கற்பு என்ற வார்த்தைக்கு அவ்வையாரின் பொருள்
"கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை" - கொன்றைவேந்தன்.
சொன்ன சொல் மாறாமல் இருப்பது தான் கற்பு. அது உடல் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல என்று அவ்வையார் கூறுகிறார். அது உடல் சம்மந்தப்பட்ட விஷயம் என்று எடுத்துக்கொண்டால் பாரதியின் பதில்.
"கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்".
வள்ளுவர் இக்குறளில் சொல்வதைப் பாருங்கள்..
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சீர்விலாள் பெண் (56)
கற்புநெறியில் தன்னையும் (கற்புத் தவறாமல்) தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் (தான் சேர்ந்த குடும்பத்துக்கு) பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண் என்கிறார்.
கற்பு இருவருக்கும் பொது என வள்ளுவர் இலைமறை காய்மறையாகச் சொல்லவில்லையா இக்குறளில்.
இக்குறள் மூலம் பெண்களின் மன உறுதியைப் போற்றவில்லையா வள்ளுவர்.
இக்குறளைப் பாருங்கள்..
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை (57)
தம்மைத் தாமே காத்துக் கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்
கற்பு என்று சொல்லிக் கொண்டு பெண்களை குறுகிய வட்டத்தில் (வீட்டுச் சிறை) அடைத்து,அவர்களது மனவளர்ச்சியைத் தடைசெய்யும் சமூகக் கொடுமையை சாட்டி, பெண்ணுரிமை காக்கப்பட வேண்டுமென பெண்ணுக்கு இழக்கப்படும் வன்முறைக்கு எதிராக வாதாடிய முதல் பெண்ணியவாதி வள்ளுவர் அல்லவா?
வீட்டுக்குள்ளே பெண்ணியப் பூட்டி வைப்போம் என்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
என்று இருபதாம் நூற்றாண்டில் பாரதி சொன்னதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே வள்ளுவர் சொல்லவில்லையா?
அடுத்து சில குறள்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.
No comments:
Post a Comment