Thursday, January 6, 2011

குறள் இன்பம் - 6




இன்றைய குறள் இன்பத்தில் வள்ளுவரின் சொல்லழகும்..சொல்விளையாட்டையும் இந்த நான்கு குறள்களில் காணலாம்



சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து



சொல்வன்மை அதிகாரத்தில் ஐந்தாம் குறள்..சொல் என்னும் சொல் ஆறு இடத்தில் வருகிறது.இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

உதாரணமாக இப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால்..'நன்று' என பின்னூட்டம் இட்டால்..அதை வெல்லும் சொல் 'அருமை' அதையும் வெல்லும் சொல் 'அற்புதம்" இந்தச் சொல்லை வேறு சொல் வெல்லாது அதுபோலத்தான்.

இக்குறளில் சொல் விளையாட்டைப் பார்த்த நாம்..அடுத்துப் பார்க்கப் போவது..



அதே அதிகாரத்தில் முதல் குறள்


நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத் துள்ளதூஉம் அன்று



நலம் எனும் சொல் நலமாக நான்கு இடத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு

சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை.எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்

ஒஓ, ஆஅ என வள்ளுவனின் சாதுர்யத்தை விளக்கும் குறள்


ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை

ஆஅது மென்னு மவர்



மேன்மேலும் உயர்ந்திட வேண்டும் என விரும்புகின்றவர்கள் தம்முடைய செயலால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.

நல்ல செயல்களைச் செய்பவர்களே மென் மேலும் உயர்வர்.



வினைத்திட்பம் அதிகாரத்தில் ஆறாம் குறள்


எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்



'எண்ணி' என்பது மூன்று இடத்தில்..விளையாடுகிறது.

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள் என்பதே பொருள்.

அடுத்தது 'வினைசெயல்வகை' யில் இரண்டாம் குறள்


தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை



என்ன அழகான குறள்..ஒன்றே முக்கால் அடியில்..ஒரே மாதிரி சொல் வருவதெனில்..அது வள்ளுவனின் சொல்வன்மையா..தமிழின் அழகா..என சொல்லமுடியாது போட்டிதான் நடந்துள்ளது

நிதானமாகச் செய்ய வேண்டிய காரையங்களைத் தாமதித்துச் செய்யலாம்.ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது..என்னும் பொருள் படும் அருமையான குறள் இது.

அடுத்த இடுகையில் சந்திப்போம்.

6 comments:

Chitra said...

நிதானமாகச் செய்ய வேண்டிய காரையங்களைத் தாமதித்துச் செய்யலாம்.ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது..என்னும் பொருள் படும் அருமையான குறள் இது.


......காலத்தால் அழியாத பொன்மொழி இது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சித்ரா

ஹேமா said...

நீங்கள் தேர்ந்தெடுக்கும் குறள்கள் எல்லாமே வாழ்வியல்.அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

தங்கராசு நாகேந்திரன் said...

மிக அருமை அய்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி தங்கராசு நாகேந்திரன்