Sunday, March 15, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 80

இல்லறமே நல்லறம்
---------------------------
உலகத்தில், வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன்,தெய்வத்திற்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான் என்னும் வள்ளுவர் ..

ஒருவர் பழிப்புக்கு இடம்கொடாத இல்வாழ்க்கையே இல்லறம் எனப் போற்றப்படும் என்கிறார்.

இல்வாழ்க்கை  பண்புடையதாகவும், பயனுள்ளதாகவும் விளங்க என்ன வேண்டும் எனச் சொல்கிறார் தெரியுமா?

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (45)

என்கிறார்.

இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை

சரி..இல்லறம் நல்லறம் என போற்றப்பட வேண்டுமானால், இல்வாழ்க்கை நடத்துபவனுக்கு என்று சில கடமைகள் உண்டாம்..

அவை என்ன?

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)

பெற்றோர்,வாழ்க்கைத் துணை,குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

இல்லறமே நல்லறமாகும்.

No comments: