ஒரு அழகிய பெண்..தன் அழகை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என மேலும் செயற்கையாகவும் அழகு செய்து கொள்வாள்.அதுவும் கணவனின் பாராட்டை..அவள் அதிகம் எதிர்பார்ப்பாள்.அப்படிப்பட்ட ஒரு பெண்..கணவனை சிறிது காலம் பிரிய நேரிடுகிறது.அந்நிலையில்..தன் அழகு கணவன் இல்லாமல் வீணாகிறது என வருந்துவாளாம்.இப்பாடல் அதையேக் குறிக்கின்றது
(தலைவன் பிரிவினை தலைவியால் தாங்கமுடியாது என கவலை அடைந்த தோழியிடம் தன் அழகு வீணாவதை தலைவி உரைப்பது)
பாலை திணை - பாடலாசிரியர் வெள்ளிவீதியார்
பாடல்=
கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமைக் கவினே.
-வெள்ளிவீதியார்
உரை-
நல்ல பசுவின் இனிமையான பாலானது, அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல்,கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், தரையில் சிந்தி வீணானது போல,எனது மாந்தளிர் போன்ற பேரழகு எனக்கு பயந்து நிற்பதாகாமலும், என் தலைவனுக்கு இன்பம் தராமலும் பசலை படர்ந்து ரசிக்கப்படாமல் இருக்கும்.
(தலைவன் பிரிந்து சென்றதால் தலைவியின் மாந்தளிர் உடலழகு பசலைப் படர்ந்து நிறம் இழந்தது)
பசுவின் பால் கன்றும் உண்ணாது..கறக்கும் பாத்திரத்திலும் விழாது..தரையில் வீணாவது போல அழகு யாருக்கும் பயனின்றி வீணாகிறதாம்.எப்படிப்பட்ட ஒரு உவமை