Wednesday, March 31, 2010

நினைவில் நிற்கவேண்டியவை

அவள் அதி புத்திசாலி பெண்..தனக்கு எல்லாம் தெரியும் என்று சற்று கர்வமும் உண்டு..திருமண வயதை எட்டியதும்..தந்தை அவளுக்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்தார்.ஆனால் பெண்ணோ..'என் அறிவிற்கு..இந்த உலகில் மிகவும் உயர்ந்த ஒருவரைத்தான் நான் மணப்பேன்..'என்று தந்தைப் பார்த்த வரனை புறக்கணிக்க..தந்தையும்..'சரி உன் விருப்பப்படி ஒருவனைத் தேர்ந்தெடுத்துச் சொல்' என்றார்.

மகள் தேட ஆரம்பித்தாள்..உலகில் உயர்ந்த ஒருவர் வேண்டும்..அது யாராய் இருக்கக் கூடும்..என எண்ணியவளுக்கு..அந்நாட்டு இளவரசர் பட்டத்து யானை மீது பவனி வரும் காட்சி பட்டது.'ஆகா..இவர்தான் உயர்ந்தவர்..எனக்குத் தகுதியானவர்' என்று எண்ணிய போது..யானை மீது வந்த இளவரசர் கீழே குதித்து..எதிரே வந்த சந்நியாசி ஒருவர் காலில் விழுந்தார்.

அப்படியெனில்..இந்த சந்நியாசியே உயர்ந்தவர்..என அவள் எண்ணியபோதே..அந்த சந்நியாசி பக்கத்தில்..ஒரு ஆலமரத்தினடியில் இருந்த கடவுளை வணங்கினார்.

அப்போது அந்த சந்நியாசியைவிட அந்த சிலை உயர்ந்தது என எண்ணினாள்.அந்த நேரம் ஒரு நாய் வந்து..தன் ஒரு காலைத் தூக்கியது..சிறுநீர் அபிஷேகம் சிலைக்கு..

ஆகா..இந்த நாயே உயர்வானது என நினைக்கும் நேரத்தில்..ஒரு சிறுவன் கல்லால் நாயை அடித்து விரட்ட..அந்த சிறுவனே உயர்ந்தவன் என நினைத்தாள்.

அப்போது அந்த சிறுவனை ஒரு இளைஞன் வந்து.."ஏன் அந்த நாயைக் கல்லால் அடிக்கிறாய்?' என கண்டித்தான்.

உடன் அவள் அந்த இளைஞன் தான் உயர்ந்தவன் என தீர்மானித்து தந்தையிடம் சொல்ல..அவன் வேறு யாருமல்ல.முதலில் தந்தைப் பார்த்த மாப்பிள்ளையே என அவள் அறியவில்லை.

உயர்ந்தவர் ..தாழ்ந்தவர் என்பதை யார் தீர்மானிப்பது..அதற்கான அளவுகோல் என்ன..

ஒரு கோவில் திருவிழா...புகழ் வாய்ந்த அக்கோவில் தேர்த்திருவிழா..ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியுள்ளனர்...நூறு அடிகளுக்கும் மேலான உயரத் தேர்.வடம் பிடித்து நூற்றுக்கணக்கான நபர்கள் இழுக்கின்றனர்.தேர் நகர்கிறது..ஆனால் அது நகர ஆதாரமான அச்சாணி சமர்த்தாக வாயை மூடிக் கொண்டிருக்கிறது. ஆணவத்தோடு..தேரோட்டத்திற்கு நான் தான் காரணம் என ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.ஆகவே இங்கு உயர்ந்தது அச்சாணியே..தேர் அல்ல..இதையே வள்ளுவர்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்கிறார்.

செய்யும் செயல்களே எதையும் தீர்மானிக்கிறது..

Tuesday, March 30, 2010

வசந்தபாலனுக்கு ஒரு மனம் திறந்த மடல்



(புகைப்படம்- நன்றி..சென்னை ஆன்லைன் .காம்)

இயக்குநர் வசந்த பாலனுக்கு,

வணக்கம்.

இன்னமும் வெயிலின் தாக்கம் தீராத நிலையில்..அங்காடித் தெரு சென்றேன்..

அடடா..என்னவொரு அற்புதமான அழகான தெரு..செதுக்கி..செதுக்கி..நகரசபையாலும்..நீர்வளத்துறையாலும்,தொலைபேசித் துறையினராலும்..தோண்டி அப்படியே போட்டுச் சென்ற தெருவாய் இல்லாமல்..வழ வழ என வழுக்கிச் செல்லும் தரமான தெருவாய் உள்ளது.

இன்னொரு உண்மைச் சொல்வதானால்..எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடோடு செயல்படும் இணைய தள பதிவர்கள் அனைவரையும் கிட்டத்தட்ட ஒருமித்த கருத்துடன் எழுதவைத்த சாதனையை உங்கள் அங்காடித் தெரு செய்துள்ளது.

இதுவரை எந்த ஒரு திரைக்கதை ஆசிரியனும்..இயக்குநரும் தொடாத களம் இது.

பல சமயம் இது போன்ற கடைகளுக்கு விஜயம் செய்துள்ள நாம் ..வாங்கும் பொருளிலேயே கவனம் செலுத்தியுள்ளோம்.இனி நம்மை கவனிக்கும் விற்பனைப் பெண்ணையோ ..பையனையோ கவனிக்க வேண்டும்..அவர்கள் கண்கள் சொல்லும் ஆயிரம் கதைகளை..என்றே தோன்றுகிறது.

திரைப்படத்தில்..சிறு வயதில் வேலைக்கு வந்து..நாள் முழுதும் நின்று..நின்று..கால்கள் பாதிக்கப்பட்டு கடை வேலையை இழந்த நபரின் கால்களைப் பார்க்கையில்..விழியோரம் கண்ணீர் கரை தட்டுகிறது

தன்னைக் காதலிப்பவன் அவன் வேலையைக் காத்துக்கொள்ள..பொய் சொல்லி இவளை நான் காதலிக்கவில்லை என்று கூற..'அந்தக் கடவுள்தாண்டா சாட்சி..அந்தக் கடவுள்தாண்டா சாட்சி' எனக் கதறியபடியே..மேலேயிருந்து கீழே விழுந்து மடியும் பெண்...கரை தட்டிய கண்ணீரை..சற்று வெளியேற்றுகிறாள்.அருமையான ஒரு நடிப்பு..ஒரு துணைப் பாத்திரமிடமிருந்து..

தன் அண்ணன் வேலை செய்யும் கடையின் பையை..கொண்டு செல்லும் தம்பதியரைத் தொடர்ந்துச் சென்று..'என் அண்ணன் வேலை செய்யற கடை..அந்தப் பையை தர்றீங்களா?" ன்னு..கேட்டு வாங்கி(நம்ம சென்னையானா போம்மா..போ..என விரட்டியிருப்பர் அந்த தம்பதிகள்)..அந்தப் பையை மார்போடு இணைத்து ஓடும் சிறுமி..கண்ணீரை முழுதும் நம்மிடமிருந்து வெளியேற்றுகிறாள்.

குள்ளனின் மனைவி..தனக்குக் குழந்தை தன் கணவன் போல பிறந்திருப்பதுக் கண்டு பேசும் வசனங்கள்..கூசாமல் வசை பாடும் நபர்களுக்கு ஒரு சாட்டையடி.



தன் தங்கையத் தேடி நாயகி..நாயகனுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் செல்வதும்..அவள் கௌஹாத்தி போகையில் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவிலும்.திரும்புகையில் ஷேர் ஆட்டோவிலும் நாயகி வருவது போலக் காட்டுவது..இயக்குநர்..எந்த ஒரு சின்ன இடத்திலும் கவனக் குறைவாக இல்லை என்பதைக் காட்டுகிறது.

பழையத் துணியை தோய்த்து..தேய்த்து..புதிது போல செய்து பத்து ரூபாய்க்கு விற்பவன்.......எப்படி இப்படி வசந்தபாலன்!!!!!!

இஸ்லாமிய நண்பர், கண் தெரியாதவர், பிச்சைக்காரன் போல அனைத்து பாத்திரங்களும் மனதில் நிற்பது..இயக்குநருக்கு வெற்றி.

'நீ யாருன்னு கேட்டா...சிரிச்சேன்' "விக்கத் தெரிஞ்சவந்தான் வாழத் தெரிஞ்சவன்'..அவன் என்.....கசக்கினான்..போன்ற இடங்களில் ஜெயமோகன் தெரிகிறார்.

கால்களை இழந்து நாயகி..மருத்துவ மனையில் படுத்திருக்கும் போது...காப்பகத்தில் சேர்க்க வருபவர்கள்..இவளிடமும் வருவார்கள்..அப்போது கணவன் நான் என நாயகன் சொல்வான்..என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த போது...சற்றென..நாயகன் 'நாம கல்யாணம் பண்ணிப்போம்' என சொல்லும் போது..அதில் கூட சின்ன டுவிஸ்ட்.

அண்ணாச்சியாய் நடித்தவர்.(பழ.கருப்பையா).இனி அரசியல் பேசாமல்..நடிப்பில் கவனம் செலுத்தலாம்.மேனேஜராய் நடித்த வெங்கடேஷ் கச்சிதம்.

ஆமாம் கதையில் குறையே இல்லையா? சிறு சிறு குறைகள் ஆங்காங்கு இருந்தாலும்...நிறைகள் அதிகம் இருப்பதால் மறக்கப்படுகின்றன.ஆனாலும்..திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு சிறிது தொய்கிறது..அதில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்தின் ஆரம்பத்தில் கவிதை பாடும் கால்கள்...கடைசியில்..உஷ்..மனம் கனக்கிறது.

இதுபோல ஒரு கிளைமாக்ஸ் தேவையா? என்று சிந்திக்கையில்...

தேவை என்றே தோன்றுகிறது...சினிமேடிக்...என்று சொல்லமுடியாது. ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது.இனி மறைமுகமாக உழைத்து முன்னுக்கு வருவார்கள் வாழ்வில் எனக் கொள்ளவேண்டும்.

150 கோடி பட்ஜெட் படத்தை சன் டீ.வி.க்கு தாரை வார்த்துவிட்டு..குறைந்த பட்ஜெட்டில் இது போன்ற அருமையான படத்தை எடுத்த ஐங்கரன்..கருணாமூர்த்தி,அருண் பாண்டியன் பாராட்டுக்குரியவர்கள். இனி இது போன்று பல படங்கள் அந்த நிறுவனத்திலிருந்து வரட்டும்.

மொத்தத்தில்..படம்..அருமை..என்று சொல்வதைவிட..அதிகப்படியான பாராட்டுக்கு தமிழில் வார்த்தையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்..

கிடைத்ததும்...அஞ்சலிக்கும்,மகேஷுக்கும்,உங்களுக்கும்,ஜெயமோகனுக்கும் ,கலை இயக்குநருக்கும் தெரிவிக்கிறேன்..

அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்..

அன்புடன்

T.V.ராதாகிருஷ்ணன்

Monday, March 29, 2010

சாகுந்தலம் (நாட்டிய நாடகம் ) - 2



(முந்தைய காட்சிக்கு)

காட்சி - 2

(துஷ்யந்தனைக் கண்ட சகுந்தலையின் நிலை)

யாரடி இவன்..

வேட்டையாடும் வேடனா..

சிங்கம் பார்த்திருக்கிறேன்

காட்டிலும்..கனவிலும்..

பிடரிமயிரின் தோரணை

பிளந்த வாய்

கூரிய பற்கள்

பயங்கரப் பாய்ச்சல்

பயத்தின் மறு உருவம்..

ஆனால்..இவனோ..

நாய்..உடை..பாவனை..

அப்பப்பா...

இதுநாள் வரை

நான் கண்டதில்லை

இது போன்ற சிங்கத்தை..

இவன்..புள்ளிமானை

வேட்டையாட வரவில்லை..

இந்த..

மானையே

வேட்டையாட

வந்தவன்..


காட்சி - 3

(துஷ்யந்தன் சகுந்தலையைக் காதலிப்பதைத் தெரிவித்தல்)

பெண்ணே..!

மன்னன் துஷ்யந்தன் நான்

வெல்லாத போரில்லை

யாரிடம் சிறை போனதுமில்லை

பொல்லாத உன் கண்கள்

என்னை தோற்கடித்து

சிறை எடுத்ததுவே

வாழ்நாள் முழுதும்

உன்னருகே இருக்கவே

மனம் விழைகிறதே..!!

என்னை மணப்பாயா

மானே.... (என்றிட்டான்)

(பதிலுக்கு சகுந்தலை)

மன்னா..

என்னைப் பற்றிய

விவரமும் கேளும்

ராஜரிஷி விஸ்வாமித்திரர்

மேனகை

என் தந்தை தாய் ஆவர்

ஆயின் கன்வ மகரிஷியின்

சுவீகார புத்திரி ஆனேன்

என் பெயர் சகுந்தலை

என் மனமும்

எவ்வளவு தடுத்தும்

தங்களை நாடுகிறது

என் தாயின் அனுபவம்

முன்னே எச்சரிக்கிறது..

நான் தங்களை

மணக்க வேண்டுமாயின்..ஒரு

வாக்குறுதி தந்திட வேண்டும்

என் வயிற்றில்

தங்கள் வாரிசு

உருவாகுமாயின் - அதுவே

பின்னாளில்

நாடாள வேண்டும்..

அதற்கு ஒப்புதல்

அளித்தீராயின்

தங்கள மணக்க

தடையேதும் இல்லை..

(என்றிட்டாள்)

மன்னனும் இசையவே

வேதங்கள் ஓத

நாதம் முழங்க

ஒன்ற வேண்டிய நாளில்

பஞ்ச பூத சாட்சிகளுடன்

காந்தர்வ மணம்

இனிதே நடக்க - மன்னனும்

தன் ராஜமுத்திரை மோதிரத்தை

அவளுக்கு அணிவித்து

மகிழ்ந்தனனே

(தொடரும்)

பதிவர் சந்திப்பு ஜோக்ஸ்

(சிரிக்க மட்டுமே..- சிந்திக்க அல்ல)

1) அந்த பதிவர் ஏன் கோபமாய் இருக்கார்
பிரிட்டானியா மாரி பிஸ்கெட் தரேன்னு சொல்லிட்டு..அவருக்குத் தெரியாம பார்லே மாரியா மாத்திட்டாங்களாம்

2)அந்த பதிவர் கையிலே என்ன கொண்டு வரார்?
மைக்தான்..தனக்கு இங்கே கொடுப்பாங்களோ ..மாட்டாங்களோன்னு வீட்ல இருந்தே கொண்டு வந்துட்டார்

3)இந்த பதிவர் சந்திப்பிலே எடுத்த முடிவுகள் உங்களுக்கு சம்மதமா..
சம்மதம்னு சொல்ல மாட்டேன்..அதே சமயம் சம்மதம் இல்லாமலும் இல்லை..எல்லாருக்கும் சம்மதம் இல்லேன்னா..கண்டிப்பா என் சம்மதத்தை யார் சம்மதத்தையும் கேட்காம விலக்கிக் கொள்வேன்.

4)ஏன் பதிவர் சந்திப்பு முதல் வரிசை காலியா இருக்கு
அதில் உட்கார்ந்தா ஜாதியைப் பற்றி எழுதிடுவாங்களோன்னு எல்லாருக்கும் பயம்

5)அந்த பதிவர் ஏன் எல்லோரையும் பஸ் ஏற்றிவிட்டு..கையெழுத்து வாங்கறார்
கடைசிவரைக்கும் அங்கே இருந்தார்னு பதிவு பண்ணதான்

6)தமிழ் வலைப்பதிவர் குழுமத்திலே சேர்ந்துட்டீங்களா?
முதல்ல நான் எழுதறது தமிழா ன்னு தெரியலேன்னு..சொல்லிட்டு..சேர்த்துக்க மாட்டேன்னுட்டாங்க..

7)பதிவர் சந்திப்பிலே கொடுத்த டீ யை நீங்க ஏன் குடிக்கல
தற்கொலை செஞ்சுக்கிட்டாலும் செஞ்சுப்பேனே தவிர யாசிச்சு டீ சாப்பிட மாட்டேன்

Sunday, March 28, 2010

சங்கமம்

தனித்திருந்தேன்

விழித்திருந்தேன்

பசித்திருந்தேன்

தற்கொலை முயற்சி செய்தேன்

கொள்வாரோ

கொடுப்பாரோ இல்லை

தீராத பசி

தீர்ப்பாரைத் தேடி

விழிகள்

Saturday, March 27, 2010

பதிவர் சந்திப்பு ஏமாற்றமே தந்தது..

கடந்த சில நாட்களுக்கு முன் சில பதிவர்கள்..சங்கம்/குழுமம் ஆரம்பிப்பது பற்றி 27 ஆம் நாள் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த நல்ல செய்தி..என்னைப் போன்ற பல பதிவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கக் கூடும்..உலக அளவில் உள்ள அனைத்து பதிவர்களும்..இந்தக் கூட்டத்திற்குப் பின் எடுக்கப்படும் முடிவுகளுக்காகக் காத்திருந்தனர்..இதுக் குறித்து இடப்பட்ட இடுகைகளின் பின்னூட்டத்தைப் பார்த்தாலே தெரியும்...

ஆனால் அன்றைய சந்திப்பு ஏமாற்றத்தையேத் தந்தது.முக்கியமாக இது போன்ற கூட்டத்திற்கு..கண்டிப்பாக நிகழ்ச்சியை நடத்திச் செல்ல ஒரு அனுபவமுள்ள கோ-ஆர்டினேட்டர் தேவை..அது இல்லாததால்..நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்பதே புரியாமல் இருந்தது.

மேலும்..வருகை புரிந்தவர்களின் பெயர் முகவரி வாங்கப்பட்டது...இதை வாங்கியவர்கள்..கூட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பதிவு செய்யவில்லை.இது போன்றக் கூட்டங்களில் மினிட்ஸ் எழுதப்பட வேண்டும்..

நேற்றையக் கூட்டத்தை பொறுத்தவரை..அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால்..கிட்டத்தட்ட 70 அங்கத்தினர் வந்திருந்த நிலையில்..சங்கம் ஆரம்பிக்க இருவரே எதிர்ப்பு தெரிவித்திருந்ததையும் பதிவு செய்துவிட்டு..இன்று சங்கம்...இந்த பெயர் வேண்டாமெனில்..இணைய பதிவாளர் பேரவை அமைக்க முடிவு செய்யப் பட்டது என்றும் பதித்திருக்கலாம்.

இப்போதாவது..கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள்..நடந்ததை பதிவு புத்தகத்தில் எழுதவும்..அடுத்தக் கூட்டத்தில் இது படித்துக் காட்டப் பட வேண்டும்..

இப்போது நடக்க வேண்டிய விஷயத்திற்கு வருவோம்..

ஒரு adhoc கமிட்டி அமைக்கட்டும்..கேபிள் பதிவில் குறிப்பிட்டிருந்தவர்களைத் தவிர.. மேலும் ஓரிருவர்..மொத்தம் 10க்கு அதிகமில்லாமல் கூடட்டும்..என்னுடைய சாய்ஸ் சிவராமன் மற்றும் வானம்பாடிகள் அந்தக் குழுவில் இருக்கட்டும்.

சங்கத்திற்கான விதிமுறைகள்..நோக்கம் ஆகியவற்றை அவர்கள் ஆலோசித்து..அவற்றை எழுத்தில் வடித்து சங்கத்தை பதிவு(register) செய்யலாம்..இதற்குக் குறைந்தது 7நபர்கள் வேண்டும்..(அதனால்தான் அட்ஹாக் கமிட்டி அமைக்கவேண்டியது அவசியம் ஆகிறது)

இதற்குப் பின் கூடி..நாம் நிரந்தரமாக நடத்திச் செல்பவர்களைத் தீர்மானிக்கலாம்..அவர்கள் சுழற்சி முறையில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படலாம்..

என் பதிவுகளில் அடிக்கடி சொல்வதை மீண்டும் சொல்கிறேன்..இணையப் பதிவர்கள் கருத்துகள்..வளர்ச்சி பிரம்மாண்டமாய் இருந்து வருகிறது..இதை உபயோகமான வழிகளில் செலவிடுவோம்.

Friday, March 26, 2010

சென்னை பதிவர் குழுமம்

நாளை பதிவர்கள் சந்திப்பு..கே.கே.நகர்.டிஸ்கவரி பேலஸில் மாலை நடைபெற உள்ளது.விவரம் இங்கு..

இணையதள பதிவர் குழுமம் என பொதுவாக இருக்கலாம்..இதில் சென்னைப் பதிவர்கள் மட்டுமின்றி..பதிவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் அங்கத்தினர் ஆகலாம்..அவர்களுக்கு அதற்கான அடையாள அட்டையையும் வழங்கலாம்..(சென்னை பதிவர் குழுமம் என்பதில் முதலில் சென்னை என்பது தேவையில்லை )..இணைய தள பதிவர் - சென்னை என்றிருக்கலாம்.. அதே போல இணையதள பதிவர்..(கோவை,ஈரோடு என அடுத்து ஊர் வரலாம்)

பதிவர்களிடமிருந்து மாதச் சந்தாவோ..வருடச் சந்தாவோ ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்வாகச் செலவுகளுக்கு வாங்கலாம்.அதைவிடுத்து..ஈரோடு பதிவர் குழுமம்,கோவை பதிவர் குழுமம் என நம் நண்பர்களையே பிரிப்பானேன். ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தினம்..ஏதேனும் நகரில்..பதிவர்கள் மகாநாடு நடத்தலாம்..அதற்கான தீர்மானத்தை அனைவரும் சேர்ந்து எடுக்கலாம்.

உதாரணமாக..கோவையில் அடுத்த பதிவர் மகாநாடு என்றால்..உள்ளூர் பதிவர்கள் விரும்பும் வண்ணம் அதை அனைவரும் சென்று நடத்தி சிறப்பிக்கலாம்..தாய் குழுமம் சென்னையில்..அதன் பொறுப்பில் இருப்பவர்கள் என ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவரை அல்லது இருவரை நியமிக்கலாம்.

விடுத்து..இப்படி நகருக்கு நகர் அவரவர்கள் குழுமம் அமைத்துக் கொண்டால்..ஒரு கட்டத்தில் பதிவரிடையே குறுகிய மனப்பான்மை வளர வழிவகுத்துவிடும்.

நாளுக்கு நாள்..இணையதளம் ஒரு பெரிய சக்தியாய் வளர்ந்து வருகிறது..அதை பெரிய அளவிலேயே அமைத்து..ஒரு மா பெரும் சக்தியாய் வளர்ப்போமே..

இந்த என் கருத்து பிடித்திருந்தால் தம்ப்ஸ் அப்பில் வாக்களியுங்கள்.

Thursday, March 25, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(26-3-10)

பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் தவறு..இதற்கு ஹால்திராம் அதிபர் பிரபுசங்கர் அகர்வாலே சரியான உதாரணம்.கோடீஸ்வரரான அவர் கொல்கத்தாவில் தங்களது புதுக் கடையை மறைக்கும் வகையில் இருந்த டீக்கடையை எடுக்கச் சொல்லி..மறுத்த டீக்கடைக்காரரை கூலிப்படையை வைத்து போட்டுத் தள்ள நினைத்தார்..இப்போது கம்பி எண்ணுகிறார்

2)உலகில் உள்ள புத்தகம் எல்லாம் தீக்கிரையாகப் போகிறது..உங்களால் பத்து புத்தகங்கள் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்றால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? என ஆஸ்கர் ஒயில்டிடம் கேட்கப்பட்டதாம்..அதற்கு அவர் இதுவரை நான் ஆறு புத்தகங்கள் தான் எழுதியுள்ளேன் என்றாராம்..

3)அண்ணாவிற்கு 'தென்னக பெர்னாட்ஷா' என்ற பட்டத்தை கல்கி கொடுத்தது நமக்குத் தெரியும்.அதுபோல தமிழ் நாட்டின் ஷேக்ஸ்பியர் என அழைக்கப்பட்டவர் நாடகத் தந்தை என அழைக்கப் பட்ட பம்மல் சம்பந்த முதலியார் ஆவார்.

4)மனிதனின் ஜாதகத்தைப் பார்த்து 'தோஷம்' இருக்கிறது என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்..ஆனால் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் கொடிமரத்தில் தோஷம் இருப்பதாகக் கூறி அதை மாற்றுவதுக் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறதாம் ஆலய நிர்வாகம்

5)சிவகாசியில் ஒரு விழாவில் கலந்துக் கொண்டு இரவு பத்து மணிக்கு காரில் திரும்பியவர்..விருதுநகர் பைபாஸ் சாலையில் ஒரு கார் விபத்துக்குள்ளாகிக் கிடக்க..இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து..தன் காரை நிறுத்தி அவர்களை எற்றி மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு..அவர்களது உறவினர்களுக்கும் சேதி சொல்லிவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தாராம் வைகோ..இப்படியிருந்தால் எப்படி அமைச்சராக முடியும்?

6)மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளைத் தானம் கொடுக்கும் பழக்கம் ஹிதேந்திரன் புண்ணியத்தால் அதிகரித்திருக்கிறது.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்த 77 பேர்களின் கண்கள்,இதயம்,சிறுநீரகம்,கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு..மற்றவர்களுக்கு பொருத்தப் பட்டிருக்கிறது.

7)கலைஞரைத் தவிர வேறு எவரையும் தி.மு.க.,வில் தன் தலைவராக ஏற்றுக் கொள்ளமுடியாது என மத்திய அமைச்சர் அழகிரி..சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் கூறியுள்ளார்

டிஸ்கி..நாளை 27-3-10 அன்று மாலை 5.30 மணிக்கு மேற்கு கே.கே.,நகர்,முனுசுவாமி சாலை..டிஸ்கவரி பேலஸில் நடைபெற உள்ள பதிவர்கள் கலந்துரையாடலுக்கு அலைகடலென திரண்டு வாரீர்..வரும் அனைவருக்கும் பிஸ்கெட்,டீ கொடுக்கப்படும்..உபயம் தனது என உண்மைத்தமிழன் தெரிவித்துள்ளார்.

Wednesday, March 24, 2010

ஆனாலும் எனக்கு ஆசை அதிகம் தான்

சென்னை சின்மயாநகரில் உள்ள நிறுவனம் அது..மொத்தம் 600 ஊழியர்கள்..வேலை செய்கின்றனர்..அவர்களது விற்பனை பிரதிநிதிகளாக 250 ஊழியர்கள்....அவ்வளவு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுத்து..நிர்வாக செலவுகளையும் கவனித்துக் கொண்டு கோடிக் கணக்கில் லாபம் ஈட்டுகிறது..அந்த நிறுவனம்..

ஒரு சிடிஎஸ் ஸோ.டி.சி.எஸ் சோ இல்லை..அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர் மீனாட்சி சுந்தரம் என்பவர்..நிறுவனத்தின் பெயர் 'மீனா ஹெல்த் கேர்'..இந்த நிறுவனம் விற்கும் பொருள்..போலியான..காலாவதி ஆன உயிர் காக்கும் மருந்துகளை விற்பனை செய்வதுதான்.

இப்படிப்பட்ட நிறுவனம்..எப்படி காவல்துறை கண்களிலோ..சுகாதார..மருத்துவத் துறை கண்களிலோ படாமல் இருந்தது..அதன் நதிமூலம் என்ன..யாமறியோம் பராபரமே

காலாவதியாகும் மருந்து கசிவுகளை எரிக்கும் இடம்..சென்னை கொடுங்கையூரில் உள்ளது.அந்த காலாவதி கழிவுகளை வழியிலேயே மடக்கி..மருந்து..மாத்திரை..ஊசி மருந்து ஆகியவற்றை இந்த மோசடி கும்பல் வாங்குமாம்.மேலும் குப்பை பொறுக்குபவர்கள் அவற்றை பொறுக்கி எடுத்து வந்தால் அவர்களிடம் கிலோ 150 ரூபாய்க்கு வாங்குமாம் இந்த மோசடி கும்பல்...

அந்த மருந்துகளுக்கு வேறு wrapper வேறு Expiry date போட்டு மீண்டும் விற்பனைக்கு விடுமாம்.

இதில் பலர் கைது செய்யப்பட்டாலும்..நேரடி தொடர்புள்ள ஐவர் இன்னும் தலைமறைவாய் உள்ளனர். மீனாட்சி சுந்தரம்,பிரதீப் சோர்டியா,சஞ்செய் குமார்,வெங்கடேசன் ஆகியோரை ..வழக்கம் போல காவல்துறை வலை வீசி தேடி வருகின்றனராம்..(அவர்கள் சரணடைந்து இவர்களது வேலையை எளிதாக்கட்டும்.)

இந்நிலையில் , நேற்று 6 கிடங்குகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதி மருந்துகளை காவல் துறை நேற்று கைப் பற்றியுள்ளது.இந்த மருந்துகளில் பெரும்பாலானவை குழந்தைகளுக்கான மருந்துகளாம்..அடப் பாவிகளா...

பொதுமக்கள்.. இது போன்ற இடங்கள் என சந்தேகப்படும்படியான இடங்கள் தெரிந்தால் உடன் 24335068 தொலைபேசி எண்ணிற்கு தொடர்புக் கொண்டு..தெரிவிக்கலாம் என மருத்துவக் கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

நாமும்..மருந்து வாங்குகையில் காலாவதி தேதி, அந்த மருந்து சரியானதுதானா என்றெல்லாம் சரி பார்ப்பதுடன்..கண்டிப்பாக அதற்கான ரசீதை கேட்டுப் பெற வேண்டும்.

இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள துரோகிகள்..அரக்கர்கள்..நாளை சரணடைந்தாலும்..விசாரணை முடிந்து..வழக்கு பதிவு செய்யப்பட்டு..வருடக் கணக்கில் வழக்கு நடை பெறும்..சம்பந்தப் பட்டவர்கள் பண பலத்தால்..ஜாமீனில் வந்து உல்லாசமாக இருப்பார்கள்.வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகும்..கீழ் கோர்ட்.மேல் கோர்ட்,உயர் நீதி மன்றம், உயர் நீதி மன்ற பெஞ்ச்,உச்ச நீதி மன்றம்,உச்ச நீதி மன்ற பெஞ்ச் என விசாரணை தொடரும். அதற்குள் அவர்கள் உலகச் சிறையிலிருந்து கூட வெளியேறிவிடுவார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்..இவர்கள் செய்த தவறுக்கு தண்டனை அளிக்க வேண்டுமானால்..இவர்களின் ஜாமீன் மனு அனைத்துக் கோர்ட்டிலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.அவர்களை சிறையிலிருந்து வெளியே அனுப்பக் கூடாது..

நடக்குமா...

Tuesday, March 23, 2010

ஆண்டவன் கிருஷ்ணனும்..ராதாவும் லிவிங் டுகெதர்

உச்சநீதி மன்றம்..திருமணமாகாத ஆணும்..பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பதை குற்றம் என்று சொல்ல முடியாது என தன் கருத்தை சொல்லியுள்ளது.

வயது வந்த இருவர் சேர்ந்து வாழ நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?இது குற்றமும் அல்ல..குற்றம் என்று சொல்லவும் முடியாது என்று உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியும்..மற்றும் இரு நீதிபதிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடவுளான கிருஷ்ணரும்..ராதாவும் கூட இதிகாசத்தில் ஒன்று சேர்ந்து தான் வாழ்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

நடிகை குஷ்பூ கற்பு பற்றி 2005ல் சில பத்திரிகைகளில்..கல்யாணத்திற்கு முன் உறவு வைப்பதை குறித்து தன் ஆதரவான கருத்தைத் தெரிவித்திருந்தார்.அதனால் கொதித்து (!!!!) எழுந்த மக்களால் 22 வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அவற்றை தள்ளுபடி செய்யச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு மீதான விசாரணையில்..தங்களது தீர்ப்பை தள்ளி வைத்துள்ள நீதிபதிகள்..மேற் கூறியவாறு தங்களது கருத்தையும் கூறியுள்ளனர்.

மேலும் நீதிபதிகள்..குஷ்பூவிற்கு எதிராக வாதாடும் வக்கீல்களிடம் 'இது எந்தப் பிரிவின் கீழ் குற்றம்' எனக் கேட்டதுடன்..ஆர்ட்டிகள் 21 ன் படி..வாழும் உரிமையையும்..சுதந்திரமும் ஒருவரின் அடிப்படை உரிமை என்பதையும் நினைவூட்டினர்.மேலும் அவர்கள் கூறுகையில் 'குஷ்பூ தன் தனிப்பட்டக் கருத்தைக் கூறியுள்ளார்....இது எந்த விதத்தில் உங்களை பாதித்துள்ளது..அவர் கூறியது அவரது தனிப்பட்டக் கருத்து.அது எந்த பிரிவின் கீழ் குற்றமாகிறது..குஷ்பூ..இப்படிக் கூறிய்தைக் கேட்டு எவ்வளவு பெண்கள் வீட்டை விட்டுச் சென்றனர்..எனக் கூற முடியுமா?' என்றும் கேட்டார்கள்.மேலும் வாதம் செய்பவருக்கு பெண் குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்டவர்கள் 'இல்லை' என்றதும் நீங்கள் எந்த வகையில் இதனால் பாதிக்கப் பட்டுள்ளீர்கள்.. என்றும் கேட்டனர்.

உச்ச நீதி மன்றத்தில் இவ்வழக்கிற்காக ஆஜரான குஷ்பூ..வக்கீல்கள் அமரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

இச்சமயத்தில் நான் சமீபத்தில் படித்த ஒரு செய்தியையும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்..

இப்போதெல்லாம்..திருமணமாகி..விவாகரத்து பெறும் தம்பதிகள்..தங்கள் நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்து..மன மகிழ்வோடு நட்போடு பிரிகின்றனர்..'இனி நாம் கணவன் மனைவி இல்லை..நண்பர்கள்' என்று.

கணவனும் ..மனைவியும் நண்பர்கள் இனி என பிரியும் போது..நண்பர்கள்..கணவன்..மனைவியாக திருமணமாகாமல் லிவிங்க் டுகெதரும் தவறு இல்லை போலும்!!

Monday, March 22, 2010

வள்ளுவனும் கண்ணழகும் - 3

முந்தைய பதிவு

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்..அதாவது நம் மனம் நினைப்பதை முகம் காட்டிவிடுமாம்.

'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் ' என்பார் வள்ளுவர்.

கண்ணாடி எப்படி தன் எதிரில் உள்ளதைக் காட்டுகிறதோ..அதுபோல ஒருவரின் முகம் அவர் மனதில் உள்ளதைக் காட்டிவிடும்.

ஆனால்..காதலியைப் பொறுத்தமட்டில் காதலனைத் தெரியாதவனைப் போல் தன் காதலை மறைத்துக் கொண்டு கடுமொழியால் சாடுவாளா..மனதில் அவன் மேல் கோபம் இல்லாமல் அன்புக் கொண்டு(இங்கு அவள் முகம் அவள் மனதில் உள்ளதைக் காட்டுவதில்லை) ஆனால்..நீண்ட நேரம் அவ்வாறு இல்லாமல் அவளே தன் அன்பையும் வெளிப்படுத்துவாளாம்.

உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்

என்கிறார்.

காதலனைக் கண்டதும்..சுடு மொழி கூறுவாளாம்.. பகை உணர்வு இருக்காதாம்..ஆனால்..பகைவனைப் பார்ப்பது போல பார்ப்பாளாம்..அவனைத் தெரியாதது போல நடிப்பாளாம்..இதெல்லாம் காதலி..அவள்பால் அன்பு கொண்ட காதலனிடம் அடையாளம் காட்டும் குறிப்புகளாம்..

'அவளா சொன்னாள்..இருக்காது..அப்படி எதுவும் நடக்காது..' என திரைநாயகன் பாடுவது நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை.

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு

இப்படியெல்லாம் தனக்கு ஏன் நடக்கிறது எனப் புரியாமல் காதலன் தவிப்பான்..அவன் தவிப்பை புரிந்துக் கொண்டாலும் வெளிக்காட்டமாட்டாள்..அவன் அவளைப் பார்க்கையில் பரிவுடன் நகைப்பாளாம்
(மனதிற்குள் பெருமிதம்?)அப்படிச் சிரிக்கையில் ஒரு புதிப் பொலிவுடன் தோன்றுவாளாம்..(சிரித்து..சிரித்து என்னை சிறையிலிட்டாய்..என்று பாடாத குறை)

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

நேற்றுவரை நீ யாரோ..நான் யாரோ..இன்று முதல் நீ வேறோ நான் வேறோ என்று காதலர்கள் இருந்தாலும்..அவர்களுக்கிடையே ஒரு இயல்பு உண்டாம்..அதாவது பொது இடத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் தெரியாது போல இருப்பார்களாம் ..அந்நியரைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொள்வார்களாம்.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலர் கண்ணே உள

எவ்வளவு எளிமையாகச் சொல்லியிருக்கிறார்!!

ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து விடுமாயின்..வாய்ச் சொற்கள் தேவையில்லை என்பதை..

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

கண்களே எல்லாவற்றையும் சொல்லிவிடுமாம்..

இதைத்தான்..கம்பன்..'அண்ணலும் நோக்கினான்..அவளும் நோக்கினாள்' என்கிறார்..ஒருவருடன் ஒருவர் கண்கள் பேசியபின்..வில்லை உடைப்பது ராமனுக்கு என்ன பெரிய வேலையா என்ன?

(கண்ணழகு தொடரும்)

Sunday, March 21, 2010

பேருந்தில் காதல் (தொடர் பதிவு)

காலையில்..அரக்க பறக்கக் கிளம்பி..பேருந்தில் வியர்வை நாற்றங்களை சமாளித்துக் கொண்டு..கும்பலோடு கும்பலாய் நின்று..ஒவ்வொரு நிறுத்தத்திலும்..நம் முன்னேற்றத்தில் ஆசைக் கொண்ட நடத்துநருக்கு பயந்து முன்னேறி..பிரேக்கை அழுத்தி..நம்மை அவரிடம் அழைக்கும் ஓட்டுநரின் அழைப்பை புறக்கணித்து..நமது நிறுத்தம் வருகையில்....நமக்குப் பின்னால் இறங்கப் போகிறவரால் இறக்கி விடப் பட்டு ..காலையில்..சலவையிலிருந்து எடுக்கப்பட்ட சட்டை..மீண்டும் ஒரு சலவைத் தேவை என உணர்த்தும் விதத்தில் கசங்கி..ஒழுங்காக வாரிய தலை மைக்கேல் ஜாக்சன் தலையைப் போல ஆக..அடடா..தினசரி அலுவலகம் சென்று வரும் மத்திய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் படும் பாடு...சொல்லி மாளாது..இதன் நடுவே..காதலாவது..மரபணு கத்திரிக்காயாவது.

இவ்வளவிற்கும் நடுவே திரை இயக்குநர்களால் மட்டுமே..காதலை பேருந்தில் காட்ட முடியுமா? என எண்ணினால்..இல்லை..நடை முறையிலும் முடியும்.முடிந்திருக்கிறது..முடியப் போகிறது...பல திருமணங்கள் இப்போது பேருந்திலேயே நிச்சயிக்கப் படுகின்றன.

பேருந்தில் இடம் இல்லை..படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்பவனிடமிருந்து..அவன் கையில் இருந்த டிஃபன் பாக்ஸையோ..பத்திரிகையையோ..ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் பெண் ஒருத்தி..மனித நேயத்துடன் வாங்கி வைத்துக் கொண்டால்..அவன் ஜென்ம சாபல்யம் அடைகிறான்.'ஆகா..நம் மீது இவளுக்கு எவ்வளவு அன்பு" என எண்ணத் தொடங்குவதுடன்..தன்னை அம்பிகாபதியாக எண்ண ஆரம்பிக்கிறான்.

அடுத்த நாள்..ஜன்னலோரம் அவளைக் காணாது..பேருந்தில் அடித்து..பிடித்து உள்ளே வருபவன் கண்கள் அவளையேத் தேடுகிறது.அவள் ஜன்னலோர இருக்கைக் கிடைக்காது வேறு ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கிறாள்...மடியில்..அருகில் நின்றுக் கொண்டிருப்பவனின் பை. இவன் காதல் சுக்கு நூறாய் உடைகிறது..

அவன் கண்கள்..இப்போது வேறு ஒரு அமராவதியைத் தேடுகிறது..

தன் முயற்சியில் மனம் தளரா விக்ரமாதித்தனாய்..மீண்டும் வேதாளம் என்னும் காதலைத் தேடுகிறது மனம்..

ஒரு நாள் அப்படி ஒருத்தியைப் பார்க்கிறான்..

அண்ணலும் நோக்க..அவளும் நோக்க..காதல் மொட்டு விடுகிறது..தினம்..தினம் ..பார்வை பரிமாற்றங்கள்..ஒரு நாள் பஸ்ஸில் 'சில்லறையா கொடுங்க..' என்ற நடத்துநரிடம்..இல்லை என பல்லிளிக்க..அவனுக்கு அவளே டிக்கெட் எடுக்கிறாள்...இவன் மனம்..'தனனம்..தனனம்..' என பாட ஆரம்பிக்கிறது. அவனுக்கும் ஒரு ஜூலியட் கிடைத்து விட்டாள்.

மெதுவாக.."நீங்க எங்க..வேலை செய்யறீங்க"ள்லேஆரம்பித்து..படிப்படியாக...காதல் மலர ஆரம்பிக்கிறது.

பேருந்து காதல்..பின் பெற்றோர்கள் சம்மதத்தினோடோ..அல்லாமலோ கல்யாணத்தில் முடிகிறது..பின் மனைவி..குழந்தைகள்..சர்ச்சை...இப்படி வாழ்வு செல்ல..பேருந்து வில்லனாய் தெரிகிறது.

ஆமாம்..உன் அனுபவங்களைக் கூறு என்றால்..இது என்ன என்கிறீர்களா?

எங்கக் குடும்பம் ரொம்பப் பெரிசு..அதனால்..இளமையில் வறுமை..வயிற்றுப் பசிக்கே பதில் சொல்லமுடியாத போது..காமப்பசிக்கு ஏது இடம்..

திருமணத்திற்கு பின்னர்தான் மனைவியை காதலிக்க ஆரம்பித்தேன்..

(என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த சங்கவிக்கு நன்றி )

Saturday, March 20, 2010

மக்களை மதிக்காத காங்கிரஸ்

தமிழில் ஒரு சொலவடை உண்டு..

கூரைஏறி கோழி பிடிக்காதவன்..வானமேறி வைகுண்டம் போனானாம்..

வேறுவிதத்தில் சொல்வதானால் 'உள்ளூரில் விலை போகாத சரக்கு வெளியூரில் விற்குமா"

விற்றிருக்கிறது...கூரை ஏறத் தெரியாதவர் வைகுண்டம் போகப் போகிறார்..

அவர்தான்..

காங்கிரஸ் தலைவியின் குடும்ப நண்பர் மணிஷங்கர் ஐயர்..(ஐயர் என்ன படித்து வாங்கின பட்டமா)

காங்கிரஸ், தி.மு.க., வலுவான கூட்டணி இருந்த போதும்..தன் சொந்தத் தொகுதியிலேயே மக்களால் புறக்கணிக்கப் பட்டவர்..மக்கள் அவர் தேவையில்லை என்று ஒதுக்கியப் பிறகு..அதற்கு மதிப்புத் தராமல் அவரை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்குகிறது காங்கிரஸ்..

இது மக்களின் எண்ணத்தை...மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது..

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லிக் கொண்டே இருந்தால்..அந்த சகஜத்தை என்றுதான்..யார்தான் ஒழிப்பார்களோ?

Friday, March 19, 2010

வாய் விட்டு சிரிங்க..

1) வெளிநாட்டிலே இருந்து தலைவருக்கு சென்ட் வாங்கி வந்தேன்..அதற்கு எம்மேலே அவருக்கு ஒரே கோபம்
ஏன்
சென்ட் எல்லாம் எனக்குப் பிடிக்காது ஏக்கர் தான் பிடிக்கும்னு உனக்குத் தெரியாதான்னு கேட்கறார்

2)நோயாளி-(ஆபரேஷன் தியேட்டரில்) டாக்டர் ஏ.சி., யை குறையுங்க..ஒரே குளிருது
டாக்டர்- உங்க உடம்பு மார்ச்சுவரி குளிரை தாங்க தயார் படுத்தறோம்

3)அரசர்- (அமைச்சரை நோக்கி) உம்மை முப்படைக்கு தளபதி ஆக்கணுமா? அதுக்கு உங்க கிட்ட என்ன தகுதி இருக்கு
அமைச்சர்- எனக்கு சொறி, சிரங்கு,தேமல் மூன்றும் உள்ளது மன்னா

4)அந்த ராப்பிச்சை சாப்பாடு போட்டா வேணாம்னுட்டான்
வேற என்னதான் வேணுமாம்?
அவன் வலைப்பூவிலே பதிவு போட்டிருக்கானாம்..அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்

5)போலீஸ் கான்ஸ்டபிள்-(இன்ஸ்பெக்டரிடம்) சார்..இன்னிக்கு கபாலி மாமூல் 150 ரூபாய் கொடுத்தான்
இன்ஸ்- அப்போ..ஆளுக்கு ஃபிஃப்டி ஃபிஃப்டி
போலீஸ் கான்ஸ்- அப்போ..மீதி ஃபிஃப்டியை என்ன பண்றது

6)Package டூர் போயிட்டு இவ்வளவு சீக்கிரம் ஏன் திரும்பிட்டே
Baggage எல்லாம் காணாம போயிடுச்சு

Thursday, March 18, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(19-3-10)

1) உலகிலேயே இரண்டு தேவாலயங்கள் தான் கல்லறை மீது எழுப்பப் பட்டுள்ளன.ரோம் நகர புனித ராயப்பர் ஆலயம்..மற்றது சென்னையில் உள்ள சாந்தோம் சர்ச்.யேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் செயின்ட் தாமஸ்..அவர் பிரச்சாரத்திற்கு வந்த போது..அவர் கொல்லப்பட்டார்.அவர் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டது.

2)அலுவலகத்தில்..நம் வேலையில் ஏதேனும் தவறு செய்து விட்டால்..மேல் அதிகாரி கூப்பிடுகையில் நம் இதயம் வேகமாக படபடக்கிறது..உடல் சூடாகிறது..சூட்டைத் தணிக்க உடன் மூளை வியர்வையை வெளியேற்றுகிறது.இப்படி பயத்தில் அதிகமாக வியர்ப்பதற்கு ஹைபெர் ஹைட்ரோஸிஸ் என்று பெயர்

3)வைகோவிற்கு இந்த ஆண்டு அரசியலில் பொன்விழா ஆண்டாம்..அதை பிரம்மாண்டவிழாவாக கொண்டாடத் தயாராகிறது ம.தி.மு.க.,எவ்வளவு ஆண்டானால் என்ன எங்க தலைவருக்கு அரசியல் நடத்தத் தெரியாது என்கிறார் ஒரு ம.தி.மு.க., தொண்டர்..(விழாவிற்கு கலைஞரை தலைமை தாங்கச் சொல்லி..அரசியல் ஆசான் என்று அவருக்கு ஒரு பட்டம் கொடுங்க..கூட்டணி மாற சந்தர்ப்பம் உண்டு - இதைச் சொல்பவர் அதி புத்திசாலி அண்ணாசாமி)

4)கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 50 லட்ச மனித உழைப்பு நாட்கள் ஸ்டிரைக், கதவடைப்பு என வீணானதாக மத்திய தொழிலாளர் நலத் துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறதாம்.அங்கு மட்டும் 22லட்சம் மனித உழைப்பு நாட்கள் வீணானதாம்.

5) புதிய பேரவைக் கட்டிடத்தில் முகட்டில் பிரம்மாண்டமான டூம் அமைக்கப் பட்டுள்ளது.அதன் மீது விழும் சூரிய ஒளிக்கற்றைகள் 100 அடிகள் தாண்டி கீழே..பேரணிக்குள் வட்டமாக விழுவது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.இது கலைஞரை மிகவும் கவர்ந்துள்ளதாம்.உதய சூரியன் ஒளி நிரந்தரமானது எனக் காட்ட இதைவிட வேறு என்ன வேண்டும்?

6)அடுத்தவர் உங்கள் தவறைச் சுட்டிக்காட்டி..கிண்டல் செய்தால் இரு மடங்கு மகிழுங்கள்..ஒன்று..ஒருவர் மகிழ உங்கள் தவறு உதவியது...மற்றது..மீண்டும் அத் தவறு செய்யாமல் இருக்க அவர் உதவினார்.

7) கொசுறு..ஒரு ஜோக்

இன்னிக்கு என் கிட்ட ஒருத்தர் உன் நண்பன் பெயரைச் சொல் உன்னைப் பற்றி சொல்றேன்னு சொன்னார்..உடனே உன் பெயரைச் சொன்னேன்
உடனே என்ன சொன்னார்
ச்சீன்னு காறித் துப்பிட்டு போயிட்டார்

Wednesday, March 17, 2010

வள்ளுவனும் கண்ணழகும் - 2

இதன் முதல் பகுதி

தலைவியின் மை தீட்டப்பட்ட கண்கள் பார்க்கும் பார்வையில் இரண்டு வகை உண்டாம்.ஒரு பார்வை தலைவனுக்கு காதல் நோயை ஏற்படுத்தும் பார்வையாம்..ஆனால் அதே பார்வை அந்த நோய்க்கு மருந்தாகும் பார்வையாயும் ஆகுமாம்..அந்த அளவு சக்தி அவளின் பார்வைக்கு உண்டாம்..

இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்தோய் மருந்து

தலைவி பார்க்கும் கள்ளத்தனமான கடைக்கண் பார்வை..காம இன்பத்தின் போது ஏற்படும் இன்பத்தின் பாதி அளவைவிடக் கூடுதலாம்..இதைத்தான் பின்னாளில் வந்த கவிஞர் ஒருவர் 'பார்வை ஒன்றே போதுமே..பல்லாயிரம் சொல் வேண்டுமா' என்றாரோ? வள்ளுவனின் வார்த்தைகளில்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது

ஆனால் அதே பார்வைதான் அவளுக்கு நாணம் கலந்ததாகவும்..காதலனினிடம் அன்பு வளர காரணமாகவும் அமைகிறதாம்..

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

.இப்படியெல்லாம் பார்வை பற்றியும்..கண்ணழகையும் சொல்லும் வள்ளுவன்..தலைவி காதலன் பார்க்கும் போது தரையைப் பார்க்கிறாளாம்..அவன் அவளைப் பார்க்காத போது அவனைப் பார்த்து மகிழ்கிறாளாம்....இப்படியும் முரண்பாடோடு சொல்கிறானே ஏன்?

ஒரு நிமிஷம் யோசித்தால்..புலப்படும்..

அவள் அவனை நேருக்கு நேர் பார்க்கையில் அந்த சக்தியால் செய்வதறியாது நிலைகுலைந்து போகிறான் தலைவன்..அதைப் புரிந்துக் கொண்டவள்..அவன் தன்னை நன்கு பார்த்து ரசிக்கட்டும் என்ற எண்ணத்தில் நிலத்தைப் பார்க்கிறாள்.ஒரு சமயம் அவள் அவனைப் பார்த்தால்..அவன் மனம் அலைக்கழிக்கப் படுவதை அவள் தவிர்க்க எண்ணுகிறாள்..ஆகவே தான் வள்ளுவன் அப்படி கூறியிருப்பான் என்று தோன்றுகிறது.

யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்

இதையே பின்னாளில்..'உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே..விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே' என எளிமைப்படுத்தினார் கவியரசு.

ஆனால் தலைவன் அவள் தன்னை நேருக்கு நேர் பார்க்காததற்கு தன் மேல் உள்ள அன்புதான் காரணம்..என்றும் அவள் தன்னை ரகசியமாய் பார்த்து ரசிப்பதாக எண்ணுகிறான்..

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

அவள் என்னை நேராக பார்க்கவில்லையே தவிர..ஒரு கண்ணை சுருக்கி பார்த்து தனக்குள் மகிழ்கிறாள்..என எண்ணி இவன் மகிழ்கிறான்..

(வள்ளுவனும் ..கண்ணழகும் தொடரச் சொன்னால் தொடருகிறேன்)

Tuesday, March 16, 2010

மரங்களைக் காப்போம்...




ஒரு செல்லுலர் கம்பெனியின் விளம்பரத்தை டி.வி.யில். பார்த்தேன்..எல்லாமே ஆன் லைனில் போனால்..மரங்கள் பிழைக்கும் என்பது போன்ற கருத்தை கொண்ட விளம்பரம் அது..

இது எந்த அளவு சாத்தியம் ..என்னும் சந்தேகம் என்னுள் இருந்து வந்தது..ஆனால் அது உண்மையே என்று உணர வைத்தது ஒரு செய்தி..

ஒரு டன் காகிதம் உற்பத்தி செய்ய 20 முதல் 24 மரங்கள் வரை வெட்டப்பட வேண்டிய சூழ்நிலை இருப்பதாக மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் புள்ளி விவரம் கூறுகிறது.

CAT எனப்படும் காமன் அட்மிசன் டெஸ்ட் இந்த ஆண்டு ஆன்லைனில் நடத்தப் பட்டது.இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் மற்றும் இதர முன்னணி மேலாண்மை நிறுவனங்களில் (ஐஐஎம்) படிப்பதற்கான தேர்வு இது.இதற்கான தேர்வு சமீபத்தில் ஆன்லைனில் நடத்தப் பட்டது.2.2 லட்சம் பேர் தேர்வு எழுதினர்..இதற்கான விண்ணப்பங்கள்,வினாத்தாள்,விடைத்தாள் ஆகியவற்றுக்காக 50 டன் காகிதங்கள் தேவை.

இந்த ஆண்டு ஆன்லைனில் தேர்வு நடந்ததால் கிட்டத்தட்ட ஆயிரம் மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஐஐஎம் - ஐ சேர்ந்த தேர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம்.சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைவு.

இம்முறையையே மற்ற தேர்வுகளிலும் நடைமுறைப் படுத்தினால் ஏராளமான மரங்கள் வெட்டப் படுவதைத் தடுக்க முடியும்.ஒரு மரம் வெட்டினால் ஐந்து மரங்கள் நடுங்கள் என்ற வறட்டு அறிக்கைகளும் குறையும்.

ஆனால்..ஆன்லைன் தேர்வு நடக்கையில் கணினி குளறுபடிகள் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும்.

Monday, March 15, 2010

தமிழகமும்..சட்டசபை திறப்பும் - 2

இந்த பதிவின் முதல் பாகம்

ஓமந்தூராருக்குப் பிறகு 1949ல் குமாரசாமி ராஜா முதல்வரானார்.இதன்பின் மாகாண எல்லைகள் மாற்றம் செய்யப்பட்டு..சென்னை மாநிலம் என்று பெயரிடப் பட்டது.செயின்ட் ஜார்ஜ் கோட்டை,சென்னைப் பல்கலைக் கழக செனடர் ஹால்ல்,சில்ரன்ஸ் தியேட்டர்,ராஜாஜி ஹால்..என பல இடங்களில் சட்டசபை நடந்தது.1959ல் ஏப்ரல் மாதம் இருபது நாட்கள் ஊட்டியிலும் நடந்தது.அதற்கு பின் 1959ல் ஆகஸ்ட் முதல் தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே இதுவரை தொடர்ச்சியாக நடந்து வருகிறது.1950ல் குடியரசுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் குமாரசாமி ராஜா முதல்வர்.

இந்திய குடியரசின் முதல் கவர்னர் ஜெனரலாய் இருந்த ராஜாஜி 1952ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வரானார்.

பின் 1954 முதல் 1963 வரை காமராஜ் முதல்வர்..தமிழகத்தின் பொற்காலம் இது எனலாம்.மக்கள் நல திட்டங்கள் பல அக்காலத்தில் உருவாயின.மதிய உணவு திட்டம், இலவச கல்வி மற்றும் கிண்டி,அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் உருவாயின.கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் முதல்வராய் இருந்த காமராஜர்..கட்சியைப் பலப்படுத்த..காமராஜர் பிளான் என்று ஒன்றை அமுல் படுத்தி..தான் உள்பட இந்தியாவின் மூத்த தலைவர்களை அரசிலிருந்து வெளியேற வைத்தார்.

அந்தக் காலகட்டத்தில் 1963ல் பக்தவத்சலம் முதல்வரானார்.1965 இந்தி எதிர்ப்பு, கடுமையான அரிசி பஞ்சம் ஆகியவை காங்கிரஸ் அரசை ஒழிக்க முக்கிய காரணமாயின.காங்கிரஸ் கட்சியின் பால் மனக்கசப்புக் கொண்ட ராஜாஜியும்,,காங்கிரஸை ஒழிப்பதே தன் குறிக்கோள் என வயதான காலத்தில் சுதந்திரக் கட்சியை நிறுவினார்.கணிசமான ஆதரவு இருந்தது கட்சிக்கு.1967ல் தி.மு.க.உடன் கூட்டணி வைத்தார்.அந்த தேர்தலில் தி.மு.க., ஆட்சியைக் கைப் பற்ற...இன்றுவரை மீண்டும் காங்கிரஸ் பதவியை பிடிக்க முடியவில்லை.

1967ல் அண்ணா..திராவிடக் கட்சியின் முதல் முதல்வர் ஆனார். ..பதவி ஏற்ற உடன் ஒரு படி ஒரு ரூபாய் அரிசி..படிப்படியாய்..ரூபாய்க்கு மூன்று படி என்பது தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையாய் இருந்தது. தி.மு.க., பதவி ஏற்றதும் சென்னை,கோவை மாவட்டங்களில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி சில காலம் போடப்பட்டது.

இதற்கிடையே உடல் நலக் குறைவால் 3-2-69 அண்ணா இயற்கை எய்த..கலைஞர் 10-3-69ல் முதல்வரானார்.(நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வர்)கை ரிக்க்ஷா ஒழிப்பு திட்டம்..கலைஞர் ஆட்சியின் அருமையான திட்டமாகும்.பின் தி.மு.க., வில் பிளவு ஏற்பட எம்.ஜி.ஆர்., கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.அவர் அண்ணா தி.மு.க., வை ஆரம்பித்தார்.ஜூன் 77ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மறைவு வரை டிசம்பர் 87 வரை முதல்வரானார்.பின் அவர் மனைவி ஜானகி முதல்வரானார்.ஜெ அணி (ஜெயலலிதா) ஜா அணி (ஜானகி அணி ) உருவானது ..அதனால் ஜானகி 23 நாட்களே முதல்வராய் இருந்தார்.

89ல் கலைஞர் முதல்வர் ஆனார்..ஆனால் இரு ஆண்டுகளில் அவர் ஆட்சிகவிழ..91 ல் மீண்டும் தேர்தல்..இச்சமயத்தில்..பிரசாரத்திற்கு சென்னை வந்த ராஜிவ் கொல்லப்பட்டார்.அனுதாப அலை வீச காங்கிரஸ் கூட்டணி கட்சியாய் இருந்த ஜெயலலிதா முதல்வரானார்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, வளர்ப்பு மகன் திருமணம் ஆகியவை ஜெ விற்கு எதிர்ப்பை அதிகமாக்கின.

1996ல் மீண்டும் கலைஞர் முதல்வர்..மூப்பனார் கூட்டணியில் கலைஞர் வென்றார்.இந்த சமயத்தில் தனியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் இழந்தது. ஜெ மீது பல ஊழல் வழக்குகள் போடப்பட்டன.ஜெ கைதானார்.

2001ல் மிண்டும் ஜெ முதல்வர்..பழிக்கு பழி என்ற போக்கில் பாலங்கள் கட்டியதில் ஊழல் என ஒரு நாள் நள்ளிரவு கலைஞர் கைது..அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது ஆயிரக்கணக்கான ஊழியர் கைது ஆகிய செயல்கள் ஜெ வை 2006ல் தோற்கடிக்க..பல இலவச திட்டங்கள் கலைஞரை மீண்டும் அரியணை ஏற்றின.(இச் சமயத்தில்தான் ஒரு தேர்தலில் நான்கு இடங்களில் வேட்பு மனுதாக்கல் செய்த ஜெ சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் இரண்டாம் நாள் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவி வகுத்தார். )

2006ல் பதவிக்கு வந்த தி.மு.க., அதன் நிறுவனத் தலைவரால் முடியாத காரியத்தை வெற்றிகரமாக செயலாக்கியது..ஆம்..ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடப்பட்டது.இது சாதனையாகும்..கண்டிப்பாக கலைஞரின் சாதனை.இந்த அரசின் மேலும் சில சாதனைகள்

இஸ்லாமியருக்கு 3.5 % இட துக்கீடு
விவசாயிகளின் கூட்டுறவு கடன் 7000 கோடி தள்ளுபடி
அருந்ததியற்கு 3% இட ஒதுக்கீடு
குடிசை வீடுகள் ஒழிக்கப்பட்டு அனைத்து தரப்பினருக்கும் கான்கிரீட் வீடுகள்..திட்டத்தில் முதல் படி துவங்கியது.ஆறு ஆண்டுகளில் திட்டம் முடியும்.

எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தார்போல சட்டசபைக்கான புது கட்டிடம் கட்ட ஓமந்தூரார் தோட்டம் தேர்ந்தெடுக்கப் பட்டு..2008ல் நவம்பர் 12ஆம் நாள் வேலைகள் ஆரம்பமாயின..கலைஞர் விடாது சென்று பார்வையிட்டார்.

இந்தியாவின் மிகச் சிறந்த பசுமை நிறைந்த அரசு கட்டிடமாக 450 கோடி செலவில்..உருவாகிய புது சட்டசபை கட்டிடம்.கடந்த 13-3-10 அன்று பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கால் திறந்து வைக்கப்பட்டது.இனி சட்டசபை கூட்டங்கள் இங்குதான் நடைபெறும்..

இந்த கட்டிடம்..வடிவமைக்கப்பட்டுள்ள விதம்..பிரம்மாண்டம் எல்லாம் பார்க்கையில்..இனி வரும் நாட்களில் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கூட தேர்ந்தெடுக்கப் படலாம்..

கலைஞர் பால் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் போற்றும் வகையில் உருவான இது கலைஞரின் மணிமகுடத்தில் ஒரு வைரக்கல் என்றால் மிகையில்லை.

தமிழகத்தில் இது வரை ஜனாதிபதி ஆட்சி இருந்த காலங்கள்

31-1-76 முதல் 30-6-77 வரை
17-2-80 முதல் 9-6-80 வரை
30-1-88 முதல் 27-1-89 வரை
30-1-91 முதல் 24-6-91 வரை

Sunday, March 14, 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள் தொடர் பதிவு


இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த அக்பருக்கு நன்றி
இந்த தொடருக்கான நிபந்தனைகள்
1.உங்களின் சொந்தக்காரராய் இருக்கக் கூடாது
2)வரிசை முக்கியமில்லை
3)ஒரே துறையில் பலர் பிடித்தமானவராய் இருக்கும்.இப்பதிவு வெவ்வேறு துறையில் இருப்பவராய் இருக்க வேண்டும்

1) சோனியா காந்தி- இவரின் ஆளுமை பிடிக்கும்..நாட்டின் மிகப்பெரிய ஒரு அரசியல் கட்சியை..தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் திறன் பிடிக்கும்.எளிமை பிடிக்கும்..அடக்கம் பிடிக்கும்

2)இந்திரா நூயி-உலகறிந்த பெப்சி யின் சேர் பர்சன் (Chair Person)..நினைத்தாலே பெப்சி குடித்த குளிர்ச்சி.பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல..அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என உணர்த்துபவர்

3)டாக்டர் கமலா செல்வராஜ்- குழந்தைகள் இல்லா பல தம்பதிகள் வாழ்க்கையில் குழந்தை செல்வங்கள் தவழ காரணமானவர்.டெஸ்ட் டியூப் பேபியும் திறமைக்குச் சான்று.மங்காத திறமை பளிச்சிடும்
பெண்மணி..சார்ந்த தன் துறைக்கு தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்.

4)ராதிகா- 1978ல் கிழக்கே போகும் ரயிலில்..அறிமுகமானவர்..தமிழ் கூட அப்போது சரியாக பேசத் தெரியாது.ஆனால்..தன்னை இன்று பிரமாதமாக வளர்த்துக் கொண்டுவிட்டார்..தவிர்த்து ராடன் மீடியா என்ற நிறுவனத்தை திறம்பட நடத்தி வருபவர்.

5)சின்னபிள்ளை- மதுரை அருகே சிறு கிராமத்தைச் சேர்ந்தவர்..40000 பெண்களைச் சேர்த்து களஞசியம் என்ற அமைப்பை ஏற்படுத்தி..நபார்ட், ஹட்கோ மூலம் பொருளாதார உதவி பெற்று..அவர்கள் வாழ்க்கையில் விளக்கை ஏற்றி வைத்தவர்..பாரதத்தின் பிரதமர் வாஜ்பாயியே இவரைத் தேடி வந்து..இவரின் காலில் விழுந்து வணங்கிய பெருமைக்கு உரியவர்.

6)எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி- தன் இனிய குரல்வளத்தால் உலகையே கட்டிப் போட்ட பெண்மணி..பாரத ரத்னா..காந்தி,நேரு என அனைத்து தலைவர் முன்னும் பாடியவர்.ஐ.நா.,சபையில் 'குறையொன்றும் இல்லை' என்றவர்.பல சமூக ஸ்தாபனங்களுக்கு உதவியவர்.

7)தாமரை- 'பார்த்த முதல் நாளாய்' பாடல் முணுமுணுக்காத ரசிகனே இல்லை எனலாம்.அதற்கு சொந்தக்காரர்.விண்ணைத்தாண்டி வருவாயா..என்பதற்கான சவாலாய் இருந்தவர்.ஈழப்பிரச்னையின் போது இவரின் வீராவேசமான பேச்சு..என்னை இவரை இந்த லிஸ்டில் சேர்த்து விட்டது

8)திருமதி ஒய்.ஜி.பி., ராஜம்மா,ராஷ்மி,ராஜலட்சுமி என்றெல்லாம் அழைக்கப்படுபவர்.கல்வித்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.உலகில் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றி பெற்ற வாழ்க்கை வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் படிப்பிற்கான முன்னோடி.இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

9)தமிழச்சி-பாரீஸில் இருந்துக் கொண்டு..பெரியாரின் போதனைகளை பரப்பி வரும் வீர மங்கை.இவரின் திறமை,அஞ்சாமை ஆகியவை எனக்குப் பிடிக்கும்..பாரதியின் புதுமைப் பெண் இப்படித்தான் இருந்திருக்கக் கூடும்.

10)இதைப் படிக்கும் பெண் பதிவர் நீங்கள் எனில் உங்களையும் எனக்குப் பிடிக்கும்.உங்களிடம் ஒளிந்துக் கொண்டிருக்கும் இலக்கிய ஆர்வத்தை..அறிவுத் தாகத்தை தீர்த்துக் கொள்ள நீங்கள் எழுதும் வலைப்பூக்கள் எனக்குப் பிடிக்கும்.

இத் தொடர் பதிவை எழுத நான் அழைக்கும் பதிவர்கள்

1)கோமா
2)அத்திரி
3)இயற்கை
4)பின்னோக்கி

(பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடுதான் எனக்குப் பிடிக்கும்)
டிஸ்கி-இந்த பதிவிற்கான முதல் விதியை மீறி இருக்கிறேன்..ஆம்..'யாதும் ஊரே..யாவரும் கேளிர்' நான் சொன்னவர்களும் இதன்படி எனக்கு உறவுதானே

Saturday, March 13, 2010

தமிழகமும்...சட்டசபை திறப்பும்..-1


தமிழகம்,கேரள மாநிலத்தின் மலபார்,ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் ராயல்சீமா,கர்நாடகாவின் பெல்லாரி,தெற்கு கர்நாடகம்,உடுப்பி ஆகியவை இணைந்து சென்னை மாகாணமாய் இருந்தது.1670ல் ஒரே ஒரு செயலாளர் தலைமையில் தொடங்கப்பட்ட தலைமைச் செயலகம் 1920ல் சற்று விரிவுப் படுத்தி 6 துறைகளும்..ஒவ்வொன்றிற்கும் ஒரு செயலாளர்களும் நியமிக்கப் பட்டனர்.1920ஆம் ஆண்டுதான் முதன் முதலாக தேர்தல் நடத்தப் பட்டு சட்டப் பேரவை அமைக்கப் பட்டது.அப்போது பேரவையின் ஆட்சிக் காலம் 3 ஆண்டுகளாய் இருந்தது.132வ் உறுப்பினர்களில் 34 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டனர்.1937ல் சட்டப்பேரவை 215 உறுப்பினர்கள் ஆனது.மேலவையில் 56 உறுப்பினர் இருந்தனர்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1947-49 களில் சென்னை மாகாண முதலமைச்சராய் இருந்தவர்.இவருக்கு முன் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ.சுப்பராயலு,பனகல் அரசர்,முனுசுவாமி நாயுடு,ராமகிருஷ்ண ரங்கா ராவ்,பி.டி.ராஜன் ஆகியவர்கள் முதல்வராக இருந்தார்கள்.பி.சுப்பராயன் சுயேச்சை உறுப்பினரும் 1926ல் முதல்வராய் இருந்தார்.

பின்னர் 1937ல் ராஜாஜி..சென்னை மாகாண முதல்வர் ஆனார்..1946ல் டி.பிரகாசமும்,1947ல் ஓமந்தூராரும் முதல்வர்கள்.இவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

ஓமந்தூரார்..தமிழ்நாடு என்று பெயரிடப்படுவதற்கு முன்..சென்னை மாகாணமாய் இருந்தகாலத்தில்..பத்தாவது முதலமைச்சராய் இருந்தவர்.1947ல் காமராஜரின் ஆதரவோடு முதல்வரானார்.முன்னதாக ஜஸ்டிஸ் கட்சி 1921ல் பெண்களுக்குத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கிய சட்டத்தை நிறைவேற்றியது.பின் 1921ல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையை நிறைவேற்றியது.

1947ல் ஓமந்தூரார்..ஆட்சியில்..எல்லாஜாதியினரும் கோயில்களுக்குள் சென்று வழிபடும் சட்டம், தேவதாஸி முறை ஒழிப்பு ஆகிய சட்டங்கள் உருவாக்கியது இவரது சாதனைகள் எனலாம்.சென்னை மாகாண அரசுக்கான கோபுர சின்னத்தை ஏற்படுத்தியவரும் இவரே..ஒரு குறிப்பிட்ட மதம் தொடர்பான சின்னம் இருக்கக் கூடாது என எதிர்ப்புகள் இருந்தும்,,அந்த விவகாரத்தை புத்திசாலித் தனமாக கையாண்டார்.இன்றும் அந்தச் சின்னமே தமிழக அரசின் சின்னமாய் இருந்து வருகிறது.(ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் அது)

இவர் பெயர் கொண்ட ஓமந்தூரார் தோட்டத்தில்தான் புதிய சட்டசபை வளாகம் கட்டப்பட்டுள்ளது.

(சட்டசபை தொடரும்)

Friday, March 12, 2010

நித்யானந்த கடல்

மாட்டு வண்டி

பேருந்து

ரயில் வண்டி

வானவூர்தி

வாகன வசதிகள்

உலகை மட்டுமல்ல

மனித நேயத்தையும் சுருக்கின

சாதி மதம் அரசியல் என

2)தன்னை நாடி

அடைக்கலமான

நதிப்பெண்களை

நாளும் புணரும்

நித்யானந்தமாய்

நெடுங்கடல்

Thursday, March 11, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(12-3-10)

1)ஒரு செடியை வைச்சாக்கூட அதுல நூறு பூக்கள் பூக்குது.வாசனையா இருக்குது.ஒரு தென்னை மரத்தை வைச்சா வாழ்நாள் பூரா காய்ச்சுத் தள்ளிக் கிட்டே இருக்குது.இயற்கையாகவே..அதுகளுக்கு..மத்தவங்களுக்குப் பிரயோஜனப்படற மாதிரி அமைப்பு இருக்கு..மனுஷன் மட்டும்தான் ஒவ்வொண்ணுக்கும் கணக்குப் பார்த்துக் கிட்டு..யாருக்கும் பிரயோஜனப்படாமல் போயிட்டு இருக்கான்...(எஸ்.ராமகிருஷ்ணன்...துணைஎழுத்தில்)

2)நிழலுக்கும்..குழலுக்கும் உவமையாக இன்றைய கவிஞரால் சொல்லப்பட்ட..கரிகாலன்..கல்லணையைக் கட்டிய மன்னன்.வடதிசை வென்று..இமயத்தில் புலிக்கொடியை நாட்டியவன்.சேரன்,பாண்டியவர்களுடன் இணந்த பதினோரு சிற்றரசர்களை வென்னிப் போரில் புறம் காண வைத்தவன்.பொருணராற்றுப்படை இவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்றது

3)வெற்றியும், தியாகமுமே உண்மையான வீரம் என போற்றப்படுவது.ஆனால் இன்றைய தாதாக்களும்..பேட்டை ரௌடிகளும் வீரர்களாகத் திகழ்வதாக எண்ணிக் கொண்டுள்ளனர்.

4)உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் முதல் நாலு இடங்களில் கூட வரமுடியாத இந்தியாவின் ஒலிம்பிக் சாதனைகள் ஹாக்கியில்தான். 1928 முதல் 1956 வரை தொடர்ச்சியாக முப்பது போட்டிகளில் ஜெயித்த இந்தியா ஆறு முறை தங்கம் வென்றது.

5)பக்தி என்பது தனிச் சொத்து..ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து..பக்தி இல்லை எனில் பரவாயில்லை ஆனால் ஒழுக்கம் இல்லை என்றால் எல்லாமே பாழ்.. இப்படி சொன்னவர் பெரியார்.

6)அண்ணா முதல்வராய் இருந்து மறைந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5000 ரூபாயும்..மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5000 ரூபாயும் மட்டுமே அவரது கணக்கில் இருந்த பணமாம்.

7)கொசுறு ஒரு ஜோக்

ராகு காலத்தில செய்யற வேலை எதுவும் சரியா நடக்காதாமே..உண்மையா
எனக்குத் தெரியாது..ஆனா..நீ வர்றப்போ நான் எந்த வேலையும் செய்யறதில்ல

Wednesday, March 10, 2010

உண்மையான துறவிகள் யார்..ஒரு விளக்கம்


திருமணம் முடித்து..குழந்தை பெற்று, வியர்வை சிந்தி உழைத்து ஊதியம் பெற்று..வாழ்வை சிறப்பாக அனுபவித்தவர்கள் மட்டுமே துறவியாக இருப்பதற்கும், குருவாக வாழவும் தகுதியுள்ளவர்கள் ஆவர்.

உண்ணாமல்..உறங்காமல் தவ நிலையில் பதினான்கு ஆண்டுகள் விழித்திருந்து நினைத்தபோது பரம்பொருளை தெய்வீகக் கண்களால் பார்க்கவும்..உணரவும் முடிய வேண்டும்.

நாளை நடக்கப்போவதை இன்றே அறந்து கொள்ளும் சூட்சமம்..எந்த குருவிடமும் கற்றுக்கொள்ளாமல் இறை அருளால் ஆய கலைகள் கற்றுத் தேர்ந்திருத்தல்..

அரையாடை தவிர சொந்தமென எதுவும் இல்லாத பற்றற்ற தன்மை.

புற்படுக்கையும், வானமே கூறையெனவும் பாதணி அணியாமலும் இருத்தல்

நாடிவந்த சீடர்களுக்கு தனக்குத் தெரிந்ததை பிரதிபலன் எதிர்பாராது கற்றுக் கொடுத்தல்

இறைவனுக்கு நடுவே இடைத்தரகர் என்றில்லாமல், பூஜைகள், புனஸ்காரங்கள், சடங்குகள் செய்விக்க மக்களுக்கு பயிற்சி அளித்தல்

தானாக கிடைக்கும் பொருட்களை மறுகணமே தானமாக வழங்கிவிடல்

மூன்று மாதங்களுக்கு மேல் ஓர் இடத்தில் தங்காமை மற்றும் கடல் கடந்து செல்லாமை

உயிரினங்கள் அனைத்தையும் சமமாக பாவித்தல்.இறைவனை நம்பாதவர் மற்றும் மாற்றுக் கருத்து உடையவர்க்கு எவ்வித சாபமும், பாபமும் சுமத்தாமை

ஒருவேளை உணவு, ஒரு ஜாம தூக்கம், கோபமில்லா பேச்சு இவையே தேவையான முக்குணங்கள்

சாதாரண மனிதர் போல உணவு, தூக்கம்,பிணி,துன்பம் அண்டாமல் எல்லாவகையிலும் ஒரு படி உயர்ந்து இருத்தல்..தனக்கென்றோ, தன் சீடர்களுக்கென்றோ அல்லது தங்களை மதிக்கும் மக்கள் கூட்டத்திற்கென்றோ சொந்தமாக கட்டிடம், செல்வம் சேர்க்காமலிருத்தல்.

தன்னை வணங்குபவர்களைக் கண்டு சீறிவிழும் பாம்பாய் இருத்தல்.ஏனெனில் வணக்கம் பெற தகுதி படைத்தவர் இறைவன் மட்டுமே..


மேலே சொன்னவை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே உண்மையான சாமியார் என்கின்றது வேதங்கள்.

(சமிபத்தில் நான் இவற்றை ஒரு புத்தகத்தில் படித்தேன்)

கையில் இருந்த சில்லறைக் காசுகளையும் குளத்தில் வீசிவிட்டு தபசில் ஆழ்ந்த ரமணர், 'காசும்,பணமும் ஆட்கொல்லி' என்றார்

பக்கத்தில் ஒரு குச்சி..கையில் விசிறி..இரண்டு சிரட்டைகள் ஆகியவற்றை மட்டுமே சொத்தாய் வைத்திருந்த யோகி ராம்சுரத்குமார்' ஐ யாம் எ பெக்கர். உனக்கும் சேர்த்து ஆண்டவனிடம் பிச்சை கேட்கிறேன்' என்பார். (நன்றி-விகடன்)

Tuesday, March 9, 2010

வள்ளுவனும்..கண்ணழகும்..

கயல்விழி,மான்விழி,குவளைக் கண் என கண்களைப் பாடாத கவிஞனே இல்லை எனலாம்.
காதல் ஏற்பட கண் பிரதான உறுப்பாய் அமைந்து விடுகிறது.காதலுக்கு கண்ணில்லை,கண்டதும் காதல் என்றெல்லாம் சொல்லப் படுகிறது.

கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..கண்கள் இரண்டும் உன்னைத் தேடுதே..கண்ணுக்குள் சிக்கிக் கொண்ட..கண்களும் கவி பாடுதே..கண்கள் இரண்டால்.. என்றெல்லாம் கவிஞர்கள் காதலுக்கும்..கண்ணிற்கும் முடிச்சுப் போட்டுள்ளார்கள். அவ்வளவு ஏன்..காதலியின் இதயத்தில் காதலன் நுழையும் வாசல் அவளின் கண்களே..என்பதை கவியரசு..'இதயத்தின் வாசல் விழியல்லவா?' என்கிறார் ஒரு பாடலில்..

இவர்களுக்கெல்லாம் முன்னோடி யார்..என்றால்..வழக்கம் போல வள்ளுவனே முன் நிற்கிறான்..கண்ணழகு பற்றி அவர் இன்பத்து பாலில் பல குறள்களில் சொல்கிறார்.முதலில் தலைவனைக் கவர்வதும்..கடைசிவரை நிற்பதும் தலைவியின் கண்ணழகே என்கிறார்.

காதலில் அடையும் ஐம்புலவின்பத்திலும் ..கண்டு, கேட்டு எனக் கண்,காது ஆகியவற்றலாகும் இன்பத்தை முதலில் குறிக்கிறார்.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து

தலைவி வீசும் விழிவேலுக்கு எதிராக தலைவன் அவளை நோக்க..அக்கணமே அவள் பார்வை..அவள் மட்டுமே தாக்குவது போதாது என்று தானையுடன் தாக்குவது போல இருந்ததாம்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

எமனைப் பற்றி தலைவன் ஏதும் அறிந்ததில்லை..ஆனால் எமன் எனப்படுபவன் பெண்ணுருவில் வந்து போர்த்தொடுக்கக் கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை தலைவியின் பார்வையால் அறிகிறானாம்.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்

பெண்மையின் வார்ப்படமாக திகழும் தலைவியின் கண்பார்வை மட்டும் மாறுபட்டு உயிரைப் பறிப்பது போலத் தோன்றுகிறதாம்.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்

தலைவியின் புருவம் மட்டும் கோணாமல் நேராக இருக்குமே யாயின்..அவள் கண்கள் அவனுக்கு நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யாதாம்.

இன்னுமொரு இடத்தில்..

பிணயேர் மடநோக்கும்.. என்கிறார்..பெண் மானைப் போன்று இளமைத் துள்ளும் பார்வையாம்...

(கண்ணழகு தொடரும்)

Monday, March 8, 2010

வாய் விட்டு சிரிங்க..

1) அந்த டாக்டர் வியாதியை மெல்ல மெல்லத் தான் குணப்படுத்துவார்னு எப்படி சொல்ற
தூக்கம் வரலேன்னு போனேன்..முதல்ல கொட்டாவி வர மருந்து தரேன்னு கொடுத்திருக்கார்

2)தலைவர் தன் சின்ன வீட்டை ஏன் தன் வீட்டு மாடியிலேயே குடியேற்றிருக்கார்
யாரோ அவர்கிட்ட 'keep it up ' ன்னு சொன்னாங்களாம்

3)என்னோட சமூகக் கதையைப் படிச்சுட்டு மர்மக்கதைன்னு சொல்றீங்களே
திரும்பத் திரும்பப் படிச்சும் என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியாமல் மர்மமாய் இருக்கே

4)எங்கப்பா சபாநாயகரா இருக்கறது தப்பாப் போச்சு
ஏன்
என் கல்யாணத் தேதியை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வச்சிட்டார்

5)நம்ம ஃப்ளாட்டும் அடுத்த ஃப்ளாட்டும் பக்கத்திலே பக்கத்திலே இருக்கறதாலே ஒரே problem
ஏன் அப்படி சொல்ற
அவங்க டிவி சேனலை மாத்தினா..நம்ம டிவிலேயும் சேனல் மாறுதே

6)டாக்டர் என் கணவருக்கு தூக்கத்தில நடக்கற வியாதி இருக்கு
அதுக்குப் போய் ஏன் இவ்வளவு கவலைப் படறீங்க
மத்தியானம் ஒரு மணிக்கு ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு நடந்து வந்துடறார்

Sunday, March 7, 2010

சட்டம் யார் பக்கம்..

சட்டம் ஒரு இருட்டறை..அதில் வக்கீல்களின் வாதம் விளக்கு ..என்றார் அண்ணா..

உண்மையில்..இந்த சட்டங்களை நினைத்தால் சில சமயம் சிரிப்புத்தான் வருகிறது.

உதாரணமாக..ஒரு கொலை நடக்கிறது..கொலையாளி என காவல்துறை ஒருவரை கைதி செய்கிறது.அவர்மேல் வழக்குப் பதிவு செய்து..நீதிமன்றத்தில் வழக்கு போடப் படுகிறது.குற்றவாளி ஜாமீனில் வெளிவருகிறார்..வழக்கு..குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வாய்தா..வாய்தா..என வருடக்கணக்கில் நடக்கிறது.இதற்கிடையே..குற்றம் சாட்டப்பட்டவர்..தன் மீதுள்ள குற்றப் பத்திரிகையின் நகல் ஆங்கிலத்தில் உள்ளது..அதை தனக்குத் தெரிந்த தமிழில் தர வேண்டும் என்கிறார்.நீதிமன்றமும் அதற்கான உத்தரவை பிறப்பிக்கிறது. ஆயிரக்கணக்கான பக்கங்களை மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப் படுகின்றனர்.(இவர்களது வக்கீல்களுக்கும் ஆங்கிலம் தெரியாதா? இது நாம்) அதற்கு ஆறுமாதங்கள் குறைந்தது ஆகிறது.

இதற்கிடையே..இந்த மாநிலத்தில் வழக்கு நடந்தால்..எனக்கு நேர்மையான தீர்ப்பு கிடைக்காது..ஆகவே..வேறு மாநிலத்திற்கு என் வழக்கை மாற்ற வேண்டும் என மனு கொடுக்கப் படுகிறது.(இங்கு எனக்குப் புரியாதது..வேறு மாநிலத்திற்கு மாற்றினாலும்..வாதியின் வக்கீல் வாதிக்காகவும்..பிரதிவாதியின் வக்கீல் பிரதிவாதிக்காகவும் தானே பேசப் போகிறார்கள்.)பின் நியாயம் கிடைக்காது என ஏன் சொல்லப் படுகிறது? இவர்களுக்கு அப்போது சம்பந்தப்பட்ட மாநில நீதிபதியின் மீது நம்பிக்கையில்லையா? அப்படியானால் அது condemn of court இல்லையா?

அதற்கேற்றாற் போல மாற்றப்பட்ட வழக்கு..அந்த மாநில மொழியில் மீண்டும் மொழி பெயர்க்கப் படுகிறது..ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும்..

இதுதான் இப்படி என்றால்..ஒரு வழக்கு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப் பட்டதும்..உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு..பின் உயர் நீதி மன்ற பென்ச், பின் உச்ச நீதி மன்றம், பின் உச்ச நீதி மன்ற பென்ச்....தவறு செய்பவரை இதற்குள் இயற்கை அழைத்துக் கொள்கிறது.

மேல்..மேல் நீதிமன்றம் என்றால்..நீதிபதிகள் தீர்ப்புகள் ஒரே மாதிரி இருப்பதில்லையா?

கொலை வழக்குதான் என்றில்லை..அரசியல்வாதிகள் மீது போடப்படும்..சொத்துக் குவிப்பு வழக்குகளும் இப்படியே..

இதையெல்லாம் பார்த்தால்..பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை..அப்படியே கிடைத்தாலும் அது காலம் கடந்த தீர்ப்பாய் தான் இருக்கும்..

ஏன் இப்படி..தவறு எங்கே..

சட்டம் கூட வளையும் தன்மைத்து போலும்..படை பலமும்..பண பலமும் இருந்தால்..என்ன விலை..என்று கூட கேட்கலாம் போல ..

Saturday, March 6, 2010

செய்நன்றி




கரையோரம்

கடலை வெறித்து நிற்கிறேன்

என்னால் இனி

எப்பயனும் இல்லையாம்

இவ்வளவு நாட்கள்

என் உழைப்பை

நொடியில் மறந்தனர்

என்னைப் போன்றோர்

கரையில் நிற்கக் கூடாதாம்

நீரில் பயணிக்க வேண்டுமாம்

என்னுடன் பயணித்த நாட்களை

என்னால் உயிர் காப்பாற்றப் பட்டதை

எல்லாம் மறந்தனர்

செய்நன்றி கொன்றவர்கள்

Friday, March 5, 2010

நாஞ்சில் நாடனின் 'நீலவேணி டீச்சர் ' சிறுகதை


வார இதழ்களில் சிறுகதைகளே அதிகம் வருவதில்லை என வாசகர்கள் சொல்வதும்..சிறுகதைகள் இப்போதெல்லாம் அதிகம் படிக்கப்படுவதில்லை என இதழ் ஆசிரியர்கள் தரப்பு சொல்வதும் வாடிக்கையாய் விட்டது.ஆனால் பல சிறுகதைகள் இன்னமும் நம்மால் மறக்கப் படாமல் மூளையின் ஒரு ஓரத்தில் சப்பணம் போட்டு அமர்ந்துக் கொண்டு இருப்பது என்னவோ உண்மை.அப்படிப்பட்ட அருமையான ஒரு சிறுகதை ஒன்றை நீண்ட நாட்களுக்குப் பின் இந்த வார விகடனில்(10-3-10) படித்தேன்..உங்களில் எத்தனைப் பேர் அதைப் படித்திருப்பீர்கள் எனத் தெரியாது.படிக்கவில்லையெனில்..கண்டிப்பாக தேடி எடுத்துப் படியுங்கள்.

அந்தக் கதை..நாஞ்சில் நாடன் எழுதியுள்ள 'நீலவேணி டீச்சர்' என்னும் கதை.திருமணமாகா முதிர் கன்னியின் கதை.இந்த இடுகை ஒரு திறனாய்வு இல்லை..அவர் எழுத்து நடை பற்றியது.அவர் எழுத்தென்னும் தேனில் சில துளிகள்.

'எல்லோருக்கும் ஒரு நினைப்பு..39 வயதிலும் திருமணமாகவில்லை.பாலுறவுக்கு கொதித்துக் கொண்டிருப்பாள் என.கனிந்த ரஸ்தாளிப் பழம் போல..தொடப் பொறுக்காமல் கையோடு அடர்ந்து வந்துவிடும் என்று'

'பொதுவாகவே..தமிழாசிரியை என்றால் யாவர்க்கும் இளப்பம்தான்..'அன்னா தமிள் போகுது' என்றால், உடன் பணிபுரிபவரும்'என்ன தமிள் இன்னிக்கு விடுப்பா' என்கிறான்

'உன் முத்தம் என்னுதட்டில் அக்கினித் திராவகமாக எரிந்தது'. உதட்டையே அரித்துத் தின்னும் முத்தங்கள் போலும்'

முகங்கள் புதுப் பொருள் எதனையும் புலப்படுத்துவது இல்லை.அலுப்பு,ஆயாசம்.ஆசை,அலப்பு எனக் குறிப்பான சில பொருட்கள் தவிர்த்து உற்சாகமான முகங்கள் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே வாய்க்கின்றன.

ஐந்து பவுன்பேரத்தில் தட்டியது..மாற்றல் கிடைக்காது என வழுக்கியது..நிறக்குறைவு என நிராகரிப்பானது..மூங்கில் கழிப்போல் என்றும், முன் பல் தூக்கல் என்றும், வக்கை நாடி என்றும்,ஏறு நெற்றி என்றும்,கொக்குக் கழுத்து என்றும், கூனல் முதுகு என்றும், மூல நட்சத்திரம் என்றும்...என்ன 'உம்' கொட்டுகிறீர்கள்...நாற்பத்தியிரண்டையுமா சொல்லவியலும்?

தெரிவை கடந்த இறுதிப் பருவம்..பேரிளம் பெண்..நாற்பதுக்கு மேல் நாடி ஒடுங்குவது வரை..ஒப்பனைகள் சில காலம் முகத்தில் பொய் எழுதும்..பின்பு ஒப்பனைகளும் சண்டையில் தோற்றதாயின் இளிப்புக் காட்டும்.காசுடையவர் காதின் பின் பக்கம், நாடியின் கீழ்ப்பக்கம் கீறித் தோலிழுத்துக் கட்டி..சுருக்கங்கள், தொய்வுகள் அகற்றி முகத்தை விறைப்பாக்கலாம்.மத்தளத்திற்கு வார் பிடிப்பது போல..தொய்ந்து தளர்ந்த தனங்களை எடுத்துக் கட்டலாம்.

ஆண் மனத்தோலைச் சுரண்டினால் அரிப்பெடுக்கும் சேனைக்கிழங்கின் சிவப்புத் தெரிகிறது..புளிவிட்டு அவித்தாலும் தணியாத அரிப்பு..ஊரல்..நாக்குத் தடிப்பு

அறிகுறிகள் சாற்றின, ஆண்டுகள் ஓரிரெண்டில் ஈஸ்ட்ரோஜன் அரணும் அழிந்துவிடும் என..

தின்ற தட்டுகளே எச்சில் எனில் திரும்பத் திரும்பத் துய்க்க என மொய்த்த கண்ணெச்சல் பெண்ணா? மொய்த்து, நிராகரித்து, சலித்து.ஊசிநூலிழுத்து, புளித்து, நுரைத்துப் புழு தெறித்து விழும் மெய்யா?

கூடத்தில் பாய் விரித்து, அப்பா..அம்மா..நீலவேணி..என்னும் வரிசைக் கிரமத்தில்..ஈழப்போர்க்களத்தில் அடுக்கிய பிணங்கள் போல தலையோடு பொதிந்து மூடி உறங்க என்பது நியதி

காலமென்னும் கொதிக்கும் எண்ணெய் உருளியில் முறுகிச் சிவக்கின்றன உறவுகள்

இப்படி அருமையான நாடனின் வரிகளை இக்கதையில் சொல்லிக் கொண்டே போகலாம்..தமிழ்ச்சுவை மனநிறைவை அளிக்கும் அதே நேரத்தில்..கதையின் கரு மன கனத்தை ஏற்படுத்துவதையும் தவிர்க்க இயலாது.

தவறாமல் படியுங்கள்..

நாஞ்சில் நாடன் Hats off to you

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(5-3-10)

1)இதுவரை சச்சின் ஐந்து உலகக் கோப்பை விளையாட்டுகளில் விளையாடியுள்ளார்.இதில் இந்தியாவிலும்..தென்னாப்ரிக்காவிலும் நடை பெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்து 'மேன் ஆஃப் தி சீரிஸ்' விருது பெற்றிருக்கிறார்.
இவருக்கும்..தமிழக முதல்வருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு..அது என்ன..தெரியாதவர்களுக்கு இடுகையின் முடிவில் பதில்.

2)முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு உரிமைகள் தமிழகத்தின் வசம் உள்ளது.ஆனால்..அதை பராமரிக்கவும்..தேவைப் பட்டால் உடைத்து செயல் இழக்கச் செய்யவும்..கேரள அரசுக்கு உரிமை உண்டு என கேரள அரசு இயற்றிய சட்டம் சொல்கிறது.சட்டம் செல்லாது என நாம் கோர்ட்டுக்கு சென்றால்..மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து ஐவர் குழு அமைக்க அறிவுறுத்துகிறது உச்ச நீதி மன்றம்.முன்னர் கர்நாடகா..காவிரி பிரச்னையில் நிதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை..இப்போது கேரளா..இவ்விஷயத்தில் ஐவர் குழுவிற்கு தமிழகம் பிரதிநிதி அமைக்கப் படமாட்டார் என கலைஞர் கூறியது முற்றிலும் சரி என்றே தோன்றுகிறது. சத்யமேவ ஜெயதே

3)சரித்திரம் என்பதற்கு வரலாறு என்று சொல்கிறோம்..வரலாறு என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? வரல்..ஆறு..வந்த வழி...என்பதே வரலாறு ஆயிற்று

4)சிலரை நாம் புரிந்துக் கொள்ளாததால் வெறுக்கிறோம்..சிலரை நாம் வெறுப்பதால்..அவர்களை புரிந்துக் கொள்ள முயல்வதில்லை

5)ஒரு குழந்தை பிறக்கையில் அதற்கு 350 எலும்புகள் உள்ளன.வயதான பிறகு 206 எலும்புகள் ஆகின்றன.குறிப்பாக மணிக்கட்டு,கால்,கை பகுதிகளில் உள்ள எலும்புகள் போகப் போக இணைந்துவிடுகின்றன.

6)கொசுறு ஒரு ஜோக்..

நான் இன்னிக்கு ஆஃபீஸ்ல தூங்கி எழுந்தப்போ மேலதிகாரி பார்த்துட்டார்
அப்புறம் என்ன ஆச்சு
டியூட்டி ஓவராயிடுச்சான்னு கேட்டார்


ஆரம்பக் கேள்விக்கான பதில்
சச்சின் ஐந்து உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆடியுள்ளார்..கலைஞர் இதுவரை ஐந்து முறை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

Thursday, March 4, 2010

மீண்டும் ஒரு சாமியாரை நம்பி மக்கள் பலி..



தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தை அழித்திடுவோம் என்றான் மீசைக்கவிஞன்.

ஆனால் அவன் இதைக் கூறி பல ஆண்டுகள் கடந்தும்..தனி மனிதர்கள் உணவின்றி வாடும் நிலை மாறவேயில்லை என்பதை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்று மீண்டும் நிருபித்துள்ளது.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது..பணவீக்கம் குறைந்து வருகிறது..உணவுப் பொருள்கள் அமோகமாக விளைந்துள்ளன..தனி மனிதன் வாங்கும் சக்தி உயர்ந்துள்ளது..இப்படியெல்லாம்..புள்ளிவிவரங்கள் எடுத்து விடப்பட்டு பாராளுமன்றத்தில் பிரதமரும்..நிதிமந்திரியும்..கூறினாலும்..ஊடகங்களில் ஆளும் கட்சிகள் விளம்பரப் படுத்தினாலும்..ஏழைகள் வாழ்வில் மலர்ச்சி இல்லை.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரதாப்கர் என்னுமிடம் அருகே கிரிபலு மஹராஜ் என்ற சாமியாரின் ஆசிரமம் உள்ளது.இந்த ஆசிரமத்தில் ராம்-ஜானகி கோவிலும் உள்ளது(!!!)இந்த சாமியாரின் மனைவியின்...(நம்புங்கள் மனைவிதான்.)நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற இருந்தது..நிகழ்ச்சியில் அன்னதானம் உண்டு.நல்ல உணவு உண்ணலாம் என ஏழை மக்கள் அங்கே..தங்களது குழந்தைகளுடன் திரண்டனர்..

ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலை என்று ஒரு சொலவடை உண்டு..

அதுபோல கூட்டத்தைக் கண்டதும்..உணவு தனக்குக் கிடைக்குமோ..கிடைக்காதோ என ஒவ்வொருவர் மனதிலும் எண்ணம் எற்பட்டது போலும்..உணவுபொட்டலங்கள் கொடுக்க கதவு திறந்தபோது...மக்கள் நெருக்கியடித்துச் செல்ல..கதவு உடைந்து விழுந்தது.இதனால் பீதியுற்ற கூட்டம்..ஓடத் தொடங்க..நெரிசலில் சிக்கி 26 குழந்தைகள்..39 பெண்கள் உட்பட 65 பேர் பலியாயினர்.நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.வயிற்று பசிக்காக ஏற்பட்ட சாவுதான் இது.பசிக்கொடுமைதான் இதற்குக் காரணம்.

மீண்டும் இடுகையின் முதல் வரியைப் படிக்கவும்..

ஆனால்..ஜகம் அழியவில்லை..அழிந்தது அரசியல் தலைவர்களோ..ஊரை ஏமாற்றி மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் பிடுங்கிய சாமியார்களோ அல்ல..அழிந்தது அப்பாவி ஏழை மக்கள்..

ஆனால்..இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல்..இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டைஎண்ணை நோக்கிச் செல்கிறது..என புள்ளி விவரத்தை அள்ளிவிட்டால் போகிறது தலைவர்களுக்கு.

Wednesday, March 3, 2010

தமிழகம் ஸ்தம்பித்தது...

செவ்வாய்க்கிழமை இரவு..அந்த செய்தியை..தனியார் சேனல் ஒன்றில் பார்த்த ஒட்டு மொத்த தமிழகமே ஸ்தம்பித்து நின்றது.

தமிழன் உணவு..உறக்கம் மறந்தான்..

பாராளுமன்றத்தில்..பெட்ரோல்..டீசல் விலை வாசி உயர்வு பற்றி நடைபெறும் நிகழ்வுகள் பற்றி அவன் கவலைப் படவில்லை..

..குடிசைகள் அகன்று ஆறு ஆண்டுகளில் வீடு கட்டிக்கொடுக்கப் படும் என்று அறிவித்த அரசு..அதன் முதல் கட்டமாக திருச்சியில் நடத்திய நிகழ்ச்சி பற்றி அவன் தெரிந்துக் கொள்ள ஆசைப்படவில்லை..

சேது சமுத்திர திட்ட வேலைகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மைதான்..மாற்று பாதையை விட திட்டமிட்ட பாதையே சிறந்தது..உச்ச நீதி மன்றம் முன் அது கேள்விக் குறியாய் உள்ளது..என்ற முதல்வரின் செய்தியை..புறக்கணித்தான்..

எங்கு நோக்கினும்..நலமா? என விசாரிப்பவர்கள் கூட செய்தியை படித்தீர்களா? என்றே முதலில் கேட்டனர்.

காஞ்சிபுரம் அர்ச்சகர் வழக்கில் கூட..அவர் இச்சைக்கு அவர்கள் சம்மதத்தோடு ஈடுபட்டவர்கள் , பெயரும் ஊடகங்களில் மாற்றியே கொடுக்கப் பட்டது.அப்பெண்களிடம் ரகசிய விசாரணை செய்யப்பட்டது..

ஆனால்..நேற்று சம்பந்தப்பட்ட நடிகை பெயர் வெளியிடப்பட்டது..அவரும் ஒரு பெண்..சந்தர்ப்ப..சூழ்நிலைகள்..அவரின் மணவாழ்வு முறிவு..அமைதித் தேடி..ஆன்மிகம் நாடி..சென்றவர்..அந்த சாமியாரால் exploit செய்யப் பட்டார்.அவரின் நிலைக் குறித்து சற்றும் நினைக்கவில்லை ஊடகங்கள்..அதற்காக அவர் செய்தது சரி என நான் கூறவில்லை..அவரிடமும் ரகசிய விசாரணை..கோர்ட்,கேஸ் என வரும்போது செய்திருக்கலாம்.

மற்ற விபசார வழக்குகளில் சிக்கும் பெண்களின் அடையாளங்களை மறைத்து..பெயரையும் மாற்றி சொல்லும் ஊடகங்களும்..காவல் துறையும்..இவ்வழக்கில் கேள்விக் குறியான நடிகையும் ஒரு பெண் என்பதை மறந்ததேனோ?

Tuesday, March 2, 2010

இப்போதைய படங்கள் ஓடாதது ஏன்..?

இப்பொழுதெல்லாம்..வெளிவரும்..பெரும் செலவில் எடுக்கப்படும் படங்களும்..முதல் இரு வாரங்கள்..அதிக திரையரங்குகளில் ..அதிகக் காட்சிகள் திரையிடப் படுகின்றன.இரு வாரங்கள் கழித்து..கலெக்க்ஷன் குறைய ஆரம்பிக்க..அடுத்து வரும் படத்திற்கு இடம் கொடுக்க இவை எடுக்கப்படுகின்றன. சமீபத்திய உதாரணம்..ஆயிரத்தில் ஒருவன்,குட்டி,அசல்.,

பட சம்பந்தப் பட்டவர்கள் முதல் இரண்டு வாரங்களில் அசலை எடுத்தால் தான் உண்டு.

முன்பெல்லாம்..சில தயாரிப்பாளர்கள்..தங்கள் படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் உண்டு என்பார்கள்..இப்போது அப்படியில்லை..ஒரு முறை பார்க்கும் ஆடியன்ஸ் கூட இல்லை.

படத்தின் பிரம்மாண்டத்தை விளம்பரப்படுத்தி..பணம் செலவழித்து விமரிசனங்கள் எழுதச்சொல்லி..மக்களுக்கு படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை எற்படுத்த முயற்சிக்கப் படுகிறது.

நன்கு விளம்பரப் படுத்தப் பட்டு..நல்ல கதையம்சம்..ஸ்டார் வேல்யூ..சிறந்த இயக்குநர் என்று இருந்தால் முதல் வாரம் கூட்டம் வருகிறது.பின் வாய்மொழிப் பரவுவதாலேயே படங்கள் ஓடுகின்றன.இது குறைந்த பட்ஜெட் படங்களுக்கும் பொருந்தும்..

போட்ட பணம் வந்தால்..சம்பந்தப் பட்ட படத் தயாரிப்பு நிறுவனம்..அடுத்த பட வேலைகளை ஆரம்பிக்கின்றனர்.

இங்கேயும்..முன்பு போல விநியோகஸ்தர்கள்..அட்வான்ஸ் கொடுப்பதில்லை.முன்னர் எல்லாம் பூஜை போட்டதுமே..எல்லா எரியாக்களும் விற்கப்பட்டு விடும்.இப்போது அப்படியில்லை.பலமுறை படம் போட்டுக் காட்டப்பட வேண்டியுள்ளது.காரணம் நூற்றுக் கணக்கான படங்கள் ஆண்டுதோறும் வந்தாலும்..வெற்றி பெறுபவை..விரல் விட்டு எண்ணும் அளவே ஆகும்.போதும் போதாதற்கு..மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்..மால்கள்..உணவகங்கள்..பனி விளையாட்டுகள் ..என படம் பார்க்கச் செல்பவர்கள் பர்ஸை இளைக்க வைக்கும் இடங்கள்.

ஒரு குடும்பத்தலைவன்..குறைந்த பட்சம் பத்தாயிரம் சம்பாதிக்கிறான் என்றால்..வார இறுதியில் குடும்பத்துடன் ஒரு படத்திற்குச் சென்றால்..குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது.தவிர்த்து..வீட்டை விட்டு வெளியே வந்து ஆட்டோ..பஸ்..என டிராஃபிக் நடுவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு..பெரும் பாடு பட்டு ..சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ள அவன் தயார் இல்லை.

ஆகவே தான் ஒரு காமன் மேன் அதிகபட்சம் அறுபது ரூபாய் செலவு செய்து குடும்பத்துடன் தன் வீட்டு டி.வி.முன்..புது பட டி.வி.டி.,யையோ, சி டி யையோ..அவை மழை பொழியும் பிரிண்ட் ஆனாலும்..பைரஸி பற்றிக் கவலைப் படாமல் பார்த்து விடுகிறான்.

படம் வெளிவந்து சில வாரங்கள் தங்கள் விருப்பம் போல திரையரங்குகள் டிக்கெட் விலையை ஏற்றுவதும்..சில வாரங்கள் கழித்து..கட்டணத்தைக் குறைக்கும் நேரம் அவன் படத்தை பார்த்து விட்டு..அடுத்த படம் பார்க்க தயாராய் ஆகி விடுகிறான்.

Monday, March 1, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 14

எல்லா மொழிகளிலும்..சில வார்த்தைகள் இடம் வலம் படித்தாலும்..வலம் இடம் படித்தாலும் அதையேச் சொல்லும்..

உதாரணத்திற்கு தமிழில் சில உறவுகள்..தாத்தா, மாமா, பாப்பா போன்றவற்றை சொல்லலாம்.

ஆங்கிலத்தில் malayalam, idappadi போன்றவற்றை சொல்லலாம்.

சுஜாதா அவர்கள் தனது கற்றதும் பெற்றதும் தொகுப்பில் இது பற்றி கூறுகிறார்.

Redivider இந்த வார்த்தையை இடம் வலமாகவும்..வலம் இடமாகவும் ஒரே மாதிரி படிக்க முடியும்.இவற்ரை 'பாலிண்ட்ரோம்' (Palindrome) என்பார்கள்.

வாக்கியத்திற்கு 'Murder for a jar of red rum' என்பது எளிய உதாரணம்.

ஆங்கிலத்தில் பாலிண்ட்ரோம்களை போட்டி போட்டுக் கொண்டு செய்கிறார்கள்.உலகின் மிக நீளமான பாலிண்ட்ரோம் 19000 எழுத்துகளுக்கு மேற்பட்டதாம்.

தமிழில்

மோரு போருமோ

விகடகவி

தேருவருதே

போன்ற சிறு உதாரணங்கள் மட்டுமே இருப்பதாக எண்ண வேண்டாம். 'மாலைமாற்று' என்கிற பாவகையே உள்ளது.இதில் தேர்ந்தவர் திருஞான சம்பந்தர்.'மாலை மாற்றாக' பதினோரு குறளைச் செய்யுள்களாக பாடியுள்ளார்.

யாமாமா நீயாமா மாயாழீ காமா
காணாகா காணா காமா காழீயா
மாமாயா நீ மாமாயா

அற்ப மனிதர்களால் ஒன்றும் பண்ண முடியாது.மகாசக்தி வாய்ந்த இறைவா உன்னால் தான் முடியும் என்பதே இதன் பொருளாகும்.

கேபிள் படத்திற்கு கதை விவாதம்..

(இது நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது..யார் மனத்தையும் புண்படுத்த அல்ல)

படம் இரண்டு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என முன்னமயே சொல்லிவிட்டதால் உ.த., விவாதத்தில் முதலில் வெளிநடப்பு செய்கிறார்.

கேபிள்- என் கோரிக்கையை ஏற்று..இவ் விவாதத்தில் பங்கு பெற வந்ததற்கு நன்றி.முதல்ல நான் என்ன சொல்ல வரேன்னா..நம்ம விருகம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு ஒட்டி..வலப்பக்கம் திரும்பினா..'அய்யனார் ஒட்டல்னு ஒன்னு இருக்கு..அங்கே சாதம்..சும்மா அஜீத் கணக்கா..அதாங்க தும்பப் பூ கணக்கா இருக்கும்..கூடவே ஆட்டுக்கால் குழம்பு கொடுப்பாங்க..சாத்தில அதைக் கொட்டி..ஒரு பாத்திக் கட்டி அடிச்சோம்னா அடடா..என்ன ருசி தெரியுமா..

அதிஷா- (மனதிற்குள்) சம்பளம் வாங்கியதும் இராக் ஓட்டல் போறதை விட்டு..அய்யனாராம்..ஓட்டலாம்..

அப்துல்லா_ கேபிள்..நாம கதை விவாதத்திற்கு வந்திருக்கோம்..

கேபிள்- ஆமாம்..ஆமாம்..கதைக்கு பேர் கூட செலக்ட் பண்ணிட்டேன்..லெமன் ட்ரீயும்..இரண்டு ஷாட் டக்கீலாவும்...

தண்டோரா-சேச்சே..அந்த தலைப்பை வச்சா..ஏதோ மலையாள டப்பிங் படம்னு நினைச்சுப்பாங்க..தவிர..தமிழ் தலைப்பா இருந்தா..அரசாங்க வரி விலக்கும் கிடைக்கும்..

நர்சிம்- தமிழ் தலைப்புன்னா..'கம்பர்' ன்னு வைச்சுடலாம்.படத்தில கம்ப ராமாயணத்தில..சீதை குளிக்கிறமாதிரி சீன்ல..கம்பர் சொல்ற பாட்டையே போட்டுடலாம். குறுந்தொகையில பல்லி கத்தற மாதிரி ஒரு பாட்டு இருக்கு அதையும் போட்டுடலாம்.

பைத்தியக்காரன்-ஒரு காட்சியில் நம்ம கதாநாயகனுக்கு வெளிறிய அமைதியினுடே முகத்தில் துக்கத்தின் புன்னகை ஒளிருகிறது.வாழ்க்கையை அவன் நேசிப்பதாகச் சொல்வதாய் தெரிகிறது..இப்படியே காட்சிகள் அமைத்துக் கொண்டு போகலாம்


ஜ்யோவ்ராம்-சிவராமன் சொல்றது நல்லா இருக்கு..அதைக்காட்டிட்டு..எங்கிட்ட சிவாஜி..எம்.ஜி.ஆர்., சண்டை..ஸ்ரீதேவி..அப்படி..இப்படின்னு ஒரு பாட்டு இருக்கு..அதை குத்துப் பாட்டா போட்டுடலாம்..

தண்டோரா-(மெதுவாக) எவ்வளவு நாளானாலும் 'குத்து' மறக்கமாட்டார் போல இருக்கே..

நர்சிம்- என்ன..அப்துல்லா அண்ணன் ஒன்னும் பேசல

அப்துல்லா- நான் பேச என்ன இருக்கு..என் வீட்டிலேயே கம்பெனியை வைச்சுக்கலாம்..யார் வேணும்னா வந்து தங்கிக்கலாம்..எல்லாருக்கும் கேடரிங் என் செலவு.

கேபிள்- இதுக்கு என்ன கைமாறு செய்யப் போறோமோ..

தண்டோரா- நம்ம ஒடம்பை செருப்பா தைச்சு அண்ணனுக்கு போட்டுடலாம்

கேபிள்-(தனக்குள்) அடடா..காலைலயே ஆரம்பிச்சுட்டார் போல இருக்கே

அப்துல்லா-கைமாறு அப்படி இப்படின்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம்..எனக்கு படத்தில இரண்டு பாட்டு பாட சந்தர்ப்பம் கொடுங்க போதும்

(அப்போதுதான் கார்க்கி உள்ளே நுழைகிறார்)

கார்க்கி- சாரி..இந்த பப்லு வால கொஞ்சம் லேட்டாயிடுச்சு..மேலும் நான் வரும்போ சிக்னல்ல ஒரு இளம் பொண்ணு வண்டியை நிறுத்தி எங்கிட்டே..'நீங்க கார்க்கி தானே'ன்னு கேட்டுட்டு..ஒரேயடியா பாராட்ட ஆரம்பிச்சுட்டாங்க..

நர்சிம்- அடடா..தன் புராணத்தை ஆரம்பிச்சுட்டாரே..விட்டா அவ்வளவுதான்..தற்புகழ்ச்சிக்கு இலக்கியத்துலே..

கார்க்கி-(அவரை சட்டைசெய்யாமல்)கேபிள்..கதை விவாதம் முடிஞ்சுதா..வேணும்னா பரிசல் கதை ஒன்னு சொல்லியிருக்கார்...

கேபிள்- வேண்டாம்..எல்லாம் நான் தீர்மானிச்சுட்டேன்..பணம் மட்டும்தான் இப்போ பிரச்னை..

அதிஷா- அப்படி எல்லாமே நீங்க தீர்மானம் பண்ணிட்டா எப்படி..இன்னும் லக்கி வேற வரலே..

கார்க்கி- அதானே..அப்ப நாங்க எதுக்கு..நாங்க என்ன ஸ்கூல் பசங்களா..லாலிபாப் கொடுத்துடுவீங்க போல இருக்கே

(திடீரென சப்தம் அதிகமாகிறது..ஒவ்வொருவர் கத்துகின்றனர்)

தண்டோரா- என்ன நடக்குது இங்க..

(உள்ளே நுழைகிறார்..வடகரை வேலன்..அங்கு சத்தம் நிலவுவதைப் பார்த்து)

வேலன்- எங்க வந்தாலும்..இந்த சண்டையை தீர்த்துவைக்கறதே நம்ம வேலையாய்ப் போச்சு..(சமாதான முயற்சியில் இறங்க)

(எதைப் பற்றியும் கவைப்படாமல் எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆதி)