Monday, August 11, 2014

குறுந்தொகை - 74


தோழி கூற்று
(தலைவன் தலைவியை விரும்பினானாக, தலைவியிடம், "நம்மால் விரும்பப்படும் தலைவன் நம்மை விரும்பி மெலிகின்றான்" என்று அவள் கூறியது.)


குறிஞ்சி திணை - பாடலாசிரியர் விட்டகுதிரையார்.

இனி பாடல்=

 
விட்ட குதிரை விசைப்பி னன்ன

விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
   
யாந்தற் படர்ந்தமை யறியான் றானும்
   
வேனி லானே்று போலச்

சாயின னென்பநம் மாணல நயந்தே.

                        - விட்டகுதிரையார்

உரை-

அவிழ்த்து விடப்பட்ட குதிரை துள்ளியெழும் எழுச்சியைப் போன்ற,வளைத்துப் பின் விட்டமையால் வானத்தைத் தோய்ந்த மூங்கிலையுடைய குன்றத்தையுடைய நாட்டுக்குத் தலைவன், யாம் தன்னை நினைந்து மெலிதலை அறியானாகி தானும் வேனிலின் வெம்மையை ஆற்றாத இடத்தைப் போல நமது மாட்சிமைப்பட்ட நலத்தை விரும்பி மெலிந்தான்.


    (கருத்து) தலைவன் கருத்துக்கு உடம்பட வேண்டும்.

தலைவன், தலைவியை விரும்புவது போல, தலைவியும் அவனை விரும்பி நிற்கிறாள். தான் விரும்புவது தானே வலிய வந்தால் அதை மறுக்காது உடன்பட வேண்டும் (என தலைவி உரைக்கிறாள்)


   மூங்கில் விசைத்தெழுதலுக்கு விட்ட குதிரையின் விசைப்பை உவமை கூறிய சிறப்பினால் இச் செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர் விட்டகுதிரையார் என்னும் பெயர் பெற்றனர்.

No comments: