Tuesday, March 8, 2011

பொறுப்பில்லாத பிரதமர்!


தான் செய்த தவறுக்கான பழியை அடுத்தவர் மேல் போட்டுத் தப்பித்துக் கொள்வது என்பது அதிகார வர்க்கத்துக்கே உரித்தான "உயரிய' பண்புகளில் ஒன்று. இந்தியாவின் இந்நாள் பிரதமரான மன்மோகன் சிங், ஒரு முன்னாள் அரசு உயரதிகாரி என்பதால், அவரது அடிப்படை மனோபாவம் மாறாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.பிரதமரின் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது முதலே பிரதமரின் முடிவு சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. நமது தலையங்கத்தில் முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல, ஒரு பிரதமர் தனக்கு எதுவுமே தெரியாது என்றோ, தனக்குத் தெரியாமல் நடந்துவிட்ட தவறு என்றோ குறிப்பிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது, கூடாது. நூறு கோடி இந்தியர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பதவியில் இருப்பவர், அந்தப் பதவிக்கே உரித்தான பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.பி.ஜே. தாமûஸ ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டபோதே ஊடகங்களில் பலத்த எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தவண்ணம் இருந்தன. கேரள மாநிலத்தில் நடைபெற்ற பாமாயில் இறக்குமதி ஊழலில் பி.ஜே. தாமஸ் சம்பந்தப்பட்டிருப்பதும், அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதும் அநேகமாக இந்தியாவிலுள்ள அத்தனை தினசரி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் பரபரப்பான செய்தியாக வெளியானது. தாமஸ் மீது அப்படி ஒரு விசாரணை இருப்பது பற்றியே தெரியாமல் இருந்திருப்பதாகப் பிரதமர் கூறுவது உண்மையானால், நமது பிரதமர் இந்தியப் பத்திரிகைகளைப் படிக்கிற, தொலைக்காட்சிச் சேனல்களைப் பார்க்கிற பழக்கமில்லாதவர் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. ஒருவேளை, லண்டன் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற மேலைநாட்டுப் பத்திரிகைகளைத்தான் படிக்கிறாரோ என்னவோ, யார் கண்டது?""தாமஸ் நியமனத்தில் ஏற்பட்ட தவறுக்கு உயர்மட்டத் தேர்வுக் குழுவின் தலைவர் என்பதாலும், பிரதமர் என்ற முறையிலும் நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'' என்று பவ்யமாக ஒத்துக்கொள்வதுடன் பிரதமர் நிறுத்தியிருந்தால், "மறப்போம், மன்னிப்போம்' என்று விட்டுவிட்டிருக்கலாம். அடுத்தாற்போல அவர் அவிழ்த்து விட்டிருக்கும் அண்டப்புளுகுகளைத்தான் நம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை.செப்டம்பர் 3-ம் தேதி நடந்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்துக்கான உயர்மட்டக் குழுவின் கூட்டத்துக்கு வருவதுவரை, அந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருந்த மூன்று நபர்களில் ஒருவரான பி.ஜே. தாமஸ் மீது விசாரணை நடந்து கொண்டிருப்பது பற்றித் தனக்குத் தெரியாது என்று நா கூசாமல் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார் பிரதமர். இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா?""பி.ஜே. தாமஸ் கேரள மாநிலத்தின் தலைமைச் செயலராக இருந்தவர். மத்திய அரசின் செயலராகப் பணியாற்றியவர். இந்தப் பணி நியமனங்களுக்கு முன்னால் அவரது பின்னணி கண்காணிப்புத் துறையால் பரிசீலிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில், மூன்று உறுப்பினர்களில் ஒருவரான எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், பி.ஜே. தாமûஸ நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதுதான், தாமஸ் மீது ஊழல் விசாரணை நடைபெறுவது பற்றிய விவரமே எனக்குத் தெரியும்'' - இது மாநிலங்களவையில் நேற்று பிரதமர் அளித்திருக்கும் தன்னிலை விளக்கம்.அது உண்மை என்றே நம்புவோம். இப்படி ஒரு குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவியும், மூன்று பேர் குழுவில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் முன்வைத்தவுடன், பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும்? கூட்டத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பி.ஜே. தாமஸின் பின்னணியைப் பற்றித் தீர விசாரித்த பிறகு, நியமனத்தை உறுதிப்படுத்துவதுதானே நியாயம்? ஏன் செய்யவில்லை?தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஒரு "மெகா' ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அந்தத் துறையின் செயலராக இருந்தவர் பி.ஜே. தாமஸ். தனது துறையில் நடந்த ஊழலைப் பற்றி விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அதிகாரமில்லை என்று அறிவித்தவர் பி.ஜே. தாமஸ். அவசர அவசரமாக அதே பி.ஜே. தாமûஸ ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? இதுகூடப் பிரதமருக்குத் தெரியாது என்று நம்மை நம்பச் சொன்னால் எப்படி?அதையெல்லாம்விட மிகப்பெரிய வேடிக்கை பிரதமர் மன்மோகன் சிங், பழியைத் தனது பிரதமர் அலுவலக இணையமைச்சராக இருந்து இப்போது மராட்டிய மாநில முதல்வராக இருக்கும் பிருதிவிராஜ் சவாண் மீது போடுவதுதான். ""இதுபோன்ற கூட்டங்களுக்கான குறிப்புகளைத் தயார் செய்வது, பணியாளர் நியமனத் துறையின் இணையமைச்சர்தான். அவர் தயாரித்துத் தந்த குறிப்பில் தாமஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பற்றி எதுவும் இருக்கவில்லை'' என்கிறார் பிரதமர்.அப்படியானால் நமது பிரதமர் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர் அல்லவா? தனக்கு யாரோ தரும் குறிப்புகளின் அடிப்படையிலும் வேறு யாரோ வழங்கும் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் செயல்படுபவரா? வேறு யாராவது கூறியிருந்தால், ""இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்கலாம். பிரதமரை எப்படிக் கேட்பது?''2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிக் கேட்டால், அது அமைச்சர் ஆ. ராசாவின் முடிவு, தனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரிக்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பல கோடி கொள்ளை போயிருக்கிறதே என்றால், ""அப்படியா? தவறு செய்தவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டோம்'' என்றுகூறித் தனக்குத் தொடர்பே இல்லை என்று நழுவப் பார்க்கிறார். தாமஸ் நியமனம் பற்றிக் கேட்டால் அவர் மீது விசாரணை இருப்பதே தெரியாது என்று மாநிலங்களவையில் வாக்குமூலம் அளிக்கிறார். அப்படியானால், நமது பிரதமருக்குப் பதவி சுகத்தை அனுபவிப்பதைத் தவிர, வேறு ஒன்றுமே தெரியாதா?கடைசியாக ஒரு கேள்வி. இன்றைய இந்தியாவைப் பிடித்திருக்கும் மிகப்பெரிய கேடு என்று கருதப்படும் ஊழலைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற பொறுப்பான அரசியல் சட்ட நியமனப் பதவிக்கான தேர்வு நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்வதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட கோப்புகளைப் படித்து, பட்டியலிலுள்ள நபர்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு கூட்டத்தில் கலந்துகொள்வதுதானே முறை! அதைக்கூடச் செய்யாத பொறுப்பற்றதனம் ஒரு பிரதமருக்கு இருக்கலாமா?

(நன்றி தினமணி )
 
 
இனி நாம் .....
 
இந்தியா பல பிரதமர்களைச் சந்தித்துள்ளது.சரண்சிங், குஜ்ரால்,சந்திரசேகர்,தேவகவுடா..இப்படி சில காலமே பதவி வகித்தவர்கள்கூட இன்றைய நம் பிரதமரைவிட சிறந்தவர்கள் என்ற பட்டியலில் சேர்த்துவிடலாம் போல இருக்கிறது.


நீதிமன்றத்தில்..சாட்சிகள்..பிறழும்போது..எது கேட்டாலும் 'எனக்குத் தெரியாது' என சாதாரணமாக பதிலளிப்பார்கள்.அதுபோல பிரதமர்..தாமஸ் நியமனத்தில் ஆகட்டும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆகட்டும், காமன்வெல்த் ஊழலில் ஆகட்டும் இப்படியே சொல்கிறார்.

எந்த பொறுப்பான பதிலும் சொல்லாத..இந்த பொறுப்பற்ற பிரதமர் இன்னும் பதவியில் இருக்க வேண்டுமா>>>

சுதந்திர இந்தியா சந்தித்த பிரதமர்களில் பொம்மை பிரதமர் இவர் என ஆணித்தரமாய் சொல்லலாம்.

5 comments:

goma said...

பொறுப்பில்லா பிரதமர் என்பதை விட சுரணையற்ற பொதுமக்கள் என்றும் எழுதலாம்...நமக்கென்ன,யார் ஆண்டால் என்ன,என்ன செய்றது,இப்படியே ஓட்டிக் கொண்டிருக்கிறோம்

சி.பி.செந்தில்குமார் said...

பிரதமர் பாவம்.. சோனியா பாவம் ,இந்தியா ரொம்ப பாவம்

தமிழ்குறிஞ்சி said...

தங்களது பதிவை எமது தமிழ்க்குறிஞ்சி இணைய இதழில்வலைப்பூக்கள் பகுதியில் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
தமிழ்க்குறிஞ்சி

கே.ஆர்.பி.செந்தில் said...

இந்த விசயத்தில் மட்டுமா அவர் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார்???

YESRAMESH said...

நான்தான் பிரதமரா, சத்தியமா எனக்கு தெரியாது.