Saturday, February 22, 2020

வள்ளுவத்திலிருந்து ஒரு தகவல் - 57



வள்ளுவர் ஒரு ஆணாதிக்கவாதியோ? என்ற ஐயத்தை ஏற்படுத்தும் குறள் இது..

 தெய்வத்தை தொழாமல், கணவனை தொழுது எழுவாள். அவள் பெய் என்றால் மழை பெய்யுமாம்..அதாவது மனைவி கணவனைத் தொழ வேண்டுமாம்.இப்படி நாம் சாதாரணமாக வாதம் பண்ணுபவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

அக்குறள்..

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (55)

வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் வரும் குறள் இது..

 தெய்வத்தைத் தொழ மாட்டாள்.கணவனைத் தொழுது எழுவாள்..அவள் பெய் என்றால் மழை பெய்யும்

பொருள்

தெய்வம்= தெய்வத்தை

தொழாஅள் = தொழ மாட்டாள்

கொழுநன் = கணவனை

தொழுது எழுவாள் = தொழுது எழுவாள்

‘பெய்’ என, பெய்யும் மழை.= அவள் பெய் என்றால் மழை பெய்யும்



மனைவி எதற்காக கணவனை தொழ வேண்டும் ? ஏன் கணவன் மனைவியை தொழக் கூடாது ?


இது யாருக்குச் சொல்லப் பட்ட குறள் ?

தெய்வத்தை வணங்காமல் கணவனை வணங்குகிறாள் என்றால்..அக்கணவன்  தெய்வத்துள் வைத்து போற்றத்தக்க வேண்டிய அளவிற்கு நற்பண்புகள் கொண்டவனாக இருக்க வேண்டும் என ஆண்களுக்கு இதன் மூலம் வள்ளுவர் சொல்வதாக நாம் ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?


உன் மனைவி உன்னை தெய்வமாக நினைத்து தொழ வேண்டும் என்றால், நீ தெய்வம் போல நடந்து கொள் என்று கணவனுக்குச் சொல்லப் பட்ட குறள் .

(வேறு ஒரு பொருளைக் காண்போமா)

கணவன் என்று சொல்லாமல் கொழுநன் என்று சொல்வதற்கும் ஒரு காரணம் உண்டாம்.


கொழு கொம்பு, கொடியை தாங்குவதைப் போல கணவன் மனைவியை தாங்க வேண்டும் என்ற கருத்து வரும்படி கொழுநன் என்ற சொல்லை இங்கே போடுகிறார் வள்ளுவர் என்றும் சொல்பவர்கள் உண்டு.)


No comments: