அந்தக் காலக் கட்டத்தில் காஞ்சிமடம் வெளியிட்ட பாவனி அம்மன் படத்தில் குங்குமப் பொட்டினையோ..அல்லது சந்தனைப் பொட்டினையோ தொடர்ந்து வைத்து வழிபட்டால் வேண்டுவன கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்து வந்தது.
அந்த நம்பிக்கையை ஓவியர் வினுவின் கைவண்ணத்தில் உருவான ஆஞ்சனேயர் ஓவியமும் மக்களுக்கு ஊட்டியது.ஆஞ்சனேயரின் வால்..அவரது தலைக்கு மேல் வளைந்து முடிந்த படம் அது.(கீழே புகைப்படம்).கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இப்படம் இருந்தது.
வினு கல்கியின் ஆஸ்தான ஓவியரில் ஒருவராகத் திகழ்ந்தார்.
நான் கல்கி படிக்கத் தொடங்கிய சிறுவயதில் என்னை மயக்கிய ஓவியர் வினு.அவர் ஓவியம் வரைந்த கதைகளைப் படிப்பதில் முன்னுரிமைக் கொடுத்தவன்.
"மலைச்சாரல் மாதவி" என்ற ஆனந்தி எழுதியத் தொடரில் அவர் வரைந்திருந்த மாதவி கொள்ளை அழகு.இன்னமும் அந்த அழகிய முகம் என் மனக்கண்களை விட்டு மறையாத ஒன்று.
வினுவின் கைவண்ணம் சரித்திர ,சமுக, ஆன்மீக தொடர்களில் மட்டுமின்றி குழந்தைகளுக்கான சித்திரத் தொடர்களிலும் மிளிர்ந்தது.
1968-72 கால்கட்டத்தில் பொன்னியின் செல்வன் மீண்டும் வெளியானபோது வினு ஓவியங்களை வரைந்தார்.வந்தியத்தேவன், குந்தவை,நந்தினிவானதி,பூங்குழலி,ஆழ்வார்க்கடியான்,பெரிய பழுவேட்டரையர் என அனைவரின் ஓவியங்களையும் அருமையாய் வரைந்திருந்த வினுவை வாழ்த்த வார்த்தைகளே இல்லை எனலாம்.
மேலும் ஜெகசிற்பியனின் "பத்தினிக் கோட்டம்",,கௌசிகனின் "பாமினிப் பாவை",அகிலனின் "கயல்விழி",நாபாவின் குறிஞ்சி மலர்,பொன் விலங்கு,சத்திய வெள்ளம்,ர சு நல்லபெருமாளின் "கல்லுக்குள் ஈரம்"..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..வினு வரைந்த தொடர்களின் வரிசையை.
ராஜாஜியின் மகாபாரதம், ராமாயணம்..மற்றும் ரா.கணபதியின் "காற்றினிலே வரும் கீதம் ஆகியவை வினுவின் கைவண்ணத்தில் மிளிர்ந்தன.
குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை வினு. வீர விஜயன்,நரிக் கோட்டை,மரகதச் சிலை, 007 பாலு போன்ற ஏராளமான சித்திரக்கதைகளுக்கு ஒவியம் இவரே.
பூந்தளிர் சிறுவர் இதழில் ஆனந்தி எழுதிய சித்திரக் கதைகளின் ஓவியர் இவரே.
இதையெல்லாம் எழுதும் போது..இன்றைய சிறுவர்கள்/இளம்தலைமுறையினரின் இதையெல்லாம் இழந்து விட்டனரே என்ற வருத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
No comments:
Post a Comment