Monday, October 18, 2010

தினமணிக்கு ஒரு பாராட்டு

(தினமணியில் வந்த தலையங்கம்)
ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டும் என்கிற ஒரு குறிக்கோளுடன் எதை வேண்டுமானாலும், எந்த முன்யோசனையும் இல்லாமல் எதிர்க்கலாம் என்பது இன்று அரசியல் கட்சிகளின் வழக்கமாகிவிட்டது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: போக்குவரத்து வாகனத் தொழிலுக்கான ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் என்கிற சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக அண்மையில் நடத்திய போராட்டம்.

இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் பேசுகையில், கல்வித் தகுதிக்கும் சாலை விபத்துக்கும் தொடர்பில்லை என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இந்த வாதம் உண்மைதான். வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாவதற்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்தில் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் படித்தவர்கள், பட்டதாரிகள் என்பது நிச்சயம். அதற்காக கல்வித் தகுதியே வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா?

உள்ளூரில் மட்டுமன்றி பெருநகரங்களிலும் பிற மாநிலங்களுக்கும் வாகனங்களை ஓட்டிச் சென்றாக வேண்டும். அங்கு வேற்று மொழியில் இருக்கும் அறிவிப்புப் பலகைகளைப் படிக்க முடியாத நிலையில் ஆங்கிலத்தில் உள்ள அறிவிப்புகளையாவது படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான அடிப்படைத் தகுதிக்காக மட்டுமே ஒருவர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை.

படிக்காத ஒருவரால் வாகனம் ஓட்ட முடியாதா என்று கேட்கலாம். ஒரு துறை பற்றிய அறிவைப் பெற தன்னார்வமும் தேடலும் போதுமானது. அத்துறையைத் தொழிலாகக் கொள்ள வேண்டுமானால், அதற்குக் கல்வித் தகுதி அவசியம். சாலையில் வாகனம் ஓட்டுவது தனிப்பட்ட விஷயம் அல்ல, பலருடைய உயிர்களோடு தொடர்புடையது. அந்தப் புரிதலும் பொறுப்புணர்வும் ஏற்படுத்த கல்வி மிகமிக அவசியம்.

நம் நாட்டில் லஞ்சம் கொடுத்து ஓட்டுநர் உரிமம் பெறும் நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. அல்லது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மூலமாக எந்தவொரு வாகனத்தை இயக்கவும் உரிமம் பெறுவதும் எளிது என்பதே உண்மை நிலை. கனரக வாகனங்களை இயக்க வேண்டுமானால் குறிப்பிட்ட காலம் இலகுரக வாகனங்களை இயக்க வேண்டும் என்ற நிபந்தனைகள்கூட தளர்த்தப்பட்டு, 20 வயது பூர்த்தியாகியிருந்தால் நேரடியாக கனரக வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கப்படுவதால்தான் பல விபத்துகள் நடக்கின்றன.

ஆனால், மேலை நாடுகளில் கல்வித் தகுதி ஒருபுறம் இருக்க, வாகனம் பற்றிய அறிவும், போக்குவரத்து குறித்த விழிப்புணர்வுக்கும் தனி வகுப்புகளில் சேர்ந்து பயின்றாக வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இத்தகைய வகுப்புகளில் விபத்துகள் நேரிடும் தன்மை, தவிர்க்க வேண்டிய முறைகள், விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், காப்பீட்டின் அவசியம், சட்டச் சிக்கல்கள் என எல்லாவற்றையும் சொல்லித் தருகிறார்கள். ஓட்டுநர் வகுப்புகளில் குறைந்தபட்சம் 30 மணி நேரம் பாடம் கேட்டாகவேண்டும். அதன் பிறகு எழுத்து அல்லது நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் இதெல்லாம் இந்தியாவில் இல்லை. வாகன ஆய்வாளர் முன்பாக வண்டியை ஓட்டிக் காட்டினால் போதுமானது என்கிற நிலைமைதான் உள்ளது.

குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை, நாட்டு நடப்புகளை செய்தித்தாளில் படிக்கக் கூடிய அளவுக்கான அறிவு பெற மட்டுமே. போக்குவரத்து தொடர்பான புரிதலுக்கு இத்தகைய பொதுஅறிவு போதுமானது என்கிற உலக நடைமுறையைக் கருத்தில் கொண்டே இந்தக் கல்வித் தகுதியை அரசு நிர்ணயிக்கிறது.

ஒரு ராணுவ வீரரின் பணி என்பது தலைமை இடும் கட்டளைக்குக் கீழ்ப்படிவதும், எதிரியைத் துப்பாக்கியால் சுடுவதும் மட்டும்தான் என்றாலும், உடல்தகுதியுடன் பிளஸ்-2 படித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் இரவுக் காவலர் பணியிடத்துக்கு ஆள்எடுத்தாலும்கூட, குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றே கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு இரவுக் காவலர் படித்திருந்தால் என்ன, எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்தால்தான் என்ன என்ற கேள்வி இன்றைய தேதிக்கு கேலிக்கு இடம்தருவதாகும்.

தமிழ்நாட்டில் எல்லா அரசுப் பள்ளிகளிலும் இலவசமாக 8-ம் வகுப்புப் படித்து முடிப்பது மிகமிக எளிதானதாகும். மாணவர்களுக்கு மதிய உணவும் உண்டு. எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் சரியாகப் படிக்காத போதும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று அரசு கட்டளையிட்டிருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஒருவர் 8-ம் வகுப்பு வரை படிக்கத் தவறினால் அது யார் குற்றம்? இத்தகைய தவறான போக்குக்கு அரசியல் கட்சிகள் ஊக்கம் தருவது சரியாக இருக்க முடியாது.

ஓட்டுநர் உரிமத்துக்கும், இரவுக் காவலர் பணிக்கும்கூட கல்வித் தகுதி அவசியமாக இருக்கும்போது, பொதுத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் வேட்பாளருக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியை அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதுதான் நியாயமானதாக இருக்கும்.

அத்தகைய புதிய காலகட்டத்துக்கு நாம் நகர்ந்தாகிவிட்டது. கல்வி அறிவு இல்லாமல் எதற்கும் உரிமை கோர முடியாது என்கின்ற நன்னிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, கல்வித் தகுதி கூடாது என்று சொல்வது சரியானதாக இருக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் கட்சிகளாகவும், எதிரிக் கட்சிகளாகவும் மட்டுமே இருந்துவிடக் கூடாது. எதிர்காலச் சிந்தனையைக் கருத்தில்கொண்ட கட்சிகளாகவும் இருக்க வேண்டும்.

9 comments:

vasu balaji said...

6m க்ளாஸ்ல இருந்து ஒன்பதுக்குள்ள பெரும்பாலும் படிக்கலைன்னா வேலைக்கு அனுப்பறது வழக்கமாச்சே சார். அப்போ க்ளீனர்னு போய் கத்துண்டுதானே லைசென்ஸ் எடுக்கறாங்க.செண்ட்ரல் போர்ட்டரும், ரிக்‌ஷாக்காரனும் இந்திய மொழியில்லாம ஃப்ரெஞ்ச், ஜெர்மன், ரஷ்யன்னு என்னமா பேசுறாங்க. ‘வாயில இருக்கு வழின்னு’ சொலவடையே இருக்கே. ஹி ஹி. இந்த அறிவிப்பு பலகை இடிக்குது. அங்கயும் ஒரு கட்சித்தலைவர் போஸ்டர் ஒட்டுறவைங்க நம்மாளுக. 8 வரைக்கும் ஒரு எழுத்தும் எழுதாம ஸ்கூலுக்கு வந்து போனாலே பாஸ்னு இருக்கிறப்பொ இந்தச் சட்டம் கேலிகூத்தா இல்லையா.

நிஜமா இதை அமல் படுத்தணும்னா கண்டிப்பா எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு இருந்தாகணும். 35 வருஷத்துக்கு முன்னாடி ட்ரைவிங் லைசன்ஸ் எடுத்தவுங்க சொல்லுவாங்க. ட்ரைவ் பண்றப்போ ரோட்ல ஒரு பால் வந்தா என்ன பண்ணுவன்னு கேப்பாங்களாம். ப்ரேக் போட்டு வெயிட்பண்ணி அந்த பாலைத் துரத்திண்டு குழந்தை எதுவும் வரலைன்னு நிச்சயம் பண்ணி அப்புறம் வண்டி எடுப்பேன்னு சொன்னாதான் லைசன்ஸாம். இப்படி சமயத்துல அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வியெல்லாம் வருமாம்:)). இப்போ? தாத்தா சிரிச்சா போதும் சட்டைப் பைக்குள்ள:))

Unknown said...

//நம்மாளுக. 8 வரைக்கும் ஒரு எழுத்தும் எழுதாம ஸ்கூலுக்கு வந்து போனாலே பாஸ்னு இருக்கிறப்பொ இந்தச் சட்டம் கேலிகூத்தா இல்லையா.//

superb.....Dinamani should be ashamed for the editorial.

பவள சங்கரி said...

நன்று சொன்னீர்கள் அய்யா.கல்வியின் அவசியத்தை அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

Unknown said...

எனது பாராட்டுகளும்

"உழவன்" "Uzhavan" said...

தேர்தலில் நிற்பதற்கும் எங்கே ஒரு கல்வித் தகுதியை நிர்ணயித்துவிடுவார்களோ என்ற பயமாகக் கூட இருக்கலாம் :-)

எஸ்.கே said...

சிறப்பான கட்டுரை!

ராம்ஜி_யாஹூ said...

i go with dinamani

ராம்ஜி_யாஹூ said...

i go with dinamani

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி