Wednesday, December 14, 2011

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்க தமிழக சட்டசபை சிறப்பு தீர்மானம்




முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 வரை உயர்த்தும் வகையில் எதிர்காலத்தில் அணையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமையை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்றும் அந்த தீர்மானத்தில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீரை 120 அடியாக குறைக்க கேரள சட்டப்பேரவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இந்த அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இன்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. பகல் 11 மணிக்கு சபை கூடியதும் மறைந்த அமைச்சர் கருப்பசாமி, எம்.எல்.ஏக்களுக்கு அஞ்சலி செலுத்தி 15 நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடியவுடன் முதல்வர் ஜெயலலிதா முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக சிறப்புத் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

அதில், முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை ஒருபோதும் விட்டுத்தர முடியாது. அணையில் 142 அடி நீரைத் தேக்க கேரள பாசன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். நீர் மட்ட அளவை 152 அடி வரை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு கூறியுள்ளது.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் முப்போகம் விளைய அணை நீரை 152 அடியாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இதற்கு கேரளம் தடையாக இருக்கக் கூடாது, தமிழகத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

அணைப் பகுதியில் பெரும் பீதியும் அச்சமும் நிலவுவதால், அங்கு மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும் என்று சிறப்புத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

 இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் எடுக்கும் முடிவுக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

3 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

ரிஷபன் said...

எப்படியோ நல்லது நடந்தா சரி.

காஞ்சி முரளி said...

ஓகே...!