Friday, February 28, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -65



அவனும் அவளும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலித்தார்கள். திருமணமும் செய்து  கொண்டார்கள்.  திருமணம் செய்து கொண்ட கொஞ்ச நாள் வாழ்க்கை மிக இனிமையாக  இருந்தது.

நாள் ஆக நாள் ஆக, இனிமை குறையத் தொடங்கியது.

காரணம் என்ன ?

வள்ளுவர் சொல்கிறார்

நாள் ஆக நாள் ஆக ...ஒருவர் மற்றவரின் குறைகளை காண ஆரம்பித்து விடுகிறார்கள். அதுதான் காரணமாம்.

மனைவி கணவனின் குறையை கண்டு அதை அவனிடம் சொல்கிறாள்.

அவனுக்கு கோபம் வருகிறது.

நீ மட்டும் என்ன உயர்வா என்று அவன் அவளின் குறைகளை கண்டு சொல்கிறான்.

அவளுக்கு கோபம் வருகிறது.

 இதுதான் காதல் குறையக் காரணம்.

காதல் குறையாமல் இருக்க வேண்டும் என்றால் ஒருவர் மற்றவரின் குறைகளை காணாமல் அவர்களின் நல்ல திறமைகளை கண்டு பாராட்ட வேண்டும்.

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு (1298)

தவறு கண்டு சிரித்தால், அது இழிவு என்று எண்ணி, அவருடைய திறமைகளை நினைக்கும் உயிர் போல காதல் கொண்ட மனம் ”   


ஆகவே..

கணவன், மனைவியின் நல்ல பண்புகளை, திறகைகளை பாராட்டட்டும்.அவளை உயர்வாக பேசட்டும்.

அதே போன்று கணவனின் நல் பண்புகளை, திறமைகளை பாராட்டட்டும்.அவனை உயர்வாக பேசட்டும்..

வாழ்வு முழுதும், அவர்கள் காதல் வளர்ந்து கொண்டுதானே இருக்கும்.



Thursday, February 27, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 64

மேன்மேலும் வாழ்வில் உயர்ந்திட வேண்டும் என எண்ணுபவர்கள், தமது செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருக்க வேண்டும்..எனவும், தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்களெனவும் கீழ் கண்ட இரு குறள்களில் சொல்கிறார்.

ஓஒதல் வேண்டும் ஒளியாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர் (653)

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர் (654)

எல்லாம்  சரி..ஒருவேளை"ஐயோ..என்ன தவறு செய்து விட்டோம்"என்று நினைக்கும் படியான செயலைச் செய்து விட்டால் என்ன செய்வது?

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று (655)

'என்ன தவறு செய்துவிட்டோம்" என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது.ஒருவேளை அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.

அதாவது, தவறு செய்வது மனித இயல்பு.அப்படி செய்த தவறை உணர்ந்து , மீண்டும் அது போன்ற தவறினை செய்யக் கூடாது


ஒரேவரியில் சொல்வதானால்..மீண்டும் மீண்டும் வருந்தத் தக்க தவறுகளை செய்யக் கூடாது  


Wednesday, February 26, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 63

கற்க கசடற

எல்லோருக்கும் தெரிந்த குறள்தான் . 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக  (391)



கற்க வேண்டியவற்றை பிழையின்றி கற்று, கற்ற பின் அதற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.

சற்று ஆழ்ந்து சிந்திப்போமா?

கற்க கசடற....உயர்ந்த நூல்களைப் படித்து, மனம்வாக்கு,செயல் ஆகியவற்றில் உள்ள கசடுகளை (மாசுக்களை)போக்க வேண்டும்.

அப்படி, படித்தும் மன மாசு போகவில்லையெனில், கற்றதனால் என்ன பயன்?

அதனால்...கற்றதற்கு ஏற்றாற்போல பண்புள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும்.

அப்படி மாசு அகல கற்றபின், நாம் வாழ்நாளில் அதன்படி நடந்திட வேண்டும்.
வாக்கில் இனிமை வேண்டும்.

செயல் சிறந்ததாக இருக்க வேண்டும்.

மனம் தூயதாக இருக்க வேண்டும்.

சரி, படித்தது போதும் என நிறுத்தி விடலாமா? எவ்வளவு படித்தாலும் கற்றது கைம்மண் அளவு அல்லவா?அதனால் படிப்புக்கு இவ்வளவுதான் என்ற எல்லை இல்லை

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் என்றும் கூறுகிறார்,

தொட்டனைத் தூறு மணற்கேனி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு (396)

நல்ல நூல்களைப் படித்து அறிவைப் பெருக்கிக் கொள்வோமாக!



.

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 62

  துணையோடு அல்லது நெடுவழி போகேல்...
அதாவது  துணையாக யாரும் இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செல்லக் கூடாது.

தனியாக நெடும் பயணம் செய்யக்கூடாது..

வாழ்க்கை என்பதும் ஒருவருக்கு பெரும் பயணம்ணத்தை தொடர துணை வேண்டாமா? அத்துணையே மனைவி ஆகும்

வள்ளுவரும்,வாழ்க்கைத் துணை நலம் என்று மனைவியைக் குறிப்பிடுகிறார் 

நாம் பயணம் செய்யும் போது யாரைத் துணையாகக் கொள்வோம்?


நம்மை விட பலசாலியையா அல்லது நம்மை விட பலவீனமானவனையா ?

பலசாலியைத்தானே..

துணை என்பது நம்மை விட சிறந்ததாக இருக்க  வேண்டும்.



இப்படி , துணை என்பது நம்மை விட மிக மிக  உயர்ந்தது.

துணை என்பது தாழ்ந்தது அல்ல.

மனைவி எப்போது வாழ்க்கைத் துணையாவாள் என்றும் வள்ளுவர்  சொல்கிறார்.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (51)

என்கிறார்.

இல்லறத்துக்குரிய  பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.


குடும்பத்தின் நல்ல பெயருக்கு களங்கம் வராமல், வருமானத்திற்கு அதிகமாக செலவு  செய்யாமல், அதிகமாக கடன் வாங்காமல்...வளத்துக்கு தக்க வாழ்பவள் வாழ்க்கைத் துணை.

Tuesday, February 25, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 61




நம் நாடு,   துறவிகளை கொண்டாடும் அளவு  வேறு எந்த நாடாவது, சமுதாயமாவது கொண்டாடி இருக்கிறதா என்று தெரியவில்லை.



நீத்தார் பெருமை என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே வைத்து இருக்கிறார்.  
.

 எத்தனை சாமியார்கள்..அவர்களில் போலி எவ்வளவு? 
அவர்களுக்குப் பணத்தைக் கொண்டு போய்க் கொட்டும் மக்கள்.

ஆனால் உண்மையில்
எல்லாம் துறந்தவனுக்கு எதிலும் நாட்டம் இருக்கக் கூடாது....

ஆதலால், நாம் நல்லவர்களைப் பார்த்து(என நம்மிடம் தேர்வை விட்டு விடுகிறார்),அவர்களின் சொல்படி கேட்பதுதான் என்பது உலகில் உள்ள அனைத்து நூல்களின் முடிவு என் கிறார் வள்ளுவர்...

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு (21)


ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை,சான்றோர் நூலில் விருப்பமுடனும்,உயர்வாகவும் இடம் பெறும்..


மேலும்..

ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவனே,துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான் என இக்குறளில் சொல்கிறார்

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (24)

உறுதியென்ற அங்குசம் கொண்டு ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன்,துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான் என்கிறார்.

போலிகளைக் கண்டு ஏமாறக்கூடாது

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 60



வாழ்வில் வெற்றி பெற  எளிமையான வழி என்னவென்று தெரியுமா?

வள்ளுவர் சொல்கிறார்..

ஒண்ணு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுய புத்தி இருக்க வேண்டும்.

தனக்காக தெரிய வேண்டும்.  இல்லை என்றால் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்டு அதன் படி நடக்க வேண்டும்.

ஏவவுஞ் செய்கலான் தாந்தேறான் அவ்வுயிர்
போஒம் அள்வுமோர் நோய் (848)

சொந்தப் புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் கேட்காதவர்க்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.

அறிவு பஞ்சமே மிகக் கொடுமையான பஞ்சமாம்.மற்ர பஞ்சங்களைக்கூட உலகு அவ்வளவாகப் பொருட்படுத்தாதாம்.

மொத்தத்தில்

நோய் யாரிடம் இருக்கிறதோ அவர்களை மட்டும் வருத்தாது. ஒருவரிடம் இருந்து  மற்றவர்களுக்கு பரவி அவர்களையும் வருத்தும். அது போல சொல் புத்தி, சுய புத்தி இரண்டும் இல்லாதவர்கள் தங்களுக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிப்பார்கள் என்கிறார் பொய்யாமொழியார்.


முதலில் மற்றவர்கள் சொல்வதை கேட்டு செயல் பட வேண்டும். நாளடைவில் நமக்கே சொந்த அறிவு வர வேண்டும். எனவேதான் முதலில் சொல் புத்தியையும் பின் சுய புத்தியையும் சொன்னார் வள்ளுவர்.

Monday, February 24, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 59

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயைவிடக் கொடுமையாகவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும் என்கிறார் இக்குறளில்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் (202)


 மிக மிக ஆழமான பொருள் பொதிந்த குறள்.

தீயவை நமக்குத் தீமை தருவதால், அத்தகைய தீமைகள் தீயை விடவும் அஞ்சப் படும்.


இதில் இன்ன பெரிய ஆழமான அர்த்தம் இருக்கப் போகிறது?

தீ யை வைத்துதான் சமையல் செய்கிறோம்.தீ நம் அன்றாட வாழ்வில் பல நிலையில் பயன்படுகிறது/.

ஆனால்...தீ அழிக்கவும் செய்கிறது

வீட்டையும், நாட்டையும் எரித்து சாம்பலாகி விடும்.

அது போலத்தான் தீயவைகளும்.

தீயவை என்றால் என்ன ?

உதாரணத்திற்கு....

உணவு நல்லது தான். அதையே அளவுக்கு அதிகமாக உண்டால் இல்லாத பிரச்சினகைள் எல்லாம் வந்து சேரும். அதுவே நம் உயிர்க்கு உலை வைத்து விடும். அளவுக்கு அதிகமான தீயைப் போல.

அது சரி..ஏன் வள்ளுவர் "தீயினும்" என "உம்"மை சேர்த்தார்.


தீ தொட்டவுடன் சுடும். விலகினால் சுடாது.

ஆனால், தீயவையோ, தொடும் போதும் சுடும். விட்டு விலகிய பின்னும் சுடும், . வருத்தும். அதனால், தீயினும்.,அதாவது தீயைக்காட்டிலும் என்று பொருள் படுகிறது அல்லவா?

. தீயவற்றை விலக்குவோமாக!

Sunday, February 23, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 58

நட்பின் சிறப்பு

-------------------

இந்தக் கேள்வியைக் கேட்டதுமே..நம் பதில்..

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (788)

என்பதாகவே இருக்கும்.

ந்ண்பனை தீயவழி சென்றுவிடாது தடுப்பதும், நல் வழிப்படுத்துவம்..தீங்கின் துன்பத்திலிருந்து அவனை விடுவிப்பதும்கூட நட்பு எனலாம்.

நண்பனுக்கு வாழ்வில் வரும் சிக்கல்கள் வரும்.அதற்கு விடிவு என்ன என்று குழம்புவான்.அப்போது யார் நண்பன்..,யார் பகைவன் எனத் தெரியாது குழம்புவான். 


அந்த மாதிரி சமயங்களில், விரைந்து சென்று, அவர்களின் தளர்ச்சியை நீக்கி, அவர்கள் மீண்டும் நிலையான ஒரு வாழ்வைப் பெற உதவ வேண்டும்.

அதுதான் நட்பிற்கு இலக்கணம்

இதைத்தான் வள்ளுவர்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய்  ஊன்றும் நிலை (789)

என்கிறார்.

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவதே நட்பின் சிறப்பாகும்,

மேலும் ஒரு குறளில் சொல்கிறார்

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு (784)

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல.நன்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்


Saturday, February 22, 2020

வள்ளுவத்திலிருந்து ஒரு தகவல் - 57



வள்ளுவர் ஒரு ஆணாதிக்கவாதியோ? என்ற ஐயத்தை ஏற்படுத்தும் குறள் இது..

 தெய்வத்தை தொழாமல், கணவனை தொழுது எழுவாள். அவள் பெய் என்றால் மழை பெய்யுமாம்..அதாவது மனைவி கணவனைத் தொழ வேண்டுமாம்.இப்படி நாம் சாதாரணமாக வாதம் பண்ணுபவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

அக்குறள்..

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (55)

வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் வரும் குறள் இது..

 தெய்வத்தைத் தொழ மாட்டாள்.கணவனைத் தொழுது எழுவாள்..அவள் பெய் என்றால் மழை பெய்யும்

பொருள்

தெய்வம்= தெய்வத்தை

தொழாஅள் = தொழ மாட்டாள்

கொழுநன் = கணவனை

தொழுது எழுவாள் = தொழுது எழுவாள்

‘பெய்’ என, பெய்யும் மழை.= அவள் பெய் என்றால் மழை பெய்யும்



மனைவி எதற்காக கணவனை தொழ வேண்டும் ? ஏன் கணவன் மனைவியை தொழக் கூடாது ?


இது யாருக்குச் சொல்லப் பட்ட குறள் ?

தெய்வத்தை வணங்காமல் கணவனை வணங்குகிறாள் என்றால்..அக்கணவன்  தெய்வத்துள் வைத்து போற்றத்தக்க வேண்டிய அளவிற்கு நற்பண்புகள் கொண்டவனாக இருக்க வேண்டும் என ஆண்களுக்கு இதன் மூலம் வள்ளுவர் சொல்வதாக நாம் ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?


உன் மனைவி உன்னை தெய்வமாக நினைத்து தொழ வேண்டும் என்றால், நீ தெய்வம் போல நடந்து கொள் என்று கணவனுக்குச் சொல்லப் பட்ட குறள் .

(வேறு ஒரு பொருளைக் காண்போமா)

கணவன் என்று சொல்லாமல் கொழுநன் என்று சொல்வதற்கும் ஒரு காரணம் உண்டாம்.


கொழு கொம்பு, கொடியை தாங்குவதைப் போல கணவன் மனைவியை தாங்க வேண்டும் என்ற கருத்து வரும்படி கொழுநன் என்ற சொல்லை இங்கே போடுகிறார் வள்ளுவர் என்றும் சொல்பவர்கள் உண்டு.)


Friday, February 21, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 56

அறிவுடைமை எனும் அதிகாரத்தில் வள்ளுவர் சொல்கிறார்.

வருவதை முன் கூட்டியே அறிந்து, அத்ற்கேப அறிவுடையோர் நடந்து கொள்வதால்..பின்னால் வரும் துன்பங்கள் அவர்களுக்குத் துன்பத்தைத் தராது என்கிறார் வள்ளுவர்


வரும் துன்பத்தை முன்பே அறிந்து கொண்டு அதில் இருந்து தங்களை காத்துக் கொள்பவர்களே அறிவுள்ளவர்கள் என்கிறார் வள்ளுவர்.

பகையால் வரும் அழிவை பாதுகாக்கும் அரண் அறிவு மட்டுமே,மனம் போனபடியெல்லாம்போகாமல் நல்வழியைத் தேர்ந்தெடுப்பது,யார் என்ன சொன்னாலும் அதை நம்பாது அதை ஆராய்ந்து உண்மை எது எனத் தெளிவது,சொல்ல வேண்டியவற்றை எளிய முறையில் சொல்வது,இன்பம்,துன்பம் இரண்டையும் ஒன்றாக நினைத்து நடப்பது,ஒரு செயலுக்கு எதிர் விளைவு எப்படியிருக்கும் என  சிந்தித்து செயல்படுவது,அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சுவது ஆகியவை அறிவுடையார் செயல்கள் என்கிறார் அவர்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய் (429)

என்கிறார் ஒரு குறளில்.

 

அறிவுள்ளவர்கள், துன்பம் வருவதற்கு முன்னே அதைப் எதிர்பார்த்து, அது வராமல் இருக்கும்  வழிகளை மேற்கொள்வார்கள்.

உதாரணத்திற்கு...

உணவுக் கட்டுப்பாடின்றி உண்டால் பின்னால் ரத்த அழுத்தம்,உடல் பருமன், சர்க்கரை நோய் ஆகியவை வரும் எனத் தெரிந்து, அளவோடு..சத்து மிக்க உணவை உண்டு பிற்காலத்தில் வரும் நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யாமல், கடன் தொல்லையிலிருந்து எதிர் காலத்தில் தன்னைக் காத்துக் கொள்ளலாம்.

வலுவான அரசு கோடையில் நீர்நிலைகளை தூர் எடுத்து, மழை காலங்களில் வரும் வெள்ளநீரை சேமித்து கோடையில் பயன்படுத்தலாம். 


இப்படி வருங்காலத்தை மனதில் கொண்டு செயல்பட்டால், எதிர்காலம் சிறப்பாக அமையும்.

இதையெல்லாம்  அறிவுடையார் சிந்தித்து செயல்படுவராம். 

நாமும் வள்ளுவர் சொன்னபடி,எதிர் காலத்தில் வரும் துன்பத்தில் இருந்து தப்பிக்க இப்போதே வழி தேடுவோமாக..

வாழ்க்கை இனிமையாக கழிப்போம்.

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 55


பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்..எனும் அறிவுரையை நாம் அவ்வப்போது கேட்டிருக்கிறோம்.

ஆனால், அப்படி நன்மை செய்வது கூடத் தவறாம்.

அதெப்படி நல்லது செய்வது தவறாக முடியும் ?

பல வீடுகளில் ஓருரு குழந்தைகள் என்று இருப்பதால்...இன்றைய பெற்றோர் அவர்களுக்கு அதிகப்படியான செல்லம் கொடுக்கின்றனர்.கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கின்றனர். குழந்தைகளும்..இப்போதெல்லாம் விளையாட வெளியே செல்வதில்லை.சதாசர்வ காலமும் கையில் மொபைல் ஃபோனுடன் திரிகின்றனர்.

இந்த அதிகப்படியான செல்லம்..குழ்ந்தைகளின் பிற்காலத்தில் தவறாகக் கூடப் போய் முடியும்.

இது மட்டுமல்ல..

நம் கடமையைச் செய்கிறோம் என..தேர்தலில் தவறான நபரைத் தேர்ந்தெடுக்கிறோம்.

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு தரா தரம் பார்க்காமல் உதவி செய்வது பின்னாளில் துன்பத்தில் கொண்டு போய் முடியும்.

நல்லவன் என்று நினைத்து ஒட்டுப் போட்டு , தவறான தலைவர்களை தேர்ந்தெடுத்து  கஷ்டப் படுபவர்களுக்கு உண்டு.

ஓட்டு போடுவது தவறா என்றால் இல்லை. யாருக்கு போடுவது என்பதில் தான் சிக்கல்.

நன்மையை, திருந்த மனமில்லா கெட்டவன் ஒருவனுக்கு போதிப்பதால் பயன் ஏதுமில்லை.சிலசமயங்களில் அப்போதனைகளை வைத்து அவன் நம்மையேத் தாக்கக் கூடும்


நல்லது செய்வதிலும் தவறு உண்டு, யாருக்கு செய்கிறோம் என்று அறிந்து செய்யாவிட்டால் என்கிறார் வள்ளுவர்

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை (469).

ஒருவரின் இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்


"பாத்திரமறிந்து பிச்சையிடு" என்ற பழமொழியும் உண்டு.
பொருள்


ஆகவே நல்லதுதானே செய்கிறோம் என்று கண்ணை மூடிக் கொண்டு செய்யாதீர்கள். 

நல்லாற்றல் உள்ளும் தவறு உண்டு ....

மேலும் சில குறள்களும் அவை சொல்லும் பொருளும்..

செய்தக்க அலல் செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும் (466)

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்..செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்

நன்கு சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்.இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு (467). 

Thursday, February 20, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 54


செல்வம் , ஓரிடத்தில் நிற்காது சென்று கொண்டே இருக்கும்

 ஒரே இரவில் பெரும் பணம் படைத்தவனை கையேந்த வைக்கும்.

கையேந்துபவனை உச்சிக்குக் கொண்டு செல்லும்.


ஆனால்..அதையும் கட்டி வைக்க முடியும் என்கிறார் வள்ளுவர்.

உங்களிடம் வந்த செல்வம் , உங்களை விட்டு போகாமல் எப்போதும் உங்களுடனேயே இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?..


ஒன்றே ஒன்று தான்,

காலத்தோடு சேர்ந்து வாழ வேண்டும். அவ்வளவுதான்.

ஆத்திச்சூடியில் ஔவை சொல்கிறார்.

பருவத்தே பயிர் செய்

அதாவது, பருவநிலை மாற்றங்களை அறிந்து,எந்த பருவத்தில் எதை பயிர் செய்தால் விளைச்சல்  உழைப்பிற்கு கூடிவரும் என அறிந்து பயிர் செய்ய வேண்டும் என்கிறார். இது விவசாயிகளுக்கு..

அதே போல..அந்தந்தத் துறையினர், அதற்கேற்ப  அவ்வப்போது செயல்பட வேண்டும்

இதைத்தான் வள்ளுவர்

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு (482)

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல்,அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக மையும்.


அதாவது காலத்துக்கு ஏற்ப செயலாற்ற வேண்டும்.

பகல் வேளையில் கோட்டானை காகம் வென்று விடும்.. ஆகவே காகம் வெல்ல பகல் நேரத்திற்குக் காத்திருக்க வேண்டும்..அதுபோல.எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

என

"பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது"(481)


குறளிலும்





உரிய காலத்திற்காகப் பொறுமையாகக் காத்திருப்பவர்கள் இந்த உலகத்தையே வெல்வார்கள் என..

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின் (483)

குறளிலும் சொல்கிறார்.




இன்று என்ன செய்வது, நாளை என்ன செய்வது, இந்த வாரம், இந்த மாதம், இந்த வருடம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள்.

அப்படி சிந்தித்து செயல் பட்டால், உங்களிடம் செல்வம் நிலைத்து நிற்கும்.

காலம் கைகூடுகையில், பொறுமையாகக் காத்திருந்து கொக்கு மீனை கொத்துவது போல காரியம் செய்து முடிக்க வேண்டும்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடது (490)

Wednesday, February 19, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 53

உலகம் உங்கள் கைகளில்


எவ்வளவு பெரிய கடினமான காரியமாக இருந்தால் கூட சாதிக்க வள்ளுவர் ஒரு வழி சொல்லித் தருகிறார்.

மூன்று விடயங்களை கைக் கொண்டால் எந்த பெரிய காரியத்தையும் செய்து விடலாம்.

அது என்ன மூன்று ?

ஒன்று - காலம்
இரண்டாவது - இடம்
மூன்றாவது - செயல்

ஞாலங் கருதினுங் கைகூடிங் காலம்
கருதி இடத்தாற் செயின் (483)

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமே கூடக் கைக்குள் வந்துவிடும்



மேலோட்டமாக பார்த்தால் இடமும் காலமும் அறிந்து செய்தால் எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம் என்பது கருத்து.

சற்றே ஆழ்ந்து சிந்திப்போம்.

உலகை வெல்வது முடியுமா? ஆனால் இடமும், காலமும் அறிந்து செய்தால் அது கூட முடியுமாம்" கருதினும்..என "உம்"மை ஏன் போடுகிறார் எனப் புரிகிறதா?

அதுவும் முடியும் என்றாள் மற்ற முடியாத காரியங்கள் எல்லாம் முடியும் என்றுதானேப் பொருள்.

என்னே ஒரு சிந்தனை. 

அடுத்த குறளிலேயே சொல்கிறார் பாருங்கள்..

காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர் (485)

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

இதிலிருந்து..ஒரு செயலை செய்து முடிக்க அதற்கான உரிய காலத்தையும் இடத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாத காரியங்களையும் முடிக்கலாம் என்று உணர வேண்டும்.

சிந்திந்து செயல்படுவோமாக!


.


வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 52

கற்றது கைம்மண் அளவு  என்றாலும்..

படித்தவர்கள், நிறையப் படித்தவர்கள் சொல்வதைக் கேட்பார்கள்.அதில் இருக்கும் நன்மை, தீமைகளை அலசி ஆராய்வார்கள்.

தவிர்த்து மேலும் மேலும் படிப்பார்கள்.

இப்படியெல்லாம், படித்தும் , கேட்டும் தெரிந்து கொள்கிறார்களே, அதன்படி நடந்து கொள்கிறார்களா?

ம்..ஹூம்...மாட்டார்கள். அது ந்டைமுறைக்கு சரிவராது என்பார்கள்.

இப்படிப்பட்ட அறிவாளிகளைத்தான் திருவள்ளுவர் முட்டாள்கள் என் கிறார்


ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல் (834)


படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிட முட்டாள்கள் யாரும் இருக்கமுடியாது


நல்லவற்றை படிக்க வேண்டும்.

படித்ததன் பலன்களை உணர வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, படித்து அதன்படி வாழ வேண்டும்.
.

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 51

அவன் பெரிய செல்வந்தன்

 பெரிய வீடு. 

வீடெல்லாம் செல்வச் செழிப்பு மின்னுகிறது. 

அவன் இறந்துவிடுகின்றான்.

 வீட்டில் அவனது உடல் கிடத்தி வைக்கப் பட்டு இருக்கிறது.  அவனால் அவனிடம் உள்ளவற்றையெல்லாம் உடன் எடுத்து செல்ல முடியுமா? அனுபவிக்க முடியுமா ? 

அவனை விடுங்கள்..நம்மை எடுத்துக் கொள்ளுங்கள்


வாழ்நாளில் அனுபவிக்க வேண்டியவையெல்லாம் மறந்து, எந்நேரமும் "பணம்..பணம்"என அலைந்து பணம் சேர்க்கிறோம்.திடீரென மரணம் நம்மைத் தழுவும்போது.. ஈட்டிய பொருளா நம்முடன் வரும்..அதனால் என்ன பயன் நமக்கு, .

நாம் வாழ் நாள் எல்லாம் ஓடி ஆடி பொருள் சேர்க்கிறோம். எல்லா பொருள்களையும் நாம் அன்புபவிக்கப் போகிறோமா ? நாம் அனுபவிக்கப் போவது இல்லை என்றால், எதற்காக வாழ் நாள் எல்லாம் செலவழித்து அவற்றை சேர்க்க வேண்டும் ?

இதையே வள்ளுவர்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில் (1001)


அடங்காத ஆசையினால்வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல்செத்துப்போகின்றவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செலவத்தினால் என்ன பயன்? 

என்கிறார்.

அப்போது..வாழ்க்கையில் செல்வமே தேவையில்லை என் கிறீர்களா? என்று கேட்டால்..

தேவை..கண்டிப்பாகத் தேவை..ஆனால்

செல்வத்தை சம்பாதிப்பதும், சேர்ப்பதும் மட்டும் அல்ல வாழ்க்கை. சேர்த்த  செல்வத்தை  சிறந்த முறையில் செலவழிக்கவும் தெரிய வேண்டும்.

....
நல்ல வழிகளில் பணத்தை அனுபவிக்கப் படிக்க வேண்டும்.

இதையே ஔவையார் "நல்வழி" யில் சொல்கிறார்..

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?
22


பணத்துக்காகப் பாடுபட்டுகின்றனர். பணத்தைத் தேடிக்கொள்கின்றனர். தேடிய பணத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து வைக்கின்றனர். அனுபவிக்காமல் மறைத்து வைக்கின்றனர். இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட மனிதரே! ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உடம்புக் கூட்டை விட்டுவிட்டு உங்கள் ஆவி போன பின்பு அந்தப் பணத்தை யார்தான் அனுபவிக்கப் போகிறார்கள்? பாவிகளே! சொல்லுங்கள்.

Tuesday, February 18, 2020

வள்லுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 50

கோபம்..

இது வராமல் இருக்க வேண்டும் என முயன்று அதில் நாம் அனைவருமே தினமும் தோற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும்.இல்லையேல் அந்த சினமே அவனை அழித்துவிடுமாம்.

அவனை மட்டுமின்றி, அவன் சுற்றத்தையும் அழித்துவிடும் தீயாம் சினம்

எல்லையில்லா சினம் கொள்பவர்கள் இறந்தவர்க்கு ஒப்பாவார்களாம்..

இப்படியெல்லாம் சொல்லும் வள்ளுவர் மேலும் சொல்கிறார்.

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற (304)

இதன் பொருள்...சினம் கொள்பவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மன்மகிழ்ச்சியும் மறைந்து போய்விடும்.

நாம் ஏன் நாள் முழுதும் சந்தோஷமாக இல்லை? மனதில் இன்பம் இலலை?


எப்போதாவது மகிழ்கிறோம், எப்போதாவது சிரிக்கிறோம்

இந்த மகிழ்ச்சியையும், சிரிப்பையும் நம்மிடம் இருந்து பறித்துக் கொள்ளும் பகைவன் யார் தெரியுமா ?

வேறு யாரும் அல்ல, நம் கோபம் தான்.

கோபம்தான் நம் புன்னகையையும், சந்தோஷத்தையும் கொல்கிறது.

.கோபத்தை விடுங்கள். மனம் அமைதியாகும். அமைதியான மனதில் இன்பம் , ஆனந்தம், புன்னகை எல்லாம் பிறக்கும்.


வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 49


பலரும் வெறுக்கும்படியான பயனில்லா சொற்களைப் பேசுபவர்களை அனைவரும் இகழ்ந்துரைப்பார்கள்.

பயனில்லா சொற்களை கூறுவது எதிரிகள் நமக்கு செய்யும் செயல்களைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

ஆகவே நல்ல வார்த்தைகளை கூற வேண்டும்.நல்லதே வேண்டும் என செயல்பட வேண்டும்.

நன்மை பல சமயங்களில் எட்டாக்கனியாகி விடுகிறது..

சில நண்பர்கள்   பயனில்லா சொற்களைப் பேசும் போது..அவர்களைக் கண்டதுமே.."ஐயய்யோ..இவன் வெட்டிக்கு பேசிக் கொண்டிருப்பானே" என்ற பயம் நமக்கு எற்படும் இல்லையா?

இப்படி, பயனில்லாத, பண்பில்லாத சொற்களை பேசுவதன் மூலம் ஒருவனைவிட்டு நன்மைகள் நீங்கிவிடுமாம்.

இதையே..

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து (194)

என்கிறார்.

இதன் பொருள்...பயனற்றதும், பண்பற்றதுமானசொற்களைப் பலர்முன் சொல்லுதல்..(இல்லை..பகிர்ந்து கொல்ளுதல்) மகிழ்ச்சியினைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.

ஆகவே, நல்ல பண்புடையார், பயனில்லாத சொற்களைக் கூறினால் அவர் மதிப்பு நீங்கிவிடும்.

பயனில்லாதவற்றை சொல்பவன் பதர் போன்றவன். நாமும் பயனளிக்காத சொற்களை விடுத்து, மனதில் பதிந்து பயனளிக்கக் கூடிய பயனுள்ள சொற்களையே கூற வேண்டும்.



Monday, February 17, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 48


விருந்து ஓம்புதல் ஒரு அறம் எனப் பார்த்தோம்  முன்னர்;

விருந்தினர்களை உபசரிப்பது என்பது அறத்தின் ஒரு கூறு என்று கூறிகிறது தமிழ் கலாச்சாரம்.

விருந்தினர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்கிறது இந்த குறள்

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினிதே அறம் (93)

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூருதலே அறவழியில் அமைந்த பண்பாகும்.

இனியவை கூறல் என்னும் அதிகாரத்தில் சொல்கிறார்
எது இனிய சொல்? என்று...

வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனை அற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதே இன்சொல் என்கிறார்.

 சரி..அகம் மலர என்றால்...அதற்கும் சொல்கிறார்..

வருபவர்களை முகம் மலர நோக்கி இனிய சொற்க்ளைக் கூறினால் அகம் மலரும் சொற்களாக அது அமையுமாம்.அதும் அறவழிப் பண்பாகும்.

விருந்தினர்களைக் கண்டவுடன் கண்ணில் மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும்.பின் அவர்கள் வீட்டினுள் வந்ததும் இனிய சொற்களைக் கூறவேண்டுமாம்.

சொல்ல இனிய சொற்கள் இருக்கையில், அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது உண்ண கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் திபதற்குச் சமமாகுமாம்..

.