Sunday, September 9, 2018

நாடகப்பணியில் நான் - 53



சொல்லக் கொதிக்குது நெஞ்சம் நாடத்தின் மேலும் சில வசனங்கள்

(அல்லிக்கேணி கிராமத்திற்கு பிருத்வி என்ற இளைஞன் வருகின்றான்.அவன் மூக்கனிடம் விவசாயம் பற்றிக் கேட்கின்றான்)

பிருத்வி- விவசாயம் பத்தி எதாவது சொல்லுங்களேன்

மூக்கன்- விவசாயம் பத்தி..விவசாயிகள் பத்தி இன்னிக்கு இருக்கிற நிலமைலே என்னத்த தம்பி சொல்ல முடியும்?
நான் படிச்சவன் இல்ல தம்பி...ஆனாலும் அனுபவ அறிவால சொல்றேன்.
சோழ நாடு சோறுடத்துன்னு சொல்வாங்க..
ஆனா..இப்ப  தஞ்சையே உணவுக்குத் திண்டாடுது.அந்த நாள்ல நெல் ரகங்கள்லே 4 லட்சம் இருந்ததாம்.தினமும் மனுஷன் ஒரு ரக அரிசியை சாப்பிட்டா...மொத்த அரிசி வகைகளையும் அவன் ருசி பார்த்து முடிக்க 500 வருஷங்கள் ஆகுமாம்.ஆனா இன்னிக்கு இருக்கிற அரிசி ரகங்களை விரல் விட்டு எண்ணிடலாம்

சீரகசம்பான்னு ஒரு அரிசி..கேள்விப்பட்டு இருப்பியே... அதோட ருசி இருக்கே..அடேங்கப்பா..அதைச் சாப்பிட்டு பார்த்தவங்களுக்குத் தான் தெரியும்.அந்த சீரக சம்பா அரிசி எத்தனை வகை தெரியுமா?

ஈர்க்குச்சி சம்பா,ஊசிச் சம்பா,இலுப்பைச் சம்பா,கருவாலன் சம்பா,கம்பஞ் சம்பா,கனகச் சம்பா,கோட்டைச் சம்பா,மல்லிகைச் சம்பா,மாப்பிள்ளைச் சம்பா,மூங்கில் சம்பா,பொய்கைச் சம்பா,பொட்டிச் சம்பா,வரகச் சம்பா,சின்னட்டி சம்பா,சீரகச் சம்பா,சுந்தரப் புழுகுச் சம்பா,சூரியச் சம்பா,சொல்லச் சம்பா,பூலஞ்சம்பா,பூவானிச் சம்பா,டொப்பிச் சம்பா,பிரியாணிச் சம்பா

ஆனா, இன்னிக்கு....என்னிக்கு ரசாயன உரங்கள் வர ஆரம்பிச்சுதோ..அன்னிலேயிருந்து நிலத்தோட சத்தும் குறைய ஆரம்பிச்சுடுத்து...பல நெல் ரகங்களும் அழிந்துப் போச்சு

(மேலே குறிப்பிட்ட வசனத்தை மூக்கன் பாத்திரம் ஏற்ற கரூர் ரங்கராஜன் கூறி முடித்ததும் கைதட்டல்கள் அடங்க சில நிமிடங்கள் ஆகும்.
இந்நாடகம், கல்கத்தா, திருவனந்தபுரம்,தஞ்சை மாவட்டம் ஆகிய இடங்களில் நடத்த  வேண்டும் என விரும்பினேன்.அவ்விடங்களில் இது மிகவும் ரசிக்கப்படும்.ஆனால் என் ஆசை நிறைவேறவில்லை) 

No comments: