Monday, February 3, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல்

முதலில் ஒரு சிறுகதை..

கடவுளின் மீது பக்தி கொண்ட  கழுகு ஒன்று இருந்தது.தினமும் இறைவனை தியானம் செய்யும்.

அது வானில் பறந்தபடியே  கீழே மேய்ந்துகொண்டிருக்கும்  கோழிக்குஞ்சுகள்,ஓடி ஒளியும் எலி போன்றவற்றை பார்த்து சரேலென இறங்கி.அவற்றை கொத்திக்கொண்டு போய் பசி ஆறும்.

கடந்த சில தினங்களாக அதற்கு வயதானதால் வெளியே சுற்ற முடியவில்லை.உணவுக்கு ஏதேனும் வழி கிடைக்குமா என பார்த்தது.எதுவும் கிட்டவில்லை.

ஆகவே இறைவனை தியானித்து "ஆண்டவா" என்னால்  இன்று வெளியே போக முடியவில்லை.பசி வாட்டுகிறது.எனக்கு உண்ண ஏதாவது அளியுங்கள்,என வேண்டியது.

காலை,மாலை போய் இரவும் வந்தது.அதற்கு எதுவும் கிட்டவில்லை அதனால் இறைவன் மீது கோபமுற்று "இவ்வளவு நாள் உன்னை வேண்டிய உன் பக்தனுக்கு ஒரு வேளை உணவைக்கூட அளிக்காத இரக்கமற்றவனா நீ" என அரற்றியது.

இறைவன் அதன் முன் தோன்றி." கழுகே நீ காலையில் என்னை வேண்டியபோதே உனக்கான உணவைக் கொடுத்துவிட்டேன்,சற்று திரும்பிப்பார்" என்றார்.

கழுகு திரும்பி பார்க்க ஒரு செத்த எலி  கிடந்தது.' நான் உனக்கு உணவினை கொடுத்தாலும் அதற்கான சிறு முயற்சியாவது நீ செய்யவேண்டும்.நீ அப்படி முயலாதது உன் தவறு' என்று கூறி மறைந்தார்.


இனி...

நம்மில் பலர்.. அந்த கழுகின் நிலையில்தான் இருக்கிறோம்.

நமக்கு என்ன தேவையோ அது அந்த ஆண்டவனுக்குத் தெரியும்? என எந்த ஒரு செயலிலும் முயற்சி செய்யாமல் இருக்கிறோம்.

பக்கத்திலேயே நாம் வேண்டுவன இருந்தாலும்.

அந்த முயலாமை நமக்கு ஏமாற்றத்தைத் தர இறைவனை நிந்திக்கிறோம்.

இதிதான் வள்ளுவர் இக்குறள் மூலம் நமக்குச் சொல்கிறார்.


இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் (1040)

நமக்கு அதிர்ஷடமில்லை, வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு (முயலாமல்) சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புன்னகை செய்வாள்

(நமக்குத் தேவையானவற்றை  இறைவன் தருவான்என்றாலும்...அதை அடைய அதற்கான நம் முயற்சியும் சிறிதளவாவது இருக்கவேண்டும்)

No comments: