Sunday, May 17, 2020

நானும் ரௌடிதான் - 3

முதலில் சாராயம் குடித்துவிட்டு என்னை ஊறுகாய்வாங்கிவரச் சொன்ன குள்ள கோவிந்தன், அடுத்த நாள் குப்பால் கடையில் நன சைக்கிளை விட்ட போது..ஒரு ரூபாயை நீட்டி.."துரை..காஜா பீடி ஒரு கட்டு வாங்கிக்க, ஊறுகாய் ஒரு பாக்கெட் அப்புறம் நீ வேணும்னா ஒரு சிகரட் மிட்டாய் வாங்கிக்க" என்றான்.

சிகரெட் மிட்டாய் என்பது..சிகரெட் போட வெள்ளை நிறத்தில்..சிகரெட் போல வே இருக்கும்..அதன் நுனிப்பகுதியில் கருப்பும், சிவப்பும் கலந்து நெருப்பினைப் போலிருக்கும்.

அவன் சொன்னபடியே அவனுக்கு வாங்கிக் கொடுத்து விட்டு..எனக்கும் ஒரு சிகரெட் மிட்டாயை வாங்கிக் கொண்டேன்.

அவனிடம் அதைக் கொடுத்து விட்டு கிளம்பும் போது..குப்பால் அவன் ஏதோகேட்க"என்ன இட்லி,வடகறி இல்ல மாசால்தோசை கிடைக்கும்"என்றான்..

"மசால் தோசை" என்ற பெயரைக் கேட்டதும்..நான் அங்கேயே நின்று விட்டேன்.அம்பத்தூரில் அப்போது உடுப்பி ஹோட்டல் ஒன்றும், அமுதா கேஃப் என்று ஒன்றும் உண்டு.

அந்த உடுப்பி ஹோட்டல் மசால்தோசை நன்றாய் இருப்பதாக பரவலாகப் பலர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டவன் நான்.
ஒருநாள் எப்படியும் மசால் தோசை சாப்பிட்டுவிட வேண்டும் எனும் ஆசை இருந்தது.அதனால் அந்தப் பெயரைக் கேட்டதும் "பிரேக்" போட்டு நின்றுவிட்டு..அந்த சிகரெட் மிட்டாயை வாயில் வைத்து எடுத்து "உஷ்" என வெறும் வாயில் புகை விட்டேன்.

அதைப் பார்த்த குப்பால்.."என்ன பெரிய ஆள் செய்யற வேலையெல்லாம் செய்யணுமா?" என்றான்.

"இல்லை..தோசை..மசால்தோசை ன்னு சொன்னீங்களே..வாங்கியாறணுமா? "என்றேன்.

"..அதெல்லாம் இல்லை..எலக்க்ஷன் வருது இல்ல.அதுக்கு வீடு வீடாப் போய்........ இவருக்கு ஓட்டுப் போடுங்கன்னு நோட்டீஸ் கொடுக்கணும்.அப்படி கொடுக்கறவங்களுக்கு டிஃபனா இட்லை, வடைகறியோ இல்ல மசால்தோசையோ தருவாங்க" என்றான்.

"அண்ணா..நான் வேணும்னா நோட்டீஸ் கொடுக்கக் கூட வரேனே!" என்றபடியே..வாயில் சிகரெட் (மிட்டாயை) வைத்துக் கொண்டேன்.அதைப் பார்த்து சிரித்தவன் "நாளைக்குக் காலைல வந்துடு.ஸ்கூல் லீவுதானே" என்றான்.

"சரி..வந்தா மசால்தோசை கிடைக்கும்ல" என்று அதை உறுதி செய்துகொண்டு  கிளம்பினேன்.

நடந்த விஷயத்தையெல்லாம்..மௌனமாக கடையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நாயர் என்னைக் கூப்பிட்டு,"என்ன பேசினீங்க?" என்றார்.

ரௌடி கனவில் இருந்த நான் , "நாளைக்கு என்னைப் பார்த்து பயப்படப்போறீங்கப் பாருங்க..நான் குள்ள குள்ள கோவிந்தனாக்கும்" என வீட்டிற்கு விரைந்தேன்..கையில் இன்னமும் அந்த சிகரெட்டுடன்.



No comments: