Thursday, November 29, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 15

-------------------------
எஸ் வி சஹஸ்ரநாமம்
--------------------------------


டி.கே.எஸ்., சகோதரர்களின் நாடகக் குழுவையும், அதில் அற்புதமாக நடிக்கும் டி.கே.சண்முகம் நடிப்பையும், அதற்கு மக்களிடம் இருந்து கிடைத்த கை தட்டல்களும் கண்டு நாடகங்கள் மீது தீராத மோகம் கொண்டான் அந்தச் சிறுவன்.

பொள்ளாச்சியில் அவனது பெரியப்பா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த 13 வயதே ஆன அச் சிறுவன், அருகில் உள்ள கோவைக்கும் டி.கே.எஸ்., குழுவினர் வந்துள்ள சேதி கேட்டு...அவர்களைக் காண ரயிலேறினான்.

அந்தக் காலத்தில் நாடகத்தில் நடிப்பது மிகவும் சிரமமான காரியம்.நாடகக் குழுவில் ஒருவன் இருக்கிறான் என்றால், அவனுக்கு மூன்று கலைகள் தெரிந்திருக்க வேண்டும்.

உயர்வு..தாழ்வு பாராது எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காது செய்ய வேண்டும்.
ஊருக்கு ஊர் குழுவினர் மாறும்போது, அனைத்து காட்சிப் பொருள்களையும் மூட்டை..மூட்டையாய்க் கட்டிக் கொண்டு ஊருக்கு பயணிக்கத் தயாராய் இருக்க வேண்டும்
இவ்வளவு செய்தாலும் நிரந்தர வருமானம் என எதுவும் கிடைக்காது என உணர்ந்திருக்க வேண்டும்

பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்து சேர்ந்த பையனைத் தேடி வந்த அவனது தந்தை, "உனக்கு படிப்பு வேண்டுமா? இல்லை நடிப்பா?" என வினவ..சற்றும் தயக்கம் இல்லாது பையன், "நடிப்புத்தான் வேண்டும்" என்றான்.

பையனின் உறுதியைக் கண்ட தந்தை"சரி..உன் தலையெழுத்து அப்படியெனில் அதன் படியே நடக்கட்டும்" என்று கூறி சென்றார்,

அந்தச் சிறுவனே எஸ்.வி.சஹஸ்ரநாமம் ஆவார்,கோவை சிங்கானல்லூரில் 29-11-1913ஆம் ஆண்டு பிறந்தார்.

நாடக நுணுக்கங்களை அக்குழுவில் இருந்த போது கற்றார்.தனது நாடகப் பயிற்சியின் குருநாதராக அவர் எம்.கந்தசாமி முதலியாரிடம் பயின்று மூன்றே மாதங்களில் "அபிமன்யூ சுந்தரி" என்ற நாடகத்தில் சூரியபகவானாக நடித்தார்.

வீரபத்திரன் என்ற நடிகரிடமிருந்து பாடல் கற்றார்.சங்கீத மேதை சம்பந்த மூர்த்தி ஆச்சாரியரிடம் ஹார்மோனியம் கற்றார்.மேடை அமைப்பில் தேர்ச்சிபெற்றவராய் இருந்தார்.

அதனாலேயே..சென்னையில் கட்டப்பட்ட "ராஜா அண்ணாமலை மன்றம்". "ராணி சீதை ஹால்", "கலைவாணர் அரங்கம்" ஆகியவை அவரது ஆலோசனையின் படியே கட்டப்பட்டன.

நாடகத்திற்காகவே வாழ்ந்தவர்களில் சஹஸ்ரநாமமும் ஒருவர் ஆவார்.பாரதியாரிடம் ஈடுபாடு கொண்ட இவர்...பாரதியின் வார்த்தைகள் இப்படி மாற்றி தன்னைப் பற்றிக் கூறினார்.

"எனக்குத் தொழில் நாடகம்.நாட்டுக்கு உழைத்தல். இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என.

இவரது சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் நடித்து..பின் பிரபலமான நடிகர்கள் பட்டியல் நீண்டது.அதில் சிலர்...

சிவாஜி, முத்துராமன்,குலதெய்வம் ராஜகோபால்,வி.கோபால கிருஷ்ணன்,சத்தியராஜ்,பி.ஆர்.துரை,எஸ்.என்.லட்சுமி,எம்.என்.ராஜம்,பண்டரிபாய்,தேவிகா, மைனாவதி,ஜி.சகுந்தலா,ஏ.கே,வீராச்சாமி,ஏ.வீரப்பன், கம்பர் ஜெயராமன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், காந்திமதி...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

இவரது குழுவின் நாடகங்கள் சில...

என்.வி.ராஜாமணி எழுதிய "கண்கள்", "இருளும் ஒளியும்"
தி ஜானகிராமனின், "நாலு வேலி நிலம்'
பி.எஸ்.இராமய்யாவின், "மல்லியம் மங்களம்"
குஹனின் "புகழ்வழி"
கல்கி எழுதிய , "மோகினித் தீவு"
பாரதியாரின் , "பாஞ்சாலி சபதம்"(கவிதை நாடகம்)
சேவாஜ்ஸ்டேஜ் கடைசியான நாடகம் பி.எஸ்.இராமய்யா எழுதிய "தேரோட்டி மகன்" ஆகும்.

1957ல் சேவா ஸ்டேஜ் , நாடகக் கல்வி நிலையம் என ஒன்றை நிறுவி, பாடத்திட்டங்களை வகுத்து மூன்று மாத காலம் இளைஞர்களுக்கு நாடகக் கல்வி வழங்கியது. தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் இந்த நிலையத்திற்கு 3000 ரூபாய் மானியம் வழங்கியது

தனது சகோதரி மகன் வி.என்.ராஜாமணியின் உதவியோடு தாகூரின் கதையை "கண்கள்" என்ற தலைப்பில் நாடகமாக்கினார்
நார்வேவைச் சேர்ந்த  ,எழ்த்தாளர் இப்சன் நாடகங்களால் கவரப்பட்டு "எனிமீஸ் ஆஃப் பீப்புள்ஸ்" என்ற நாடகத்தை மக்கள் விரோதி என்ற பெயரில் நாடகமாக்கச் சொன்னார்

1974 மார்ச் மாதம் முதல் 1988 ஃபெப்ருவரி வரை ஐந்து முறை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.கிருஷ்ணமணி என்பவர் எழுதிய  "நந்தாவிளக்கு" என்ற நாடகத்திற்கான ஒத்திகைக்கு 21-2-88 அன்று வரச்சொல்லி நடிகர்களுக்கு செய்தி அனுப்பியவரின் உயிர் 19-2-1988 மாலை 4-30 அளவில் பிரிந்தது,

எஸ்.வி.எஸ்., அவர்களுக்கு தமிழ் நாடக வரலாற்றில் சிறப்பான இடம் உண்டு.

இன்று இவரது மகன் எஸ்.வி.எஸ்.குமார், தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் கலைப்பணியாற்றி வருகிறார். 

Saturday, November 24, 2018

வள்ளுவன் வாக்கு - 3

நாம் ஒருவருக்கு அலைபேசுகிறோம்.ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.சரி, நண்பர் வேறு முக்கிய வேலையில் இருக்கக் கூடும் என குறுஞ்செய்தி அனுப்புகிறோம்.அதையும் நண்பர் பார்க்கிறார்.
அதைப் பார்த்த பின்னரும்...நம்மை அழைத்து பேசவில்லை.நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?
நம்மை மதிக்காத, நம்மை வருத்தமடையும் செயலை செய்த அவரை நண்பன் என்ற நிலையில் இருந்து மறந்து விட வேண்டும் என்றுதானே எண்ணுவோம்.
ஆனால் வள்ளுவர் என்ன கூறுகிறார் தெரியுமா?
பேதமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்
இதில் ஆச்சரியம் என்ன வெனில் நாம் எதைக் குறித்து எழுத வேண்டும் என எண்ணினாலும், வள்ளுவன் அதைக் குறித்தும்...அதற்கான அறிவுரையும் கூறியுள்ளார்
ஆகவே தான் திருக்குறள் "உலகப் பொதுமறை" எனப் போற்றப்படுகிறது

Thursday, November 22, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 14

--------------------
பூவை மணி
-----------------------

30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடகப் பணியினை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அடக்கமாக செய்து வருபவர் பூவை மணி ஆவார்

இவர் பல வெற்றிநாடகங்களை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார்.

என் நினைவு அடுக்குகளில் இருந்து...சிலசெய்திகளை அவர் வீட்டு ஜன்னல் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

கீத்மாலிகா என்ர குழுவினருக்காக அவர் எழுதிய சில நாடகங்கள்..

"சபையிலே மௌனம்",

"எங்கள் வீடு கோகுலம் "
(இந்நாடகத்தில் திரைப்பட நடிகை சி ஐ டி சகுந்தலா அவர்கள் நடித்தார்)

"மௌனமான நேரம்", "சாட்சிகள் இல்லையடி பாப்பா""கண்மணியே பேசு", "கற்பூர பொம்மை ஒன்று"

பின்னர் தில்லை ராஜனின் நாடகமந்திர் குழுவிற்காக "ஒரு பொம்மலாட்டம் நடக்குது" நாடகத்தை எழுதினார்

கீத்மாலிகா,கலைவாணி, கீதாஞ்சலி ஆகிய குழுக்களுக்கு இவர் நாடகங்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.

இவர் எழுத்தில் வந்த அனைத்து நாடகங்களும் வெற்றி நாடகங்களாக அமைந்ததே இவர் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்

"இன்னொரு சீதை" "தவம்"ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் பங்கு உண்டு.இவற்றிற்கு வசனம் இவரே!

2017ல் இவரது "உறவோடு விளையாடு" நாடகம் கோடை நாடக விழாவில் ஒன்பது விருதுகளையும், மைலாப்பூர் அகடெமியின் 3 விருதுகளையும் பெற்று தந்துள்ளது

2018ல் "விளையாட்டு பொம்மைகள்" ஐந்து விருதுகளைப் பெற்று தந்துள்ளது. இவ்விரு நாடகங்களிலும் நடித்த கிரீஷ் அய்யப்பன், கௌதமி ஆகியோர் சிறந்த நடிகர்/நடிகை விருதினைப் பெற்றனர்.

பூவை மணிக்கு தமிழ் நாடக உலகம் 30க்கும் மேற்பட்ட விருதுகளை சபாக்களின் மூலமும், சமூக நிறுவனங்கள் மூலம் பெற்று தந்துள்ளது.

பிரபல தமிழ் எழுத்தாளர் "பூவை" ஆறுமுகத்தின் மகனான, "பூவை" மணியின் "கற்பூர பொம்மை ஒன்று" மற்றும் "சபையிலே மௌனம்" "உறவோடு விளையாடு" ஆகியவை நூல்களாக வெளிவந்துள்ளன.


அடுத்தவீட்டு ஜன்னல் - 13 (பகுதி-2)

------------------------
இளங்கோ குமணன்
--------------------------------

S S International (live) நிறுவன இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணன்..இருபத்தைந்து ஆண்டுகள் முன்னரே தமிழ் நாடக உலகிற்கு அறிமுகமானவர்.பாம்பே கண்ணனின், "நாடகக்காரன்" குழு மூலமாக அறிமுகமாகி.முதலில் சிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் பெரிய பாத்திரங்களிலும்..அடுத்து நாயகனாகவும் நடித்தவர்.பாஸ்கி அவர்களின் ஒரு நாடகத்தில் இரட்டை வேடம் தாங்கி நடித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் நிறுவனம் மூலம் மீண்டும் நாடக உலகிற்கு வந்திருக்கும் இவர், சென்ற ஆண்டு எழுதி, இயக்கி, அரங்கேற்றிய நாடகம் காஞ்சி மகாபெரியவாளின் நூறாண்டு வாழ்க்கை வரலாற்றைப் பேசும் "தெய்வத்துள் தெய்வம்" நாடகம் ஆகும்.காஞ்சி மடத்தின் ஒப்புத்லுடன் நடைபெற்ற இந்நாடகத்தில் 108 கலைஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்நாடக அரங்க அமைப்பை ஏற்றவர் பிரபல் ஆர்ட் இயக்குநர் தோட்டா தரணி ஆவார்,இந்நாடகத்திற்கு இசையமைத்தவர் மாண்டலின் யு.ராஜேஷ்.அருணா சாய்ராம், குருசரண் ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர்.

இந்நாடகத்திற்காக இரண்டு பாடல்களை குமணன் எழுதியதுடன் நில்லாது, முக்கிய வேடம் ஒன்றினையும் ஏற்று நடித்தார்.

மிகப்பிரம்மாண்டமான படைப்புகளையேத் தர வேண்டும் என எண்ணும் இவரின் கனவு "மகாபாரத"த்தையும் அதே போன்று மேடையேற்ற வேண்டும் என்பதுதான்.

அவர் எண்ணம் நிறைவேற்ற வாழ்த்துவோமாக.

அடுத்தவீட்டு ஜன்னல் - 13

இளங்கோ குமணன்
----------------------------------

ஒரு எழுத்தாளர்/இயக்குனர் படைப்புகள் பற்றி, அந்த எழுத்தாளரோ/இயக்குனரோ பேசக்கூடாது.அவர்கள் படைப்புகள் பேச வேண்டும் என்பார் "இளங்கோ" குமணன்

இந்த "இளங்கோ" குமணன் தமிழ் நாடக உலகின்  பெருமையை பரப்ப வந்த தாமதமான வரவு என்றாலும், முக்கியமான வரவாகும்

எஸ் .எஸ் ஈன்டெர்னேஷனல் (லைவ்) (S S International (live) என்னும் விளம்பர நிறுவனம் 2014ல் , தங்கள் முதல் படைப்பாக கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாடகத்தை  Magic Lantern  குழ்வினரை வைத்து அரங்கேற்றினர்.

80க்கும் மேற்படட் கலைஞர்கள், அரங்க அமைப்பு தோட்டா தரணி.பால் ஜேகப் அவர்களின் நேரடி இசை என நான்கு மணி நாடகமாக இருந்தது இது.

மேடையிலேயே உண்மையான வாள் சண்டை காட்டப்பட்டது.
நாடகக் காவலர் மனோகருக்கு இணையான அளவிற்கு பிரம்மாண்டத்தை இவர்கள் மேடையில் காட்டினர் என்றால் மிகையில்லை.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், சிங்கப்பூரிலும் இந்நாடகம் நடத்தப்பட்டது.

திரைப்பட பிரபலங்கள், பசுபதி, குமரவேள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

குமரவேல் நாடகமாக்கம் செய்திருந்த இந்நாடகத்தை லாண்டன் ப்ரவீன் இயக்கி இருந்தார்

அடுத்து இவர்களின் அரிய படைப்பாக "பாலக்காடு மணி ஐயரின்" வாழ்க்கை வரலாறு "மணியோசை" என்ற பெயரில் மேடை நாடக மாக அறங்கேறியது.இந்நாடகமும் (இதை நாடகம் என்று சொல்லலாமா? எனத் தெரியவில்லை) ஒரு புதுமைப் படைப்பாக அமைந்தது.

கர்நாடக இசைக் கலைஞர்கள், நித்யஸ்ரீ மகாதேவன்,சுதா ரகுநாதன், சௌம்யா,விஜய் சிவா, குருசரண்,அனந்தகிருஷ்ணன்,தஞ்சாவூர் குமார்,உமாசங்கர் மற்றும் பல கலைஞர்கள் இணைந்து இந்நாடகத்தில் நாடகக்கலைஞர்களாக மாறி இந்நிகழ்ச்சியை வெற்றியடைய வைத்தனர்.

இந்நாடகத்தை, எம்.ஆர்.ராஜாமணியின் எம் ஆர் ஆர் தியேட்டர்ஸிற்காக "கீழ் வானம் சிவக்கும்" என்ற நாடகத்தை எழுதித் தந்தவரும் (இந்நாடகம் பின்னர் சிவாஜி நடிக்க அதேபெயரில் வெள்ளித்திரைக்கு வந்தது), விசு அவர்களின் "அரட்டை அரங்கம்" நிகழ்ச்சியை இயக்கியவருமான "குரியகோஸ்" ரங்கா எழுதி, இயக்கி இருந்தார்.

(இவர்கள் வீட்டு ஜன்னல் பார்வை தொடரும்)

Wednesday, November 21, 2018

தென்னம்புள்ள... (கிறுக்கல் கவிதை)



புள்ள இல்லேன்னா
என்ன
இந்தப் புள்ள
இருக்குன்னு
இறுமாப்பிலே
இருந்தான்
இசக்கி
அவன்
எண்ணத்திலே
மண்ணைப் போட்டுட்டான்
இந்தப் புள்ளயும்
பிள்ளைகளில்
புள்ளயும் - தென்னம்
புள்ளயும்
ஒண்ணுதேன்னு
ஆகிப் போச்சே!


Sunday, November 18, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் -12 (பகுதி - 1)

-----------------------
"கிரேசி" மோகன்
------------------------------

நடிகர்,நாடக எழுத்தாளர், திரைக்கதை-வசனம் எழுதுபவர்,நாடகத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ரங்காச்சாரி மோகன் ஒரு பொறியியல் பட்டதாரி.தமிழில் வெண்பா எழுதும் திறனைப் பெற்றவர்

சுந்தரம் கிளேட்டனில் சிறிது காலம் வேலை செய்து வந்தார்.அத்தருணம், இவரது எழுத்துத் திறமையைக் கண்டு வியந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், இவரை திரையுலகிற்கு அழைக்க, மோகனால் வேலைப்பளு காரணமாக அதை ஏற்க இயலவில்லை.

மோகன், கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, 1972ஆம் ஆண்டு கல்லூரி விழாவிற்காக "Great Bank Robbery" என்ற நாடகத்தை எழுதினார்.அதற்காக சிறந்த எழுத்தாளர், சிறந்த நடிகருக்கான விருதினை ,அன்று நாடகத்திற்கு வந்திருந்த கமல்ஹாசன் தர பெற்று கொண்டார்.

பின்னர், தன் தம்பி பாலாஜிக்காக , பாலாஜி படித்த விவேகானந்தா கல்லூரிக்காக நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.

1976ல் எஸ் வி சேகரின் நாடகக் குழுவினருக்காக "கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகம் எழுதினார்.அந்நாடகத்தின் வெற்றியே பின்னாளில் "கிரேசி" என்ற சொல்லை அவர் பெயருக்கு முன்னால் சேர்த்தது  .ஆம்..இனி நாமும் "கிரேசி" மோகன் என்றே இனி சொல்வோம்.

பின்னர், அடுத்து சேகருக்காக இவர் எழுதிய நாடகம், "டெனென்ட் கம்மேண்ட்மெண்ட்ஸ்".அடுத்து ஒன் மோர் எக்சார்சிஸ்ட் நாடகம்.
கிரியேடிவ் என்டெர்டெயினர்ஸ் டிவி வரதராஜனுக்காக "36 பீரங்கி லேன்".காத்தாடி ராமமூர்த்திக்காக 'அப்பா..அம்மா..அம்மம்மா" நாடகம்.

1979ல் தனக்காக 'கிரேசி" கிரியேஷன்ஸ் குழுவினை  துவக்கினார்.இதுவரை 30க்கு மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளார் மோகன்.இவர் நாடகங்கள் ஆயிரக் கணக்கான முறைகள் நடந்துள்ளன.

இவரது குழுவினைத் தவிர வேறு எந்தக் குழுவினரின்  நாடகங்கள் ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கன முறைகள் நடந்ததில்லை.இவரது ஒவ்வொரு நாடகமும் நூற்றுக்கணக்கான முறைகள் நடந்துள்ளன.

இவரது மற்ற நாடகங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

(இவர் வீட்டு ஜன்னல் தொடரும்)

Saturday, November 17, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 11

----------------------
குடந்தை மாலி
-----------------------

என்.மகாலிங்கம் என்ற குடந்தை மாலி, 1959ல் துர்கா டிராமாடிக் அசோசியேஷன்ஸை ஆரம்பித்தார்.பின்னர் அக்குழு நாடகமித்ரா என பெயர் மாற்றம் அடைந்தது.இன்று அதே குழு மாலி ஸ்டேஜ் என்ற பெயரில் நாடகங்களை நடத்தி வருகிறது.

மகாலிங்கத்தை குடந்தை மாலி என ஆக்கியவர்  ம.பொ.சி ஆவார்

இதுவரை இக்குழு கிட்டத்தட்ட 40 நாடகங்களை மேடையேற்றியுள்ளது.அவற்றுள் பல 100 காட்சிகளைத் தாண்டிய மாபெரும் வெற்றி நாடகங்களாக திகழ்ந்தது.20 நாடகங்கள் மாலி எழுதியது.மீதி நாடகங்கள் இவர் குழுவிற்காக மற்றவர்கள் எழுதியது.

பிரபல எழுத்தாளர்களான நா.பார்த்தசாரதியின் "குறிஞ்சி மலர்",ஆர்.சூடாமணியின் , "ஆழ் கடல்", திருப்பூர் கிருஷ்ணனின் 'பொய் சொல்லும் தேவதைகள்", ஷ்யாமளாராவின்"மன்னிக்க வேண்டுகிறேன்" ஆகியவற்றை மேடைநாடகமாக்கியப் பெருமை மாலிக்கு உண்டு.

இவர்களைத் தவிர்த்து, சௌந்தர்யன்,சுந்தர், நாணு,மெரினா, மணிமோகன் ஆகியோர் இவருக்கான நாடகங்களை எழுதியுள்ளனர்.

திரைப்பட நடிகை சுந்தரி பாய், ஜான்சி ராணி, திரிசக்தி சுந்தரராஜன்,நவாப் கோவிந்தராஜன், கரூர் ரங்கராஜன் ,எஸ் பி ஐ முரளிஆகியோர் இவர் குழுவில் நடித்த சில நடிகர்கள்.

இவரது ஞானபீடம் மிகவும் புகழ் பெற்ற நாடகம்.125 முறைகளுக்கு மேல் மேடையேறியுள்ள நாடகம்.

ஆனந்தவிகடனில் வெள்ளிவிழா ஆண்டில் பரிசு பெற்ற ஏ கே பட்டுசாமியின் "கடவுள் எங்கே?" என்று சற்றே சர்ச்சைக்குரிய கதையை அந்த நாட்களிலேயே மேடையேற்றியவர் மாலி.

அன்னை சாரதா தேவியின் 150ஆவது பிறந்தநாள் விழாவில் அவரது வாழ்க்கையை "அன்னை சாரதா தேவி" என்ற பெயரில் நாடகமாக்கினார்.நாடகக்காவலர் ஆர் எஸ் மனோகர் அந்நாடகத்தை இயக்கினார்.

இவரது சில நாடகங்கள், சங்கல்பம்,கடலை சேரும் நதிகள், கோபுரம் தாங்கும் பொம்மைகள்(இந்நாடகம் 350 முறை மேடையேறியது),நம்மவர்கள்,ஆத்மவிசாரணை, நிதர்சனம், சம்மதம் ஆகியவை.

2017ஆம் ஆண்டு மாலியின் 60 ஆண்டு சேவையை பாராட்டி விழா எடுக்கப்பட்டது.

மாலி, தமிழ் நாடக உலகில் ஒரு சாதனையாளர் எனச் சொல்லலாம்.
பல நிறுவனங்கள் இவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன.20க்கும் மேற்படட் விருதுகளைப் பெற்றவர் இவர்.

தமிழக அரசின் "கலைமாமணி" விருதைப் பெற்றவர்.

Tuesday, November 13, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி -3 )

ஆர் எஸ் மனோகர்
---------------------------

மனோகருக்கான நாடகங்களை துறையூர் மூர்த்தி, இரா.பழனிசாமி, ஏ எஸ் பிரகாசம்,அறிவானந்தம் ஆகியோர் எழுதினர்

இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், துரோணர், மாலிக்காபூர் ஆகிய நாடகங்களை துறையூர் மூர்த்தி எழுதினார்.

சூரபத்மன்,சிசுபாலன், சுக்கிராச்சாரியார்,சிவதாண்டவம், ஒட்டக்கூத்தர் ஆகியவற்றை இரா.பழனிசாமி எழுதினார்

விஸ்வாமித்திரர் நாடகத்தை ஏ.எஸ்.பிரகாசம் எழுதினார்

பரசுராமன்,நரகாசுரன்,இந்திரஜித்,துர்வாசர்,திருநாவுக்கரசர் ஆகிய நாடகங்களை கே.பி.அறிவானந்தம் எழுதினார்.

இந்திரஜித் நாடகத்தை எழுதிய அறிவானந்தம் ஒரு பேட்டியில்...

"எம்.ஆர்.தாவின் குழுவில் நான் சேர்ந்து ரத்தக்கண்ணீர், தூக்குமேடை நாடகங்களில் நடித்து வந்தேன்.ஒருநாள் மனோகரைப் பார்த்து "இந்திரஜித்" நாடகத்தைப் பற்றிக் கூற அதை நாடகமாக எழுதச் சொன்னார்.பிறகு  அவருடன் பணி புரிந்து..அவருக்காக பல நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினேன்.இந்திரஜித் நாடக அரங்கேற்றம் போது, பத்திரிகையாளர்களிடம்,"என்னைப் பற்றி எழுதாவிட்டாலும் பரவாயில்லை...வளர்ந்து வரும் இந்நாடக ஆசிரியர் அறிவானந்தம் பற்றி எழுதுங்கள்" என்றார்.இது அவரது பெருந்தன்மைக்கு உதாரணம்" என்றார்.

அறிவானந்தம் இன்றும் சில சரித்திர நாடகங்களை எழுதி, நடித்தும் வருகிறார்.

மனோகர், 2006 ஜனவரி மாதம் 10ஆம் நாள் நம்மை விட்டு பிரிந்தார்.

இன்னமும் , அவர் குழுவினைச் சேர்ந்தவர்கள், நாடகங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களைப் பற்றி பின்னர் காணலாம். 

Monday, November 12, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)

ஆர் எஸ் மனோகர்
-----------------------------

இவரது அனைத்து நாடகங்களும் வெற்றி நாடகங்களே! இவர் நாடகங்களின் சிறப்பு அம்சமே...பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள்தான்.கிட்டத்தட்ட ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை நமக்கு அளிக்கும்.

மனோகர், மக்கள் வில்லனாகக் கருதும் இதிகாசம், சரித்திர பாத்திரங்களை ஹீரோவாக ஆக்கி தன் நாடகங்களில் நடித்தார்.இலங்கேஸ்வரன்,சாணக்கிய சபதம்,சிசுபாலன்,காடக முத்திரையன் ஆகியவை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

இன்னமும் இவரது, மேற்சொன்ன நாடகங்களும்,மற்றும் சாணக்கிய சபதம்,இந்திரஜித்,சுக்கிராச்சாரியார்,நரகாசுரன்,திருநாவுக்கரசர் ,விஸ்வாமித்திரர்ஆகிய நாடகங்களும் மக்கள் மனதில் இன்னமும் அழியாமல் நிற்பவை எனலாம்

தமது குழுவின் மூலம் 32 நாடகங்களை 8000 முறைகள் மேடையேற்றி நாடக உலகில் இரு இமாலய சாத்னையைச் செய்தவர் மனோகர் ஆவார்.

எதிரொலி எழுப்பும் "எக்கோலிட்" என்ற கருவியை ,முதன் முதலாகப் பயன் படுத்தியவர் இவரே!நாடகத்தில் சிங்கத்தையும்,ஐந்து தலை நாகத்தையும் 3டி அமைப்பில் மேடையேற்றி மக்களை மிரள வைத்தவர் இவர்.

நாடகத்தன்றுநெருப்பாய் இருக்கும் இவர் மற்ற நேரங்களில் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.சக கலைஞர்கள் மீது அளவில்லா பிரியம் கொண்டவர்.

(அடுத்த வீட்டு ஜன்னல் 10 தொடரும்) 

Sunday, November 11, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி- 1)

-----------------------------------
ஆர்.எஸ் மனோகர்
------------------------------

பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து,அஞ்சல்துறையில் லட்சுமி நரசிம்மன் என்பவர் பணியாற்றி வந்தார்.இவர், படிக்கும் போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆரவமும் கொண்டவராய் இருந்தார்.

திருவல்லிக்கேணியில் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே சில இளைஞர்கள் தங்கியிருந்தனர்.அவர்களுக்கு நாடகங்கள் மீது ஆர்வம் இருந்ததை லட்சுமி நரசிம்மன் கண்டார்.

1950ஆம் ஆண்டில் சென்னையில் பிரபல வழக்குரைஞராக இருந்தபடியே , அமெச்சூர் நாடகங்களை நடத்தி வந்த வி. சி. கோபாலரத்தினம் என்பவர் குழுவில் பங்கேற்று நடித்தார் லட்சுமி நரசிம்மன்.பின்னர், தோட்டக்கார விஸ்வநாதன் என்பவர் நடத்தி வந்த குழுவிலும் பங்கேற்றார்

இந்நிலையில், கே பி ரங்கராஜூ என்ற எழுத்தாளர் மூலம்"ராஜாம்பாள்" என்ற படத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அப்படத்தின் தயாரிப்பாளர் இவருக்கு 'மனோகர்" என்று பெயரிட்டார்.பின் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மனோகர் நடித்தார்

முழு நேர நடிப்பை மேற்கொண்ட மனோகர், நேஷனல் தியேட்டர்ஸ் என்ற குழுவினைத் தொடங்கினார்.மிகப் பிரம்மாண்டமான அமைப்புகளை அமைத்து மக்களை வியப்பில் ஆழ்த்தும் நாடகங்களை நடத்தினார்.

இவரின் பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்ததுண்டு.

"இலங்கேஸ்வரன்" என்ற நாடகத்தில் இராவணனாக நடித்துப் புகழ் பெற்ற இவர் பெயருக்கு முன் "இலங்கேஸ்வரன்" ஒட்டிக் கொண்டது.

திரைப்படங்களில் பிரபலமாகி நடித்துக் கொண்டிருந்த போதிலும் , விடாது நாடகங்களையும் நடத்தி வந்தார்.ஒரு சமயம், சேலத்தில் கண்காட்சியில் இவர் நாடகத்தைப் பார்த்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம், இவரது நடிப்பு, தோற்றம், வசன உச்சரிப்பு இவற்றைக் கண்டு தங்கள் தயாரிப்பில் வந்த படங்களில் இவரை நடிக்க வைத்தார்.

மாடர்ன் தியேட்டர்ஸில் மட்டும் கிட்டத்தட்ட 18 படங்களில் இவர் நடித்தார்.

(பகுதி - 2 அடுத்த பதிவில்) 

Saturday, November 10, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 9 (பகுதி -2)

 (சமீபத்தில் தண்ணீர் தண்ணீர் நாடகத்தை மீண்டும் மேடையேற்றிய கோமலின் மகள் தாரிணி கோமலும்..நாடகத்தில் வந்த ஒரு காட்சியும்)
கோமலின் தண்ணீர் தண்ணீர் நாடகம் தண்ணீர் இல்லாத ஒரு கிராமத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நாடகம் ஆகும்.அரசியல்வாதிகளாலும், அரசு அதிகாரிகளாலும், கிராமத்து மக்கள் படும் துயரம், தீவிரவாதம் ஏன் உருவாகிறது ஆகியவற்றை இந்நாடகம் நயம்படச் சொன்னது.

1981ல் கே பாலசந்தர், இந்நாடகத்தைத் திரைப்படமாக்கினார்.இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

1982ல் கோமல் மேடையேற்றிய "ஒரு இந்தியக் கனவு" நாடகம் கோமல் இயக்கத்திலேயே திரைப்படமானது.

இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் கோமல் , சில காலம் உதவி இயக்குநர், வசனகர்த்தாவாக ஏற்கனவே பணியாற்றியவர்,"கற்பகம்" "கை கொடுத்த தெய்வம்" பேசும் தெய்வம் ஆகிய படங்களில் கோமலின் பங்கும் உண்டு

"தண்ணீர் தண்ணீர்" நாடகம், எஸ்.சங்கர் என்னும் ஆங்கில பேராசிரியரால் மொழி பெயர்க்கப்பட்டு, பி சி ராமகிருஷ்ணா இயக்கத்தில் மெட்ராஸ் பிளேயர்ஸால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டது

தன் குழுவைத் தவிர , வேறு சில குழுவினருக்கும் கோமல் நாடகங்கள் எழுதித் தந்துள்ளார்.

மேஜர் சுந்தரராஜன் நடித்த "அவன் பார்த்துப்பான்" அவற்றில் ஒன்று

இவரின், "என் வீடு என் கணவன் என் குழ்ந்தை" நாடாம் தொலைக்காட்சியில் மனோரமாவால் நடிக்கப் பெற்று பெரும் பாராட்டுதல்களைப் பெற்றதாகும்.

"சுபமங்களா" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இவர் சில காலம் பணியாற்றியுள்ளார்.

நீரின்றி அமையாது உலகு.கோமலின் தண்ணீர் தண்ணீர் பற்றி சொல்லாமல் தமிழ் மேடைநாடகங்கள் பற்றி யாரும் உரைத்திட முடியாது.கடைசி சொட்டு தண்ணீர் உலகில் உள்ளவரை கோமல் நினைவில் இருப்பார்

இதற்குமேல் "கோமலை"ப் பாராட்ட எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை

Friday, November 9, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 9 (பகுதி -1)

---------------------------
கோமல் சுவாமிநாதன்
------------------------------------

1935ஆம் ஆண்டு பிறந்தவர் சுவாமிநாதன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோமல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் .சென்னையில் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக தன் வாழ்நாளைத் தொடங்கியவர்.பின்னர் ஊரின் பெயரான "கோமல்" இவர் பெயருடன் ஒட்டிக்கொள்ள கோமல் சுவாமிநாதன் ஆனார்.

புதுமைப்பித்தனின் எழுத்துகளால் கவரப்பட்டவர் இவர்.எஸ் வி சஹஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவிற்காக இவர் எழுதிய முதல் நாடகம் "புதிய பாதை" ஆகும்.

பின்னர், 1971ல் தனது நாடக்குழுவான ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ் துவக்கினார்.பொதுவுடமைக் கொள்கைகளில் மிகவும் பற்று கொண்டவர் கோமல்

இவர் தன் குழுவிற்காக 33 நாடகங்கள் எழுதினார்.அவற்றில் சில..

"கோடு இல்லாத கோலங்கள்" ஆட்சி மாற்றம்" சுல்தான் ஏகாதசி"பெருமாளே சாட்சி,"யுத்த காண்டம்" "செக்கு மாடுகள்" "கிராம ராஜ்ஜியம்" "ஒரு இந்தியக் கனவு"

1980ல் இவர் எழுதிய "தண்ணீர் தண்ணீர்" மாபெரும் வெற்றி நாடகமாகும்.இந்நாடகம் 250 முறைகளுக்கு மேல் மேடையேறியுள்ளது.இந்நாடகத்தில் வாத்தியாராக வந்த "ராமன்" பின்னாளில் கோமலின் இணைபிரியா நண்பர் ஆனார்.மக்களால் வாத்தியார் ராமன் என்றே அறியப்பட்டார்.

கோமலின் நாடககுழுவில் நடித்த மேலும் சில நடிகர்கள் , ராஜ்மதன்,ஏ கே வீராச்சாமி.,சாமிக்கண்ணு ஆவர்.

வெள்ளித்திரை நடிகர் சத்தியராஜ், கோமலின் "கோடில்லா கோலங்கள்" 'சுல்தான் ஏகாதசி" "நவாப் நாற்காலி' ஆகிய நாடகங்களில் நடித்தவர் ஆவார்.

(அடுத்தவீட்டு ஜன்னல் - 9 அடுத்த பதிவிலும்) 

Wednesday, November 7, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 8 (பகுதி - 2)


-------------------------------------
நடராஜன் (கூத்தபிரான்)

------------------------------------------

1985ஆம் ஆண்டு கூத்தபிரான், மீண்டும் தனக்கு சொந்தமாக ஒரு நாடகக் குழுவினைத் தொடங்கினார்.குழுவிற்கு "நவபாரத்" என்று பெயரிட்டார்.

"நாராயண கோபாலா", "காசிக்குப் போன கணபதி" "சுபஸ்ய சீக்கிரம்" போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்.

பின்னர், அவரது மகன் ரத்னம், அவரது குழுவிற்கு நாடகங்களை எழுத ஆரம்பித்தார்.

"ஜேஷ்ட குமாரா", "ரூபாய் 21","உன்னால் முடியும் தாத்தா""ரோபோவின் டயரி".ஆகிய நாடகங்களை அவர் எழுதினார்.

இந்நிலையில்..தன் கலையுலக சேவையை முடித்துக் கொண்டு கூத்தபிரான் 2014ல் அமரர் ஆனார்.அந்த நாளில் கூட காலைக்காட்சி ஒன்றில் அவர் நடித்துவிட்டு வந்தது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

பின், ரத்னம்..குழுவின் பெயரை , "கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ்" (KNT) என மாற்றினார்.தந்தையின் ஆசியுடன் ரத்னம் மேடையேற்றிய நாடகங்கள், "சொப்பனக் குழந்தை"(2015), "காளீஸ்வர பவனம்" (2016) ,சதுரங்கப் பார்வை,கிட்டப்பா கலகிட்டப்பா, ஸ்கந்தா,செல்லப்பா ஆகியவை ஆகும்.

இவற்றில் சொப்பனக் குழந்தையும், காளீஸ்வரபவனமும் 2015, 2016 சிறந்த நாடகங்களாகத் தேர்வு செய்யப்பட்டன.

ரத்னத்துடன் அவரது சகோதரர் கணேசனும், மகன் விக்னேஷ் ரத்னமும் குழுவில் நடித்து வருகின்றனர்.

இச்சமயத்தில்..கூத்தபிரானின் சிறந்த குணம் ஒன்றினை சொல்லாவிடில் இக்கட்டுரை முழுமைப் பெறாது.

விமர்சனங்களை வரவேற்பவர் அவர்.ஏதேனும் குறைகளைச் சொல்லி விமர்சனங்கள் வந்தாலும், அவை பொய்யாக இருந்தாலும் சற்றும் கோபம் அடையாமல் பதில் அளிப்பார்.

ஒருமுறை அவரது நாடகத்திற்கு ஒரு இதழ் மிகவும் சொற்ப மதிப்பெண்களை வழங்கியது.விமர்சனத்திற்கு  கூத்தபிரான் நன்றி தெரிவித்ததுடன்.."எங்களது அடுத்த நாடகத்தில் குறைகளை நீக்கிவிடுகிறோம்.அது, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கும்" என்று பதிலளித்திருந்தார்.

உபரித் தகவல்
--------------------------------
உன்னால் முடியும் தாத்தா, ரோபோவின் டயரி ஆகிய நாடகங்களில் மூன்று தலைமுறையினர் முறையே கூத்தபிரான்,அவரது மகன்கள் ரத்னம், கணேசன், பேரன் விக்னேஷ் ஆகியோர் நடித்தது எந்த நாடகக்குழுவிலும் நடந்திராத சாதனை என்றே நினைக்கின்றேன்  

Tuesday, November 6, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 8 (பகுதி - 1)


நடராஜன் - (கூத்தபிரான்)

கலாநிலையம் நாடகக் குழுவில் ஆல் இந்தியா ரேடியோவில் வேலை செய்து வந்த நடராஜன் என்ற இயற்பெயர் கொண்டவர் கூத்தபிரான் என்ற பெயரில் நாடகங்களில் நடித்துவந்தார் என்பதை முன்னதாகக் கூறினேன்.

ஆனால்..கூத்தபிரானின் சாதனைகள் பெரியது.அதைத் தனியாகக் கூற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்தேன்,

1952ஆம் ஆண்டிலேயே தான் வசித்துவந்த டையாறில் "அடையாறு நாடக மன்றம்" என்ற குழுவினைத் தொடங்கி நாடகங்களை எழுதி, இயக்கி நடித்து வந்தார் கூத்தபிரான்

வானொலியில் பணியாற்றிய போது அப்போது வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்ட ரா.அய்யாசாமியுடன் பணியாற்றினார்.முழந்தைகளுக்கான "அன்னைசொல் அமிர்தம்" என்ற நாடகத்தை நடத்தினார்.குழந்தைகளுக்கான இந்நாடகம் நாடகப் போட்டியில் முதல் பரிசினை வென்றது.

சோ, காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் மேடையேற்றிய பகீரதனின் "தேன்மொழியாள்" நாடகத்தில் இவர் பெரும் பங்காற்றியதுடன் அந்நாடகத்தை இயக்கவும் செய்தார்

பின்னர், கல்கியின் மீது மிகவும் பற்று கொண்ட இவர் கல்ல்கி ஃபைன் ஆர்ட்ஸ் என்ற குழுவினை ஆரம்பித்து , கல்கியின் "அமரதாரா" வீணை பவானி" "என் தெய்வம்" ஆகிய கதைகளை மேடையேற்றினார்.இந்நாடகங்களில் ஜெயஷங்கர், ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்தனர்

1961ஆம் ஆண்டு தில்லி சென்று நாடகங்களை நடத்தினார். தில்லியில் சென்னையில் இருந்து சென்று நாடகம் நடத்திய முதல் குழு இவருடையது எனலாம்.அப்போது அவருக்கு தில்லி வானொலியில் பணியாற்றிய பூர்ணம் விஸ்வநாதன் நட்பு கிடத்தது.

பூர்ணம் தில்லியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்ததும் அவருடன் சேர்ந்து, கூத்தபிரானும் கலாநிலையத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

"தனிக்குடித்தனம்" ஊர் வம்பு" கால்கட்டு, "வாஷங்டனில் திருமணம்" ஆகிய நாடகங்களில் இவர் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

இதற்கிடையே, வானொலியில் அய்யாசாமி ஓய்வு பெற, அவர் வகித்து வந்த பணி இவருக்கு அளிக்கப்பட்டது.ஆம்...இப்போது கூத்தபிரான் வானொலி அண்ணா ஆனார்.நிறைய குழந்தைகள் நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான  கதைகளைக் கூறி சிறுவர்களை மகிழ்வித்தார்.

தவிர்த்து,கிரிக்கட் மேட்ச் களுக்கான தமிழ் வர்ணனி செய்தார்.

ராமமூர்த்தி, ஜப்பார், கூத்தபிரான் இவர்களே தமிழ் வர்ணனை ஆரம்பித்து வைத்த மும்மூர்த்திகள் ஆவர்

(இவர் வீட்டு ஜன்னல் தொடரும்)

Friday, November 2, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 7

--------------------------------
டி எஸ் சேஷாத்திரி
-------------------------------

1960-70களில்  இருந்து மிகவும் பிரபல நாடக நடிகர்.ஸ்ரீதரால் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானவர்

இவர் சாந்திநிகேதன் என்ற நாடகக் குழுவினை நடத்தி வந்தார்.பல சிறந்த நாடகங்கள்மேடையேறின. டி கே எஸ் சந்திரன், சைமன் ஆகியோர் இவர் நாடகங்களில் நடித்தவர்கள்

இவருக்காக மாரா, பிலஹரி,தூயவன், சௌந்தர்யன் ஆகியோர் நாடகங்களை எழுதியுள்ளனர்

பிலஹரி , ஆனந்த விகடனில் எழுதிய நெஞ்சே நீ வாழ்க என்ற சிறுகதையை "ஆலமரம்" என்ற பெயரில் மேடையேற்றினார்.அதுவே பிறகு மேஜர் சுந்தரராஜன், மேடையில் இவர் ஏற்ற பாத்திரத்தை ஏற்க "ஆலயம்" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து  வெள்ளிப் பதக்கத்தை தேசிய விருதில் வென்றது


ஏ.வி எம் ராஜன், புஷ்பலதா, டைபிஸ்ட் கோபு ஆகியோரும் இவர் நாடகத்தில் நடித்தவர்கள்.முன்னர் சொல்லியுள்ள ஆலமரம் நாடகத்தில் நடித்தப் பின்னர்தான் கோபு என்ற நகைச்சுவை நடிகர் டைபிஸ்ட் கோபு வானார்

30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சேஷாத்திரி நடித்துள்ளார்

இவரது இளவல் பத்மநாபன் என்பவரும் நாடக நடிகர்.இவர் நாடகங்களில் ராஜசேகர், பானுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.பரத் எழுதிய "தொடரும் அத்தியாயம்" என்ற நாடகம் இவர்களின் வெற்றி நாடகமாகும்

Thursday, November 1, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 6

---------------------------------
எம் ஆர் ராஜாமணி
------------------------------

சிறந்த நாடக நடிகர்..இயக்குநர்.

இவர் , விசு, கிஷ்மூ ஆகியோர் சகோதரர்கள்.

ராஜாமணி, ம.பொ.சி.யின் உறவினரான செல்வராஜ் கிராமணியின் இயக்கத்தில் "தங்கத்தாய் மரகதம்" என்ற நாடகத்தில் நடித்தார்.

பின்னர்..நண்பர்கள் மௌலி, கணேஷ், நான் உடபட ஆகியோருடன் சகோதரர்கள் மூவரும் சேர்ந்து, டி கே எஸ் சகோதரர்களிடமிருந்து ' ரத்தபாசம்" நாடகத்தை அம்பத்தூரில் நடத்திட அனுமதி பெற்று மேடையேற்றினோம்.மூத்த சகோதரரானராஜாமணிக்கு நடிப்பில் அவ்வளவு நாட்டமில்லாததால் அந் நாடகத்தை இயக்கும் பொறுப்பினை ஏற்றார்.

பின்னர், விசுவின் விஸ்வசாந்தி குழுவில் நடிக்கத் தொடங்கினார். ஈஸ்வர அல்லா தேரே நாம், அவர்களுக்கு  வயது வந்து விட்டது. மோடி மஸ்தான் ஆகிய நாடகங்களில் இவர் நடிப்பு பாராட்டும்படி இருந்தது.

பின்னர் எம் ஆர் ஆர் தியேட்டர்ஸ் என்னும் குழுவினை ஆரம்பித்தார்.சில நாடகங்களை மேடையேற்றினார்.அதில் குறிப்பிட வேண்டிய நாடகம் குரியகோஸ் ரங்கா எழுதிய "கீழ் வானம் சிவக்கும்" என்ற நாடகம்.இந்நாடகத்தில் இவர் ஏற்ற பாத்திரத்தை வெள்ளித்திரையில் நடிகர் திலகம் ஏற்றார்.

"அவர்களுக்கு வயது வந்துவிட்டது" நாடகத்தைப் பார்த்த இயக்குநர் சிகரம் கே பாலசந்தர், தன் தயாரிப்பான "மூன்று முடிச்சு" படத்தில் நடிக்க இவருக்கு சந்தர்ப்பம் அளித்தார்.

மோடி மஸ்தான் நாடகத்தில் காதுகேளாதவராய் நடித்து ரகளை பண்ணியவருக்கு , அந்நாடகம்"மணல் கயிறு" என்ற பெயரில் படமானபோது அதே பாத்திரத்தில் திரையிலும் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது

"நாலு பேருக்கு நன்றி" என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார்

காலன் இவரது முத்திறமையை வெளியிடுமுன் இவரை தன்னிடம் அழைத்துக் கொண்டான்.