ஏதோ இரண்டு நாடுகள் மோதிக் கொள்வதைப் போன்ற நிலையை கேரளா ஏற்படுத்தி விட்டது. முல்லைப் பெரியாறு
அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண உதவ வேண்டும் என்று பிரதமரிடம் திமுக தலைவர்
கருணாநிதி மனு கொடுத்துள்ளார்.
சென்னை வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை பிரதமரை, திமுக தலைவர் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.
அப்போது ஒரு மனு ஒன்றை அவர் அளித்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஏதோ இரு நாடுகளுக்கு இடையிலான மோதலைப் போல தமிழகத்திலும்,
கேரளாவிலும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு முக்கியக் காரணம் கேரள அரசுதான்.
இரு மாநில மக்களும் இரு நாட்டு மக்களைப் போல மோதிக் கொண்டுள்ளனர். இந்த நிலை நிறுத்தப்பட வேண்டும்.
கேரள அரசு தொடர்ந்து அணை குறித்தும், இரு மாநில மக்களுக்கிடையே பகைமையை அதிகரிக்கும் வகையில்
பேசி வருகிறது, செயல்பட்டு வருகிறது. கேரளாவில் காலம் காலமாக வசித்து வரும் தமிழர்களை அங்கிருந்து
வெளியேறச் செய்யும் நிலையை அது உருவாக்கி விட்டது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உணர்ச்சிப்பூர்வமான
கொந்தளிப்பு ஏற்பட்டு விட்டது. அதுதான் தற்போது போராட்டங்களாக அங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலை உடனடியாக மாறாவிட்டால், குறைக்கப்படாவிட்டால் நிரந்தர காயமாக அது இரு மாநில உறவிலும்
படிந்து விடும் அபாயம் உள்ளது. இரு மாநில மக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவு பெரிதாகி விடும் வாய்ப்பு உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தின் முன்பு உள்ளது. எனவே அணையின்
நீர்மட்ட அளவைக் குறைக்க கேரள அரசு எந்த நடவடிககை எடுத்தாலும் அது கோர்ட் அவமதிப்பாக அமையும்,
நீதித்துறைக்கு விடப்படும் மாபெரும் சவாலாக அமையும். தமிழக மக்களுக்கு அநீதி இழைப்பதாக அமையும்.
தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையை பலவிதங்களிலும் பலப்படுத்திய பின்னரும், அணையின்
நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தாமல் தொடர்ந்து 136 அடியாகவே வைத்திருக்கிறது கேரள அரசு.
தற்போது அதை மேலும் குறைத்து 120 அடியாக குறைக்க முயற்சிக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற உத்தரவுகளை கேரள அரசு சற்றும் சட்டை செய்யாமல் உள்ளது.
கேரள அரசு தனது நிலையில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்கள்
வறட்சிப் பிரதேசமாக மாறும் அபாயம் உள்ளது. பாலைவனங்களாக அவை மாறி விடும்.
எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கூறியபடி 142 அடியாக
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துமாறு கேரள அரசை வலியுறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை
கேரளம் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கருணாநிதி.
(தகவல்-தட்ஸ்தமிழ்)
1 comment:
தகவலுக்கு நன்றி.
Post a Comment