Wednesday, December 30, 2009

சந்ததிப்பிழைகள்

(சற்று பொறுமையாக படிக்கவேண்டிய பதிவு)
அலிகள் என சமுதாயத்தில் ஓரம் கட்டப்பட்டவர்கள் இவர்கள்.பின் அரவாணிகள் என்றும்..இன்று திருநங்கைகள் என்றும் அழைக்கப் படுகின்றனர்.இவர்களை நா.காமராசன் அவர்கள் காகிதப் பூக்கள் என்கிறார்.அவர்களைப் பற்றி அவர் எழுதிய உருவகக் கவிதையைப் பாருங்கள்.

காலமழைத் தூறலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாய்ப்பாலின் சரித்திரத்தில்
சதுராடும் புதிரானோம்

விதைவளர்த்த முள்ளானோம்
விளக்கின் இருளானோம்
சதைவளர்க்கும் பிணம்நாங்கள்
சாவின் சிரிப்புகள்

மூங்கையொரு பாட்டிசைக்க
முடவனதை எழுதிவைக்க
முடவன் கை எழுதியதை
முழுக்குருடர் படித்ததுண்டோ?

மூங்கையின் பாட்டானோம்
முடவன்கை எழுத்தானோம்
முழுக்குருடர் படிக்கின்றார்

சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்

தலைமீது பூவைப்போம்
தாரணியோர் கல்லறையில்
பூவைத்தல் முறைதானே?
பூத்தஉயிர்க் கல்லறைகள் நாங்கள்

தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்.

திருநங்கைகள் பற்றிய உருவகக் கவிதை இது.இனி இதன் அர்த்தத்தைப் பார்ப்போம்

காலம் என்ற மழைத்தூரலில் களையாகப் பிறப்பெடுத்துள்ளோம்.தாய்ப்பாலின் சரித்திரத்தில் சதுராடும் புதிராக ஆனோம்.விதை வளர்த்த முள்ளாக ஆனோம்.சுடர் விளக்கின் இருளாக ஆனோம்.சதை வளர்க்கும் பிணங்கள் நாங்கள்.சாவின் சிரிப்புகள் ஆனோம்.

ஊமை பாட்டிசைக்க, கையில்லா முடவன் அதை எழுதிவைக்க,முழுக்குருடர் அதனைப் படிப்பதால் என்ன பயன் விளையும்?அப்படிப்பட்ட பயனற்ற வாழ்வு எங்களுடையது.

நாங்கள் சந்திப்பிழை போன்ற சந்ததிப் பிழைகள்.காலமென்னும் ஏட்டில் நிகழ்ந்துவிட்ட பிழைகள்.எங்கள் வாழ்வு பிழையுள்ள,பொருளற்ற வாழ்வு.

நாங்கள் பூச்சூடினால் கல்லறைக்குப் பூ வைத்ததுபோல் இருக்கும்.பூச்சூடி உலவினாலும் கூட, நாங்கள் பூத்த கல்லறை போன்று உயிரற்ற சடலத்தின் மீது பூ வைத்தது போல இருக்கும்.

எங்களைப் பெற்றெடுத்த தாய்மார்கள், தாய்மை மணப்பதனால் மணம் வீசும் முல்லைப்பூ போன்றவர்கள்.தனிமலடியாக விளங்கும் ஒவ்வொருவரும் தாழம்பூப் போன்றவர்கள்.வாய்ப்பேச்சால் வக்கணையாகப் பேசும் நாங்களோ மணம் சிறிதும் அற்ற காகிதப்பூக்கள்

இனி நாம்..
இன்றைய காலகட்டத்தில்..அரசு திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்துள்ளது.திருநங்கை என்ற அழகான பெயர் சூட்டியுள்ளது.சமுதாயத்திலும் மக்களிடையே இவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவருகிறது.

ஆயினும்..காமராசனின் இக்கவிதை..அவர்களது மனக்குமறலை அழகாக எடுத்துக் கூறுகிறது.நா.காமராசன் பற்றி அடுத்த பதிவு தொடரும்

8 comments:

cheena (சீனா) said...

அன்பின் ராதகிருஷ்ணன்

காமராசனின் கவிதை அருமை - திரு நங்கைகள் - ம்ம்ம்ம்ம்

பகிர்வினிற்கு நன்றி நல்வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சீனா சார்

vasu balaji said...

அட இந்தக் கவிதை நானும் படிச்சி மனம் கனத்துப் போனது. நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
அட இந்தக் கவிதை நானும் படிச்சி மனம் கனத்துப் போனது.
//

நன்றி வானம்பாடிகள்

கடைக்குட்டி said...

என்ன சொல்றதுன்னு தெரியல...

பாவம்தான்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கடைக்குட்டி

நசரேயன் said...

பகிர்வினிற்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்