Wednesday, August 13, 2014

குறுந்தொகை -76



தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவியிடம் உணர்த்தச் சென்ற தோழியை நோக்கி, "நான் அச்சிரக் காலத்தில் துன்புறும்படி தலைவர் பிரிவாரென்று முன்பே அறிந்தேன்; நீ சொல்வது மிகை" என்று கூறித் தலைவி கூறியது.)


 குறிஞ்சி திணை -76  - பாடலாசிரியர் கிள்ளிமங்கலங்கிழார்

இனி பாடல்-

காந்தள வேலி யோங்குமலை நன்னாட்டுச்
 
செல்ப வென்பவோ கல்வரை மார்பர்
 
சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை
 
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇக்

தண்வரல் வாடை தூக்கும்
 
கடும்பனி யச்சிர நடுங்கஞ ருறவே.

                   - கிள்ளிமங்கலங்கிழார்



 உரை-

(தோழி) மலைப்பக்கத்திலுள்ள சேம்பினது அசைதலுடையவளவிய இலையை, பெரிய யானையினது செவியை ஒப்பத் தோன்றுமாறு, தடவி, தண்ணிய வரவையுடைய வாடைக்காற்று அசைத்தற்குரிய மிக்க பனியையுடைய அச்சிரக்காலத்தில் நடுங்குவத்ற்குக் காரணமாகிய துன்பத்தை நான் அடையும்படி கற்களையுடைய மலையைப் போன்ற மார்பையுடைய தலைவர் காந்தளை வேலியாகவுடைய உயர்ந்த மலை பொருந்திய நல்ல நாட்டிடத்து என்னைப் பிரிந்து போவாரென்று கூறுகின்றனர்,..


(கருத்து) தலைவர் பிரிவை முன்னரே உணர்ந்தேன்; அவர் பிரியின் நான் துன்புறுவேன்.

 இயல்பாக வளர்ந்த காந்தளை வேலியாக உடைய மலைநாடு.  மலைச்சேம்பென்று ஒருவகைச் சேம்பு உண்டு அதன் இலைகளைப் போல யானையின் காதுகளாம்.அச்சிரக்காலம் எனில்முன்பனிக்காலம்.

முன்பனிக்காலத்தில் அவர் பிரிவார் என முன்பே தெரியும்.ஆயினும் அப்பிரிவால் நான் துன்பமுறுவேன்

No comments: