Wednesday, December 21, 2011

முல்லை பெரியாறு....கேரளாவிற்கு ஆதரவா மைய அரசு..




இரண்டு மாநிலங்களிடையே மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தும் வரும் நிலையிலும் மைய அரசு அளவிற்கு அதிகமாக மௌனம் சாதித்து வருகிறது.

தமிழக விவகாரங்கள் விஷயத்தில்..இலங்கை தமிழர் பிரச்னையில் மைய அரசு மௌனமாய் இருந்தது போலவே இப்போதும் இருந்து வருகிறது.ஒருவேளை தமிழகம் இந்திய மாநிலங்களில் ஒன்று என்பதை மறந்துவிட்டார்களா..எனத் தெரியவில்லை..

அதே சமயம் நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்த்தால்..மத்திய அரசு கேரளா வைக்கும் கோரிக்கைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றி வருவதாகவேத் தெரிகிறது.

2006ல் உச்ச நீதி மன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்..என தீர்ப்பு வழங்கிய போதும்...அதை சுட்டிக்காட்டாத மைய அரசு..சுற்றுச் சூழல் அமைச்சர் கேரளாவில் புது அணைக்கட்ட இடம் ஆய்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளதை அறிந்தும் மௌனம் சாதித்தது.தமிழர்களால் வெறும் வறட்டுத் தவளைகளாய் கத்தத்தான் முடிந்தது.

இந்நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு..பல சோதனைகளை நடத்தி வருகிறது.இவர்களின் அறிக்கை ஃபெப்ருவரி மாதம் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்த சட்ட நடைமுறைகளை மீறும் வகையில்..பேரழிவு ஏற்படும் என, அவசரக் கால திட்டம் ஒன்றைத் தயாரிக்க பிரதமரைஅணுகியுள்ளது கேரளா .பிரதமர் தேசிய இயற்கை பேரழிவு நிர்வாகம் என்ற அமைப்பிற்குத் தலைவர்.அந்த பொறுப்பில் நிபுணர் குழுவை பிரதமர் நியமித்துள்ளார்.இது பிரதமரின் ஒரு கண்ணில் வெண்ணெய்..மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது ..ஒவ்வொரு தமிழனையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

காவிரி பிரச்னையிலும் உச்ச நீதி மன்ற ஆணையை கர்நாடகம் மதிக்கவில்லை..மைய அரசு கண்டுக் கொள்ளவில்லை.
அதே நிலைதான் இப்போதும்.

கேரளா ..புது அணை கட்டும் விவகாரத்தில் பிடிவாதமாக உள்ள நிலையில்..இரு மாநில முதல்வர்களும் சேர்ந்து பேச வேண்டும்..என்ற கோரிக்கை வீண்தான்..

தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்..ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும்..தமிழர்கள்..கட்சி வித்தியாசத்தை மறந்து ஒன்று பட்டு நிற்க வேண்டிய நேரம் இது.

மாநிலத்திற்கு பங்கம் ஏற்படாத வகையில்..தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று பட வேண்டும்..இல்லையேல் வரலாறு அவர்களை மன்னிக்காது.

முடிந்தால்..அனைத்து தமிழக எம்.பி.க்களும் ராஜினாமா என்ற முடிவை எடுக்கலாம்.

பல்வேறு காரணங்களுக்காக தமிழக நலனை மையமாகக் கருதி ராஜினாமா செய்த சி.எஸ்., அழகேசன், வாழப்பாடி அவர்களை இத் தருணத்தில் நினைவில் கொள்வோம்.