ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Wednesday, October 13, 2010
மெய் சிலிர்க்க வைக்கும் சிலி
கனிமச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு கடந்த 69 நாள்களாக மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த 33 பேரை மீட்கும் பணியை சிலி நாட்டின் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. முதல்நாளில் 13 பேர் மீட்கப்பட்டனர். ஒவ்வொருவரும் குழல்உறையிலிருந்து வெளிப்பட்டபோது, மக்களின் ஆனந்தக் கண்ணீர் சுரங்கத்தின் உள்ளே அடுத்ததாகக் காத்திருக்கும் நபர்களையும் தொட்டிருக்கும்!
இந்த மீட்புப் பணியில் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம், ஒரு சிறிய நாடான சிலி, இந்த 33 பேரை மீட்பதில் காட்டிய அக்கறைதான். ஒரு நாடு முழுவதும் இவர்களது மீட்புக்காகக் காத்திருந்தது என்றால் மிகையில்லை. சுரங்கத்திலிருந்து குழல்உறை மூலம் முதல் சுரங்கத் தொழிலாளி ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே வந்தபோது, அங்கே காத்துநின்ற அந்நாட்டின் அதிபர் கட்டித் தழுவி வரவேற்றார். உலகம் முழுவதும் சிலி நாட்டின் விடா முயற்சியைப் பாராட்டாமல் இல்லை.
ஆகஸ்ட் 5-ம் தேதி தாமிரக் கனிமச் சுரங்கத்தில் 700 மீட்டர் ஆழத்தில் இவர்கள் இருந்தபோது சுரங்கம் முழுதுமாக மூடிக் கொண்டது. சுரங்கத் துறை அமைச்சரே இவர்கள் இறந்துவிட்டிருப்பார்கள் என்று அறிவித்த பிறகும், அவர்கள் உயிருடன் இருப்பதாகத் தனது உள்ளுணர்வு சொல்கிறது என்று பல இடங்களில் சிறுதுளை போட்டுப் பார்த்த அதிபர் செபாஸ்டின் பினேராவை எத்தனை பாராட்டினாலும் தகும்.
சிறுதுளைக் குழல்களை பல இடங்களிலும் உட்செலுத்திப் பார்த்துக்கொண்டிருந்தபோது, 17-வது நாளில் அதன் முனையில், ரப்பர் பேண்டு சுற்றப்பட்ட ஒரு தகவல் கடிதம் வந்தது: நாங்கள் 33 பேரும் உயிருடன் இருக்கிறோம் என்று.
அதன் பிறகு சிலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அற்புதமானவை. அந்தச் சிறுதுளை வழியாக அவர்களுக்கு குடிநீர், திரவ உணவு, மருந்து மாத்திரைகள், உறவுகளின் அன்புக் கடிதங்கள், மனம் தளராமல் இருக்கும் உளவியல் ஆலோசனைகள் என எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி வைத்து, நம்பிக்கை அளித்து, மீட்புப்பணிகளை முடுக்கி விட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளைகள் போட்டனர். அந்தத் துளைகள் வழியாக இவர்களை வெளியே கொண்டுவர தனித்துவமான குழல்உறைகள் செய்தனர். மிகப்பெரும் செலவை எதிர்கொண்டுள்ளது சிலி அரசு.
இதில் பாராட்டுக்குரிய மற்றொரு விஷயம், சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்ட 33 பேரின் மனஉறுதி. தாங்கள் உள்ளே உயிருடன் இருக்கிறோம் என்ற தகவலை அனுப்பி, தங்களுக்கு நீரும் உணவும் கிடைக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த உணவு, நீரை ரேஷன் முறையில் சாப்பிட்டு, உயிரைக் காத்து வந்துள்ளனர்.
வெளியேறும்போது யார் முதலில் என்ற கேள்விக்கு, தங்களில் திறமையானவரும், எந்தச் சிக்கலிலும் மனஉறுதி தளராதவருமான ஃபிளோரன்சியா அவலோûஸ தேர்வு செய்துள்ளனர். ஏனென்றால், 700 மீட்டர் ஆழத்திலிருந்து குழல்உறை மேலே செல்லும்போது மீண்டும் மண்சரிவு, அல்லது பாறை அழுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேரிட்டால் அந்தச் சூழலில் மனம் தளராமல் இருப்பார் என்பதால் அவரைத் தேர்வு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இரண்டு விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. ஓர் அரசு நினைத்தால், களத்தில் இறங்கி நின்றால் யாரையும் காப்பாற்ற முடியும். இரண்டாவதாக, நாம் பயன்படுத்தும் பல்வேறு கனிமப் பொருள்களுக்காக எத்தகைய துயரங்களை பெயர்தெரியாத மனிதர்கள் சந்திக்க நேர்கிறது என்பதும் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதும்தான்.
நெய்வேலி போன்ற திறந்தவெளிச் சுரங்கங்களில் விபத்துகளும் உயிரிழப்புகளும் மிகக் குறைவு. ஆனால் மண்ணைக் குடைந்து செல்லும் சுரங்கங்களில்தான் விபத்துகள் மிக அதிகம். திடீரென மண்சரிவு அல்லது பாறை விழுந்து வழிஅடைத்தல், அல்லது விஷவாயு வெளிப்படுதல் என சுரங்கத் தொழிலாளர்கள் பல விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.
என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கைக் கருவிகள் இருந்தாலும் சுரங்கங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.
2010-ம் ஆண்டில் இதுவரை 59 சுரங்க விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பெரும் விபத்து வெர்ஜீனியாவில் நடந்தது. 27 பேர் இறந்தனர். சிலி, சீனா, அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இத்தகைய சுரங்கங்கள் அதிகமாக இருக்கின்றன.
1907-ம் ஆண்டு அமெரிக்க சுரங்க விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை 3,242 ஆக இருந்தது. 2009-ம் ஆண்டு 18 ஆகக் குறைந்துள்ளது. இத்தகைய விபத்துகள் சீனாவில் அதிக அளவில் நடைபெறுவதாகவும் ஆனால் அந்த மரணங்கள் பதிவு செய்யப்படுவது மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு சீன அரசு அறிவித்த சுரங்க விபத்து மரணங்கள் 2000-க்கும் அதிகம்.
இன்றைய தொழிலாளர்கள் சாலைகளில் இறப்பதைக் காட்டிலும், குறைந்த எண்ணிக்கையில்தான் தொழிற்சாலை மற்றும் சுரங்க விபத்துகளில் இறக்கின்றனர் என்பது படிப்பதற்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால், உயிருக்கு விலை உண்டா என்ன? ஒரு தொழிலாளிக்கு ஒரு நாடு கொடுக்கும் மிகப் பெரும் மரியாதை, அவனைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யத் துணிவுகொள்ளும் மனநிலைதான். சிலி, நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.
(நன்றி தினமணி )
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
நானும் இதை படித்தேன். சிலி அரசாங்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
சிலி நாட்டைப் பாராட்டியே ஆக வேண்டும்....
அவர்கிளன் மனதைரியத்துக்கு ராயல் சல்யூட்.
சிலி அரசாங்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
We watched it live on TV. It was awesome! Praise the Lord that they are all safe!
படித்த செய்தியாக இருந்தாலும் நீங்கள் மனிதாபிமானத்துடன் குறிப்பிட்டிருக்கும் பாங்கு அருமை.......வாழ்த்துக்கள் சார்.
அட, நானும் இதுபத்தித்தான் இன்னிக்கு எழுதிருக்கேன்...
ஆமா, சிலி அரசாங்கத்தின் முயற்சிகள் பாராட்டப்படவேண்டியவை. மேலும், 33 பேரும் ஒரு மிலிட்டரி கட்டுப்பாட்டுடன் இருந்ததும் வியக்கத்தக்கது.
வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி
எனது பாராட்டுக்களும் ...
அந்நாட்டிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
இந்த சிலி நாட்டு சுரங்க விபத்தின் மீட்பு பணி நம் எல்லோரையும் ஆச்சர்யபட வைத்து விட்டது. முக்கியமாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஒரு நிஜ ஹீரோ. தொலைக்காட்சியில் அவர்களின் மன உறுதியையும் தேச பக்தியையும் பார்க்கும்போது நமக்கும் நாடு இருக்கிறது கண் முன்னாலேயே தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கபடுகிறார்கள்...நமக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள்...கண் முன்னே நடக்கும் கொடுமைக்கு என்ன செய்கிறார்கள்.??? சிலி நாட்டு தலைவரை அனுப்பி பாடம் எடுக்க சொல்லவேண்டும் நம் தலைவர்களுக்கு...
மெய் "சிலி'ர்க்கிறது!
முழு உலகமும டி வீ வழியே பார்த்துக் கொண்டு இருந்தது சிறைப் பட்ட்வர்களின் மன உறுதி கோடிபெறும்.
அவர்களின் கட்டுப்பாட்டையும், ஒழுங்குடன் வாழ்வதையும் பல முறை படித்து விட்டேன். எனினும் திரும்ப திரும்ப புத்துணர்ச்சியும் நெகிழ்ச்சியும் தரும் ஒரு அனுபவம் அது. எல்லோரும் பத்திரமாக மீட்கப்பட்டதும் வெகு சிறப்பு. நம் ஊரின் ஆட்சியாளர்களை எல்லாம் கண்டு மனம் நொந்தபின் அந்த அதிபரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. நன்றி, பகிர்விற்கு :)
பகிர்வுக்கு நன்றி ஐயா. பல விசயங்கள் தெரிந்து கொண்டேன்.
அவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பர்...
வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி
அனைவரையும் பாராட்டியே ஆகவேண்டும்.
//உழவன்" "Uzhavan" said...
அனைவரையும் பாராட்டியே ஆகவேண்டும்.//
நன்றி உழவன்
Post a Comment