Monday, August 4, 2014

குறுந்தொகை - 66



தோழி கூற்று
(கார்காலம் வந்தபின்பும் தலைவன் வராததால் வருந்திய தலைவியை நோக்கி, "இப்போது பெய்யும் மழை பருவமல்லாத காலத்துப் பெய்வது; இதைக் கார்காலத்துக்குரியதல்ல கார்காலம் என எண்ணி மயங்கிக் கொன்றை மரங்கள் மலர்ந்தன. ஆதலின் இது கார்ப்பருவமென்று நீ வருந்தாதே" என்று தோழி கூறியது.)

முல்லை திணை- பாடலாசிரியர் கோவதத்தன்

இனி பாடல்-

மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
   
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
   
பருவம் வாரா வளவை நெரிதரத்
   
கொம்புசேர் கொடியிண ரூழ்ந்த

வம்ப மாரியைக் காரென மதித்தே.

                          -கோவதத்தன்

உரை-

கற்கள் விளங்கும் பாலைநிலத்து கடினமான வழியைக்கடந்து சென்ற தலைவர், மீண்டும் வருவேன் என்று சுட்டிக் கூறிய கார்ப்பருவம் வராத காலத்திலே, பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழையை கார் காலத்து மழையென்று கருதி
நெருங்குமாறு சிறு கொம்புகளிற் சேர்ந்த ஒழுங்காகிய பூங்கொத்துகளை புறப்பட விட்டன..ஆகவே..பரந்த அடியையுடைய கொன்றை மரங்கள் நிச்சயமாக பேதைமையுடயன.

 

    (கருத்து) இது கார்ப்பருவம் அன்று; ஆதலின் நீ வருந்தாதே

கார்காலம் வரவில்லை எனத் தெரியாமலேயே பருவம் மாறி பெய்த மழையை கார்காலமழை என எண்ணி கொன்றை மலர்கள் பூத்துவிட்டனவாம்.அதைப் பார்த்து கார்காலத்தில் தலைவன் வருவேன் என்று சொல்லிச் சென்ற கார்காலம் வந்துவிட்டது , தலைவன் வரவில்லையே என வருந்தாதே!. .(என்கிறாள் தோழி)

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான விளக்கத்துடன் இலக்கிய பாடல் பகிர்வுக்கு நன்றி!