Sunday, June 28, 2020

#TVR தமிழ் இதழை அலங்கரித்த ஓவியர்கள் 7- மாலி

மாலி என்று அறியப்பட்ட மூத்த ஓவியராய் திகழப்பட்ட மகாலிங்கம் ஆனந்த விகடனுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.

ஆனந்த விகடன் என்பது எப்படிப்பட்ட பத்திரிகை..அதன் காரெக்டர் என்ன என்பதில் தொடங்கி இன்றுவரை நம் கைகளில் தவழும் விகடனுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தவர் இவர்தான்.

ஸ்ரீனிவாசன் என்பவரை சில்பியாக மாற்றியவர் இவர்

கோபாலனை, கோபுலுவாக்கியவர் இவர்

நாராயணசாமியை ராஜு என்று ஆக்கியவர்

கிருஷ்ணமூர்த்தி என்பவரை வாண்டுமாமா ( கௌசிகன்) வாக்கி பல குழந்தைகளுக்கான சித்திரக்கதைகளை எழுத வைத்தவர்.

மாலி, அரசியல், சித்திரம், ஃபோட்டோ,நேர்காணல் என அணைத்திலும் திறமையுடையவராய்த் திகழ்ந்தார்.

பிரபல கவிஞர் வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.சிறுவயதில் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவராய்த் திகழ்ந்த இவர்...மாலியின்மீது உள்ள ஆர்வத்தில் அவரைப் போல ஆகவேண்டும் என எண்ணி
தன் நண்பன் சொல்லியபடி தன் பெயரை வாலி என மாற்றிக் கொண்டார்

மாலி,உயிரும், உணர்ச்சியும் கொண்ட சித்திரங்களைப் போல கர்நாடக சங்கீத வித்வான்களை நம் கண்முன் நிறுத்தியவர் ஆவார்,இதற்குமுன் எந்த தமிழ் இதழ்களிலும் இப்படிப்பட்ட ஓவியங்கள் வந்ததில்லை எனலாம்.

27-3-1928ல் சி வி மார்கன் ஒரு ஜோக்கர் விகடனார் படத்தை வரைந்தார்.அதுதான் இன்றைய விகடன் தாத்தாவின் முதல் ஓவியம் ஆகும்.அடுத்த ஆண்டு தாத்தாவின் உருவத்தில் லேசாக மாற்றம் செய்து அவரது நெற்றியில் இருந்த சந்தனத்துக்குப் பதிலாக விபூதி..குங்குமம் இடப்பட்டது.அவர்தான் "விகடனார்" என்பதற்கு அவரது சட்டையில்"ஆனந்த விகடன்" என எழுதப்பட்டது.

நான்கு மாதங்களுக்குப் பிறகு..விபூதி, குங்குமத்திற்குப் பதிலாக நாமம் வரையப்பட்டது..

1932ல் மாலி ஜோக்கர் தொப்பியை எடுத்துவிட்டு விகடனாரைக் குடுமி வைத்த தாத்தாவாக்கினார்.1933ஆம் ஆண்டு செப்டெம்பர் 10ஆம் நாள் உருவம் உருவானது.

இப்படி ஆனந்தவிகடன் என்றாலே..அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியா சக்தியாய் விளங்கியவர் மாலி ஆகும்.

No comments: