Monday, September 3, 2018

நாடகப்பணியில் நான் - 47

சாதரணமாக ஒரு நடிகனுக்கு ஒரு முறை மேக்கப் போட்டு நடித்தால் போதும், அவனால் பிறகு வாளாயிருக்க முடியாது.
ஏதாவது நாடகத்தில் மீண்டும் நடிக்க மாட்டோமான்னு மனசு ஏங்கும் என்று சொல்வார்கள் .பணம் அவனுக்கு பெரிதல்ல..மக்களின் பாராட்டுகளும், கைதட்டல்களும்..பணம் தராத மகிழ்ச்சியினை அளிக்கும் அவனுக்கு.

அது இருநூறு சதவிகிதம் உண்மை.

அந்த நிலை அன்று எனக்கும் ஏற்பட்டது.

இவ்வளவு நாட்கள் நாடகம் போடாமல் நாட்களை வீணே  கடத்தி விட்டேனே என வருந்தினேன்

அதற்கு ஏற்றாற் போல கண்ணனும், "ஏம்பா..சும்மா இருக்க.ஏதாவது நாடகம் போட ஆரம்பிக்க வேண்டியதுதானே1" என எனது ஆசையில் எண்ணெயை விட்டு , திரியையும் போட்டுவிட்டார்.

நாடகம் முடிந்ததும், கண்ணன் சொன்னதையே மனம் அசை போட்டு வந்தது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்..

அந்த நாடகத்தில் என்னைப் பார்த்த கார்த்திக் ராஜகோபாலிடமிருந்து அடுத்த நாள் எனக்கு ஃபோன்.
"என்னடா...நேத்து ரொம்ப நாள் கழிச்சு டிராமாவிற்கு வந்தே!ஏதாவது புது டிராமா போடப்போறியா? போடு..எப்ப தேதி வேணும் சொல்லு" என்றார்.

கண்ணன் போட்ட திரியை ராஜகோபால் தூண்டிவிட்டு கொளுத்தி விட்டார்.

இந்த சமயம் எனக்கு ஞானம் வந்தது.."எவ்வளவு காட்சிகள் போனால் என்ன..ஒரு ரசிகன் வந்து நாடகம் பார்த்தாலும் போதும்..மீண்டும் சௌம்யாவை துவக்க வேண்டியதுதான்" என தீர்மானித்தேன்.

ஆனால், அதை வெளிக்காட்டாமல் ,ராஜகோபாலிடம் "இந்த வருஷம் கோடை விழாவிலே தேதி தர்றீங்களா? நான் போடறேன்" என்றேன்.

அவர் உடனே முடிவைச் சொல்லவில்லை."நீ ஸ்கிரிப்டைக் கொடு" ன்னார்.

ஸ்கிரிப்ட் ஒன்றை அடுத்த ஒரு வாரத்தில் எழுதி அவரிடம் கொடுத்தேன்.

இப்படி  மீண்டும் என் நாடகப் பிரவேசத்திற்கு கண்ணனும், எனது நாடகத்தந்தையாகக் கருதும் ராஜகோபாலும் காரணமாயினர்.

இப்போது சொல்லுங்கள் நீண்ட நாட்கள் கழித்து பாம்பே கண்ணன் நாடகம் காண நான் போனது சரியா/தவறா?
ஏனெனில், அதுதானே மீண்டும் இன்றுவரை என்னை நாடகம் போட வைத்துக் கொண்டிருக்கிறது

ஆம்..ராஜகோபால் கோடை விழாவில் நாடகம் போட சந்தர்ப்பம் அளித்தாரா? அது என்ன நாடகம்? என்பன அடுத்த பதிவில்.

No comments: