ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஓட்டு போட பணம் கொடுத்த 7 திமுகவினரும் அவர்களிடம் பணம் வாங்கிய 6 வாக்காளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அமல்படுத்தி உள்ளது. பறக்கும் படையினரும் ஆங்காங்கே திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.இதுவரை ரூ.42 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஓட்டுக்காக பணம் பெறுவது குற்றம், பணம் கொடுப்பவர்கள் மட்டுமின்றி பணம் வாங்குபவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறுகையில்,
தமிழக சட்டமன்ற தேர்தலில், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப்போட முடியாது. அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் சிலிப்பை கொண்டு ஓட்டுப்போடலாம். இதுவரை 95 சதவீதம் பேருக்கு பூத் சிலிப் வழங்கிவிட்டோம். மீதமுள்ளவர்களுக்கு அவரவர் ஓட்டுப்போடும் வாக்குச்சாவடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். 100 சதவீதம் பேருக்கு பூத் சிலிப் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இதுவரை 20 ஆயிரம் துணை ராணுவத்தினர் (200 கம்பெனி) வந்துள்ளனர். மேலும், 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் 11ம் தேதி வருகின்றனர். இவர்கள் அனைவரும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
ஓட்டுப்போடுவதற்காக பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் சட்டப்படி குற்றம். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 171 (இ) பிரிவின் கீழ் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படும்.
யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் பணத்தைப் போட்டுவிட்டால் அந்தப் பணத்தை எடுத்து வைத்துக்கொள்ளாமல், போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்மூலம் நல்ல குடிமகன் என்பதை நிரூபிக்கலாம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு வசதியாக இரவு நேரத்தில் வேண்டுமென்றே மின்தடை ஏற்படுத்துவதாக கூறப்படும் புகார் பற்றி விசாரிக்கப்படும். இதுதொடர்பாக மின்சார வாரியத் தலைவருடன் பேச இருக்கிறேன்.
இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் சட்ட விதிமுறைகளின்படி எவ்வித பாகுபாடு இல்லாமல் செயல்படுகிறது என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதன் முதலாக குறிப்பிட்ட ஓட்டு போட பணம் வாங்கியதாக ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த 6 வாக்காளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் இந்தத் தொகுதியில் வாக்காளர்கள் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார்
கடும் போட்டி நிலவி வரும் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆனந்துக்கு வாக்கு சேகரித்த அதவத்தூர் பஞ்சாயத்து தலைவர் ஆண்டிமணி, அவரது ஆதரவாளர்கள் ராஜேந்திரன், ராமு, எஸ்.ராஜேந்திரன், சேகர், அன்பழகன் , விஜயகுமார் ஆகியோர் 7 பேர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்தனர்.
இதையறிந்த தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் அங்கு விரைந்து பணம் பட்டு வாடா செய்த 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணம் பெற்ற வாக்காளர்கள் செல்வம், பெரியசாமி, நாகவள்ளி, காமாட்சி, சண்முகம், அமிர்தம் ஆகியோரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ஓட்டுக்காக வழங்கப்பட்ட ரூ. 5,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் கூறுகையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் வினியோகித்த 7 பேரும், பணம் பெற்ற வாக்காளர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பணம் பெற்ற வாக்காளர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றார்.
மதுரையில்....
அதே போல மதுரை பசும்பொன் நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஸ்கரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.5,000 பறிமுதல் செய்யப்பட்டது. புதூர் வாமடிப்பட்டியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த மாணவர் கபிலன் (20) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.4,900 பறிமுதல் செய்யப்பட்டது.
விளக்குத் தூண் பகுதியில் செல்வக்குமார், குமார் ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.15,000 பறிமுதல் செய் யப்பட்டது.
ரூ. 20 லட்சம் பறிமுதல்:
மதுரை கூடல்நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கரிமேட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒத்தக்கடையில் கணபதி (41) என்பவர் கைது செய்யப்பட்டார். ஊமச்சிக்குளத்தில் வேல்பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ரூ.17,000 பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை பகுதிகளில் இதுவரை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலூர் அருகே நயித்தான்பட்டி பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் திருஞானம், அந்த பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்ற பெண்ணிடம் ரூ.10,000 தந்து அதை தலா ரூ.200 வீதம் 50 பேருக்கு கொடுக்கும்படி கூறினார். அதன்படி செல்லமுத்து அந்த பகுதியை சேர்ந்த 30 பேருக்கு தலா ரூ.200 வினியோகித்தபோது கீழவளவு போலீசார் செல்லமுத்துவை கையும் களவுமாகப் பிடித்தனர்.
(நன்றி தட்ஸ் தமிழ் )