Friday, February 5, 2010

மேடையில் பேசுவது எப்படி..? - 2



முதல் பகுதி

நல்ல கருத்துகள் சொற்பொழிவுக்கு அவசியம்.நாம் பேசுவது மக்கள் உள்ளத்தில் பதிய வேண்டுமானால்..அவை நல்ல கருத்துகள் கொண்டதாய் இருக்க வேண்டும்.பண்பற்ற..பயனில்லா சொற்களை மறந்தும் பேசக் கூடாது.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

பயனற்றதும்..பண்பற்றதுமான சொற்களை பலர்முன் சொல்வது மகிழ்ச்சியைக் குலைத்து..நன்மையை மாய்க்கும்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

பேச்சுக்கு கருத்துகளை எப்படி அமைப்பது.அதற்கு ஒரு வழி..

முதலில்..இன்று நாம் எதைப்பற்றி பேச வேண்டும்..என்னென்ன பேச வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.முதல் கேள்விக்கான விடை தலைப்பாகவும்..அடுத்தக் கேள்விக்கான பதில் கருத்தாகவும் அமையும்.

அதை ஒரு சிறு அட்டையில் குறித்துக் கொண்டு 1, 2 என இலக்கமிட்டு முறைப்படுத்தி மனனம் செய்துக் கொள்ள வேண்டும்.பின் மேடை ஏறியதும் மனப்பாடம் செய்ததை வரிசைப் படுத்தி பேச வேண்டும்.இது வெற்றிகரமான பேச்சாக அமையும்.ஆரம்ப பேச்சாளர்கள்..இரண்டு அல்லது மூன்று கருத்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டு..ஐந்தாறு நிமிடங்களுக்குள் பேசி நிறுத்திக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் இது நமக்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும்.

குறிப்புகள் எடுக்கையில் பேச வேண்டிய கருத்துகள் ஒவ்வொன்றும் மூன்று அல்லது நான்கு சொற்களுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.அதுதான் மனதில் பதியும்.மனதில் பதிந்ததைப் பேசி முடித்ததும்..நம் குறிப்பை எடுத்து..எல்லாம் பேசி விட்டோமா என்று பார்க்கலாம்.ஏதேனும் விட்டுப் போயிருந்தாலும் பரவாயில்லை.ஏனெனில் நம் பேச்சை கேட்டவர்களுக்கு அது தெரியப் போவதில்லை.
தொடக்கப் பேச்சாளர்கள்..எழுதியிருக்கும் குறிப்பை இடையிடையே பார்த்து பேசலாம்..ஆனால் இதுவே பழகிவிடக் கூடாது.

மேடைப் பேச்சில் எழுதிப் படிக்கிறார்களே பொறுப்பானவர்கள் என்று கேட்கலாம்..பொறுப்பான பதவியில் உள்ளவர்கள்..வேறு ஏதும் பேசிவிடக் கூடாதே என்பதற்காக கையாளும் முறை இது.ஆனால் பேச்சாளர்களுக்கு ஏற்றதல்ல இது.பார்த்து படிப்பது படிப்பதாகவே இருக்குமேயன்றி..அது பேச்சாக இராது.அதில் உணர்ச்சியும் இராது..

இப் பழக்கம் உள்ளவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர்களாக ஆகவே முடியாது.

4 comments:

goma said...

மைக்குக்கும் எனக்கும் காது கேட்காத காத தூரம்......

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
மைக்குக்கும் எனக்கும் காது கேட்காத காத தூரம்......//

:-)))

goma said...

உண்மைதான்
என் பேனா பேச ஆரம்பித்தால் கிழி கிழி என்று கிழிக்கும்..,
.நா பேச நினைத்தால் ,மூடிய பேனா மாதிரி கம்முன்னு கிடக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இத் தொடரைப் படியுங்கள்..பின்..பேனாவை மூடி வைத்துவிட்டு பேசத் தொடங்கி விடுவீர்கள் goma