முந்தைய பதிவு
காட்சி-9
(துஷ்யந்தன் அரசபையில்)
(சகுந்தலையைப் பார்த்ததும் மன்னன் நிலை)
இவளைக் கண்டதும்
என் தலையில் ஏன்
இவ்வளவு பாரம்
கிரீடத்தின் சுமையும்
தாங்க முடியாமல் என்னுள்
தலைக்குடைச்சல் ஏன்?
(சகுந்தலையைப் பார்த்து)
பெண்ணே.. நீ யார்
உனக்கு என்ன வேண்டும்
உன்னை நம்பிக்கையூட்டி
ஏமாற்றியவன் எவன்
உன்னை இந் நிலையில் விட்டுச்
சென்ற கயவன் யார்
(சகுந்தலை உரைக்கிறாள்)
மன்னா..நான்
சகுந்தலை..உங்கள்
மணவாட்டி
கன்வ மகரிஷியின்
சுவீகாரப் புத்திரி - என்னை
எப்படி மறந்தீர் நீர்
நினைவு இருக்குமா எனக்
கேட்டபோது
மறந்தால் தானே நினைப்பதற்கு
என்றீரே
(துஷ்யந்தன் உரைக்கிறான்)
பெண்ணே
நீ மனம் உடைந்து
ஏதேதோ பிதற்றுகிறாய்
நான் உன் மணாளன்
என்பதற்கு ஆதாரம் உண்டா
உனை மணம் புரிந்ததற்கு
யார் சாட்சி
(சகுந்தலை)
யார் சாட்சி...யார் சாட்சி..
நம் திருமணம்
காந்தர்வத் திருமணம்
முப்பது முக்கோடி
தேவர்கள் சாட்சி
நிலவு சாட்சி
நீர் அளித்த
கணையாழி சாட்சி - ஆயின்
நேரில் வர இயலா
சாட்சிகள் - நீர்
அளித்த ராஜமோதிரமும்
துர்வாசர் சாபத்தால்
தொலைந்ததுவே..
(துஷ்யந்தன்)
பெண்ணே..உன் நிலைக்
கண்டு வருந்தினேன்
சித்தம் தடுமாறும்
பெண்ணே..நீ யார்
சற்றே யோசி
(என்றிட்டான்)
இம்முறை
பெண்ணே நீ யார்
உன் சித்தம் சரியில்லையா - என
மன்னன் வினவியதும்
அவள் காதுகள்
கேட்கும் திறன் இழந்தன
கோலம் கலைந்தது போல
வாழ்வும் கலைந்தது
ஞாலம் மீதினில் - என்
வாழ்வில் ஞாயிறும்
வராது போயிற்று
கானல் நீரானதென் வாழ்வு
ஏலம் போட்டு நினைவுகளை
ஏழை விற்றிட முடியுமா?
வயிற்றில் சுமப்பது - அவன்
மஞ்சத்தில் தந்த கரு
ஓலம் போட்டு அழுதாலும்
ஓடிவராது போன காலம் - என்
மன்னனுடன் நான்
வாழ்ந்த காலம்
வாழ்வின் இலைகள்
இலையுதிர்காலமாய் உதிர
தேவன் போட்ட புதிராம்
தலையெழுத்தறியாப் போனாள்
நீர் சிந்தும் விழியாள்
வாழ்வு கனவானது
மரணதேவனே - நீ
எனை அணுகுமுன்
ஒரு வேண்டுகோள்
இதயத்தில் மன்னன் பெயரையும்
வயிற்றில் அவன் வாரிசையும்
சுமந்தவள் நானென
கோமகன் உணரும் வரை
அவரை நீ அணுகாதே (என்றவாறே மயங்கி விழ)
யார் அங்கே..
மன்னன் விளித்தான்..
அரண்மனை வைத்தியனை
அணங்கை சோதித்திட
அவ்வேளையில்..
மன்னா...மன்னா..
விளித்தவாறு ஒடி வந்தனர் இருவர்
காவலர் அவரைத் தடுக்க
காவலன் அனுமதித்தான்..
வந்தவரோ..
மன்னா..மீன் பிடிப்பது எம் தொழில்
இன்று மீனொன்று கிட்டியது- அதை
பல கூறு போடையில்
ஆச்சர்யம்
அதன் வயிற்றில்
அரசரின் ராஜ மோதிரம்..
கணையாழியை மன்னனிடம் ஈய
மன்னன் கை அதில் பட்டதும்
வந்ததே பழைய நினைவுகள்
துர்வாசர் சாபமும் நீங்க
மன்னனும்..சகுந்தலை..சகுந்தலை
என கூவியபடியே
அவளை வாரி அணைக்க
தாய்..தந்தை இணைந்ததுக் கண்டு
மகிழ்ந்தது மகவு வயிற்றில் இருந்தவாறே...
(முற்றும்)
4 comments:
கானல் நீரானதென் வாழ்வு
ஏலம் போட்டு நினைவுகளை
ஏழை விற்றிட முடியுமா?
....... எளிமையான வார்த்தைகளில், அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
நைஸ்..
வருகைக்கு நன்றி chitra
நன்றி வித்யா
Post a Comment