Saturday, July 31, 2010

உயிர் காப்பான் தோழன்


இன்று நண்பர்கள் தினம்..உயிர் காப்பான் தோழன் என்பார்கள்..

தாய்,தந்தை,உறவு,மனைவி இவர்களுடன் கூட பகிரமுடியாத சில அந்தரங்களை நண்பர்களிடம் மட்டுமே பகிரமுடியும்.அந்த அளவு வலிமை வாய்ந்தது நட்பு.

இந்நாளில் அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துகளும்..நன்றியும்..

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வள்ளுவர் நட்பு,நட்பாராய்தல்,பழமை,தீ நட்பு, கூடா நட்பு ஆகிய ஐந்து அதிகாரங்களில் சொல்லியுள்ளதை..எளிமையாகக் கொடுத்துள்ளேன்.

79.நட்பு

1.நட்பு கொள்வது போல அருமையானது இல்லை.நம் பாதுகாப்புக்கும்
அது ஏற்ற செயலாகும்.

2.அறிவுடையார் நட்பு வளர்பிறை போல வளர்ந்து முழு நிலவாகும்.
அறிவற்றவர் நட்பு தேய்பிறையாய் குறைந்து மறையும்.

3.படிக்கப்படிக்க நூல் இன்பம் தரும்...பழகப்பழக பண்புடையார்
நட்பு இன்பம் தரும்.

4.நட்பு என்பது சிரித்து மகிழ மட்டும் அல்ல..நண்பர்கள் வழி மாறும் போது
இடித்து திருத்துவதற்கும் ஆகும்.

5.நட்புக்கொள்ள ஒருவருடன் தொடர்பும்..பழக்கமும் இருக்க வேண்டும் என்பதல்ல..
அவருடைய ஒத்த மன உணர்ச்சியே போதுமானது.

6.முகமலர்ச்சி மட்டும் நட்பு அல்ல..நெஞ்ச மலர்ச்சியும் உண்மையான நட்புக்கு தேவை.

7.அழிவைத் தரும் தீமையை நீக்கி..நல்ல வழியில் நடக்கச்செய்து அழிவு காலத்தில் உடனிருந்து
துன்பப்படுவதே நட்பாகும்.

8.அணிந்திருக்கும் உடை நெகிழும்போது..கைகள் உடனடி செயல்பட்டு சரி செய்வதுபோல
நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கிக் களைவதே சிறப்பு.

9.மன வேறுபாடு கொள்ளாது தன்னால் முடியும் போதெல்லாம் உதவி செய்து நண்பனை
தாங்குவதே நட்பின் சிறப்பாகும்.

10.நண்பர்கள் ஒருவருக்கொருவர்..இவர் இப்படி..நான் அப்படி என செயற்கையாக புகழும்போது
நட்பின் பெருமை குறையும்.

80.நட்பாராய்தல்

1.ஆராயாமல் கொள்ளும் தீய நட்பு பின்னர் விடுபட முடியா அளவுக்கு கேடுகளை உண்டாக்கும்.

2.மீண்டும்..மீண்டும் ஆராயாமல் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு..இறுதியில் சாவதற்கு காரணமாகிற
அளவு துயரத்தைக் கொடுக்கும்.

3.குணம்,குடிபிறப்பு,குற்றங்கள்,குறையா இயல்புகள் என அனைத்தும் அறிந்தே ஒருவருடன் நட்பு
கொள்ள வேண்டும்.

4.உயர்குடியில் பிறந்து பழிக்கு நாணுகின்றவனின் நட்பை எப்பாடுபட்டாவது பெறவேண்டும்.

5.தீமையான செயல்களை செய்யும் போது கண்டித்து சொல்லி,அறிவுரை வழங்கும் ஆற்றலுள்ளவரின்
நட்பே சிறந்த நட்பாகும்.

6.தீமை வருவதும் நன்மைதான்..அப்போதுதான் நம் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறியமுடியும்.

7.அறிவில்லாதவருடன் செய்துக் கொண்ட நட்பிலிருந்து நீங்குதலே ஒருவனுக்கு பெரும் பயனுடையதாக
அமையும்.

8.ஊக்கம் குறையும் செயல்களையும்,துன்பம் வரும்போது விலகும் நண்பர்களையும் விட்டுவிட வேண்டும்.

9.இறக்கும் தறுவாயிலும்..நமக்கு கேடு வரும்போது கைவிட்டு ஓடிய நண்பர்களின் நினைப்பு வந்தால்..
அது உள்ளத்தை வறுத்தும்.

10.குற்றமற்றவர்களை நண்பனாகக் கொள்ள வேண்டும்..இல்லாதவர் நட்பை எந்த விலைக் கொடுத்தாவது
விலக்க வேண்டும்.

81.பழைமை

1.பழகிய நண்பர்கள் ...உறவை அழியாமல் பாதுகாப்பதே பழைமை என்பதாகும்.

2.பழைய நண்பர்களின் உரிமையைப் பாராட்டும் கடமைதான் சான்றோர்களின் உண்மையான நட்பாகும்.

3.பழைய நண்பர்கள் உரிமை எடுத்துக்கொண்டு செய்யும் காரியங்கள்.. நாமே
செய்ததுபோல எண்ணாவிடில்.. நட்பு பயனற்றுப்போகும்.

4.பழைய நட்பின் உரிமையால்... நண்பர்கள் கேளாமலேயே ஒரு செயல் புரிந்தாலும்..
நல்ல நண்பர் எனப்படுபவர் அதை ஏற்றுக் கொள்வர்.

5.வருந்தக்கூடிய செயலை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை மட்டுமல்ல..
மிகுந்த உரிமையே என்று எண்ண வேண்டும்.

6.நீண்டநாள் நண்பகள் தமக்கு கேடு செய்வதாக இருந்தாலும் நட்பின் இலக்கணம்
தெரிந்தவர்கள் அந்த நட்பைத் துறக்க மாட்டார்கள்.

7.பழைய நண்பர்கள் அன்புடன் அழிவு தரும் செயல்களைச் செய்தாலும்
நட்பு கொண்டவர்கள் அன்பு நீங்காமலிருப்பர்.

8.பழகிய நண்பர் செய்த தவறுப்பற்றிப் பிறர் கூறினாலும் கேளாமலிருப்பவர்க்கு..
அந்நண்பர் தவறு செய்தால் அந்நட்பால் என்ன பயன்.

9.பழைய நண்பரின் நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகு போற்றும்.

10.பழகிய நண்பர்கள் தவறு செய்தாலும் ..அவர்களிடம் தமக்குள்ள அன்பை
நீக்கிக் கொள்ளாதவரை பகைவரும் விரும்புவர்.

82.தீ நட்பு

1.அன்பு மிகுதியால் பழகுபவர்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பை
குறைத்துக் கொள்வதே நல்லது.

2.தனக்கு வேண்டும் போது நட்புச் செய்து..பயன் இல்லாத போது நட்பு நீங்குபவர்களின்
நட்பைப் பெற்றாலும்..இழந்தாலும் ஒன்றுதான்.

3.பயனை எதிப்பார்க்கும் நண்பர்..பொருளை மட்டுமே எதிர்ப்பார்க்கும் விலைமாதர்,கள்வர்
போன்றவர்களுக்கு ஒப்பாவார்.

4.போர்க்களத்தில்..நம்மைத் தள்ளிவிட்டு ஓடும் அறிவற்ற குதிரையைப் போன்றவர் நட்பைப்
பெறுவதைவிட அந்த நட்பு இல்லாததே சிறந்ததாகும்.

5.தீய நட்பு..பாதுகாப்பாக அமையாததாகும்...அவர்களுடன் நட்பு கொள்வதைவிட அந்நட்பை
ஏற்காமல் இருப்பதே நலம்.

6.அறிவில்லாதவரின் நட்பைவிட..அறிவுள்ளவர்களிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு
நன்மை தருவதாகும்.

7.சிரித்துப்பேசி நடிப்பவரின் நட்பைவிட பகைவர்களால் வரும் துன்பம் பத்து கோடி மடங்கு நன்மை
தருவதாகும்.

8.நிறைவேற்ற முடியும் செயலையும் முடிக்க விடாதவர் உறவை..அவர் அறியாதபடி மெல்ல மெல்ல
விட்டு விட வேண்டும்.

9.சொல் ஒன்று,செயல் ஒன்று என்றுள்ளவர்களின் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.

10.தனியாக உள்ளபோது இனிமையாக பேசி..பொது மன்றத்தில் பழித்துப் பேசுவோர் நட்பு நம்மை
சிறிதும் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

83.கூடா நட்பு

1.மனதார இல்லாமல் வெளியே நட்பு பாராட்டுவான் நட்பு..இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போன்ற
கல்லுக்கு ஒப்பாகும்.

2.உற்றார் போல இருந்து அப்படி இல்லாதவரின் நட்பு..விலை மகளிர் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக
வேறுபட்டு நிற்கும்.

3.பல நூல்களை கற்றுத் தேர்ந்த போதிலும்..பகை உணர்வு படைத்தோர் மனம் திருந்துவது நடக்காத காரியம்.

4.சிரித்துப் பேசி..சீரழிக்க நினைப்பவரின் நட்புக்கு, அஞ்சி ஒதுங்கவேண்டும்.

5.மனம் வேறு..செயல் வேறாக இருப்பவர்களின் நட்புக்கு அஞ்சி ஒதுங்க வேண்டும்.

6.நண்பர் போல பகைவர் பழகினாலும்..அவர் சொல்லும் சொற்களில் அவர்களது உண்மைத் தன்மை வெளிப்படும்.

7.பகைவரின் சொல் வணக்கம் என்பது..வளையும் வில் போல தீங்கு விளைவிக்கூடியது.

8.பகைவர் வணங்கும் கையினுள்ளும் கொலைக்கருவி இருக்கும்.அவர் கண்ணீர் விட்டாலும் அது போலிக்கண்ணீரே

9.வெளியே நண்பர் போல மகிழ்ந்து அகத்தில் இகழ்கின்றவரின்..நட்பை நலிவடையச்செய்ய நாமும் அதே முறையை
கைப்பிடிக்க வேண்டும்.

10.பகைவருடன் பழகும் காலம் வரும்போது..முகத்தளவில் நட்புக் கொண்டு வாய்ப்பு வரும் போது அந்த நட்பை
விட்டுவிட வேண்டும்.

9 comments:

வெறும்பய said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

பிரபாகர் said...

அறிவில், வயதில், அனுபவத்தில் என எல்லாம் உயர்ந்த அய்யாவுடன் நட்பு பாராட்டுதலுக்கு உதவும் இந்த வலையுலகத்திற்கு நன்றி சொல்லி, ஆசி வேண்டுகிறேன் அய்யா!

அக்பர் said...

//நட்புக்கொள்ள ஒருவருடன் தொடர்பும்..பழக்கமும் இருக்க வேண்டும் என்பதல்ல..
அவருடைய ஒத்த மன உணர்ச்சியே போதுமானது.//

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

ஹேமா said...

உங்களுக்கும் மனம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துகள்.
நட்போடு ஹேமா.

செந்தழல் ரவி said...

//உயர்குடியில் பிறந்து பழிக்கு நாணுகின்றவனின் நட்பை எப்பாடுபட்டாவது பெறவேண்டும்.//

எது உயர்குடி என்று திருவள்ளுவர் சொல்கிறார் ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//செந்தழல் ரவி said...
எது உயர்குடி என்று திருவள்ளுவர் சொல்கிறார்//


வருகைக்கு நன்றி ரவி..
நீங்கள் நினைப்பது போல அவர் சொல்லவில்லை

கே.ஆர்.பி.செந்தில் said...

எல்லாக் காலங்களிலும் காக்கும் நட்பு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி செந்தில்