Monday, December 19, 2011

படிக்க வேண்டிய தலையங்கம்..




தினமணியில் வெளியாகும் பல செய்திகளில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும்..'விரயம்' என்ற தலைப்பில் வந்துள்ள இந்த தலையங்கம்..நேர்மையாகவே எழுதப்பட்டதாகத் தோன்றுவதாலும்..அனைவரும் இதை படிக்க வேண்டும் என நான் நினைப்பதாலும்..அதை அப்படியே கீழே தந்துள்ளேன்.

"உழலை அகற்ற வலுவான லோக்பால் மசோதா தேவை என்று கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
 இந்த மசோதா விரைவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மனதில்கொண்டு அறிவிக்கப்படுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருந்தாலும், இதுகுறித்து யாரும் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
 உணவு என்பது எல்லாருக்கும் இன்றியமையாத் தேவை. குறிப்பாக, ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் மிகமிக அவசியம். சுமார் 75 விழுக்காடு குடும்பங்கள் பயனுறும் என்று எதிர்பார்க்கப்படுகிற உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தக் கட்சி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ளும். வாக்குகள் கிடைக்காது. ஆதரித்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடும்.
 ஆகவே, அரசியல் கட்சிகள் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கின்றன. இந்த மெüனத்துக்கும் காரணம் இருக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற கருத்தாகவும் இருக்கலாம். எதிர்க்கட்சிகளின் இப்போதைய ஆயுதம் லோக்பால் மசோதா என்பதால் உணவுப் பாதுகாப்பு மசோதா அடக்கி வாசிக்கப்படுகிறது.
 அரசியல் கட்சிகள் ஏதும் வாய் திறக்காவிட்டாலும், தற்போது மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ள உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் இந்தியாவுக்கு மேலும் நிதிச் சுமைதான் அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
 முதற்கட்டமாக உணவு மானியத் தொகை தற்போதுள்ள ரூ. 63,000 கோடியிலிருந்து ரூ. 95,000 கோடியாக உயரும். மேலும், உணவு தானிய உற்பத்தியை 5.5 கோடி டன்னிலிருந்து 6.1 கோடி டன்னாக உயர்த்தவும் வேண்டும். இதை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி செலவிட அரசு திட்டமிடுகிறது.
 ஏற்கெனவே, பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது என்பதும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்துகொண்டே போகிறது என்பதும் பொருளாதாரம் தெரியாதவர்களும்கூட புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு வெளிப்படையாக இருக்கிறது. இந்த நிலையில் இத்தகைய பெரும் நிதிச் சுமையை மத்திய அரசு தாங்குமா என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் எதிர்பார்க்கும் உணவு உற்பத்தி நிகழுமா என்ற அச்சமும் சேர்ந்தே எழுகிறது.
 மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி சென்ற ஆண்டில் 337 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது என்றால், இந்த ஆண்டு 369 லட்சம் ஏக்கராக அது அதிகரித்துள்ளது. அதிலும்கூட அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த சிறிய சாகுபடிப் பரப்பு அதிகரித்ததால் ஏற்படக்கூடிய பலனை, வெள்ளத்திற்காக கொடுத்தாக வேண்டியதாகிவிடும். இதேபோன்ற நிலைமைதான் பருப்பு தானிய வகைகளிலும். இன்னும் சொல்லப்போனால், பருப்பு தானிய வகைகளில் சாகுபடி பரப்பு சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைந்திருக்கிறது.
 கோதுமை சாகுபடி பரப்பிலும் பெரிய சாதனை அளவை எட்டிவிடவில்லை. புவிவெப்பம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் குறிப்பிடுகையில், இந்தியாவின் வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தாலும் 6 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார். புவிவெப்பத்தைக் குறைக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில், இத்தகைய ஆபத்து இந்தியாவுக்கு காத்திருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது.
 இவ்வாறாக வேளாண் பாதுகாப்பு இல்லாத சூழலில் உணவுப் பாதுகாப்பு என்பது எவ்வாறு சாத்தியம்? மத்திய அமைச்சகத்தின் கணக்குப்படி உணவு உற்பத்தியில், எல்லாப் பயிர்களையும் சேர்த்து 3 மில்லியன் டன் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
 வேளாண் துறையில் 100 விழுக்காடு அன்னிய முதலீட்டை அனுமதித்துவிட்டு, மரபீனி காய்கறி, பயிர்களுக்கும் அனுமதி அளித்துவிட்டு, உற்பத்தியைப் பெருக்குங்கள் என்று விவசாயியிடம் சொன்னால் அவர் என்னதான் செய்வார்? மத்திய அரசு வேளாண்துறையில் உற்பத்தியை முடுக்க முதலீடு செய்யும் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் விவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை. இந்தத் தொகை பல வகைகளில் பெரும் நிறுவனங்களுக்கே நேரடியாகப் போய்விடும். சில இனங்களில் வங்கிக் கடனுதவி, கடனுக்குத் தள்ளுபடி என்று இந்தத் தொகையை முழுவதும், உண்மையான விவசாயியைத் தவிர, ஏனைய எல்லாரும் அனுபவித்துப் பயனடைவர்.
 வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்ப அட்டைக்கு ஒரு நபருக்கு 7 கிலோ உணவு தானியமும் மற்ற குடும்ப அட்டைகளுக்கு ஒரு நபருக்கு 3 கிலோ உணவு தானியம் வீதமும் வழங்கப்படும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இவை ரூ.3 அல்லது ரூ.2 விலையில் விற்பனை செய்யப்படவும் உள்ளது.
 மிகக் குறைந்த விலையில், அல்லது இலவசமாக உணவுப் பொருளை வழங்கினால் எல்லா மக்களும் பயன்பெறுவார்கள் என்பது தவறான கருத்து. இதற்கு தமிழ்நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். 20 கிலோ இலவச அரிசி திட்டத்தால் உண்மையான ஏழைகள் பயன்படுகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லாருக்கும் இலவசமாகக் கொடுப்பதால், அது கடத்தப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியை தமிழக மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தியிருந்தால் கடத்தலுக்கு அரிசி கிடைத்திருக்காதே? பெரும்பாலான அரிசிக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் அல்லது அரிசி விலை குறைந்திருக்கும். ஆனால் அவ்வாறாக நடக்கவில்லையே, ஏன்?
 மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகவும், தேர்தலில் வாக்குகளைப் பெறவும் முறையான பயனளிப்பு இல்லாத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் நிதிச் சுமை ஏறிக்கொண்டே போகுமே தவிர, பொருளாதாரம் வளர்ச்சி அடையாது!"


4 comments:

hitechramesh said...

In our country without any longterm goals our political leaders doing anything and everything for political gains only...
They first let our agricultural fields to SEZ'.. for their gains..
After destroying agriculture they going for food sefety...again for their gains...
Like in TN...Both the DMK's totally destroy our river's for sand theft...

Then they go for Rain water Harvesting...........what a fool's
we are...

வலையுகம் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே

உணவு சேமிப்பு கிடங்கு அவசியம் தான் ஆனால் அரசு அதனை பயன்படுத்தும் விதம் கடந்துகால நிகழ்வுகளை அவதானிக்கும் உண்மைநிலை கவலையளிக்கிறது உணவு கிடங்களில் திறந்த வெயியில் மெற்தளம் இல்லாமல் வைத்திருக்கிறார்கள் மழையில் நனைந்து நாசமா போன தனியங்கள் மட்டும் பல மில்லியன் டன்.

5 வருடங்களுக்கு முன் பீகாரில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது இவர்கள் உணவு கிடங்கிலிருந்து தானியங்களை வழங்கு மறுத்து அரசாங்க கையிருப்பில் இவ்வளவு மில்லியன் டன் தானியம் இருந்தே ஆக வேண்டும் என்று வரட்டு புள்ளி விபர மதிப்பீடுகளை சொல்லிக் கொண்டு இருந்த கொடுமையும் நடந்தது

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான தகவல்.
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.