Sunday, January 9, 2011

குறள் இன்பம் -7

வள்ளுவனின் சொல் விளையாட்டு, சொல்லழகுத் தொடரில் இன்று நான்கு குறள்கள்

வினைசெயல்வகை அதிகாரத்தில் ஏழாம் குறள்
செய்..செய்..செய்..என மூன்று முறையும் செய்வினை,அவ்வினை என சொல்லழகோடு வரும் குறள்

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்

ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச் செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்..
எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதைப்பற்றி முழுதும் தெரிந்த பின்னரே ஈடுபட வேண்டும்..என்ன ஒரு அர்த்தம் பொதிந்த குறள்

அடுத்து அவை அஞ்சாமை அதிகாரத்தில் முதல் குறள்..வகையறிந்து, தொகையறிந்து..ஆகா..என்ன சொல்லழகு..

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராய் இருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்
என்ற பொருள்.

அடுத்து நாடு அதிகாரத்தில் ஒன்பதாம் குறள்..ஐந்து இடங்களில் நாடு என வருவது சிறப்பு

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு

இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்..
இப்போது சொல்லுங்கள் இந்தியா சிறந்த நாடுதானே..இயற்கை அன்னை நமக்கு வாரி வழங்கியுள்ளாள். ஆனால் நமக்குத்தான் போற்றத் தெரியவில்லை.

அடுத்து பொருள் செயல்வகை அதிகாரத்தில் முதல் குறள்..பொருள் என்பது நான்கு இடத்தில் குறளை அலங்கரிக்கிறது

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்

மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு ஏதுமில்லை ..எவ்வளவு அர்த்தமுள்ள குறள்
இதைத்தான் கண்ணதாசன் சுருக்கமாக..'பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா' என்றார் எனலாம்.

2 comments:

Chitra said...

மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு ஏதுமில்லை ..எவ்வளவு அர்த்தமுள்ள குறள்
இதைத்தான் கண்ணதாசன் சுருக்கமாக..'பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா' என்றார் எனலாம்.


.....குறள் இனிமையுடன், கண்ணதாசன் பாடலையும் சேர்த்து தந்து இருக்கும் விதம் அருமை.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்