இலங்கை மண்ணில் செத்து மடியும் எமது தமிழ்ச்சாதியைக் காப்பாற்றி, அவர்கள் அங்க சம உரிமை பெற்றவர்களாக வாழ வகை செய்ய வேண்டும், என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
9.10.2010 அன்று சென்னை விமான நிலையத்தில் நான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தபோது, கடிதம் ஒன்றை அவர்களிடம் அளித்தேன்.
அந்தக் கடிதத்தில், இலங்கையில் இன்னமும் முகாம்களில் இருந்துவரும் 30 ஆயிரம் தமிழர்களையும் உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்குத் திருப்பிச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென்றும், போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் விரைவில் மறுவாழ்வு அளிக்க இலங்கை அரசை பயன்தரத்தக்க முறையில் வலியுறுத்த வேண்டுமென்றும், மேலும் தாமதமின்றி அரசியல் தீர்வுக்கான செயல்முறையைத் தொடங்க இலங்கை அரசு வற்புறுத்தப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தேன்.
அம்மையாரும் அதுகுறித்து உடனடியாக கவனிப்பதாக என்னிடம் உறுதி அளித்தார்.
இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெறுவதற்கு அரசியல் தீர்வு ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக அமைந்திட முடியும் என்று, இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாகவே தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது நன்றாகவே தெரியும்.
1956ம் ஆண்டில் தீர்மானம்:
29.1.1956 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நான் முன்மொழிந்து; அ.பொன்னம்பலனார் வழிமொழிந்த தீர்மானத்தில், இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்த நாள்தொட்டு; தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காகவும், உரிமைகளுக்காகவும், அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகவும், நாம் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றியும், பேரணிகள் நடத்தியும், உரியவர்களிடத்தில் முறையீடுகள் மூலமாகவும் வலியுறுத்தி வருகிறோம். இலங்கைத் தமிழர்களுக்காக இருமுறை நமது ஆட்சியையே இழந்திருக்கிறோம்.
இலங்கைத் தமிழர்களைக் காக்கவும் - அவர்தம் உரிமைகளை அறவழியில் - அமைதி வழியில் - அரசியல் ரீதியாக வாதாடி, போராடிப் பெறுகிற வழிமுறைகளைப் பின்பற்றி, கழகம் முயற்சிகளை மேற்கொண்டு - அதற்கு ஒத்துவருகின்ற கட்சிகள், இலங்கைத் தமிழர்பால் பரிவுகொண்ட இயக்கங்கள் - அவற்றின் தலைவர்கள் - முன்னோடிகள் ஆகியோருடன் தொடர்புகொண்டு - அவர்களும் ஈடுபாடு கொண்டு நடத்திய பல போராட்டங்களையும் - செய்த தியாகங்களையும் உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடும் தமிழர்தம் தூயநெஞ்சங்கள் நன்கறியும்.
வேண்டாம் சகோதர யுத்தம்:
1956ம் ஆண்டிற்குப் பிறகு, அண்ணா விரும்பியபடி, 22.6.1958 அன்று தி.மு.க. சார்பில் நாடெங்கும் "இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள்'' நடத்தப்பட்டது.
அன்றையதினம், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "இலங்கையில் உள்ள ஒருசில பொறுப்பற்ற சிங்கள அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் நடைபெறும் வெறிச் செயல்களுக்கு ஆளாகி, உயிரையும், உரிமையையும், உடைமையையும் இழந்து அவதியுறும் இலங்கைவாழ்த் தமிழர்கள் நிலைகண்டு, இக்கூட்டம் மிகவும் இரங்குகிறது. நீண்டகாலமாக இலங்கையை தாயகமாகக் கொண்டுள்ள தமிழர்களுக்கு நியாயமாக அளிக்கப்பட வேண்டிய ஜனநாயக உரிமைகளை வழங்குமாறு இலங்கை அரசியலாரை இக்கூட்டம் விரும்பிக் கேட்டுக் கொள்கிறது. இலங்கை அரசியலாரை இணங்க வைக்கும் முயற்சியில், தங்களுடைய நல்லுறவையும், செல்வாக்கையும் முழுக்க முழுக்கப் பயன்படுத்த வேண்டுமென்று இந்தியப் பேரரசினரை இப்பொதுக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' என்று விளக்கமாக குறிப்பிடப்பட்டது.
அதன்பிறகும், இந்திய நாட்டின் அரசியல் சட்டத்திற்குட்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நாம் மேற்கொண்டுவரும் முயற்சிகள், எடுத்துவரும் நடவடிக்கைகள் எண்ணற்றவை. தமிழீழ ஆதரவாளர்கள் (டெசோ) என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய அமைப்பின் தலைவர்களையெல்லாம் மதுரைக்கு அழைத்து வந்து, இந்திய நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்கள் முன்னிலையில், சகோதர யுத்தம் கூடாது என்று 4.5.1986 அன்று வேண்டுகோள் விடுத்தோம்.
அந்த வேண்டுகோள் முழுமையாக - மனப்பூர்வமாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமேயானால், வரலாறு வேறுவகையான வடிவத்தைப் பெற்றிருக்கும்.
சரித்திரம் மறக்காது:
இலங்கையில் நடைபெற்ற சகோதர யுத்தத்தின் காரணமாக, 1986ல் டெலோ இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டார்; 1989ல் கொழும்பு நகரில் அமிர்தலிங்கமும், ஈழப் போருக்கு ஆதரவாளரான யோகேஸ்வரனும் கொல்லப்பட்டார்கள். அதே ஆண்டில், பிளாட் இயக்கத்தின் தலைவர் முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் இலங்கையில் கொல்லப்பட்டார். 1990ம் ஆண்டில் சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த பத்மநாபாவும், அவரோடு 10 பேரும் கொல்லப்பட்டார்கள். அப்போதும் சகோதர யுத்தத்தால் விளைந்திடும் கொடுமைகளைப் பற்றியும், பேரிழப்புகளைப் பற்றியும் எடுத்துச் சொல்லி, "சகோதர யுத்தத்தால் நாம் பாழ்பட்டு விட்டோம் என்பதை மறந்துவிடாமல், அந்தச் சகோதர யுத்தங்கள் ஏற்படுத்திய விளைவுகளை, இப்போது நாம் பெறவேண்டிய பாடமாகப் பெற்று, இப்போதாவது இலங்கைத் தமிழர்களுக்கு, ஒற்றுமையாக இருந்து உதவிகள் செய்ய உறுதி எடுத்துக் கொள்வோம்", என்று நான் சொன்னேன்.
சகோதர யுத்தத்தின் காரணமாக, இலங்கையிலே நடைபெற்ற சோகமான நிகழ்ச்சிகள், அவற்றினால் இலங்கைத் தமிழர்கள் பட்ட - இன்னமும் பட்டுக் கொண்டிருக்கும் துன்பதுயரங்கள் ஆகியவற்றை சரித்திரம் நிச்சயமாக மறக்காது; மன்னிக்கவும் செய்யாது.
சட்டசபையில் தீர்மானம்:
இலங்கையிலே போர் தொடங்கி மேலோங்கியபோது, தமிழர்கள் பேரிழப்பைச் சந்திக்கத் தொடங்கியதைக் கண்டு, தமிழகச் சட்டப்பேரவையில், "இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டிருக்கிறது. ஐ.நா. மன்றமே கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக - சுடுகாடாக - ஆகிக் கொண்டிருக்கிறது.
குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்று கூச்சலும் - ஒப்பாரியும் புலம்பலும் - பின்னணியாக, பிணங்கள் குவிக்கப்படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள். அய்யோ! அந்தச் சிங்கள ராணுவ குண்டு வீச்சுக்கிடையே - சிதறியோடும் - சிறுவர்கள் சிறுமியர் - சிலராவது செத்துப் பிழைத்தனர் என்ற சேதியும் கூட அறவே அற்றுப்போய் - இன்று கூண்டோடு சாகின்றனரே - பூண்டோடு அழிகின்றனரே -
மனிதநேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் பழித்தும் - இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் - அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறைகூவலில் இருந்து எப்படி மீட்கப் போகிறோம்?"
இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் - ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கிறோம்.
நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் - பாதிப்பு களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் - இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக்கூடிய பொறுப்பு - உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும், உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும் போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டுதான்; இலங்கையில் சீரழியும் - செத்துமடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.
கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் - இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட - ஆவன செய்திடுக என்று!
இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்படாமல் - இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் - அடுத்து அரசியல் தீர்வு - தொடர்ந்து அமைதி.
எனவே அந்த நல் விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை முன்மொழிகிறேன்'' - என்று இவ்வாறு நான் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விபரீத விளைவுகள்...
ஆனால் இலங்கையிலே போர் நிற்கவில்லை, தொடர்ந்து நடந்தது; விபரீதமான விளைவுகளுக்குப் பிறகு, ஓய்ந்தது. எனினும், உரிமைகளுக்கான போராட்டம், இலங்கையிலே உச்சக்கட்டத்திலே இருந்தபோது, ஜெயலலிதா அம்மையார் என்ன சொன்னார் என்பதை இங்குள்ள தமிழர்களும், இலங்கையிலே உள்ள தமிழர்களும் மறந்திருக்க மாட்டார்கள்.
18.1.2009 அன்று ஜெயலலிதா அளித்த பேட்டியில், "இலங்கை வேறு நாடு, எனவே, அந்த நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு ஒரு எல்லை உண்டு. இலங்கையில் ஈழம் என்ற ஒரு நாடு இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று, சிங்கள ராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடைபெறும்போது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதிலே எந்தநாடும் விதிவிலக்கல்ல,'' என்று சொல்லியிருந்தார்.
அப்படிச் சொன்னவருக்கு ஆதரவாகத்தான் - ஈழத் தமிழர்களுக்காக தான் மட்டுமே பிறவி எடுத்ததாகச் சொல்லிக் கொள்ளும் - ஒருசிலர்; குரல் உயர்த்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்பதை; வரலாறு உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் வருகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வுதான் நிரந்தரமாகப் பிரச்சினையைத் தீர்க்கும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதன் பின்னணியில், இன்றைய (18.10.2010) ஆங்கில நாளேடு ஒன்று தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளது.
அதில், போரின்போது இடப் பெயர்ச்சிக்கு ஆளான தமிழர்களை மறுகுடியமர்த்தலும், அவர்களுக்கான மறுவாழ்வும் முக்கியமானப் பிரச்சினையாகும் என்றும்; அதிபர் ராஜபக்சே இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றிருப்பதால், அரசியல் சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவருவதென்பது இயலக் கூடியதாகும் என்றும், இலங்கைத் தமிழர்களுடைய - இலங்கை இஸ்லாமியர்களுடைய நீண்டநாள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டுமேயானால் அரசியல் சட்டத்திருத்தம் தேவையான ஒன்றாகும் என்றும்; தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தேவையான அதிகாரப் பங்கீடு ஒன்றுதான் இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகச்சிறந்த வழியாகும் என்றும்; இதுவரை இல்லாத வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளதால், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
இன்னமும் ஒற்றுமையில்லையே...
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு வேண்டுமென்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைத்தான்; இது அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
"இன்னமும் உங்களுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையே'' என்று ராஜபக்சே போன்றோர் காரணம் சொல்லிக் கொண்டிருப்பது; கவைக்குதவாத வாதமாகவே இருக்கிறது - அந்த வீண்வாதங்களையும், பிடிவாதங்களையும் விட்டுவிட்டு; இலங்கையில் தமிழர்கள், இனியாவது உரிமை பெற்ற தமிழர்களாக வாழ்வதற்கு, இலங்கை அரசு உறுதியளித்து, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - என்று தாய்த் தமிழகம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கியவாறு இருக்கிறது.
இந்த ஏக்கத்தைப் போக்க வேண்டிய கடமை இந்தியப் பேரரசுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்டி; அந்தக் கடமையை காலத்தே நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்...," என்று அந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
(நன்றி -தட்ஸ்தமிழ்)
(இனி நாம் - இன்னும் ஏழு மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் வருகிறது )