Tuesday, March 3, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -68


வாழ்க்கையில் இன்பம், துன்பம் இல்லாமல் இருப்பது இல்லை.

ஆனால்..துன்பம் ஏற்படுகையில், இன்பம் வராவிடினும் பரவாயில்லை,துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என மனம் விரும்புகிறது.

துன்பம் ஏன் வருகிறது..

அளவிற்கு மேல் ஆசைப்படுவதால்..பேராசையால்தான் பல துன்பங்கள் வருகின்றன.

இன்பம் வரும்போது அதற்காக ஆட்டம் போடாமல் இருந்தாலே போதும்.அதுவே துன்பத்தை கண்டு வருந்தாத மனதைக் கொடுத்துவிடும்.

இதையே வள்ளுவர்..

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன் (629)

என்கிறார்.

இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள்,துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள்.(இன்ப, துன்பங்கள் இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதி ஏற்பட்டுவிடுமாம்)

அதேபோல..இன்பம்..இன்பம்...என இன்பத்தைத் தேடி அலையாமல் இருந்தால் போதும்..அப்படிப்பட்டவர்களுக்கு துன்பம் ஏற்பட்டால் துவண்டுவிட மாட்டார்களாம்.


இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன் (628)

இன்பத்தை விழையான் துன்பத்தை இயல்பானது எனபான்.அதனால் துன்பப் பட மாட்டான்


எல்லா துன்பத்துக்கும் காரணம் இன்பம் வேண்டும் என்று அலைவதுதான்.

ஆமாம்..வாழ்க்கையில் இன்பமே வேண்டாமா?

கண்டிப்பாக வேண்டும்.ஆனால் ஓரளவே வேண்டும்.அளவிற்கு அதிகமாக
 வேண்டும் என்று அலைந்தால் துன்பமே வந்து சேரும்.

அதனால்தான் வள்ளுவர் சொற்களை தெரிந்து எடுத்து கையாள்கிறார்.


"இன்பம் விழையான்" என்றார். விழைதல் என்றால் மிக விரும்புதல் என்று பொருள்.


ஆசையை விட்டு ஒழிப்போம்/


No comments: