Saturday, June 20, 2020

அப்பா - 4

கடந்த 3 பதிவுகள் அப்பாவைப் பற்றிய பொதுவான விஷயங்களை எழுதினேன்..இனி..என் அப்பா பற்றி..

அன்றைய பம்பாயில் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தார் அப்பா.பின்..அக்கம்பெனி மூடப்பட சென்னை ,எண்ணூரில் அசோக் மோடார்ஸ் (இன்றைய அஷோக் லெய்லண்ட்)..அடுத்து தன்னுடன் வேலை செய்த பம்பாய் நண்பர்கள் அம்பத்தூர் டி ஐ சைக்கிள்ஸ் வேலை செய்வதை அறிந்து அங்கு மாறினார்.

குடும்பம் அம்பத்தூருக்குக் குடி பெயர்ந்தது.

எங்களது படிப்பெல்லாம் அம்பத்தூரில்.

அப்பாவுக்கு நல்ல சம்பளம் வந்தாலும், குடும்பம் பெரியது.வரவுக்கும்..செலவுக்கும் சரியாகவே இருந்தது.உண்மையைச் சொல்ல வேண்டுமானால்..வறுமைப் பேய் எங்கள் குடும்பத்தைவிட்டு ஓட விரும்பவில்லை.

ஆனாலும்..அப்பா...அது எல்லாம் தெரியாமல் எங்களை வளர்த்தார்.நாங்கள் கேட்டது உடனே கிடைக்காது..ஆனால் கண்டிப்பாக சில நாட்களில் கிடைத்துவிடும்.

பள்ளி படிப்பத் தவிர்த்து தினமும் ஹிந்து பத்திரிகை படிக்க வேண்டும் என்றார்.அன்று மாலை அலுவலகம்விட்டு வந்ததும், அன்று தினசரியில் வந்த செய்திகளை அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கண்ணன்,கல்கண்டு, கல்கி,குமுதம், ஆனந்தவிகடன், கலைமகள்,அமுதசுரபி என எல்லா பத்திரிகைகளூம் வாங்கினார் (தன் சக்திக்கு மீறி).எங்களையும் படிக்கச் சொல்லுவார்.அம்மாவும்  அதற்குத் தடையாய் இருந்ததில்லை.

இன்று ஓரளவு என்னால் எழுத முடிகிறது என்றால் அது எனக்கு என் தந்தை போட்டப் பிச்சை.இந்த வரிகளை..கண்களில் கண்ணீர் கொப்பளிக்க எழுதுகிறேன்.

அடிக்கிற கைகள்தான் அணைக்கும் என்பார்கள்.சிறு தவறு செய்தாலும் அப்பாவால் பொறுக்கமுடியாது.கத்துவார்..கண்டிப்பார்..சில வேளைகளில் அடித்தும் இருக்கிறார். ஆனால்..அதே கைகளால் அணைத்தும் தன் பாசத்தைக் காட்டியுள்ளார்.குழந்தைகளிடம் கோபம் இருப்பது போல நடிப்பார்..எங்களுக்குப் பின்னால் எங்களைப் பற்றி அம்மாவிடம் சொல்லிச் சொல்லி மகிழ்வார்.

கோபிக்கும் போதெல்லாம், கண்டிக்கும்போதெல்லாம், மனம் அப்பாவை வெறுக்கும்..ஆனால்..நான் தந்தையானதும்தான்,  கோபம் வரும் அப்பாவை புரிந்து கொள்ள முடிந்தது என்னால்..

மரணம் தவிர்க்க முடியாதது உயிரினங்கள் அனைத்துக்கும்.

நமக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த, தியாகச் செம்மல்களான தந்தையும்,தாயையும்..இயற்கை என்றாவது நமக்கு மீண்டும் காட்டலாமே..
 என்ற கோபம் இயற்கையின் மேல் இருக்கத்தான் செய்கிறது.

இது ஒரு பைத்தியக்காரத்தனமாய்த் தோன்றலாம்..ஆனால்..அனைவருக்கும் இந்த ஆசை இல்லாமல் போகாது.

No comments: