெரு மகிழ்ச்சியை அடைகிறாள்.

ஆனால்..அந்நிக்ழ்விற்குப் பின்னால் தந்தையின் உழைப்பு எவ்வளவு இருக்கிறது.ஆயினும், தாய் மகிழ்ச்சியடைகிறாள் என தய்மையை, பெண்மையை வள்ளுவர் போற்றுகிறார்.இன்னமும் சொல்வதானால் தாய்ப் பாசத்தை உயர்த்தி சொல்கிறார்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் (69)

நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என ஊரார் பாராட்டும்பொழுது, அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் பெறுகிறாள்.

அடுத்த பதிவில் மேலும் சில குறள்களுடன் சந்திப்போம்.