Thursday, March 5, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -70

செய்நன்றி மறவேல்!


ஒருவர் என்ன தவறு செய்தாலும்..அந்த பாவத்தில் இருந்து அவரால் விடுபட முடியும்.ஆனால்..அவருக்கு ஒருவர் செய்த நன்மைகளை மறந்தவர்க்கு அந்த பாவத்திலிருந்து விடுபட வழியே இல்லையாம்.

ஆகவே, ஒருவர் செய்த நன்றியை எக்காலத்தும் மறந்து விடக்கூடாது என்கிறார்.

செய்ந்நன்றியறிதல் என்று நன்றியினைப் பற்றி ஒரு அதிகாரமே ஒதுக்கியுள்ளார் வள்ளுவர்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110)

எந்த அறத்தினை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு.ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.



ஒருவர் நமக்குச் செய்த நன்மைகளை மறந்தர்வகளுக்கு ஒரு காலும் அந்தப் பாவத்தில் இருந்து விடு பட வழி இல்லை என்கிறார் வள்ளுவர்.


இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள சில குறள்களுக்கான பொருளை மட்டும் பாருங்கள்..

1) செய்யாமற் செய்த உதவிக்கு வானமும், பூமியும் கூட ஈடாகாது.

2) தேவைப்படும் காலத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தைவிட பெரிதாக மதிக்கப்படும்

3)தினையளவு உதவியினைக் கூட பனையளவாகக் கொள்வர் நன்றியுள்ளவர்கள்


 ஔவையாரும் தனது "மூதுரை"யில் சொல்கிறார்..

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.


நல்லவர் ஒருவருக்கு செய்த உதவி கல்லில் வடித்த எழுத்து போல என்றும் நிலைத்து நின்றிருக்கும்.அப்படியில்லாத, மனதில் நன்றியுணர்ச்சியற்றோர்க்கு செய்த உதவி நீர் மேல் எழுத்தாய் அழிந்துவிடும்.

நல்லவகள் செய்த உதவியை மறக்கமாட்டார்கள். 

நமக்கு நன்மை செய்தவர்களை நினைத்துப் பாத்து, அந்நன்மைகளை மறக்காமல் இருப்போமாக! 

No comments: