பெரும்பாலோர் "பெண்ணியம்" பற்றி பேசுகையில், வள்ளுவரின் இந்த குறளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பலமுறை படித்துள்ளோம்.
அந்த குறள் என்னவெனப் பார்ப்போம்..
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (55)
இதற்கு மு வரதராசனார் இப்படி உரை எழுதியுள்ளார்.
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை சொலகிறார்
(கற்புடைய மனைவியின் சிறப்பு என்னவெனில்) கற்புடைய பெண் தெய்வத்தைக் கூட தொழமாட்டாள். அவள் கணவனையே தெய்வமாக வணங்கிச் சிறப்படைவாள். அப்படிப்பட்டவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்படியான தெய்வபலம் உள்ளவள்.
கலைஞர் தன் உரையில்
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையேத் தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையியப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
இவையெல்லாம் சாதாரணமாகச் சொல்லப்படும் உரைகள்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லும் வள்ளுவர்..மனித உயிர்களில் கணவனைத் தெய்வம் என்றும் மனைவி அவனைத் தொழ வேண்டும் என்ற அர்த்தத்தில் குறளில் சொல்லி இருப்பாரா?
என்று யோசித்து..இன்னும் சற்று விவரமாகப் பார்ப்போம்.
திருக்குறள் இடம் பெறும் பதினென்கீழ்கணக்கு நூல்களில் இடம் பெற்றுள்ள நல்லாதனார் எழுதிய திருக்கடுகம் நூலில் ஒரு பாடலில் "பெய்யெனப் பெய்யும் மழை' என்று சொல்லியுள்ளார்.
கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை
என்கிறார்.
அதாவது, கணவனின் குறிப்பு அறிந்தவள் பெண்டாட்டி, தான் மேற்கொண்ட விரதங்களை செய்யும் முறைப்படி செய்பவன் தவசி,குடிமக்களுக்கு நன்மையானவற்றை செய்பவன் அர்சன்..ஆகிய இம்மூவரும் பெய் என்று சொல்ல மழை பொழியுமாம்.
பெண்டாட்டி என்றால் ஆளும் தன்மையினை உடையவள் என்று பொருள்.ஆக..கணவனையும் ஆளும் தனமை அவளுக்கு உண்டு.இது பெண்மைக்கு சிறப்பு அல்லவா.
இன்னமும் சொல்ல வேண்டுமானால் "கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு என்னாற்றுங்கொல்லோ உலகு" .அதாவது,கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை.அதுபோல மனைவி, தவசி, அரசன் ஆகியோர் கைம்மாற்றை..அதாவது ஏதும் பலனை எதிர்பாராது தன் செயல்களை செய்து வருபவர்கள் எனலாம்.
இன்னமும் சொல்ல வேண்டுமானால் "கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு என்னாற்றுங்கொல்லோ உலகு" .அதாவது,கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை.அதுபோல மனைவி, தவசி, அரசன் ஆகியோர் கைம்மாற்றை..அதாவது ஏதும் பலனை எதிர்பாராது தன் செயல்களை செய்து வருபவர்கள் எனலாம்.
சாதாரணமாக் "மாதம் மும்மாரி பொழிகிறதா நாட்டில்" என்பார்கள்.அதாவது ஒன்பது நாள் வெயில், ஒருநாள் மழை.அடுத்த ஒன்பதுநாள் வெயில் ..ஒருநாள் மழை.மூன்றாம் ஒன்பதுநாள் வெயில்..அடுத்த நாள் மழை.ஆக..மாதத்தை மூன்றாக பிரித்து..3 நாட்கள் மழை பெய்ய வேண்டுமாம்.
நல்ல மழை பெய்து கொண்டிருந்தால்..நாம் என்ன சொல்கிறோம்.."மழை பெய் ..பெய்..என் பெய்துக் கொண்டிருக்கிறது"
அதிக மழை பெய்தால் என்ன ஆகும் பயிர்கள் அழுகி வேளாண்மை பாதிக்கப்படும்.வெள்ளம் பெருக்கெடுத்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.மழையே இல்லையெனில் வறட்சி.பஞ்சம்தான்.
ஆனால், இல்லறத்தை நல்லறமாகப் பேணி..கணவனுடன் துயில் கொண்டு எழுந்து..இல்லத்தை ஆளும் திறனைக் கொண்ட பெண்..இருந்தால் இயற்கையும் தவறாது அந்தந்த பருவத்திற்கேற்பவும், வேண்டும் போது தேவைக்கேற்ப பெய் எனில் பெய்திடும் மழையுமாகி வளத்துடன் இருக்குமாம் நாடு.
இக்குறளில் பெண்களை இழிவுபடுத்துவதாக இனி எண்ணாமல் போற்றுவதாகவே நினையுங்கள்.
வள்ளுவர்..பெண்களை எங்குமே இழிவுபடுத்தியதில்லை.
மேலும் சில குறள்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போம்.
No comments:
Post a Comment