Sunday, February 1, 2009

மீசை மாதவன்..(ஒரு பக்கக் கதை)

அப்பாவிற்கு என்றைக்குமே தன் மீசைமீது தணியாத பற்று உண்டு.

'டேய்..இந்த மீசையோட ஒரு புகைப்படம் எடுக்கணும்டா' என்பார் ஒவ்வொருமுறை மீசையை மாற்றிய பின்னும்.'

ஆனால் அவரும் ஒரு முறைகூட புகைப்படம் எடுத்துக்கொண்டதில்லை.நானும் அவர் சொல்வதை கண்டுக் கொண்டதில்லை.'ஆமாம்..கரப்பான் பூச்சிக்கு கூடத்தான் மீசை இருக்கிறது' என அலட்சியப் படுத்திவிடுவேன்.

அந்த நாட்களில் பாரதியார் போல மீசை வைத்துக்கொண்டு தினமும் அதற்கு பசுநெய் தடவி பராமரித்து வருவாராம்.அவரை அந்த மீசை உடன் பார்க்கும்போது பயமாக இருக்குமாம்.அழுத குழந்தையும்..அவரைப் பார்த்தால் வாயை மூடிவிடுமாம்.

அம்மா கதை சொல்வதுபோல எனக்கு தினமும் சொல்லி மாய்ந்து போவாள்.

நான் வளர்ந்து வேலைக்குப்போக ஆரம்பித்ததும் அப்பாவும் என்னிடம் இதுபற்றிப் பேச ஆரம்பித்தார்.

'டேய் சிவா, உன் வயசிலே 'கருகரு' ன்னு மைனர் மீசை வச்சுக்கிட்டு இருந்தேன்.என் பேரே 'மீசை மாதவன்னு தான் சொல்லுவாங்க.நீ என்னடான்னா..இந்திப்பட கதாநாயகர்கள் போல..முகத்தை மிழிச்சுண்டு இருக்கியேடா..' என்று என்னை கிண்டல் செய்வார்.

தேவர் மகன் வந்த புதிதில்..அதில் தேவர் சிவாஜி கணேசன் வைத்துக் கொண்டிருப்பது போல தன் மீசையை வளர்த்துக் கொண்டார்.அத்துடன் நில்லாமல்..'டேய்..சிவா..இந்த மீசையுடன் கண்டிப்பா ஒரு புகைப்படம் எடுக்கணும்னு' என்று தொண தொணத்தார்

ஆனால் வழக்கம் போல நான் கண்டுக்கொள்ளவில்லை. பிறகு...

ஓரிரு ஆண்டுகள் கழித்து..இது 'விருமாண்டி' மீசை என்று சொல்லி..கிருதாவையும்.,மீசையையும் சேர்த்துவிட்டுக் கொண்டு சொல்லிக்கொண்டிருந்தார்.

'டேய்..இதுவரைக்கும் எந்த மீசையை நான் புகைப்படம் எடுக்க சொன்னாலும் தட்டிக் கழிச்சுட்ட..நீ எடுக்கவே இல்லை.ஆனா..கண்டிப்பா இந்த மீசையோட ஒரு படம் எடுக்கணும்' என்று கடந்த இரண்டு வாரங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்'.

ஆனால்..இன்றுதான் அதற்கான வேலை வந்திருக்கிறது..

புகைப்படம் எடுப்பவரை ஐந்து மணிக்குள் வரச் சொல்லி இருக்கிறேன்.அப்பாவை இன்று புகைப்படம் எடுக்க..இன்று இல்லாவிட்டால்...வேறு சந்தர்ப்பம் கிடைக்காது...

பெசண்ட் நகர் எரியூட்டியில் அப்பாவிற்கு 6.30 க்கு நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள்.அதற்குள் முடிக்க வேண்டிய காரியங்களை முடித்தாக வேண்டுமே...

மனத்தை வலிக்கத்தான் செய்தது...

10 comments:

சின்னப் பையன் said...

:-(((

அன்புடன் அருணா said...

முடிவை எதிர்பார்த்தேன்...
அன்புடன் அருணா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அன்புடன் அருணா

ஆதவா said...

எதிர்பார்த்த முடிவென்றாலும் பிரமாதமாக இருக்கிறது....

வலி சொல்லும் வரிகள் இவை....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஆதவா

நசரேயன் said...

நல்லா இருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நசரேயன் said...
நல்லா இருக்கு//

வருகைக்கு நன்றி நசரேயன்

ILA (a) இளா said...

முடிவை எதிர்பார்த்தேன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ILA said...
முடிவை எதிர்பார்த்தேன்...//

வருகைக்கு நன்றி ILA
இது சற்று உண்மைக்கதை இளா