Friday, February 21, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 56

அறிவுடைமை எனும் அதிகாரத்தில் வள்ளுவர் சொல்கிறார்.

வருவதை முன் கூட்டியே அறிந்து, அத்ற்கேப அறிவுடையோர் நடந்து கொள்வதால்..பின்னால் வரும் துன்பங்கள் அவர்களுக்குத் துன்பத்தைத் தராது என்கிறார் வள்ளுவர்


வரும் துன்பத்தை முன்பே அறிந்து கொண்டு அதில் இருந்து தங்களை காத்துக் கொள்பவர்களே அறிவுள்ளவர்கள் என்கிறார் வள்ளுவர்.

பகையால் வரும் அழிவை பாதுகாக்கும் அரண் அறிவு மட்டுமே,மனம் போனபடியெல்லாம்போகாமல் நல்வழியைத் தேர்ந்தெடுப்பது,யார் என்ன சொன்னாலும் அதை நம்பாது அதை ஆராய்ந்து உண்மை எது எனத் தெளிவது,சொல்ல வேண்டியவற்றை எளிய முறையில் சொல்வது,இன்பம்,துன்பம் இரண்டையும் ஒன்றாக நினைத்து நடப்பது,ஒரு செயலுக்கு எதிர் விளைவு எப்படியிருக்கும் என  சிந்தித்து செயல்படுவது,அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சுவது ஆகியவை அறிவுடையார் செயல்கள் என்கிறார் அவர்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய் (429)

என்கிறார் ஒரு குறளில்.

 

அறிவுள்ளவர்கள், துன்பம் வருவதற்கு முன்னே அதைப் எதிர்பார்த்து, அது வராமல் இருக்கும்  வழிகளை மேற்கொள்வார்கள்.

உதாரணத்திற்கு...

உணவுக் கட்டுப்பாடின்றி உண்டால் பின்னால் ரத்த அழுத்தம்,உடல் பருமன், சர்க்கரை நோய் ஆகியவை வரும் எனத் தெரிந்து, அளவோடு..சத்து மிக்க உணவை உண்டு பிற்காலத்தில் வரும் நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யாமல், கடன் தொல்லையிலிருந்து எதிர் காலத்தில் தன்னைக் காத்துக் கொள்ளலாம்.

வலுவான அரசு கோடையில் நீர்நிலைகளை தூர் எடுத்து, மழை காலங்களில் வரும் வெள்ளநீரை சேமித்து கோடையில் பயன்படுத்தலாம். 


இப்படி வருங்காலத்தை மனதில் கொண்டு செயல்பட்டால், எதிர்காலம் சிறப்பாக அமையும்.

இதையெல்லாம்  அறிவுடையார் சிந்தித்து செயல்படுவராம். 

நாமும் வள்ளுவர் சொன்னபடி,எதிர் காலத்தில் வரும் துன்பத்தில் இருந்து தப்பிக்க இப்போதே வழி தேடுவோமாக..

வாழ்க்கை இனிமையாக கழிப்போம்.

No comments: