Tuesday, May 12, 2020

பொண்ணுங்க மனசு...

அலைபேசி சிணுங்கியது..

அடுக்களைலிருந்து ஓடி வந்து அதை எடுத்த பரமசிவம், ராமபிரான், அணிலைத் தடவிக் கொடுத்தது போல தடவி..காதில் வைத்து "ஹலோ" என்றார் .

எதிர்முனையில் அவரது மகள் ரேணுகாவின் அழுகைக்குரல்..

"என்னம்மா..என்ன விஷயம் ஏன் அழறே..மாப்பிள்ளை ,பேரன், பேத்தி எல்லாம் சௌக்கியம்தானே..1"

பதில் இல்லை..அழுகைத் தொடர்ந்தது.

"மாப்பிள்ளை ஒர்க் ஃபிரம் ஹோம்தானே..உடம்புக்கு ஒன்னுமில்லையே"

மூக்கை உறிஞ்சும் சப்தத்திற்குப் பின்,"அதெல்லாம் நல்லாயிருக்கார்ப்பா.இப்ப வீட்ல இருக்கறதால..சமையல் வேலை, பத்து..பாத்திரங்கள் தேய்க்கிறது, வீட்டைப் பெருக்கி மொழுகறதுன்னு  எல்லா வேலையும் அவரே செய்யறார்ப்பா"

"அதுக்கு சந்தோஷப்படறதுக்குப் பதிலா..ஏம்மா அழறே?"

"இவ்வளவு நாளா, ரேணு இல்லேன்னா...வீடே வீடா இருக்காது, ருசியா எதுவும் நாக்குக்கு கிடைக்காது.வீட்டை சுத்தமா வைச்சுப்பான்னு எல்லாம் பாராட்டி சொல்வார்.இனிமே, இதையெல்லாம் தன்னாலும் செய்யமுடியும்னு எண்ணம் வந்துடுமே..அப்புறமா இந்த வீட்ல எங்ககு என்ன மதிப்பு இருக்கும்..அதை நெனச்சுத்தான் அழறேன்.."

"இதுக்கெல்லாம் போய் அழுவாங்களா..."என பேச ஆரம்பித்த பரமசிவத்தை மனைவியின் குரல் தடுத்து நிறுத்தியது.."அங்கே என்ன..யார் கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க? எப்ப பார் மொபைல்..இங்கே பாதி பாத்திரம் தேய்ச்சுக்கிட்டு இருந்துட்டு..அரைகுறையா விட்டுட்டுப் போன எப்படி..வாங்க வந்து வேலையைமுடியுங்க.."

"அப்பறமா பேசறேன்ம்மா" என்ற படியே அலைபேசியை அணைத்துவிட்டு.."இந்த பொம்பளைங்களை நம்பவே முடியலையே.."அப்படின்னா இப்படி...இப்படின்னா அப்படின்னு இருக்காங்களே.." என எண்ணியபடியே அடுக்களைக்குள் புகுந்தார்.

No comments: