Tuesday, May 19, 2020

நான் அறிந்த கோமல் - 1


கோமல் சுவாமிநாதன் பற்றி திருப்பூர்கிருஷ்ணன் முகநூலில் எழுதியிருந்தார்.
ஒரு நாடகக் கலைஞனாக நான் அறிந்த கோமலின் நாடக உலக சாதனைகளும், அவருக்கு என்னிடம் உண்டான அன்பினையும் இரு பதிவுகளாக இட உள்ளேன்.முதலாவதாக நாடக உலகில் அவரின் சாதனைகள்.

இன்றைய பல இளைஞர்களுக்கு அவர் எழுதியுள்ள நாடகங்கள் குறித்துத் தெரிய வேண்டும் என்றே இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.

கோமல் சுவாமிநாதன் 1935ஆம் ஆண்டு காரைக்குடியில் பிறந்தவர்.இவரின் தாய்,தந்தையர் ஆடுதுறைக்கு அருகே கோமல் எனும் ஊரைச் சேர்ந்தவர்கள்.ஆகவே சுவாமிநாதன் "கோமல்" சுவாமிநாதன் ஆனார்.

ஆனால்..அந்த "கோமல்" என்பது இவருக்கு எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.முதலில் ஊர் பெயர் என்பதால் தன் பெயருக்கு முன்னாள் "கோமல்" என்பதை சேர்த்துக் கொண்டார் என்பது உண்மை என்றாலும்.."கோமல்" என்பதற்கு வடமொழியில் மென்மை எனப் பொருளாகும்.

ஆம்..இந்தக் "கோமலும்" மென்மையானவர்.இனியவர்,எளியவர்,வலியவர் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

தனது 22ஆவது வயதில் எஸ்.வி.சஹஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவில் இணைந்தார்.பின் 1960ல்  அதாவது அவரது 25ஆவது வயதில் அக்குழுவிற்கென "புதிய பாதை" என்ற முதல் நாடகத்தை எழுதினார்.தமிழ் நாடக மேடையின் முற்போக்கு நாடக ஆசிரியராகத் திகழ்ந்தவர்.

பின் 1971ல் சொந்தமாக ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ் எனும் ஒரு நாடகக் குழுவினை ஆரம்பித்தார்.  33 நாடகங்கள் எழுதி அரங்கேற்றினார்.  பொதுவாக சமகால அரசியல் பிரச்சினைகளையும் அறப் பிரச்சினைகளையுமே எழுதினார். தீவிரமான இடதுசாரிப் பிடிப்புடையவராக இருந்தார்.இவர் நாடகங்கள் பல நூறு காட்சிகளைக் கடந்து மேடையேறியுள்ளன.

தண்ணீர் தண்ணீர் நாடகம் 250 முறைகளுக்கு மேல் அவரால் மேடையேற்றப்பட்டது."நீரின்றி அமையாது உலகு" .உலகின் கடைசி சொட்டு தண்ணீர் உள்ளவரை இவரது தண்ணீர் தண்ணீர் பேசப்படும் நாடகமாக அமைந்தது .அரங்கேறமாகி 40 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கோமலின் மகள் தாரிணி மேடையேற்றிய இந்நாடகம் அனைத்து வயதினராலும் பாராட்டப்படும் நாடகமாகவே உள்ளது

இயக்குநர் கே.எஸ் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கோமல், "கற்பகம்", கைகொடுத்த தெய்வம் "பேசும் தெய்வம்"ஆகிய படங்களில் கதை வசனத்தில் பெரும் பங்காற்றினார்
1980ல்  தண்ணீர் தண்ணீர்  நாடகம் கே.பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி இவருக்கு மேலும் பெரும் புகழ் சேர்த்தது. அதைத் தொடர்ந்து அவரது பல நாடகங்கள் படமாக ஆயின. கோமல் யுத்த காண்டம் (1982), அனல் காற்று (1982), ஓர் இந்தியக்கனவு (1983) ஆகிய மூன்று படங்களை இயக்கினார்.

இவரது குழுவிற்காக இவர் எழுதிய நாடகங்கள்-

  • சன்னதித் தெரு, 1971,
  • நவாப் நாற்காலி, 1971 (சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் படமாகியது),
  • மந்திரி குமாரி, 1972,
  • பட்டணம் பறிபோகிறது, 1972,
  • வாழ்வின் வாசல், 1973,
  • பெருமாளே சாட்சி, 1974 (தமிழில் குமார விஜயம் என்ற பெயரிலும் மலையாளத்தில் பாலாஜி மதனம் என்ற பெயரிலும் படமாகியது),
  • ஜீஸஸ் வருவார், 1974,
  • யுத்த காண்டம், 1974 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
  • ராஜ பரம்பரை, 1975 (பாலூட்டி வளர்த்த கிளி என்ற பெயரில் பி. மாதவன் இயக்கத்தில் படமாகியது. இளையராஜா இசையமைத்த இரண்டாவது படம்),
  • அஞ்சு புலி ஒரு பெண், 1976,
  • கோடு இல்லாக் கோலங்கள், 1977 (
  • ஆட்சி மாற்றம், 1977,
  • சுல்தான் ஏகாதசி, 1978,
  • சொர்க்க பூமி, 1979 (அனல் காற்று என்ற பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
  • செக்கு மாடுகள், 1980 (சாதிக்கொரு நீதி என்ற பெயரில் படமாகியது),
  • தண்ணீர் தண்ணீர், 1980 (அதே பெயரில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் படமாகியது),
  • ஒரு இந்தியக் கனவு, 1982 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
  • அசோகவனம், 1983 (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
  • நள்ளிரவில் பெற்றோம், 1984,
  • இருட்டிலே தேடாதீங்க, 1985, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
  • கறுப்பு வியாழக்கிழமை, 1988,
  • நாற்காலி, 1989, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
  • கிராம ராஜ்யம், 1989,
  • மனிதன் என்னும் தீவு, 1989,
  • அன்புக்குப் பஞ்சமில்லை, 1992,

மற்ற குழுவினருக்கு இவர் எழுதிய நாடகங்கள்

  • புதிய பாதை, (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
  • மின்னல் கோலம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
  • தில்லை நாயகம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
  • டாக்டருக்கு மருந்து,
  • கல்யாண சூப்பர் மார்க்கெட், (எம்.என். நம்பியாரின் நாடகக் குழு )
  • டெல்லி மாமியார் ,(மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு) (பின்னாளில் கற்பகம் வந்தாச்சு" என்ற பெயரில் படமாகியது),
  • அவன் பார்த்துப்பான், (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)
  • அப்பாவி, (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)
  • கிள்ளியூர் கனகம், (மனோரமாவின் நாடகக் குழு)
  • என் வீடு, என் கணவன், என் குழந்தை (மனோரமாவின் நாடகக் குழு) (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
(அடுத்த பதிவும் உண்டு)


No comments: