1919ஆம் ஆண்டில் நாமக்கல்லில் பிறந்தவர் ஸ்ரீனிவாசன்.இளம் வயதிலேயே ஓவியத்துறையிலேயே அதிகம் ஈடுபாடு கொண்டவராய்த் திகழ்ந்தார்.
தேசியக் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஒரு மிகச் சிறந்த ஓவியரும் கூட.அவர் ஸ்ரீனிவாசனின் திறமைகளைப் பார்த்து, அவரை சென்னை எழும்பூரிலுள்ள ஓவியக் கலைக் கல்லூரியில் சேர்த்தார்.
ஆறாண்டுகாலப் பயிற்சியில், அவரது ஆர்வத்தையும், தகுதியையும் கண்ட கல்லூரி முதல்வர் திரு டி பி ராய் சௌத்திரி, அவரை இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே நான்காம் ஆண்டிற்கு உயர்த்தினார்.பேனாவும், மையும் கொண்டு எழுதும் சித்திரக்கோடுகள் ஸ்ரீனிவாசனுக்கு எளிதில் கைவந்தன.மேல்நாட்டு ஓவியர்கள் பலரையும் மிஞ்சும் வகையில் அவரது ஓவியங்கள் இருந்தன.
ஸ்ரீனிவாசன், மாணவனாய் இ ருந்தபோதே ஓவியர் "மாலி" அவர்களின் கேலிச் சித்திரங்களால் மிகவும் கவரப்பட்டார்.அதேபோல ஸ்ரீ னிவாசனின் ஓவியங்கள் மாலியையும் கவர்ந்தன. இதுவே..இவர்கள் இருவரும் ஆனந்த விகடனில் 22 ஆண்டுகள் பணிபுரியும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தன எனலாம்.
ஸ்ரீனிவாசனுக்கு இயல்பாகவே முகங்களைத் தீட்டுவதிலும், கட்டிடங்களை ஓவியமாக்குவதிலுமே அதிக ஆர்வம் இருந்ததால், அதைப் பயன் படுத்திக் கொள்ள விரும்பிய மாலி, ஸ்ரீனிவாசனுக்கு "சில்பி" எனும் பெயரினைச் சூட்டி, தெய்வ வடிவங்களையும்,திருக்கோயில்களையும் தீட்டும் பணிக்கு அவரை ஆயத்தம் செய்தார்.
கல்லில் சிற்பி செதுக்கிய சிற்பங்களுக்கு மூன்று பரிமாணங்கள்..அதை சில்பி வரையும் தெய்வச் சிற்பங்களில் காணமுடிந்தது.
தெய்வத்தின் அருள் முகத்தை எப்படி இவ்வளவு தெளிவாக..தெய்வீகமாக வரைய முடிகிறது என்ற கேள்விக்கு சிற்பியின் பதில், "வண்ணத்தின் கலவைகளை சரியான அளவில் அமைத்துக் கொள்வதுதான்..என் செயல்.காட்சி கொடுக்கும் அந்த தெய்வந்தான் என் விரல்களோடு இணைந்து தன்னை எழுதி வைத்துக் கொள்கிறது.படைப்பின் முழுமைக்கும் காரணம் அந்தப் பரம் பொருள்தான்.நான் வெறும் கருவி!அவ்வளவுதான்.."
கர்ப்பகிருஹத்திலுள்ள மூல மூர்த்தியை வரையும் முன், அதன் ஆபரணங்களைத் தனியே ஒரு தாளில் முதலில் வரைபட நகல் எடுத்து,அந்தந்தக் கற்களின் வண்ணங்களையும் குறித்துக்கொண்டு மூர்த்தியைப் பூர்த்தி செய்கையில் அந்தநத ஆபரணங்களை வரைந்து அதனைத் தானே இறைவனுக்கு அணிவிப்பது போல பரவசமடைவார்.
தமிழகத்தில் இவர் பயணம் செய்யாத கோயில்களே இல்லை எனலாம்.1947 முதல் 1960 வரை இவர் வரைந்த ஓவியங்கள் "தென்னாட்டுக் கலைச் செல்வங்கள்" என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வாரம் தோறும் வெளி வந்தன.
ஒவ்வொரு ஆலயத்தை வரையும் முன் அந்த ஆலயத்தைச் சுற்றி வலம் வருவார்.எந்தக் கோணத்தில் ஆலயம் முழுதாகவும் தெரிகிறது என்பதை உறுதி செய்து கொள்வார்.பின்னர், கூட்டமில்லாத பகல் நேரத்தில் ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றத்தை வரைவார். உட்புறம் இருக்கும் தெய்வத் திருவுருவங்களை பெரும்பாலும் இரவுப் பொழுதில்தான் வரைவார்.அந்நாட்களில் கர்ப்பக்கிரகங்களில் மின்விளக்குகள் கிடையாது.சிறிய திரிவிளக்குகளே இருக்கும்.அவற்றின் மங்களான விளக்கொளியில் உருவங்களை உற்று நோக்கி வரைவார்.
படங்களை வரைந்து முடிந்த பின்னர் காஞ்சி பரமாச்சாரியிரடம் எடுத்துச் சென்று அவரது பூரண ஆசியுடன் வீட்டுக்குக் கொண்டு வந்து விசேஷ பூஜைகள் செய்வார்.
ஆனந்த விகடனில் இருந்து விலகிய பின்பு பவன்ஸ் ஜர்னலில் பணிபுரிந்தார்.மேலும் கலைமகள்,தினமணி கதிர்,இதயம் பேசுகிறது,அமுதசுரபி ஆகிய பல தமிழ்ப் பத்திரிகைகளிலும் அவர் நிறைய கோயில் சிற்பங்களை வரைந்துள்ளார்.
சிற்பியின் மனைவி பத்மா சிறுவயதிலேயே 1968ல் அமரர் ஆனார்.அவர்களுக்கு மகாலிங்கம் என்ற மகனும், சாரதா எனும் பெண்ணும் உள்ளனர்.
சில்பி...தனக்குப் பின் ஒரு சீடனை நீண்ட நாட்கள் தேடிக் கொள்ளவில்லை.1981 ஆம் ஆண்டு கிரிதரன் எனும் சிறுவன், அவனது தந்தையுடன் அவரைக் காண வந்தான்.
அச்சிறுவனே பத்மவாசன் எனும் பெயரில் ஓவியங்களை வரைபவர் ஆவார்.
No comments:
Post a Comment