Sunday, November 7, 2010

யூனிகோட் தமிழில் வடமொழி: ஒத்திவைக்க கருணாநிதி கோரிக்கை

யூனிகோட் கன்சார்ட்டியம் என்று அழைக்கப்படும் ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் வடமொழி மற்றும் கிரந்த எழுத்துக்களை இடம்பெறச் செய்வது தொடர்பான விவகாரத்தில் தமிழறிஞர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,

நமது பாரம்பரிய அறிவு பற்றிய செய்திகள் கம்ப்யூட்டர், இண்டர்நெட் மற்றும் மின் ஊடகங்களில் இடம்பெறும் வகையில் வேதகால, சம்ஸ்கிருத மற்றும் கிரந்த எழுத்துக்களை (ஜ, ஸ, ஷ போன்ற எழுத்துக்கள்) ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் (யூனிகோட் கன்சார்ட்டியம்) சேர்ப்பது தொடர்பாக, அந்த கூட்டமைப்புக்கு மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ள விவரம் தமிழக அரசுக்கு தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய திட்டம், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது.

இந்தத் திட்டத்தை குறிப்பாக, கிரந்த எழுத்துருக்களுடன் 5 தமிழ் எழுத்துக்களை சேர்ப்பது தொடர்பாக, ஒருங்குறியீட்டு கூட்டமைப்பிடம் சமர்ப்பிப்பதற்கு முன்பாக தமிழறிஞர்கள், மற்றும் மொழியியல் அறிஞர்களிடம் தேவையான அளவு ஆலோசனை செய்யப்படவில்லை என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 4ம் தேதி அமைச்சர்கள், தமிழறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்களை வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினேன்.

அந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் பொன்முடி மற்றும் மூத்த அமைச்சர்களும், தமிழறிஞர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் பேராசிரியர் எம்.அனந்தகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் கனிமொழி எம்.பி., எழுத்தாளர் ரவிக்குமார் எம்.எல்.ஏ., தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜேந்திரன், சிங்கப்பூர் தகவல் தொழில்நுட்ப நிபுணர் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடமொழி எழுத்துக்களை ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் இடம்பெறச் செய்யும் திட்டத்தை முடிவு செய்வதற்கு முன்பாக தமிழறிஞர்களுடன் விரிவான ஆலோசனை செய்ய வேண்டும் என்று அந்த கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழறிஞர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு நியமிக்கப்பட்டு, ஆலோசனை நடத்தி, அந்த திட்டம் தொடர்பாக பரிந்துரைகள் பெறப்படும்.

மத்திய அரசு ஏற்கனவே இந்த திட்டம் தொடர்பான கருத்துருவை ஒருங்குறியீட்டு கூட்டமைப்புக்கு அனுப்பி விட்டதால், அதுதொடர்பாக உடனடியாக முடிவு செய்துவிடாமல், தமிழறிஞர்கள், மொழியியல் அறிஞர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தி, பெறப்படும் கருத்துகள் வரும்வரை சற்று காத்திருக்குமாறு அந்த கூட்டமைப்பை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா அறிவுரை வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

(நன்றி தட்ஸ்தமிழ் )

2 comments:

ஹேமா said...

ஐயா...சுகம்தானே.அன்பான தீபாவளி வாழ்த்துகள் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

thanks Hema