Saturday, June 28, 2014

குறுந்தொகை -25




(தலைவன் தலைவியை மணம்செய்து கொள்ளாமல் இருக்கிறான்.இதனால் வருந்திய தலைவி தோழியிடம் முறையிடுவது)


இப்போதெல்லாம் லிவிங்  டுகெதெர் என்று திருமணத்திற்கு முன் ஒன்றாக வசிக்கும் கலாச்சாரம் சிறிது சிறிதாக பரவி வருகிறது.அப்படி ஒன்றாக வாழ்ந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரிந்தால்...பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்.ஒன்றாக வாழ்ந்ததற்கு சான்றோர் யாருக்கும் தெரியவும் தெரியாது எனில் நிலைமை இன்னும் மோசம்.இதேநிலைதான் இன்றைய குறுந்தொகை பாடலில் காண்பது.

தலைவி கூற்று -  குறிஞ்சி திணை பாடலாசிரியர் கபிலர்

பாடல் -
 
யாரு மில்லைத் தானே கள்வன்
 
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
 
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
 
ஒழுகுநீ ராரல் பார்க்கும்

குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.

                              -கபிலர்.

    உரை -
தலைவன் என்னை களவில் மணந்த போது பெரியவர்கள்(சாட்சிகள்) யாரும் இல்லை. ஒடும் நீரில் உண்ண ஆரல் மீனின் வரவை எதிர்நோக்கி தினையின் அடியைப் போன்ற சிறு பசும்காலை உடைய நாரையைத்தவிர,..அப்போது அவன் கூறிய உறுதிமொழி(மணப்பேன் என்னும் உறுதிமொழி)யிலிருந்து தப்பப்பார்த்தால் என்னால் என்ன செய்யமுடியும்? ’

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான விளக்கம்! பகிர்வுக்கு நன்றி!