Sunday, May 30, 2010

இந்த இடுகை யாரையும் குறிப்பிட்டதல்ல

சில குறள்களும்..விளக்கமும்..

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மோடு
கொள்ளாத கொள்ளா துலகு

(தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால்..அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்)

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்

(தன்னைப் பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு..எல்லை மீறிப்போகும் ஒருவர்..நுனிக்கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்)

அழிவதூம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்

(எந்த அளவிற்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்)

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்

(களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்)

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

(ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்கும் என்று அறிவுடையவர்கள் சிந்திப்பார்கள்.மற்றவர்கள் மாட்டார்கள்)

பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்

(எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் முறையின்றி பேச மாட்டார்கள்)

அ.தி.மு.க., நேற்று..இன்று..நாளை

நேற்று

இன்று

நாளை

Tuesday, May 25, 2010

சிரிப்போம்...சிரிக்க வைப்போம்...

வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..



(மீள்பதிவு)

Thursday, May 20, 2010

நட்பின் சிறப்பு என்பது யாதெனில்....

உயிர் காப்பான் தோழன்..என்பர்.

அது எவ்வளவு தூரம் உண்மை என நான் அறியேன்..ஏனெனில் நான் யார் உயிரையும் காப்பாற்றியதில்லை..என்னையும் யாரும் காப்பாற்றியதில்லை.

ஆனால்..நமக்கு வாழ்வில்..ஏற்படும் நண்பர்கள்தான் எவ்வளவு?

பள்ளி பருவத்தில்...உண்டாகும் இளம் நண்பர்கள்..மன விகாரம் இல்லா வயது.கிடைத்த அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளும் வயது.ஒன்றாக சேர்ந்து விளையாடிய வயது.மாமரத்தில் இருந்து விழும் அல்லது திருடும் மாங்காயை..உப்பு ,காரம் தோய்த்து சாப்பிட்ட நட்பு,கமர்கட்டை காக்காய் கடி கடித்து பகிர்ந்துக் கொண்ட வயது.போட்டி படிப்பில் மட்டுமே.இப்படி அந்த கால நட்பு..மனதில் பசுமரத்தாணி போல பதிந்து இன்றும் நினைவில் அவர்கள் பெயர் தங்கியிருக்கும் நட்பு.

அடுத்து..கல்லூரி கால நட்பு.பெற்றோர் கஷ்டப்பட்டு செலவு செய்து படிக்க வைப்பது தெரிந்தும்..பணத்தைப்பற்றி கவலைப்படாமல் இருக்கும் வயது.இக்காலத்தில் ஏற்படும் நட்பு சிலருக்கு வாழ்வில்..சிகரெட்,மது,மாது..போன்ற பழக்கங்களை ஏற்படுத்தி வைக்கிறது..அப்படிப்பட்டவர் நட்பு இவ்வயதில் அதிகம் கிடைக்கிறது.இப்படிப்பட்ட நட்பு..ஆசைக்காக..சில எதிர்ப்பார்ப்புகளோடு அமைந்து விடுகிறது.இப்பருவ நட்பு கம்பி மேல் நடப்பது போல.

அதைத் தாண்டி வந்தால்..அலுவலகத்தில், உடன் வேலை செய்வார் நட்பு.இந்த சமயம்...நிறைய சம்பாதிக்க வேண்டும்,சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாக வரவேண்டும்..அவனைவிட நான் பெரிய ஆளாக வர வேண்டும் என்றெல்லாம் எண்ணக்கூடிய சுயநலம் நிறைந்த நட்பு..

பின் ஓய்வு பெற்றதும்..கிடைக்கும் நட்பு...பழைய வாழ்வை அசை போடும் நண்பர்களுடன்.

இப்படி ஒவ்வொரு பருவத்திலும்..பல வேறுபட்ட நண்பர்கள்..பள்ளி பருவம் முதல்..கடைசி வரை தொடரும் நட்பு..ஒரு சிலருக்கே கிட்டும்.அப்படிப்ப நட்பு அமைந்தால் அதுதான் சிறந்த நட்பு..அப்படிப்பட்டவன் தான் சிறந்த நண்பன்.

ஆனால் எப்பருவத்தில்..எவ்வளவு நாட்கள் தொடரும் நட்பாய் இருந்தாலும்..வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது.

இது தான் நட்பின் சிறப்பு.

(மீள்பதிவு)

Sunday, May 16, 2010

ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்து குஷ்பு அதிரடி நீக்கம்


திடீரென திமுகவில் சேர்ந்து விட்டதால், குஷ்பு நடத்தி வந்த ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்து அவரை தூக்கி விட்டதாம் ஜெயா டிவி .

கடந்த 2001ம் ஆண்டு முதல் ஜாக்பாட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதை குஷ்புதான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் திடீரென முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் குஷ்பு.

இதனால் ஜெயா டிவி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது குஷ்புவை அந்த நிகழ்ச்சியிலிருந்து தூக்கி விட்டனராம்.

இதுகுறித்து ஜாக்பாட் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுத் தரப்பில் கூறுகையில், தொழில் வேறு, அரசியல் வேறு என்ற கண்ணோட்டத்தில் குஷ்பு திமுகவில் இணைந்த போது தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. ஜெயா டிவியும் அப்படி பார்க்காது.



திமுகவில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்பாக்ட் நிகழ்ச்சி சம்பந்தமாக மீட்டிங் நடந்தது. அப்போது கூட அவர் அரசியல் ஆசை பற்றி தெரிவிக்கவில்லை. கட்சியில் சேரும் போது தெரிவிக்கவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்று நினைப்பதால் அப்படி செய்திருக்கலாம்.

ஆனால் நாங்கள், இனி ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கக்கூடாது என்பதில் தெளிவான முடிவு எடுத்துள்ளோம். அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கியுள்ளோம்.

அவர் பங்கேற்ற 15 எபிசோடு ஒளிபரப்பாகும் நிலையில் தயாராக இருக்கிறது. அதையும் ஒளிபரப்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.


(நன்றி - தட்ஸ்தமிழ்)

Friday, May 14, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(14-5-10)

1) இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ரேஷன் பொருள்களை வழங்க 7 கோடி டன் உணவு தானியங்கள் தேவைப்படும்.அது ஒரு போதும் சாத்தியமில்லை..இப்படிப்பட்ட ஒரு பொறுப்பான அறிக்கையை வெளியிட்டவர் மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத் பவார்.

2)பயம் நம் எதிரே வராதவரை பயந்துக் கொண்டே இரு..அது வந்து விட்டால்..கண்டதுமே அதை சந்தேகப் படாமல் அடித்துத் தொலைத்துவிடு.

3)இலங்கை வன்னிப் பகுதியில் 2008 டிசம்பர் முதல் 2009 மே வரை..கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் தமிழர் வீடுகள் ராணுவ குண்டு வீச்சில் அழிக்கப்பட்டதாக ஐ.நா.,சபை கணக்கிட்டுள்ளது.

4)எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு நாடகங்களில் கருத்தைச் சொன்னது எஸ்.வி.சேகர் தான் என கலைஞர் கூறியது..ஒரு வேளை..சேகரின் நாடகங்கள் காமெடி என்பதால்..தானும் காமெடியாக பேச வேண்டும் என்பதால் இருக்கும் என்றே தோன்றுகிறது.(கலைஞர் சேகரை வைத்து காமெடி கீமடி பண்னலையே)
சேகரின் நாடகத்திலிருந்து ஒரு அரியக் கருத்து..

டாக்டர் உட்காரர இடத்திலே கட்டி
கொஞ்சம் தள்ளி உட்காருங்க

5)சமீபத்தில் படித்த ஒரு செய்தி..
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதணும்னு ஒரு நிருபர் அவர் கிட்டே வந்தாராம்.பட்டுக்கோட்டை அந்த நிருபரை அழைச்சுக்கிட்டு வெளியே நடந்தார்.பின் ரிக்ஷா வில் ஏறி மவுண்ட் ரோடிற்கு வந்தார்.மவுண்ட் ரோடில் இருவரும் பஸ் பிடிச்சு கோடம்பாக்கம் வந்தாங்க.அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடிச்சு வடபழனியிலிருந்த ஸ்டூடியோவிற்கு வந்தாங்க.
இவ்வளவு நேரம் வாளாயிருந்த நிருபர்..'வாழ்க்கை வரலாறு' என ஞாபகப்படுத்தினார்.
முதல்லே நடையா நடந்தேன்..அப்பறம் பஸ்..பின் ரிக்ஷா..அடுத்தது டாக்ஸி..இதுதான் என் வாழ்க்கை வரலாறு என்றார்.

6)கனவு காணுங்கள்..பிற்படுத்தப்பட்ட என்ற சொல்லுக்கே இடமில்லாத இந்தியா..சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்கும் இந்தியா..குழந்தைகள் அனைவரும் படிக்கும் இந்தியா..விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் இந்தியா..பசி என யாரும் சொல்லாத இந்தியா..மூட நம்பிக்கைகள் இல்லாத இந்தியா..-( எங்கேயோ யார் சொன்னதையோ படித்தது. )

7)கொசுறு ஒரு ஜோக்..

தயாரிப்பாளர்- நம்ம படத்துல காதாநாயகன் ஒரு டைலரா இருக்கணும்னு ஏன் சொல்றீங்க?
இயக்குநர்-அப்பத்தான் படம் எங்கெங்க தொய்வு விழுதோ..அங்கெல்லாம் இழுத்து தைச்சுடுவார்

டிஸ்கி- நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..தமிழா..தமிழா விற்கு ஒரு வாரம் விடுமுறை..நீங்கள் படிக்க வேண்டும்..பின்னூட்டம் இட வேண்டும் என்னும் நிர்ப்பந்தங்களிலிருந்து ஒரு வாரம் விடுதலை

Thursday, May 13, 2010

கலைஞருக்கு ஒரு மனம் திறந்த மடல்..

பெருமதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு

வணக்கம்..

நீங்கள் 18 ஆண்டுகள் முதல்வர் பணி புரிந்து 19ஆம் ஆண்டில் நுழைந்திருப்பது குறித்து பாராட்டுகள்..வாழ்த்துகள்.

நான் தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் அல்ல..ஆனாலும்..முதன் முதலாய் வாக்குரிமை எனக்கு வந்தது முதல் தி.மு.க.,விற்கே வாக்களித்து வருபவன் (என் முதல் வாக்கு A.V.P.ஆசைத்தம்பி அவர்களுக்கு)என்ற முறையில் இக்கடிதம் எழுதுகிறேன்..சென்ற பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க., விற்கே என் வாக்கு என்ற என் இடுகைக்கு இங்கே செல்லவும்.இங்கேசெல்லவும்

மூதறிஞர் ராஜாஜிக்குப் பின் அரசியல் சாணக்கியர் நீங்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

விஷயத்திற்கு வருவோம்..நீங்கள் சமீபத்தில் சட்ட மன்றத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதியைக் கீழே கொடுத்துள்ளேன்.


"அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நேரத்தில், என்னுடைய வீட்டிற்கே வந்து, என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதல்வராக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, இவர்தான் முதலமைச்சராக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்களையெல்லாம் சமாதானப்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தார்.

என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார். என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்.

குறிப்பாக முரசொலி மாறன், நீ வர வேண்டாம்; முதலமைச்சராக ஆகவேண்டாம்; அடுத்து மூத்தவரான நாவலர்தான் அதற்கு ஏற்றவர் என்று சொல்லியும்கூட, நானும், மாறன் வழியிலே நின்று கழகத் தோழர்களுக்கு எடுத்துச் சொல்லியும்கூட, அதையெல்லாம் கேட்காமல், உங்களை கொண்டுபோய் முதல்வர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன் என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்."

இப்போது எனது கேள்வி..

நீங்கள் முதல்வராகக் காரணமாயிருந்த M.G.R.,கழகத்தின் பொருளாளராய் இருந்தக் காரணத்தால்..அவரது கடமையைச் செய்தார்..கணக்குக் கேட்டார்..அதனால் அவரை கழகத்திலிருந்து வெளியேற்றினீர்களே..அது சரியா..

அவர் பிறப்பால் மலையாளி என்று ஆரம்பித்து..மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டினீர்களே...அது முறையா..

நீங்கள் முதல்வராகக் காரணமாயிருந்தவரை பதவி இறக்க என்னவெல்லாம் நடந்தது..அது நியாயமா..

அறிஞரான நீங்கள் இவ் விஷயத்தில் நன்றி மறந்தே செயல் பட்டுள்ளதாகவே எண்ணுகிறேன்..

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

என்ற குறளுக்கு ஏற்றவாறு நீங்கள் செயல்படவில்லை என்றே தோன்றுகிறது..

சமீபத்தில்..பிரிந்தவர்கள் மீண்டும் கழகத்திற்கே வர வேண்டும்..என்ற உங்கள் அழைப்பு உண்மையாய் இருக்கட்டும்

நன்றி

அன்புடன்
T.V.ராதாகிருஷ்ணன்

Wednesday, May 12, 2010

வாய் விட்டு சிரியுங்க..

அவன் பண விஷயத்திலே ரொம்ப மோசம்..நேற்றுக் கேட்டப்போ இன்னிக்குத் தரேன்னு சொன்னான்..இன்னிக்குக் கேட்டா நாளைக்குத் தரேன்னு சொல்றான்..
அவன் உனக்கு எதாவது கடன் தரணுமா?
இல்லை..நான் தான் அவன் கிட்ட கடன் கேட்டிருக்கிறேன்

2)அந்த மெகா சீரியல் இயக்குநர் கல்யாணத்தில என்ன கலாட்டா..
கல்யாணப் பத்திரிகைல பொண்ணு பேரு காயத்ரின்னு போட்டிருந்ததாம்..சீரியல்ல பண்றாப்போலவே மணமேடையில காயத்ரிக்கு பதில் சாவித்ரின்னு வேற பொண்ணை உட்கார வைச்சுட்டாராம்.

3)யாரை பார்த்தாலும்..எனக்கு நல்லவனாத் தெரியலை டாக்டர்..
எப்போதிலிருந்து அப்படி இருக்கு
நீங்க நல்லவனு நினைச்சேன்..இவ்வளவு மட்டமானவரா இருக்கீங்களே!

4)என்னோட கணவர் தூங்கும்போதுக் கூட கண்ணாடி போட்டுக்கிட்டுத்தான் தூங்குவார்
ஏன்
கனவுல வரதெல்லாம் கிளீனாகத் தெரியணும்னுட்டுத்தான்

5)பேச்சுப் போட்டியில் அரை மணி நேரம் பேசியும்..உனக்கு பரிசு கிடைக்கலையா? ஏன்? எதைப்பற்றி பேசினே..
சுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு தான்

6) அவர் எப்போதும் கையில் ஒரு ஸ்கேலை வைச்சிருக்காரே ஏன்?
எப்போதும் அவர் அளந்துதான் பேசுவாராம்

Tuesday, May 11, 2010

கத்தியின்றி..ரத்தமின்றி.. (சிறுகதை)


தன்னுடைய திட்டம் பூமராங்காக தன்னையேத் தாக்கும் என சுந்தரம் நினைக்கவே இல்லை.

அவனுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன.

அவனது தாயார் மதுரமும்..மனைவி உமாவும் சென்ற வாரம் வரை ஒரு நாள் கூட தகராறு செய்யாமல் இருந்ததில்லை..

மருமகள் எது செய்தாலும் ..அதில் குறைகள் கண்டு பிடிப்பதே மாமியாரின் வேலையாகவும்..மாமியார் சொல்லும் சாதாரணமான விஷயத்தில் கூட உள்ளர்த்தம் இருப்பதாக மருமகளுக்கும் தெரிந்தது.

மாலை..அலுவலகத்திலிருந்து திரும்பும் சுந்தரம் நீதிபதியாக மாறி அவர்கள் வாதங்களைக் கேட்டு சமாதானப் படுத்த முயலுவான்..

பெரும்பாலும் அவன் தீர்ப்பு சாலமன் பாப்பையாவின் தீர்ப்புப் போலவே இருக்கும்..ஆனால் ..போன வாரம்..வந்த அமாவாசை அன்று சாதாரணமாக புகைந்துக் கொண்டிருந்த ..மாமியார்..மருமகள் சண்டை தீப்பற்றி எரியவே ஆரம்பித்து விட்டது..

அமாவாசை இரவுகளில்..தன் கணவன் இறந்தது முதல் டிஃபன் மட்டுமே சாப்பிடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தாள் மதுரம்.

ஆனால்..அன்றைய தினம் எந்த டிஃபனுக்கும் மாவு அரைத்து வைக்கவில்லை..அது தெரிந்ததும்..அவளைக் கடுமையாகக் கண்டித்த மதுரம்..'சரி..சரி..பொங்கல் செய்து விடு' என்றாள்.

பொங்கலை ஒரு டிஃபனாக ஒப்புக் கொள்ளாத உமா' அரிசியும், பருப்பும் சேர்ந்து வெந்த பொங்கல் ஒரு டிஃபன்னா..சாதமும்..சாம்பாரும் கூட டிஃபன் தான்' என்றாள் நக்கலாக.

அவ்வளவுதான்..

எல்லைக்கோட்டைத் தாண்டிவிட்ட எதிரிப்படைகள் போல அவர்களுக்குள் சண்டை மூண்டது.

அவர்களது இந்த வழக்கிலும் ..சுந்தரம் புகுந்து சமாதானப் படுத்தியதுடன்..மனைவியைத் தனியாக அழைத்து..'உமா.. அம்மா ஏதாவது சொன்னால்..அதற்கு பதில் சொல்லாமல்..வாயை மூடிக் கொண்டு இருந்து பாரேன்..அப்புறம்..அம்மா..என் மருமகள் போல உண்டான்னு உன்னை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு புகழ்வார்' என்றான்.

உமாவிற்கு..அப்போது சுந்தரத்தைப் பார்க்க பரிதாபமாக இருந்ததால்..'சரி, இனி நான் வாயை திறக்கவே மாட்டேன்' என்றாள்..

ஒரு வாரம் ஓடி மறைந்தது..வீட்டில் அமைதியோ..அமைதி..

சுந்தரத்திற்கோ அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தால்..நிம்மதி..ஆனால் அந்த நிம்மதி அன்றுடன் முடியப் போகிறது என அவன் அறியவில்லை.

மாலை..விடு திரும்பியவனிடம்..அவனது அம்மா..'எனக்கு எப்படி ஒரு மருமகள் வந்து வாய்ச்சிருக்காள் பாரு..நான் எதைச் சொன்னாலும்..ஒரு பதிலைக் கூடச் சொல்லத் தெரியாத ஒரு மண்டூகம்..உடம்பில ஒரு சூடு ..சுரணை வேண்டாம்..?உப்புப் போட்டுத்தான் சாப்பிடறாளோ..? இல்லை.." என்றாள்.

சுந்தரத்திற்கு..இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை..

ஆனால்..

அடுக்களையில் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த உமா..பாத்திரங்களை உருட்டி..தான் போருக்கு தயாராவதை உணர்த்தினாள்.

Monday, May 10, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 17

காளமேகப் புலவர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.இவர் பாடிய சிலேடைப் பாடல்களும்..நகைச்சுவைப் பாடல்களும் பல..'ஆசுகவி' எனப் போற்றப்பட்டவர்.தங்குத் தடையின்றி கொடுத்த பொருள்..ஈற்றடி என எல்லாவிதத்திலும் தனது புலமைத் திறத்தை வெளிப்படுத்தியவர்..

இவரின் பாடல் ஒன்று பற்றிய என் முந்தைய பதிவுக்கு இங்கே செல்லவும்..

'க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலைப் பாடுமாறு ஒரு முறை காளமேகத்திடம் சொல்லப் பட்டது..உடன் அவர் பாடிய பாடல்..

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா

இதற்கான அர்த்தம்..காக்கையானது பகலில் கூகை (ஆந்தை)யை வெல்ல முடியும்..கூகையானது இரவில் காக்கையை வெல்ல முடியும்..கோ (அரசன்) பகைவரிடமிருந்து தன் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும்..பகலில் காக்கையைப் போலவும் காக்க வேண்டும்..எதிரியின் பலத்தை அறிந்து..கொக்குக் காத்திருப்பதுப் போல தக்க நேரம் வரும்வரை காத்திருந்துத் தாக்க வேண்டும்..தகுதியற்ற காலத்தில் முயன்றால் அரசனுக்குக் கூட (கைக்கைக்காகா) கையாலாகாததாகிவிடும்.

ஆகா..என்னை விட்டு விட்டாயே ..நான் இதையே எவ்வளவு எளிதாக சொல்லியிருக்கிறேன் என்கிறார் வள்ளுவர்..

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்றுவிடும்..எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்..

அடுத்த கொஞ்சி விளையாடும் தமிழில் சந்திப்போம்

Sunday, May 9, 2010

கருத்து வேறுபாடுகள்

மனிதன்..ஆறறிவு படைத்தவன். அவனுக்கென்று விருப்பு,வெறுப்புகள் உண்டு.
சாதாரண விஷயங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒருவருக்கு இட்லி.காலை உணவிற்கு பிடிக்கும்..ஒருவருக்கு தோசை இப்படி..
எனக்கு வெளியே செல்ல பேண்ட் போட்டு செல்லப் பிடிக்கும்.
ப.சிதம்பரத்துக்கு பொதுக்கூட்டம்..பார்லிமெண்ட் என்றால் வேஷ்டி பிடிக்கும்.,குடும்பத்துடன் வெளியே செல்ல பேண்ட்..சூட்.,
கலைஞருக்கு மஞ்சள் சால்வை.
ஜெயலலிதாவிற்கு..திலகம் இட்டு..அதை சற்றே அழித்து மேலே நீட்டினாற்போன்று இடுதல் பிடிக்கும்.
ஒருவருக்கு சூப்பர் ஸ்டாரை பிடிக்கும்
மற்றவர்க்கு கமலைப் பிடிக்கும்..
ஒவ்வொருவருக்கும் ஒரு மாறுபட்ட ரசனை..
தான் விரும்புபவரை..மற்றவர் விமரிசத்தால் ..அவரை கீழ்த்தரமாக பேசுவது..அவர் மதத்தை இழுப்பது..அவர் ஜாதியை இழுப்பது எல்லாம் இன்று நம்மிடையே சர்வ சாதாரணம்.
நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை..அடுத்தவனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என எண்ணுபவர்கள்.
இவர்களெல்லாம்..ஏன் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள்.
உனக்கு பிடிப்பது..மற்றவனுக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...அவன் சுதந்திரத்தில்...எண்ணத்தில் தலையிட நாம் யார்.
ஒரு கணம்...மற்றவர்கள் பற்றி பேசும் முன்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் வாசகத்தை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்கு பிடிக்காததை ஒருத்தர் செய்தால்...அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.

ஒருவன் தவறிழைத்தால்..சாத்வீக முறையில் திருத்தப்பாருங்கள்.

உங்களுக்கு ஒருவன் தவறிழித்தால்..நீங்கள் உடனே பழிக்குப்பழி வாங்க எண்ணாதீர்கள்.

அவனை மன்னியுங்கள்..முடிந்தால் அவனுக்கு நல்லது செய்யுங்கள்.

கோபத்தை அகற்றுங்கள்.

அப்படியும் அவன் திருந்தவில்லையென்றால் உங்களை மலையாக நினையுங்கள்...

Saturday, May 8, 2010

வாய் விட்டு சிரியுங்க

1.ரேப் ன்னு ஒரு படம் எடுத்தாரே அந்த தயாரிப்பாளரை ஏன் அரெஸ்ட் பண்ணிட்டாங்க?
படத்திலே நடிச்ச ஹீரோயினை ரேப் பண்ணிட்டாராம்..

2.call taxi ல call girl ஐ கூட்டிட்டுப் போனியே என்னாச்சு..
police பார்த்துட்டு காலை உடைச்ச்ட்டாங்க

3.அந்த ஜோக் எழுத்தாளரோட ஒரு ஜோக் இதுவரைக்கும் 500 முறைக்கு மேல் பிரசுரமாயிருக்கு
அது என்ன ஜோக்
கல்யாண வீட்ல செருப்பு திருடின ஜோக் தான்

4.அந்த பெண் சாமியாரை சுற்றி ஏன் இவ்வளவு கூட்டம்?
அவர் எல்லோரையும் கட்டிப்பிடிச்சு ஆசிர்வாதம் பண்றாராம்.

5.அதோ போறாரே அவர் யார் தெரியுமா?
யார்
நடிகை நளினாவோட சின்ன வீடாம்.

6.அந்த எம்.பி. தொகுதி பக்கம் போகலேன்னு யாரும் குறை சொல்லமுடியாது
ஏன்?
அவர் ராஜ்யசபா எம்.பி.ஆயிற்றே!

Thursday, May 6, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (7-5-10)

ரோமாபுரிச் சக்கரவர்த்தியான ஜூலியஸ் சீசர் தான் முதல் செய்திப் பத்திரிகையின் ஸ்தாபகர்..அக்காலத்தில் ரோம் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை ஏட்டில் வரைந்து அருகில் உள்ள ஊர்களுக்கு அனுப்பி வைப்பார்களாம்..செய்திப் பத்திரிகை என்று பார்த்தால் அவற்றைத்தான் முதல் செய்திப் பத்திரிகையாகக் குறிப்பிட வேண்டும்..16 ஆம் நூற்றாண்டு வரை அச்சிட்ட செய்திப் பத்திரிகைகள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை.

2)எப்படிப்பட்ட திருமணமாய் இருந்தாலும்..இது முறை ஆகும்..முறை ஆகாது என சாஸ்திரம் சொல்லுமே ஒழிய..எந்த விவாகமும் நடந்து முடிந்த பின்னர் புறக்கணிக்கப் பட மாட்டாது..இது பழைய தரும சாஸ்திரம்.

3)தமிழில் ஒன்று முதல் 899 வரை 'உ' கரத்தில் முடியும் என ஏற்கனவே இப்பகுதியில் குறிப்பிட்டுள்ளேன்..இப்போது இன்னு மொரு விஷயம்..ஒன்று முதல் 999 வரை ஆங்கிலத்தில் எழுதினால் 'A' என்ற எழுத்தே வராது.

4)ரங்கநாதன் கடைத்தெரு ஊழியர்களின் அவலத்தைத் தோலுரித்துக் காட்ட இயக்குநர் வசந்தபாலன் கடந்த ஆறு மாதங்களில் 500 மணி நேரங்கள் அத்தெரு ஊழியர்களுடன் உரையாடி செய்திகளைச் சேகரித்தே படமாக்கினாராம்.

5) திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழி பெயர்த்த ஆங்கிலேயர் ஜி.யூ.போப் ஆவார்

6)கலைஞர் சமிபத்தில் டில்லி சென்றிருந்த போது காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவிடம் தமிழகத்திற்கு கூடுதல் அரிசி வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க..சோனியாவும் ..அது விஷயமாக கவனிப்பதாகக் கூறினாராம்..கலைஞர் சென்னை வருவதற்குள் 2லட்சத்து 50000 டன் அரிசியும்..65 ஆயிரம் டன் கோதுமையும் அனுப்பப்பட்டுவிட்டதாக செய்தி வந்ததாம்...
(அதி புத்திசாலி அண்ணாசாமி கூறுகிறார்..மத்தியில் பிரதமர், உணவுப் பொருள் அமைச்சகம் இதெல்லாம் எதற்கு வீண்..எல்லாப் பொறுப்பையும் சோனியா விடமே ஒப்படைத்தால்..எவ்வளவு விரிவாக செயல் படும் அரசு)

7) ஒரு கொசுறு ஜோக்

குழந்தை- (சிரசாசனம் செய்யும் தந்தையைப் பார்த்துவிட்டு) அம்மா..அம்மா..ஓடி வாயேன்..அப்பாவுக்கு தலை இருக்க வேண்டிய இடத்தில் காலும்..கால் இருக்க வேண்டிய இடத்தில் தலையும் மாறி இருக்கு

8)முகத்தில்

இரண்டு மாத தாடி

கவலையா

வேண்டுதலா

காதல் தோல்வியா

இப்படி பல கேள்விகள்

கேட்டவர்களுக்குத் தெரியாதா

முகம் மழிக்க

தண்ணீர் தேவை என

Wednesday, May 5, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 16


கணவன் பொருளீட்ட மனைவியைப் பிரிந்துச் செல்கிறான்..மனைவிக்கு கணவனின் பிரிவை தாங்க முடியவில்லை..தன் நிலை குறித்து கணவனுக்கு சேதி அனுப்ப வேண்டும்..அப்போதுதான் அவன் உடன் திரும்புவான்..என எண்ணுகிறாள்..

யாரைத் தூது அனுப்புவது...என்ற கேள்வி எழுகிறது?..யார் அந்தக் காரியத்தைத் திறம்படச் செய்வர் என அறியாது மனதில் குழப்பம்..

தன்னிடம் வேலை செய்யும் பெண்ணை அனுப்பலாமா..? வேண்டாம் அது நன்மை பயக்காது

தான் வளர்க்கும் கிளியைத் தூது அனுப்புவோமா? ஆனால்..அதுவும் தன் தூதுப் பணியை திறம்படச் செய்யாது..

தன் தோழியை அனுப்பலாம் என்றாலோ..அவள் சென்று திரும்ப நாளாகலாம்..உடன் செயல்பட முடியாது..

அவன் நினைவை நெஞ்சிலிருந்து அகற்றி..பசலை நோயிலிருந்து விடுபட்டு தெய்வ வழிபாட்டில் மனதை செலுத்தலாம் என்றாலும் அது தீதில் முடியலாம்..

சரி..இதற்கு என்ன தான் வழி...ஒரே வழி..

அவன் திரும்பும் வரை அவன் பெயரை எண்ணி..மகிழ்ந்துக் கொண்டிருக்க வேண்டும்..என எண்ணுகிறாள்..

இதைத்தான் காளமேகப் புலவரின் இப்பாடல் கூறுகிறது

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி

(அடிமைப்பெண் மூலம் அனுப்பும் தூது நன்மை பயக்காது..கிளியோ தூதுப் பணியில் திறம்பட செயலாற்றாது.தோழியின் தூதோ நாளைக் கடத்தும்..ஆகவே பூந்தளிர் போன்ற தேமல்கள் என் மேல் படராது தெய்வத்தை வழிப்பட்டுத் தொடர்தலும் தீதாகும்..தித்திப்பாய் இனிக்கும் அவன் பெயரை ஒதிக் கொண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை)

கண்ணதாசன் தான் தயாரித்த வானம்பாடி படத்திலும்..நாயகன்..நாயகிக்கான பாட்டுப் போட்டியில் இப்பாடலை வைத்திருப்பார்.

காளமேகம் பற்றி சொல்லிவிட்டு..வள்ளுவன் பற்றி சொல்லவில்லையெனில் எப்படி...

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு

என்கிறார்...உள்ளத்திலேயே காதலர் குடியிருக்கையில்..நெஞ்சே வெளியே அவனை நினைத்து எவரிடம் தேடி அலைகிறாய்?

Tuesday, May 4, 2010

வாய் விட்டு சிரியுங்க..

1) டாக்டர் நான் வேலையில இருக்கும் போது தூங்கிடறேன்
அதனால தப்பு இல்ல..இப்ப நிறைய பேர் அப்படித்தான்..ஆமாம்..என்ன வேலையில இருக்கீங்க..
பஸ் டிரைவராய் இருக்கேன்


2)டாக்டர் நீங்க சொன்ன மாதிரி..ஒரு மாசமா நாள் தோறும் விளையாடியும் எடை குறையல
என்ன விளையாடினீங்க
சீட்டாட்டம்தான்

3)நீதிபதி- கன்னிப் பெண்ணை கற்பழிச்ச குற்றத்திற்காக உன்னை தண்டிக்க விரும்புகிறேன்..நீ ஏதேனும் கூற விரும்புகிறாயா
குற்றவாளி-இது என் கன்னி முயற்சி..ஆகவே மன்னித்து விட வேண்டும்

4)அந்த சேனல் அதிகாரியை ஏன் வேலையை விட்டு நீக்கிட்டாங்க..
அந்த சேனல் ரிலீஸ் பண்ண வாங்கிய படத்தை..'உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக' என்று சேனல்ல ஒலி/ஒளி பரப்பிட்டாராம்

5)ஆபரேஷனுக்கு முன்னால உங்க சொந்தக்காரர்களுக்கு தெரிவிக்கணும்..அவங்க எல்லாம் எங்கே இருக்காங்க?
மேலூர்ல
சரி..அப்ப ஆபரேஷனுக்கு அப்புறம் நீங்களே நேர்ல சொல்லிடுங்க

6)தலைவர் திடீர்னு ஏன் டியூஷனுக்கு வாத்தியார் தேடறார்
தமிழ் செம்மொழி மகாநாட்டில தமிழ்ல பேசறது எப்படின்னு கற்றுக் கொள்ளத்தான்

7)மானாட..மயிலாட ன்னு சொன்ன தலைவர்..இப்பவெல்லாம்..தானாட சதையாட ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாரே
அவரது வாரிசுகளிடையே சண்டையாம்..அதனாலதான்

8)அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற..
காலாவதி ஆன மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுக்க மாட்டார்.

9)அந்த இணைய பதிவாளர் எட்டு பேர் தேவைன்னு பதிவு போட்டு இருக்காரே..என்ன வேலையாம்..
அவரது இடுகைகள் வாசகர் பரிந்துரையில் வர ஆதரித்து ஓட்டு போட எட்டு பேர் தேவையாம்..அதுதான்

Monday, May 3, 2010

மழையால் அழியும் பயிர்


1)ஆயிரம் காலப்பயிர் என

ஆயிரம் யோசித்து

நூறு ஆயிரக் கணக்கில் கொடுத்து

பத்து சத்திரம் பார்த்து - சிறந்த

ஒன்றில் நாள்பார்த்து

விதைத்தது

வானம்பார்த்த பூமியாய்

விவாகரத்து மழையில்

அழிந்தது

2)நல்லதொரு

கவிதை எழுத

வெள்ளைத்தாளை எடுக்க

அதில் வந்து

அமர்ந்திட்டாய் ஒயிலாக

Sunday, May 2, 2010

தமிழக உளவுத் துறையும்..மாநில பிரச்னைகளும்..

சமீபத்தில் சிகிச்சைக்கு வந்த பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியதைப் பற்றி..தி.மு.க., மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளதே..என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நிருபர்கள் கேள்வி கேட்ட போது ..

"அவர்களுக்குத் தெரியாமல் திருப்பி அனுப்பினார்கள் என்பது எல்லாம் எப்படி முடியும்? விமான நிலையத்தில் தமிழக அரசின் உளவுத் துறை ஆட்கள் எப்போதும் இருப்பார்கள்..யார் வந்தாலும் போனாலும் உடனடியாக தமிழக அரசுக்குத் தெரிந்துவிடும்.அதுவும் பிரபாகரன் தாயார் வந்து..அவரைத் திருப்பி அனுப்பிய விவகாரம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்திருக்கிறது.அப்படி இருக்க தமிழக அரசுக்குத் தெரியாமல் நடந்தது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படி என்றால் இவர்களின் உளவுத் துறை என்ன அத்தனை திறமையற்றதா? '" என்றுள்ளார்..

இந்நிலையில்..

நேற்று தில்லியில் பெரியார் மையத்தைத் திறந்து வைத்து கலைஞர் பேசுகையில்..

'அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் பெற்றுத்தான் தமிழகம் வாழவேண்டியுள்ளது.அண்டை மாநிலங்களுக்கோ தண்ணீர் தரும் மனப்பான்மையில்லை.இந்திய ஒருமைப்பாடு என்பது ஒரு வழிப்பாதையாக இருக்கக்கூடாது..தமிழகத்தை பட்டினி போட்டு விட்டு, பக்கத்து மாநிலம் வேடிக்கைக் காட்டுவதையும்..வேடிக்கையை ரசித்துக் கொண்டிருப்பதும் தவறு..அவர்கள் அடித்துக் கொண்டு வரட்டும் என மத்திய அரசு இருக்கக்கூடாது.தலைநகர் டெல்லியில் இருந்து சொல்லுகிறேன்..இனியாவது பிரச்னைகளை, தகராறுகளை உன்னிப்பாக கவனித்து நமக்கும் பொறுப்பு உண்டு என்று மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றுள்ளார்.

இதுநாள் வரை மத்திய அரசை விமரிசிக்க வேண்டிய நேரங்களிலும் மௌனியாய் இருந்தவர் ..இப்போது இப்படிப் பேச வேண்டிய அவசியம் என்ன?

கீழ்கண்ட செய்திகள் காரணமாய் இருக்காது என நம்புவோம்..

நாடாளுமன்றத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜா மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டும்..அவர் பதவி விலகக் கூறி எழுப்பப்பட்டுவரும் பிரச்னையும்

மத்திய அமைச்சர் அழகிரி அவரது துறை சம்பந்தப்பட்ட எந்தக் கேள்விக்கும் பதில் அளிப்பது இல்லை ..மற்றும் சபாநாயகர் அழைப்பையும் அவர் புறக்கணித்துவிட்டார் என்று சொல்லப்படும் குற்றச்சாட்டும்.

Saturday, May 1, 2010

சங்கப் பலகை (கவிதை)

கவலைகள்

சிக்கல்கள்

வேதனைகள்

நல்லவனாய் வாழ

நாணத்தான் வேண்டியுள்ளது


பொய்யர்கள்

புரட்டர்கள்

வாய்ச்சொல் வீரர்கள்

திருடர்கள்

நாளும் கொழிக்கின்றனர்


நல்லவன் தேய்வதும்

மற்றவன் வளர்தலும் தான்

நானில நீதியா


தீர்மானித்தேன் நானும்

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசி

உலகை வளைக்க


தக்கார்

தகவிலர் அறிந்த

சமுதாய சங்கப்பலகை

வெளியே தள்ளியது

என்னை


(டிஸ்கி...ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை இருநூறை தொட்டுவிட்டது..அனைவருக்கும் நன்றி)