Sunday, December 30, 2018

2018...திரும்பிப் பார்க்கின்றேன்


(இறைவன் கொடுத்த வரம்" நாடகத்தில் பங்கு பெற்ற நன்பர்களுடன்)
2018

இந்த ஆண்டு எனக்கு எப்படி அமைந்தது...

வாழ்க்கை ஏட்டினை புரட்டுகின்றேன்..

சென்ற ஆண்டு எனது கதை, வசனம், இயக்கத்தில் சௌம்யா குழுவினர் அரங்கேற்றிய "இறைவன் கொடுத்த வரம்" சிறந்த கதைக் கருவினைக் கொண்ட நாடகமாக மைலாப்பூர் அகடெமியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு விருது வழங்கப்பட்டது.

இதே நாடகத்தில் நடித்த ஃபாத்திமா பாபு, பி டி ரமேஷ் சிறந்த நடிகை, நடிகருக்கான விருதினை மைலாப்பூர் அகடெமியினரால் மேற்சொன்ன நாடகத்திற்காகப் பெற்றனர்.

ஆண்டாளைக் குறித்து பிரச்னைப் பேச்சுகள் எழ..."நாச்சியார் திருமொழி"யை நூலாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட "திருமொழி" நூலாக வெளி வந்தது

அமெச்சூர் நாடகங்களின் பிதாமகர் என்றழைக்கப்படும் அமரர் திரு ஒய் ஜி பார்த்தசாரதியின், யூஏஏ குழுவினரின் 66 ஆண்டுகளின் சாதனையை ,ஒய்ஜிபியின் நூற்றாண்டு நிகழ்வுகளின் போது நூலாக வெளியிடும் எண்ணம் எனக்கு உண்டாக, அதை மகேந்திரனிடம் நான் கூறினேன்.

மகேந்திரனின் ஒப்புதல்களுடன்,நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் திரைப்பட நடிகர் சிவகுமார் "யூஏஏ எனும் ஆலமரம்" என்ற பெயரில் நூல் வெளியானது.

2008ஆம் ஆண்டு பல விருதுகளைப் பெற்ற "மாண்புமிகு நந்திவர்மன்:" எனும் அரசியல் நையாண்டி நாடகத்தை "மீண்டும் நந்திவர்மன்" என ரசிகர்கள் எண்ணும் படியாக நாடகமாக்கி மேடையேற்றினேன்

நண்பர்கள் அம்பி ராகவன், கிரீஷ் வெங்கட்ஆகியோர் புதிதாக நாடகக் குழுவினை ஆரம்பித்தனர்.தமிழ் நாடகங்களில் இளைஞர்கள் பங்கு அதிகமாக ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தபடியால்..இவர்களை ஊக்குவிக்கும் முறையில் "பௌர்ணமி நிலவில்" என்ற நாடகத்தை இவர்களுக்காக எழுதி அவர்களையே இயக்கச்சொன்னேன்.. 

2018ல் என்னால் நாடக உலகிற்கு செய்ய முடிந்தது இவைதான்.

2019ல்..

நிறைய செய்ய ஆவல் உள்ளது..
பார்ப்போம்...எந்த அளவில் மனமும்..உடலும் ஒத்துழைக்கப் போகிறது என்று..

2018ஏ உனக்குப் பிரியா விடை அளிக்கின்றோம்.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிகிறோம்..
2019ஏ உன்னை அன்புடன் வரவேற்கின்றோம்.

அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Thursday, December 27, 2018

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

4-1-19ஆம் நாள் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது.அதில் நீங்கள் வாங்க வேண்டிய நான் எழுதியுள்ள புத்தகங்களின் வரிசை - 1
"திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்"

வைணவத்தில் இவ்வளவு விஷயங்களா? என நம்மை வியக்கவைக்கும் விவரங்கள் அடங்கிய புத்தகம்.அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.


இந்த புத்தகம் பற்றி தினமணியில் வந்துள்ள விமரிசனம்
--------------------------------------------------------------------------------------- 
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் - டி.வி.ராதாகிருஷ்ணன்;  பக். 120; ரூ.80; வானதி பதிப்பகம், சென்னை-17. 
திவ்யதேசம் நூற்றி எட்டினுள் ஒன்று திருக்கோளூர்.  நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட இந்த ஊருக்கு ஒருமுறை ஸ்ரீராமானுஜர் செல்லும் போது,  அவ்வூரிலிருந்து பெண்மணி ஒருத்தி அவ்வூரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்துக் காரணம் கேட்கிறார்.

"காரணம், ஒன்றா இரண்டா? முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன? ' என்று கூறும்  அப்பெண்மணி,  அருளாளர்கள் 81 பேரின் அருஞ்செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி,  ""இவர்களைப் போல நான் எதையும் செய்யவில்லையே... எனக்கு இந்த ஊரில் வசிக்க என்ன தகுதி இருக்கிறது?'' என்கிறாள். அவள் கூறிய காரணங்கள் ஒருசிலவற்றைப் படிக்கும்போதே  நமக்கும் ஒருவித ஏக்கம் பிறக்கிறது.
"ஆண்டாளைப் போல சிறு வயதிலேயே ஞானம் பெற்று எம்பெருமானை நான் அடையவில்லையே'; "வசுதேவர் கண்ணனிடம் ஆழியை மறைத்துக்கொள்ளச் சொன்னவுடன் எம்பெருமானும் மறைத்துக் கொண்டாரே... அந்த பாக்கியத்தை நான் செய்யவில்லையே'; "ஆழ்வார்கள் தங்களை யசோதையாகப் பாவித்து கண்ணனைக் கொண்டாடினார்களே. அந்த அளவிற்குப் பெருமை வாய்ந்த யசோதையாக நான் இல்லையே'; 
"ஸ்ரீராமன் பாதம் பட்ட அகலிகையாக நான் இல்லையே...'; "தொண்டைமானைப் போல  நான் பக்தியில் சிறந்தவளாக இல்லையே...'; "கூனியைப் போல கண்ணனுக்கு சந்தனம் பூசக் கொடுத்தேனா, இல்லையே...'; "கண்ணனுக்காகத் தன் உயிரைவிட்ட அந்தப் பெண்மணியைப் போல் (முனிபத்தினி) நானும் உயிரை விடவில்லையே'; "விதுரரைப் போல அகம்  ஒழிந்து விடவில்லையே... (இறைவன் மனதில் குடியேறினால் அகம் (அகங்காரம்) ஒழிந்துவிடும்) அதனால் இவ்வூரை விட்டுச் செல்கிறேன்'' என்கிறாள். வைணவர்கள் மட்டுமல்லர், எம்பெருமானை பக்தி செய்வோர் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ரகசியம் இந் நூல். 

Wednesday, December 26, 2018

பிஜேபி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா?

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேற்தல் முடிவுகள் குறித்து  செய்திகள் தரும் ஊடகங்களும் சரி, கட்சிகளும் சரி சரியான தகவல்களைத் தருவதாக நான் எண்ணவில்லை.

அவை கண்டிப்பாக பி ஜே பிக்கு பின்னடைவுதான்.ஆனால் சரிவு அல்ல.

எந்த மாநிலமாயினும் சரி.. சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக பெரும்பாலும் இருப்பதில்லை.அப்படிப்பட்ட நிலையில் மத்தியபிரதேசத்திலும் அந்நிலை காணப்படுவதில் ஆச்சரியமில்லை.மேலும்..வாக்குகள் சதவிகிதமும் வென்ற அணிக்கும், தோற்றவர்களுக்கும் பெரும் சதவிகிதத்தில் இல்லை.ராஜஸ்தானிலும் இதே கதைதான்.

இன்றைய நிலையில், வலுவான கூட்டணி யார் அமைக்கிறார்களோ அந்தக் கூட்டணியே வெல்லும் என்ற நிலைதான்.

பாராளுமன்றத் தேர்தல் எனும் போது...சட்டசபைத் தேர்தலுக்கான மக்களின் மனப்பாங்கு மாறக்கூடும்.சென்ற சில தேர்தல்களில் கூட நாம் இதைப் பார்த்திருக்கிறோம்.

உண்மைநிலை என்னவெனில்...இன்றைய நிலவரப்படி காங்கிரஸ் பெரியதாக வளரவும் இல்லை..பி ஜேபி பெரிதாகத் தேயவுமில்லை.

இம்முறை எந்த ஒரு தனிக்கட்சியும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தோன்றவில்லை.

பெரும்பாலான இடங்களை வென்ற அணி...கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும்.

மீண்டும் தேவகௌடாக்களுக்கும்,சந்திர சேகர்களுக்கும், குஜரால்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் வந்தாலும் வரலாம்


Saturday, December 22, 2018

வள்ளுவன்

வள்ளுவனின் ஒவ்வொரு குறளிலும்ஆழ்ந்த அரத்தம் இருக்கும்.
உதாரணத்திற்கு இந்தக் குறளைப் பாருங்கள்..

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"

ஒருவருக்குத் தீக்காயம் ஏற்படுமேயாயின்..அது ஆறக்கூடியதாயினும், ஆறியபின் அதன் வடு உடலில் இருக்கும்.

ஆனால்..ஒருவரை, மற்றவர் காயப்படும்படி பேசினால், அப்படிப் பேசப்பட்ட பேச்சு காலப்போக்கில் இருவரும் மற
ந்துவிடுவார்.ஆனாலும், .தீயினால் சுட்ட வெளி வடு போல அல்லாது..மனத்திற்குள் அவ்வடு காயப்பட்டவர் மனதில் ரணமாய் ஆறாமல் என்றுமிருக்குமாம்.

தீக்காயம் ஆறும் ஆனால் வடு மறையாது
மனக்காயம்  வடு இன்றி மறைந்தாலும், அதனால் ஏற்பட்ட ரணம் உள்ளே ஆறவே ஆறாது.

ஆகவே..மறந்தும்எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவர் மனது புண்படும் வார்த்தைகளை பேசிவிடக் கூடாது.

Friday, December 14, 2018

சாகித்ய அகடெமி விருதுகள்

இந்தக் கட்டுரை "சாகித்ய அகடெமி" விருதுகள் பற்றியோ அல்லது அதைப் பெற்றவர்கள் தகுதிகள் குறித்தோ எழுதப் பட்டதல்ல என்பதை மனதில் இருத்திக் கொண்டு படிக்கவும்.

இந்த ஆண்டு சாகித்ய அகடெமி விருது பெற்றவரின் நாவல்  2014 ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பட்டது.

விருது பெற்றவர் பெயர் வெளியாவதற்கு முன் சில பிரபல எழுத்தாளர்கள் பெயர்கள் உலா வந்தன..

எனக்கு எழுத்துள்ள சந்தேகம்..

1)தேர்வுக்கான எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்த பின் அவர் எழுதியுள்ள நாவல்களைப் படித்து (எப்போது எழுதி இருந்தாலும் பரவாயில்லை என)தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறதா?

2)அல்லது பிரசுரமாகியுள்ள அனைத்து எழுத்தாளர்களின் எழுத்துகளை , அது பதித்து எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை என பார்க்கப்படுகிறதா? (இது சாத்தியமில்லை)

3)இல்லை..விருதிற்காக சில எழுத்தாளர்களின் எழுத்துகளே படிக்கப் படுகிறதா?


பின் எப்படி ஒரு எழுத்து 4 ஆண்டுகளுக்குப் பின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறது?அத்ற்குப் பிறகு இந்த எழுத்தாளர் எவ்வளவோ எழுதி விட்டாரே!

மேலே சொன்ன முதல் காரணப்படி எனில், பல எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகள் இவர்கள் கண்களில் படாமல் போகும் சந்தர்ப்பங்கள் அதிகமாயிற்றே!

விவரம் அறிந்தவர்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்களா?

Thursday, December 6, 2018

அடுத்தவீட்டு ஜனன்ல் - 17

_________________
எஸ்.ராதாகிருஷ்ணன்  (ராது)
____________________________

1962ஆம் ஆண்டு..இந்திய-சீன யுத்தம் நடக்கிறது.மக்கள் தங்களால் ஆன நன்கொடைகளை யுத்தநிதியாக வழங்கி வருகின்றனர்,
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் சென்னைக் கிளையும் ஒரு நாடகம் நடத்தி யுத்தநிதியினைத் திரட்ட நினைத்தது.
இதுநாள்வரை பிற நாடகக் குழுக்களின் நாடகங்களைக் கண்டு ரசித்து வந்த ரிசர்வ் வங்கி ஊழியர் ராதாகிருஷ்ணன்  'ஜெயம் நமதே"என்ற நாடகத்தை எழுதினார்.இது இவரின் கன்னி முயற்சி.
இவரே, பினனாளில் நாடக உலகில் ராது என அறியப்பட்ட பெரும் சக்தியாய் திகழ்ந்தார்.
தன் நண்பர்களுடன் சேர்ந்து "கீதா ஸ்டேஜ்" என்ற குழுவினை ஆரம்பித்தார் ராது. இன்றும் மக்களால் மறக்க முடியாத 45 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு நடிகர்களால் நடிக்கப்பட்ட "கல்யாணத்தில் கலாட்டா" என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.
இவரது அடுத்த நாடகம் "வாய்ச்சொல்லில் வீரரடி"
இந்நிலையில், ஆனந்த விகடனிலும் பின்னர் இதயம் பேசுகிறது என்ற பத்திரிகையிலும் ஆசிரியராய் இருந்த மணியன், "மயன் தியேட்டர்ஸ்" என்ற குழுவினை ஆரம்பித்து அதை ராதுவிடம் ஒப்படைத்தார்.
"சப்தஸ்வரங்கள்" நாடகம் அரங்கேறியது.அதில், பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ தங்கவேலுவும். எம் சரோஜாவும் நடித்தனர்
இவரால் நாடக மேடைக்கு வந்தவர்கள் ஏராளம்.காத்தாடி ராமமூர்த்தி, வி.கோபாலகிருஷ்ணன், நவ்ரங் விசு,அறந்தை மணியன் ஆகியோர் இவர் குழுவில் நடித்தவர்கள்

1983ல் ஒரே நாளில் "கல்யாணத்தில் கலாட்டா" நாடகம் எட்டு முறை நடத்தப் பட்டு லிம்கா புக் ஆஃப் ரிகார்ஸில் இடம் பெற்றது.தவிர்த்து ஒரே நாடகம் பத்து முறை நடந்து மீண்டும் ரிகார்ட ஆனது
1992ல் இவரது 15 நாடகங்கள் ஒரே நாளில் நடந்துள்ளன
எஸ்.வி.சஹஸ்ரநாமம் குழுவினரால் நடத்தப்பட்டு, பி எஸ் ராமையா எழுதிய "போலீஸ்காரன் மகள்",. "பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்" ஆகிய நாடகங்களை 1992ல் ராது மீண்டும் நாடகமேடையேற்றினார்.
தன் குழுவினரைத்தவிர, தில்லை ராஜன், நவ்ரங் விசு,அமிர்தம் கோபாலின் கீதாஞ்சலி ஆகியோருக்கும்  இவர் நாடகம் எழுதித் தந்துள்ளார்
நவ்ரங் ஆர்ட்ஸிற்கு இவர் எழுதித்தந்த . "மை டியர் குட்டிப் பிசாசு".தரை தட்டிய கப்பல்" "மண்ணில் தெரியுது வானம்" ஆகிய நாடகங்களும், தில்லை ராஜனுக்கு எழுதிய , "பாவ மன்னிப்பு",  ஆகியவை மறக்க முடியா நாடகங்கள்.
தவிர்த்து, நாடக அகடெமி என்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, பல நாடகக்குழுக்களின் நாடகத்திற்கு வாய்ப்பளித்தார்
தமிழக அரசின், "கலைமாமணி" விருது பெற்ற ராதுவின் கலைப்பணி அளப்பரியது
2009ல் நம்மைவிட்டுப் பிரிந்த இவரது சேவையைத் தொடர்ந்து இவரது மகள் பிரியா,மருமகன் கிஷோர் ,பேரன் அம்பரீஷ் ஆகியோர் தொடர்ந்து வருகின்றனர்   

Sunday, December 2, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 16

கே.விவேக் ஷங்கர்
------------------------------

2000ஆம் ஆண்டு விவேக் ஷங்கர் என்ற திறமைமிக்க இளைஞர் ஒருவர் பிரயத்னா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவினை, அமரர் வி.கோபாலகிருஷ்ணனின் நினைவு நாளன்று (29-4-2000) துவக்கினார்.
தனக்கென ஒரு தனிப்பாணியுடன் நாடகங்கள் எழுத ஆரம்பித்து அதே நாட்களில் அரங்கேற்றினார்.

நரேந்திரா,ID, நதிமூலம் ஆகிய நாடகங்களை அரங்கேற்றினார்.பிரபல தொலைக்காட்சி நடிகர்கள் அஃப்சர்,கௌஷிக், கிரீஷ் ஆகியோர் இவர் நாடகங்கள் மூலம் நாடக நடிகர்கள் ஆனார்கள்

மற்றொரு திறமை மிக்க நடிகரான திரு TDS என்று அழைக்கப்பட்ட சுந்தரராஜனை (காத்தாடியின் நாடகக் குழுவின் ஆரம்பகால நடிகர்) தன் நாடகங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடிக்க வைத்தார்.தவிர்த்து காத்தாடியின் குழுவினருக்கு இரு நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.

"பிரம்மேந்திரர்" இவரது சமீபத்திய நாடகம்.இதில் கிரீஷ் அய்யப்பன் பிரம்மேந்திரராகவே வாழ்ந்திருப்பார்.

விவேக் ஷங்கர் 2014ல் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு ஸ்தாபனத்தின் அழைப்பின் பேரில் இரண்டு நகைச்சுவை நாடகங்களை சிட்னி நகரில் புதிதாக அரங்கேற்றினார்.

மேலும் :ஷ்ரத்தா: நாடகக்குழுவினருக்காக "தனுஷ்கோடி" என்ற நாடகத்தை எழுதி இயக்கி இருந்தார்.இந்நாடகத்தில் மழைக்காட்சிகளை தத்ரூபமாக அமைத்தார்.லாரிகளில் தண்ணீர்  கொணர்ந்து, மேடையின் பின்புறம் நிறுத்தி..சுழற்சி முறையைப் பயன் படுத்தி...மேடையில் தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு மேலாக மழையைக் காட்டி சாதனையை உண்டாக்கினார்.

மேடையில் ஒரு சுனாமி என்ற பெயரில் 10-11-2010  அண்ரு விகடனில் வந்த அவரது இந்த விமர்சனம் ஒன்றே இவர் திறமையை நிரூபிக்க போதுமானது.

சுற்றி சுழன்றடிக்கும் சுனாமி, இடைவிடாமல் கொட்டும் மழை, அவ்வப்போது உறுமும் புயல்காற்று…. இவை அனைத்தையும்  ஓரு நாடக மேடையில் கொண்டு வர முடியுமா?… “முடியும்” என்று நிரூபித்து இருக்கிறது ஸ்ரத்தா நாடகக் குழுவின் ‘தனுஷ்கோடி’ நாடகம்!
பல ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடியை புயல் விழுங்கிய பின்னனியில், நகைச்சுவையும் த்ரில்லரும் கலந்த கதை.  ஒரு கண்டிப்பான வங்கி அதிகாரி, அதே வங்கியின் மற்றொரு கிளையில் பணிபுரியும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறார். தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக் கோருகிறார் அந்த ஊழியர். மறுக்கிறார் அதிகாரி.  உடனே, ஆஸ்துமா நோயாளியான அதிகாரியை கட்டிப் போட்டு மிரட்டுகிறார் ஊழியர்.  அதிகாரியின் நண்பர், ஒரு போலீஸ் ஏட்டு, ஒரு காதல் ஜோடி….இவர்கள் மூலம் அந்த அதிகாரி எப்படி மீட்கப்படுகிறார் என்பதே கதை.
ஒரே செட்டில் கதை நடப்பது புதிது அல்ல.  ஆனால், பெரியதொரு வீட்டிலும், அதைச் சுற்றியும், அதன் தாழ்வாரங்களிலும் உட்புறத்திலும், இடைவிடாமல் மழை ஒழுகுவதும், இடியும் மின்னலும், ஒலியும் ஒளியுமக அரங்கத்தையே கிடுகிடுக்க வைப்பதுமான தொழில்நுட்பத்தை இத்தனை சீராக இதுவரை எந்த நாடகமும் தந்தது இல்லை.
சுவையான, கெட்டிக்காரத்தனமான காம்பியர் போல கதையை நடத்திச் செல்லும் காத்தாடி ராமமூர்த்திக்கு ஸ்பெஷல் பாராட்டு.  ஆஸ்துமா நோயாளியான டி.டி. சுந்தர்ராஜன், குறும்புக்கார இளைஞனாக கெள்சிக் ஆகியோரின் நடிப்பு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.
இழுத்துக் கட்டப்பட்ட ஸ்வரக் கம்பியை மீட்டுவது போல, தொட்ட இடம் எல்லாம் தொடர் சஸ்பென்ஸ்.  ஒரு சாதுவான கதாபாத்திரமாக அறிமுகம் ஆகி, வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் பாலாஜி.  கதையையும் உயிரோட்டமாக உள்ளே சஞ்சரிக்க வைத்த இயக்குநர் கே. விவேக்சங்கருக்கு வாழ்த்துக்கள்.  தனுஷ்கோடியில் இடி மழையுடன் கடல் பொங்கி வந்து கதவைத் தட்டுவதை கண் முன்னே காட்டிய ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்’ பாலச்சந்தர் கவனிக்கப்பட வேண்டியவர்.
அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் பலர் தாங்கள் நனைந்துவிட்டோமோ என்று தொட்டுப் பார்த்துக் கொண்டார்கள் என்பதுதான் இந்த நாடகத்தின் வெற்றி

Thursday, November 29, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 15

-------------------------
எஸ் வி சஹஸ்ரநாமம்
--------------------------------


டி.கே.எஸ்., சகோதரர்களின் நாடகக் குழுவையும், அதில் அற்புதமாக நடிக்கும் டி.கே.சண்முகம் நடிப்பையும், அதற்கு மக்களிடம் இருந்து கிடைத்த கை தட்டல்களும் கண்டு நாடகங்கள் மீது தீராத மோகம் கொண்டான் அந்தச் சிறுவன்.

பொள்ளாச்சியில் அவனது பெரியப்பா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த 13 வயதே ஆன அச் சிறுவன், அருகில் உள்ள கோவைக்கும் டி.கே.எஸ்., குழுவினர் வந்துள்ள சேதி கேட்டு...அவர்களைக் காண ரயிலேறினான்.

அந்தக் காலத்தில் நாடகத்தில் நடிப்பது மிகவும் சிரமமான காரியம்.நாடகக் குழுவில் ஒருவன் இருக்கிறான் என்றால், அவனுக்கு மூன்று கலைகள் தெரிந்திருக்க வேண்டும்.

உயர்வு..தாழ்வு பாராது எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காது செய்ய வேண்டும்.
ஊருக்கு ஊர் குழுவினர் மாறும்போது, அனைத்து காட்சிப் பொருள்களையும் மூட்டை..மூட்டையாய்க் கட்டிக் கொண்டு ஊருக்கு பயணிக்கத் தயாராய் இருக்க வேண்டும்
இவ்வளவு செய்தாலும் நிரந்தர வருமானம் என எதுவும் கிடைக்காது என உணர்ந்திருக்க வேண்டும்

பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்து சேர்ந்த பையனைத் தேடி வந்த அவனது தந்தை, "உனக்கு படிப்பு வேண்டுமா? இல்லை நடிப்பா?" என வினவ..சற்றும் தயக்கம் இல்லாது பையன், "நடிப்புத்தான் வேண்டும்" என்றான்.

பையனின் உறுதியைக் கண்ட தந்தை"சரி..உன் தலையெழுத்து அப்படியெனில் அதன் படியே நடக்கட்டும்" என்று கூறி சென்றார்,

அந்தச் சிறுவனே எஸ்.வி.சஹஸ்ரநாமம் ஆவார்,கோவை சிங்கானல்லூரில் 29-11-1913ஆம் ஆண்டு பிறந்தார்.

நாடக நுணுக்கங்களை அக்குழுவில் இருந்த போது கற்றார்.தனது நாடகப் பயிற்சியின் குருநாதராக அவர் எம்.கந்தசாமி முதலியாரிடம் பயின்று மூன்றே மாதங்களில் "அபிமன்யூ சுந்தரி" என்ற நாடகத்தில் சூரியபகவானாக நடித்தார்.

வீரபத்திரன் என்ற நடிகரிடமிருந்து பாடல் கற்றார்.சங்கீத மேதை சம்பந்த மூர்த்தி ஆச்சாரியரிடம் ஹார்மோனியம் கற்றார்.மேடை அமைப்பில் தேர்ச்சிபெற்றவராய் இருந்தார்.

அதனாலேயே..சென்னையில் கட்டப்பட்ட "ராஜா அண்ணாமலை மன்றம்". "ராணி சீதை ஹால்", "கலைவாணர் அரங்கம்" ஆகியவை அவரது ஆலோசனையின் படியே கட்டப்பட்டன.

நாடகத்திற்காகவே வாழ்ந்தவர்களில் சஹஸ்ரநாமமும் ஒருவர் ஆவார்.பாரதியாரிடம் ஈடுபாடு கொண்ட இவர்...பாரதியின் வார்த்தைகள் இப்படி மாற்றி தன்னைப் பற்றிக் கூறினார்.

"எனக்குத் தொழில் நாடகம்.நாட்டுக்கு உழைத்தல். இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என.

இவரது சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் நடித்து..பின் பிரபலமான நடிகர்கள் பட்டியல் நீண்டது.அதில் சிலர்...

சிவாஜி, முத்துராமன்,குலதெய்வம் ராஜகோபால்,வி.கோபால கிருஷ்ணன்,சத்தியராஜ்,பி.ஆர்.துரை,எஸ்.என்.லட்சுமி,எம்.என்.ராஜம்,பண்டரிபாய்,தேவிகா, மைனாவதி,ஜி.சகுந்தலா,ஏ.கே,வீராச்சாமி,ஏ.வீரப்பன், கம்பர் ஜெயராமன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், காந்திமதி...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

இவரது குழுவின் நாடகங்கள் சில...

என்.வி.ராஜாமணி எழுதிய "கண்கள்", "இருளும் ஒளியும்"
தி ஜானகிராமனின், "நாலு வேலி நிலம்'
பி.எஸ்.இராமய்யாவின், "மல்லியம் மங்களம்"
குஹனின் "புகழ்வழி"
கல்கி எழுதிய , "மோகினித் தீவு"
பாரதியாரின் , "பாஞ்சாலி சபதம்"(கவிதை நாடகம்)
சேவாஜ்ஸ்டேஜ் கடைசியான நாடகம் பி.எஸ்.இராமய்யா எழுதிய "தேரோட்டி மகன்" ஆகும்.

1957ல் சேவா ஸ்டேஜ் , நாடகக் கல்வி நிலையம் என ஒன்றை நிறுவி, பாடத்திட்டங்களை வகுத்து மூன்று மாத காலம் இளைஞர்களுக்கு நாடகக் கல்வி வழங்கியது. தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் இந்த நிலையத்திற்கு 3000 ரூபாய் மானியம் வழங்கியது

தனது சகோதரி மகன் வி.என்.ராஜாமணியின் உதவியோடு தாகூரின் கதையை "கண்கள்" என்ற தலைப்பில் நாடகமாக்கினார்
நார்வேவைச் சேர்ந்த  ,எழ்த்தாளர் இப்சன் நாடகங்களால் கவரப்பட்டு "எனிமீஸ் ஆஃப் பீப்புள்ஸ்" என்ற நாடகத்தை மக்கள் விரோதி என்ற பெயரில் நாடகமாக்கச் சொன்னார்

1974 மார்ச் மாதம் முதல் 1988 ஃபெப்ருவரி வரை ஐந்து முறை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.கிருஷ்ணமணி என்பவர் எழுதிய  "நந்தாவிளக்கு" என்ற நாடகத்திற்கான ஒத்திகைக்கு 21-2-88 அன்று வரச்சொல்லி நடிகர்களுக்கு செய்தி அனுப்பியவரின் உயிர் 19-2-1988 மாலை 4-30 அளவில் பிரிந்தது,

எஸ்.வி.எஸ்., அவர்களுக்கு தமிழ் நாடக வரலாற்றில் சிறப்பான இடம் உண்டு.

இன்று இவரது மகன் எஸ்.வி.எஸ்.குமார், தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் கலைப்பணியாற்றி வருகிறார். 

Saturday, November 24, 2018

வள்ளுவன் வாக்கு - 3

நாம் ஒருவருக்கு அலைபேசுகிறோம்.ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.சரி, நண்பர் வேறு முக்கிய வேலையில் இருக்கக் கூடும் என குறுஞ்செய்தி அனுப்புகிறோம்.அதையும் நண்பர் பார்க்கிறார்.
அதைப் பார்த்த பின்னரும்...நம்மை அழைத்து பேசவில்லை.நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?
நம்மை மதிக்காத, நம்மை வருத்தமடையும் செயலை செய்த அவரை நண்பன் என்ற நிலையில் இருந்து மறந்து விட வேண்டும் என்றுதானே எண்ணுவோம்.
ஆனால் வள்ளுவர் என்ன கூறுகிறார் தெரியுமா?
பேதமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்
இதில் ஆச்சரியம் என்ன வெனில் நாம் எதைக் குறித்து எழுத வேண்டும் என எண்ணினாலும், வள்ளுவன் அதைக் குறித்தும்...அதற்கான அறிவுரையும் கூறியுள்ளார்
ஆகவே தான் திருக்குறள் "உலகப் பொதுமறை" எனப் போற்றப்படுகிறது

Thursday, November 22, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 14

--------------------
பூவை மணி
-----------------------

30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடகப் பணியினை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அடக்கமாக செய்து வருபவர் பூவை மணி ஆவார்

இவர் பல வெற்றிநாடகங்களை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார்.

என் நினைவு அடுக்குகளில் இருந்து...சிலசெய்திகளை அவர் வீட்டு ஜன்னல் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

கீத்மாலிகா என்ர குழுவினருக்காக அவர் எழுதிய சில நாடகங்கள்..

"சபையிலே மௌனம்",

"எங்கள் வீடு கோகுலம் "
(இந்நாடகத்தில் திரைப்பட நடிகை சி ஐ டி சகுந்தலா அவர்கள் நடித்தார்)

"மௌனமான நேரம்", "சாட்சிகள் இல்லையடி பாப்பா""கண்மணியே பேசு", "கற்பூர பொம்மை ஒன்று"

பின்னர் தில்லை ராஜனின் நாடகமந்திர் குழுவிற்காக "ஒரு பொம்மலாட்டம் நடக்குது" நாடகத்தை எழுதினார்

கீத்மாலிகா,கலைவாணி, கீதாஞ்சலி ஆகிய குழுக்களுக்கு இவர் நாடகங்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.

இவர் எழுத்தில் வந்த அனைத்து நாடகங்களும் வெற்றி நாடகங்களாக அமைந்ததே இவர் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்

"இன்னொரு சீதை" "தவம்"ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் பங்கு உண்டு.இவற்றிற்கு வசனம் இவரே!

2017ல் இவரது "உறவோடு விளையாடு" நாடகம் கோடை நாடக விழாவில் ஒன்பது விருதுகளையும், மைலாப்பூர் அகடெமியின் 3 விருதுகளையும் பெற்று தந்துள்ளது

2018ல் "விளையாட்டு பொம்மைகள்" ஐந்து விருதுகளைப் பெற்று தந்துள்ளது. இவ்விரு நாடகங்களிலும் நடித்த கிரீஷ் அய்யப்பன், கௌதமி ஆகியோர் சிறந்த நடிகர்/நடிகை விருதினைப் பெற்றனர்.

பூவை மணிக்கு தமிழ் நாடக உலகம் 30க்கும் மேற்பட்ட விருதுகளை சபாக்களின் மூலமும், சமூக நிறுவனங்கள் மூலம் பெற்று தந்துள்ளது.

பிரபல தமிழ் எழுத்தாளர் "பூவை" ஆறுமுகத்தின் மகனான, "பூவை" மணியின் "கற்பூர பொம்மை ஒன்று" மற்றும் "சபையிலே மௌனம்" "உறவோடு விளையாடு" ஆகியவை நூல்களாக வெளிவந்துள்ளன.


அடுத்தவீட்டு ஜன்னல் - 13 (பகுதி-2)

------------------------
இளங்கோ குமணன்
--------------------------------

S S International (live) நிறுவன இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணன்..இருபத்தைந்து ஆண்டுகள் முன்னரே தமிழ் நாடக உலகிற்கு அறிமுகமானவர்.பாம்பே கண்ணனின், "நாடகக்காரன்" குழு மூலமாக அறிமுகமாகி.முதலில் சிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் பெரிய பாத்திரங்களிலும்..அடுத்து நாயகனாகவும் நடித்தவர்.பாஸ்கி அவர்களின் ஒரு நாடகத்தில் இரட்டை வேடம் தாங்கி நடித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் நிறுவனம் மூலம் மீண்டும் நாடக உலகிற்கு வந்திருக்கும் இவர், சென்ற ஆண்டு எழுதி, இயக்கி, அரங்கேற்றிய நாடகம் காஞ்சி மகாபெரியவாளின் நூறாண்டு வாழ்க்கை வரலாற்றைப் பேசும் "தெய்வத்துள் தெய்வம்" நாடகம் ஆகும்.காஞ்சி மடத்தின் ஒப்புத்லுடன் நடைபெற்ற இந்நாடகத்தில் 108 கலைஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்நாடக அரங்க அமைப்பை ஏற்றவர் பிரபல் ஆர்ட் இயக்குநர் தோட்டா தரணி ஆவார்,இந்நாடகத்திற்கு இசையமைத்தவர் மாண்டலின் யு.ராஜேஷ்.அருணா சாய்ராம், குருசரண் ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர்.

இந்நாடகத்திற்காக இரண்டு பாடல்களை குமணன் எழுதியதுடன் நில்லாது, முக்கிய வேடம் ஒன்றினையும் ஏற்று நடித்தார்.

மிகப்பிரம்மாண்டமான படைப்புகளையேத் தர வேண்டும் என எண்ணும் இவரின் கனவு "மகாபாரத"த்தையும் அதே போன்று மேடையேற்ற வேண்டும் என்பதுதான்.

அவர் எண்ணம் நிறைவேற்ற வாழ்த்துவோமாக.

அடுத்தவீட்டு ஜன்னல் - 13

இளங்கோ குமணன்
----------------------------------

ஒரு எழுத்தாளர்/இயக்குனர் படைப்புகள் பற்றி, அந்த எழுத்தாளரோ/இயக்குனரோ பேசக்கூடாது.அவர்கள் படைப்புகள் பேச வேண்டும் என்பார் "இளங்கோ" குமணன்

இந்த "இளங்கோ" குமணன் தமிழ் நாடக உலகின்  பெருமையை பரப்ப வந்த தாமதமான வரவு என்றாலும், முக்கியமான வரவாகும்

எஸ் .எஸ் ஈன்டெர்னேஷனல் (லைவ்) (S S International (live) என்னும் விளம்பர நிறுவனம் 2014ல் , தங்கள் முதல் படைப்பாக கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாடகத்தை  Magic Lantern  குழ்வினரை வைத்து அரங்கேற்றினர்.

80க்கும் மேற்படட் கலைஞர்கள், அரங்க அமைப்பு தோட்டா தரணி.பால் ஜேகப் அவர்களின் நேரடி இசை என நான்கு மணி நாடகமாக இருந்தது இது.

மேடையிலேயே உண்மையான வாள் சண்டை காட்டப்பட்டது.
நாடகக் காவலர் மனோகருக்கு இணையான அளவிற்கு பிரம்மாண்டத்தை இவர்கள் மேடையில் காட்டினர் என்றால் மிகையில்லை.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், சிங்கப்பூரிலும் இந்நாடகம் நடத்தப்பட்டது.

திரைப்பட பிரபலங்கள், பசுபதி, குமரவேள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

குமரவேல் நாடகமாக்கம் செய்திருந்த இந்நாடகத்தை லாண்டன் ப்ரவீன் இயக்கி இருந்தார்

அடுத்து இவர்களின் அரிய படைப்பாக "பாலக்காடு மணி ஐயரின்" வாழ்க்கை வரலாறு "மணியோசை" என்ற பெயரில் மேடை நாடக மாக அறங்கேறியது.இந்நாடகமும் (இதை நாடகம் என்று சொல்லலாமா? எனத் தெரியவில்லை) ஒரு புதுமைப் படைப்பாக அமைந்தது.

கர்நாடக இசைக் கலைஞர்கள், நித்யஸ்ரீ மகாதேவன்,சுதா ரகுநாதன், சௌம்யா,விஜய் சிவா, குருசரண்,அனந்தகிருஷ்ணன்,தஞ்சாவூர் குமார்,உமாசங்கர் மற்றும் பல கலைஞர்கள் இணைந்து இந்நாடகத்தில் நாடகக்கலைஞர்களாக மாறி இந்நிகழ்ச்சியை வெற்றியடைய வைத்தனர்.

இந்நாடகத்தை, எம்.ஆர்.ராஜாமணியின் எம் ஆர் ஆர் தியேட்டர்ஸிற்காக "கீழ் வானம் சிவக்கும்" என்ற நாடகத்தை எழுதித் தந்தவரும் (இந்நாடகம் பின்னர் சிவாஜி நடிக்க அதேபெயரில் வெள்ளித்திரைக்கு வந்தது), விசு அவர்களின் "அரட்டை அரங்கம்" நிகழ்ச்சியை இயக்கியவருமான "குரியகோஸ்" ரங்கா எழுதி, இயக்கி இருந்தார்.

(இவர்கள் வீட்டு ஜன்னல் பார்வை தொடரும்)

Wednesday, November 21, 2018

தென்னம்புள்ள... (கிறுக்கல் கவிதை)



புள்ள இல்லேன்னா
என்ன
இந்தப் புள்ள
இருக்குன்னு
இறுமாப்பிலே
இருந்தான்
இசக்கி
அவன்
எண்ணத்திலே
மண்ணைப் போட்டுட்டான்
இந்தப் புள்ளயும்
பிள்ளைகளில்
புள்ளயும் - தென்னம்
புள்ளயும்
ஒண்ணுதேன்னு
ஆகிப் போச்சே!


Sunday, November 18, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் -12 (பகுதி - 1)

-----------------------
"கிரேசி" மோகன்
------------------------------

நடிகர்,நாடக எழுத்தாளர், திரைக்கதை-வசனம் எழுதுபவர்,நாடகத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ரங்காச்சாரி மோகன் ஒரு பொறியியல் பட்டதாரி.தமிழில் வெண்பா எழுதும் திறனைப் பெற்றவர்

சுந்தரம் கிளேட்டனில் சிறிது காலம் வேலை செய்து வந்தார்.அத்தருணம், இவரது எழுத்துத் திறமையைக் கண்டு வியந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், இவரை திரையுலகிற்கு அழைக்க, மோகனால் வேலைப்பளு காரணமாக அதை ஏற்க இயலவில்லை.

மோகன், கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, 1972ஆம் ஆண்டு கல்லூரி விழாவிற்காக "Great Bank Robbery" என்ற நாடகத்தை எழுதினார்.அதற்காக சிறந்த எழுத்தாளர், சிறந்த நடிகருக்கான விருதினை ,அன்று நாடகத்திற்கு வந்திருந்த கமல்ஹாசன் தர பெற்று கொண்டார்.

பின்னர், தன் தம்பி பாலாஜிக்காக , பாலாஜி படித்த விவேகானந்தா கல்லூரிக்காக நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.

1976ல் எஸ் வி சேகரின் நாடகக் குழுவினருக்காக "கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகம் எழுதினார்.அந்நாடகத்தின் வெற்றியே பின்னாளில் "கிரேசி" என்ற சொல்லை அவர் பெயருக்கு முன்னால் சேர்த்தது  .ஆம்..இனி நாமும் "கிரேசி" மோகன் என்றே இனி சொல்வோம்.

பின்னர், அடுத்து சேகருக்காக இவர் எழுதிய நாடகம், "டெனென்ட் கம்மேண்ட்மெண்ட்ஸ்".அடுத்து ஒன் மோர் எக்சார்சிஸ்ட் நாடகம்.
கிரியேடிவ் என்டெர்டெயினர்ஸ் டிவி வரதராஜனுக்காக "36 பீரங்கி லேன்".காத்தாடி ராமமூர்த்திக்காக 'அப்பா..அம்மா..அம்மம்மா" நாடகம்.

1979ல் தனக்காக 'கிரேசி" கிரியேஷன்ஸ் குழுவினை  துவக்கினார்.இதுவரை 30க்கு மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளார் மோகன்.இவர் நாடகங்கள் ஆயிரக் கணக்கான முறைகள் நடந்துள்ளன.

இவரது குழுவினைத் தவிர வேறு எந்தக் குழுவினரின்  நாடகங்கள் ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கன முறைகள் நடந்ததில்லை.இவரது ஒவ்வொரு நாடகமும் நூற்றுக்கணக்கான முறைகள் நடந்துள்ளன.

இவரது மற்ற நாடகங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

(இவர் வீட்டு ஜன்னல் தொடரும்)

Saturday, November 17, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 11

----------------------
குடந்தை மாலி
-----------------------

என்.மகாலிங்கம் என்ற குடந்தை மாலி, 1959ல் துர்கா டிராமாடிக் அசோசியேஷன்ஸை ஆரம்பித்தார்.பின்னர் அக்குழு நாடகமித்ரா என பெயர் மாற்றம் அடைந்தது.இன்று அதே குழு மாலி ஸ்டேஜ் என்ற பெயரில் நாடகங்களை நடத்தி வருகிறது.

மகாலிங்கத்தை குடந்தை மாலி என ஆக்கியவர்  ம.பொ.சி ஆவார்

இதுவரை இக்குழு கிட்டத்தட்ட 40 நாடகங்களை மேடையேற்றியுள்ளது.அவற்றுள் பல 100 காட்சிகளைத் தாண்டிய மாபெரும் வெற்றி நாடகங்களாக திகழ்ந்தது.20 நாடகங்கள் மாலி எழுதியது.மீதி நாடகங்கள் இவர் குழுவிற்காக மற்றவர்கள் எழுதியது.

பிரபல எழுத்தாளர்களான நா.பார்த்தசாரதியின் "குறிஞ்சி மலர்",ஆர்.சூடாமணியின் , "ஆழ் கடல்", திருப்பூர் கிருஷ்ணனின் 'பொய் சொல்லும் தேவதைகள்", ஷ்யாமளாராவின்"மன்னிக்க வேண்டுகிறேன்" ஆகியவற்றை மேடைநாடகமாக்கியப் பெருமை மாலிக்கு உண்டு.

இவர்களைத் தவிர்த்து, சௌந்தர்யன்,சுந்தர், நாணு,மெரினா, மணிமோகன் ஆகியோர் இவருக்கான நாடகங்களை எழுதியுள்ளனர்.

திரைப்பட நடிகை சுந்தரி பாய், ஜான்சி ராணி, திரிசக்தி சுந்தரராஜன்,நவாப் கோவிந்தராஜன், கரூர் ரங்கராஜன் ,எஸ் பி ஐ முரளிஆகியோர் இவர் குழுவில் நடித்த சில நடிகர்கள்.

இவரது ஞானபீடம் மிகவும் புகழ் பெற்ற நாடகம்.125 முறைகளுக்கு மேல் மேடையேறியுள்ள நாடகம்.

ஆனந்தவிகடனில் வெள்ளிவிழா ஆண்டில் பரிசு பெற்ற ஏ கே பட்டுசாமியின் "கடவுள் எங்கே?" என்று சற்றே சர்ச்சைக்குரிய கதையை அந்த நாட்களிலேயே மேடையேற்றியவர் மாலி.

அன்னை சாரதா தேவியின் 150ஆவது பிறந்தநாள் விழாவில் அவரது வாழ்க்கையை "அன்னை சாரதா தேவி" என்ற பெயரில் நாடகமாக்கினார்.நாடகக்காவலர் ஆர் எஸ் மனோகர் அந்நாடகத்தை இயக்கினார்.

இவரது சில நாடகங்கள், சங்கல்பம்,கடலை சேரும் நதிகள், கோபுரம் தாங்கும் பொம்மைகள்(இந்நாடகம் 350 முறை மேடையேறியது),நம்மவர்கள்,ஆத்மவிசாரணை, நிதர்சனம், சம்மதம் ஆகியவை.

2017ஆம் ஆண்டு மாலியின் 60 ஆண்டு சேவையை பாராட்டி விழா எடுக்கப்பட்டது.

மாலி, தமிழ் நாடக உலகில் ஒரு சாதனையாளர் எனச் சொல்லலாம்.
பல நிறுவனங்கள் இவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன.20க்கும் மேற்படட் விருதுகளைப் பெற்றவர் இவர்.

தமிழக அரசின் "கலைமாமணி" விருதைப் பெற்றவர்.

Tuesday, November 13, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி -3 )

ஆர் எஸ் மனோகர்
---------------------------

மனோகருக்கான நாடகங்களை துறையூர் மூர்த்தி, இரா.பழனிசாமி, ஏ எஸ் பிரகாசம்,அறிவானந்தம் ஆகியோர் எழுதினர்

இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், துரோணர், மாலிக்காபூர் ஆகிய நாடகங்களை துறையூர் மூர்த்தி எழுதினார்.

சூரபத்மன்,சிசுபாலன், சுக்கிராச்சாரியார்,சிவதாண்டவம், ஒட்டக்கூத்தர் ஆகியவற்றை இரா.பழனிசாமி எழுதினார்

விஸ்வாமித்திரர் நாடகத்தை ஏ.எஸ்.பிரகாசம் எழுதினார்

பரசுராமன்,நரகாசுரன்,இந்திரஜித்,துர்வாசர்,திருநாவுக்கரசர் ஆகிய நாடகங்களை கே.பி.அறிவானந்தம் எழுதினார்.

இந்திரஜித் நாடகத்தை எழுதிய அறிவானந்தம் ஒரு பேட்டியில்...

"எம்.ஆர்.தாவின் குழுவில் நான் சேர்ந்து ரத்தக்கண்ணீர், தூக்குமேடை நாடகங்களில் நடித்து வந்தேன்.ஒருநாள் மனோகரைப் பார்த்து "இந்திரஜித்" நாடகத்தைப் பற்றிக் கூற அதை நாடகமாக எழுதச் சொன்னார்.பிறகு  அவருடன் பணி புரிந்து..அவருக்காக பல நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினேன்.இந்திரஜித் நாடக அரங்கேற்றம் போது, பத்திரிகையாளர்களிடம்,"என்னைப் பற்றி எழுதாவிட்டாலும் பரவாயில்லை...வளர்ந்து வரும் இந்நாடக ஆசிரியர் அறிவானந்தம் பற்றி எழுதுங்கள்" என்றார்.இது அவரது பெருந்தன்மைக்கு உதாரணம்" என்றார்.

அறிவானந்தம் இன்றும் சில சரித்திர நாடகங்களை எழுதி, நடித்தும் வருகிறார்.

மனோகர், 2006 ஜனவரி மாதம் 10ஆம் நாள் நம்மை விட்டு பிரிந்தார்.

இன்னமும் , அவர் குழுவினைச் சேர்ந்தவர்கள், நாடகங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களைப் பற்றி பின்னர் காணலாம். 

Monday, November 12, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)

ஆர் எஸ் மனோகர்
-----------------------------

இவரது அனைத்து நாடகங்களும் வெற்றி நாடகங்களே! இவர் நாடகங்களின் சிறப்பு அம்சமே...பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள்தான்.கிட்டத்தட்ட ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை நமக்கு அளிக்கும்.

மனோகர், மக்கள் வில்லனாகக் கருதும் இதிகாசம், சரித்திர பாத்திரங்களை ஹீரோவாக ஆக்கி தன் நாடகங்களில் நடித்தார்.இலங்கேஸ்வரன்,சாணக்கிய சபதம்,சிசுபாலன்,காடக முத்திரையன் ஆகியவை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

இன்னமும் இவரது, மேற்சொன்ன நாடகங்களும்,மற்றும் சாணக்கிய சபதம்,இந்திரஜித்,சுக்கிராச்சாரியார்,நரகாசுரன்,திருநாவுக்கரசர் ,விஸ்வாமித்திரர்ஆகிய நாடகங்களும் மக்கள் மனதில் இன்னமும் அழியாமல் நிற்பவை எனலாம்

தமது குழுவின் மூலம் 32 நாடகங்களை 8000 முறைகள் மேடையேற்றி நாடக உலகில் இரு இமாலய சாத்னையைச் செய்தவர் மனோகர் ஆவார்.

எதிரொலி எழுப்பும் "எக்கோலிட்" என்ற கருவியை ,முதன் முதலாகப் பயன் படுத்தியவர் இவரே!நாடகத்தில் சிங்கத்தையும்,ஐந்து தலை நாகத்தையும் 3டி அமைப்பில் மேடையேற்றி மக்களை மிரள வைத்தவர் இவர்.

நாடகத்தன்றுநெருப்பாய் இருக்கும் இவர் மற்ற நேரங்களில் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.சக கலைஞர்கள் மீது அளவில்லா பிரியம் கொண்டவர்.

(அடுத்த வீட்டு ஜன்னல் 10 தொடரும்) 

Sunday, November 11, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி- 1)

-----------------------------------
ஆர்.எஸ் மனோகர்
------------------------------

பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து,அஞ்சல்துறையில் லட்சுமி நரசிம்மன் என்பவர் பணியாற்றி வந்தார்.இவர், படிக்கும் போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆரவமும் கொண்டவராய் இருந்தார்.

திருவல்லிக்கேணியில் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே சில இளைஞர்கள் தங்கியிருந்தனர்.அவர்களுக்கு நாடகங்கள் மீது ஆர்வம் இருந்ததை லட்சுமி நரசிம்மன் கண்டார்.

1950ஆம் ஆண்டில் சென்னையில் பிரபல வழக்குரைஞராக இருந்தபடியே , அமெச்சூர் நாடகங்களை நடத்தி வந்த வி. சி. கோபாலரத்தினம் என்பவர் குழுவில் பங்கேற்று நடித்தார் லட்சுமி நரசிம்மன்.பின்னர், தோட்டக்கார விஸ்வநாதன் என்பவர் நடத்தி வந்த குழுவிலும் பங்கேற்றார்

இந்நிலையில், கே பி ரங்கராஜூ என்ற எழுத்தாளர் மூலம்"ராஜாம்பாள்" என்ற படத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அப்படத்தின் தயாரிப்பாளர் இவருக்கு 'மனோகர்" என்று பெயரிட்டார்.பின் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மனோகர் நடித்தார்

முழு நேர நடிப்பை மேற்கொண்ட மனோகர், நேஷனல் தியேட்டர்ஸ் என்ற குழுவினைத் தொடங்கினார்.மிகப் பிரம்மாண்டமான அமைப்புகளை அமைத்து மக்களை வியப்பில் ஆழ்த்தும் நாடகங்களை நடத்தினார்.

இவரின் பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்ததுண்டு.

"இலங்கேஸ்வரன்" என்ற நாடகத்தில் இராவணனாக நடித்துப் புகழ் பெற்ற இவர் பெயருக்கு முன் "இலங்கேஸ்வரன்" ஒட்டிக் கொண்டது.

திரைப்படங்களில் பிரபலமாகி நடித்துக் கொண்டிருந்த போதிலும் , விடாது நாடகங்களையும் நடத்தி வந்தார்.ஒரு சமயம், சேலத்தில் கண்காட்சியில் இவர் நாடகத்தைப் பார்த்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம், இவரது நடிப்பு, தோற்றம், வசன உச்சரிப்பு இவற்றைக் கண்டு தங்கள் தயாரிப்பில் வந்த படங்களில் இவரை நடிக்க வைத்தார்.

மாடர்ன் தியேட்டர்ஸில் மட்டும் கிட்டத்தட்ட 18 படங்களில் இவர் நடித்தார்.

(பகுதி - 2 அடுத்த பதிவில்) 

Saturday, November 10, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 9 (பகுதி -2)

 (சமீபத்தில் தண்ணீர் தண்ணீர் நாடகத்தை மீண்டும் மேடையேற்றிய கோமலின் மகள் தாரிணி கோமலும்..நாடகத்தில் வந்த ஒரு காட்சியும்)
கோமலின் தண்ணீர் தண்ணீர் நாடகம் தண்ணீர் இல்லாத ஒரு கிராமத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நாடகம் ஆகும்.அரசியல்வாதிகளாலும், அரசு அதிகாரிகளாலும், கிராமத்து மக்கள் படும் துயரம், தீவிரவாதம் ஏன் உருவாகிறது ஆகியவற்றை இந்நாடகம் நயம்படச் சொன்னது.

1981ல் கே பாலசந்தர், இந்நாடகத்தைத் திரைப்படமாக்கினார்.இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

1982ல் கோமல் மேடையேற்றிய "ஒரு இந்தியக் கனவு" நாடகம் கோமல் இயக்கத்திலேயே திரைப்படமானது.

இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் கோமல் , சில காலம் உதவி இயக்குநர், வசனகர்த்தாவாக ஏற்கனவே பணியாற்றியவர்,"கற்பகம்" "கை கொடுத்த தெய்வம்" பேசும் தெய்வம் ஆகிய படங்களில் கோமலின் பங்கும் உண்டு

"தண்ணீர் தண்ணீர்" நாடகம், எஸ்.சங்கர் என்னும் ஆங்கில பேராசிரியரால் மொழி பெயர்க்கப்பட்டு, பி சி ராமகிருஷ்ணா இயக்கத்தில் மெட்ராஸ் பிளேயர்ஸால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டது

தன் குழுவைத் தவிர , வேறு சில குழுவினருக்கும் கோமல் நாடகங்கள் எழுதித் தந்துள்ளார்.

மேஜர் சுந்தரராஜன் நடித்த "அவன் பார்த்துப்பான்" அவற்றில் ஒன்று

இவரின், "என் வீடு என் கணவன் என் குழ்ந்தை" நாடாம் தொலைக்காட்சியில் மனோரமாவால் நடிக்கப் பெற்று பெரும் பாராட்டுதல்களைப் பெற்றதாகும்.

"சுபமங்களா" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இவர் சில காலம் பணியாற்றியுள்ளார்.

நீரின்றி அமையாது உலகு.கோமலின் தண்ணீர் தண்ணீர் பற்றி சொல்லாமல் தமிழ் மேடைநாடகங்கள் பற்றி யாரும் உரைத்திட முடியாது.கடைசி சொட்டு தண்ணீர் உலகில் உள்ளவரை கோமல் நினைவில் இருப்பார்

இதற்குமேல் "கோமலை"ப் பாராட்ட எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை

Friday, November 9, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 9 (பகுதி -1)

---------------------------
கோமல் சுவாமிநாதன்
------------------------------------

1935ஆம் ஆண்டு பிறந்தவர் சுவாமிநாதன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோமல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் .சென்னையில் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக தன் வாழ்நாளைத் தொடங்கியவர்.பின்னர் ஊரின் பெயரான "கோமல்" இவர் பெயருடன் ஒட்டிக்கொள்ள கோமல் சுவாமிநாதன் ஆனார்.

புதுமைப்பித்தனின் எழுத்துகளால் கவரப்பட்டவர் இவர்.எஸ் வி சஹஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவிற்காக இவர் எழுதிய முதல் நாடகம் "புதிய பாதை" ஆகும்.

பின்னர், 1971ல் தனது நாடக்குழுவான ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ் துவக்கினார்.பொதுவுடமைக் கொள்கைகளில் மிகவும் பற்று கொண்டவர் கோமல்

இவர் தன் குழுவிற்காக 33 நாடகங்கள் எழுதினார்.அவற்றில் சில..

"கோடு இல்லாத கோலங்கள்" ஆட்சி மாற்றம்" சுல்தான் ஏகாதசி"பெருமாளே சாட்சி,"யுத்த காண்டம்" "செக்கு மாடுகள்" "கிராம ராஜ்ஜியம்" "ஒரு இந்தியக் கனவு"

1980ல் இவர் எழுதிய "தண்ணீர் தண்ணீர்" மாபெரும் வெற்றி நாடகமாகும்.இந்நாடகம் 250 முறைகளுக்கு மேல் மேடையேறியுள்ளது.இந்நாடகத்தில் வாத்தியாராக வந்த "ராமன்" பின்னாளில் கோமலின் இணைபிரியா நண்பர் ஆனார்.மக்களால் வாத்தியார் ராமன் என்றே அறியப்பட்டார்.

கோமலின் நாடககுழுவில் நடித்த மேலும் சில நடிகர்கள் , ராஜ்மதன்,ஏ கே வீராச்சாமி.,சாமிக்கண்ணு ஆவர்.

வெள்ளித்திரை நடிகர் சத்தியராஜ், கோமலின் "கோடில்லா கோலங்கள்" 'சுல்தான் ஏகாதசி" "நவாப் நாற்காலி' ஆகிய நாடகங்களில் நடித்தவர் ஆவார்.

(அடுத்தவீட்டு ஜன்னல் - 9 அடுத்த பதிவிலும்) 

Wednesday, November 7, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 8 (பகுதி - 2)


-------------------------------------
நடராஜன் (கூத்தபிரான்)

------------------------------------------

1985ஆம் ஆண்டு கூத்தபிரான், மீண்டும் தனக்கு சொந்தமாக ஒரு நாடகக் குழுவினைத் தொடங்கினார்.குழுவிற்கு "நவபாரத்" என்று பெயரிட்டார்.

"நாராயண கோபாலா", "காசிக்குப் போன கணபதி" "சுபஸ்ய சீக்கிரம்" போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்.

பின்னர், அவரது மகன் ரத்னம், அவரது குழுவிற்கு நாடகங்களை எழுத ஆரம்பித்தார்.

"ஜேஷ்ட குமாரா", "ரூபாய் 21","உன்னால் முடியும் தாத்தா""ரோபோவின் டயரி".ஆகிய நாடகங்களை அவர் எழுதினார்.

இந்நிலையில்..தன் கலையுலக சேவையை முடித்துக் கொண்டு கூத்தபிரான் 2014ல் அமரர் ஆனார்.அந்த நாளில் கூட காலைக்காட்சி ஒன்றில் அவர் நடித்துவிட்டு வந்தது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

பின், ரத்னம்..குழுவின் பெயரை , "கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ்" (KNT) என மாற்றினார்.தந்தையின் ஆசியுடன் ரத்னம் மேடையேற்றிய நாடகங்கள், "சொப்பனக் குழந்தை"(2015), "காளீஸ்வர பவனம்" (2016) ,சதுரங்கப் பார்வை,கிட்டப்பா கலகிட்டப்பா, ஸ்கந்தா,செல்லப்பா ஆகியவை ஆகும்.

இவற்றில் சொப்பனக் குழந்தையும், காளீஸ்வரபவனமும் 2015, 2016 சிறந்த நாடகங்களாகத் தேர்வு செய்யப்பட்டன.

ரத்னத்துடன் அவரது சகோதரர் கணேசனும், மகன் விக்னேஷ் ரத்னமும் குழுவில் நடித்து வருகின்றனர்.

இச்சமயத்தில்..கூத்தபிரானின் சிறந்த குணம் ஒன்றினை சொல்லாவிடில் இக்கட்டுரை முழுமைப் பெறாது.

விமர்சனங்களை வரவேற்பவர் அவர்.ஏதேனும் குறைகளைச் சொல்லி விமர்சனங்கள் வந்தாலும், அவை பொய்யாக இருந்தாலும் சற்றும் கோபம் அடையாமல் பதில் அளிப்பார்.

ஒருமுறை அவரது நாடகத்திற்கு ஒரு இதழ் மிகவும் சொற்ப மதிப்பெண்களை வழங்கியது.விமர்சனத்திற்கு  கூத்தபிரான் நன்றி தெரிவித்ததுடன்.."எங்களது அடுத்த நாடகத்தில் குறைகளை நீக்கிவிடுகிறோம்.அது, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கும்" என்று பதிலளித்திருந்தார்.

உபரித் தகவல்
--------------------------------
உன்னால் முடியும் தாத்தா, ரோபோவின் டயரி ஆகிய நாடகங்களில் மூன்று தலைமுறையினர் முறையே கூத்தபிரான்,அவரது மகன்கள் ரத்னம், கணேசன், பேரன் விக்னேஷ் ஆகியோர் நடித்தது எந்த நாடகக்குழுவிலும் நடந்திராத சாதனை என்றே நினைக்கின்றேன்  

Tuesday, November 6, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 8 (பகுதி - 1)


நடராஜன் - (கூத்தபிரான்)

கலாநிலையம் நாடகக் குழுவில் ஆல் இந்தியா ரேடியோவில் வேலை செய்து வந்த நடராஜன் என்ற இயற்பெயர் கொண்டவர் கூத்தபிரான் என்ற பெயரில் நாடகங்களில் நடித்துவந்தார் என்பதை முன்னதாகக் கூறினேன்.

ஆனால்..கூத்தபிரானின் சாதனைகள் பெரியது.அதைத் தனியாகக் கூற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்தேன்,

1952ஆம் ஆண்டிலேயே தான் வசித்துவந்த டையாறில் "அடையாறு நாடக மன்றம்" என்ற குழுவினைத் தொடங்கி நாடகங்களை எழுதி, இயக்கி நடித்து வந்தார் கூத்தபிரான்

வானொலியில் பணியாற்றிய போது அப்போது வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்ட ரா.அய்யாசாமியுடன் பணியாற்றினார்.முழந்தைகளுக்கான "அன்னைசொல் அமிர்தம்" என்ற நாடகத்தை நடத்தினார்.குழந்தைகளுக்கான இந்நாடகம் நாடகப் போட்டியில் முதல் பரிசினை வென்றது.

சோ, காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் மேடையேற்றிய பகீரதனின் "தேன்மொழியாள்" நாடகத்தில் இவர் பெரும் பங்காற்றியதுடன் அந்நாடகத்தை இயக்கவும் செய்தார்

பின்னர், கல்கியின் மீது மிகவும் பற்று கொண்ட இவர் கல்ல்கி ஃபைன் ஆர்ட்ஸ் என்ற குழுவினை ஆரம்பித்து , கல்கியின் "அமரதாரா" வீணை பவானி" "என் தெய்வம்" ஆகிய கதைகளை மேடையேற்றினார்.இந்நாடகங்களில் ஜெயஷங்கர், ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்தனர்

1961ஆம் ஆண்டு தில்லி சென்று நாடகங்களை நடத்தினார். தில்லியில் சென்னையில் இருந்து சென்று நாடகம் நடத்திய முதல் குழு இவருடையது எனலாம்.அப்போது அவருக்கு தில்லி வானொலியில் பணியாற்றிய பூர்ணம் விஸ்வநாதன் நட்பு கிடத்தது.

பூர்ணம் தில்லியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்ததும் அவருடன் சேர்ந்து, கூத்தபிரானும் கலாநிலையத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

"தனிக்குடித்தனம்" ஊர் வம்பு" கால்கட்டு, "வாஷங்டனில் திருமணம்" ஆகிய நாடகங்களில் இவர் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

இதற்கிடையே, வானொலியில் அய்யாசாமி ஓய்வு பெற, அவர் வகித்து வந்த பணி இவருக்கு அளிக்கப்பட்டது.ஆம்...இப்போது கூத்தபிரான் வானொலி அண்ணா ஆனார்.நிறைய குழந்தைகள் நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான  கதைகளைக் கூறி சிறுவர்களை மகிழ்வித்தார்.

தவிர்த்து,கிரிக்கட் மேட்ச் களுக்கான தமிழ் வர்ணனி செய்தார்.

ராமமூர்த்தி, ஜப்பார், கூத்தபிரான் இவர்களே தமிழ் வர்ணனை ஆரம்பித்து வைத்த மும்மூர்த்திகள் ஆவர்

(இவர் வீட்டு ஜன்னல் தொடரும்)

Friday, November 2, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 7

--------------------------------
டி எஸ் சேஷாத்திரி
-------------------------------

1960-70களில்  இருந்து மிகவும் பிரபல நாடக நடிகர்.ஸ்ரீதரால் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானவர்

இவர் சாந்திநிகேதன் என்ற நாடகக் குழுவினை நடத்தி வந்தார்.பல சிறந்த நாடகங்கள்மேடையேறின. டி கே எஸ் சந்திரன், சைமன் ஆகியோர் இவர் நாடகங்களில் நடித்தவர்கள்

இவருக்காக மாரா, பிலஹரி,தூயவன், சௌந்தர்யன் ஆகியோர் நாடகங்களை எழுதியுள்ளனர்

பிலஹரி , ஆனந்த விகடனில் எழுதிய நெஞ்சே நீ வாழ்க என்ற சிறுகதையை "ஆலமரம்" என்ற பெயரில் மேடையேற்றினார்.அதுவே பிறகு மேஜர் சுந்தரராஜன், மேடையில் இவர் ஏற்ற பாத்திரத்தை ஏற்க "ஆலயம்" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து  வெள்ளிப் பதக்கத்தை தேசிய விருதில் வென்றது


ஏ.வி எம் ராஜன், புஷ்பலதா, டைபிஸ்ட் கோபு ஆகியோரும் இவர் நாடகத்தில் நடித்தவர்கள்.முன்னர் சொல்லியுள்ள ஆலமரம் நாடகத்தில் நடித்தப் பின்னர்தான் கோபு என்ற நகைச்சுவை நடிகர் டைபிஸ்ட் கோபு வானார்

30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சேஷாத்திரி நடித்துள்ளார்

இவரது இளவல் பத்மநாபன் என்பவரும் நாடக நடிகர்.இவர் நாடகங்களில் ராஜசேகர், பானுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.பரத் எழுதிய "தொடரும் அத்தியாயம்" என்ற நாடகம் இவர்களின் வெற்றி நாடகமாகும்

Thursday, November 1, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 6

---------------------------------
எம் ஆர் ராஜாமணி
------------------------------

சிறந்த நாடக நடிகர்..இயக்குநர்.

இவர் , விசு, கிஷ்மூ ஆகியோர் சகோதரர்கள்.

ராஜாமணி, ம.பொ.சி.யின் உறவினரான செல்வராஜ் கிராமணியின் இயக்கத்தில் "தங்கத்தாய் மரகதம்" என்ற நாடகத்தில் நடித்தார்.

பின்னர்..நண்பர்கள் மௌலி, கணேஷ், நான் உடபட ஆகியோருடன் சகோதரர்கள் மூவரும் சேர்ந்து, டி கே எஸ் சகோதரர்களிடமிருந்து ' ரத்தபாசம்" நாடகத்தை அம்பத்தூரில் நடத்திட அனுமதி பெற்று மேடையேற்றினோம்.மூத்த சகோதரரானராஜாமணிக்கு நடிப்பில் அவ்வளவு நாட்டமில்லாததால் அந் நாடகத்தை இயக்கும் பொறுப்பினை ஏற்றார்.

பின்னர், விசுவின் விஸ்வசாந்தி குழுவில் நடிக்கத் தொடங்கினார். ஈஸ்வர அல்லா தேரே நாம், அவர்களுக்கு  வயது வந்து விட்டது. மோடி மஸ்தான் ஆகிய நாடகங்களில் இவர் நடிப்பு பாராட்டும்படி இருந்தது.

பின்னர் எம் ஆர் ஆர் தியேட்டர்ஸ் என்னும் குழுவினை ஆரம்பித்தார்.சில நாடகங்களை மேடையேற்றினார்.அதில் குறிப்பிட வேண்டிய நாடகம் குரியகோஸ் ரங்கா எழுதிய "கீழ் வானம் சிவக்கும்" என்ற நாடகம்.இந்நாடகத்தில் இவர் ஏற்ற பாத்திரத்தை வெள்ளித்திரையில் நடிகர் திலகம் ஏற்றார்.

"அவர்களுக்கு வயது வந்துவிட்டது" நாடகத்தைப் பார்த்த இயக்குநர் சிகரம் கே பாலசந்தர், தன் தயாரிப்பான "மூன்று முடிச்சு" படத்தில் நடிக்க இவருக்கு சந்தர்ப்பம் அளித்தார்.

மோடி மஸ்தான் நாடகத்தில் காதுகேளாதவராய் நடித்து ரகளை பண்ணியவருக்கு , அந்நாடகம்"மணல் கயிறு" என்ற பெயரில் படமானபோது அதே பாத்திரத்தில் திரையிலும் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது

"நாலு பேருக்கு நன்றி" என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார்

காலன் இவரது முத்திறமையை வெளியிடுமுன் இவரை தன்னிடம் அழைத்துக் கொண்டான்.  

Wednesday, October 31, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 5 (பகுதி - 2)



 ‘சாம்பு’ நாடகம் பிறந்த பின்புலத்தை விவரிக்கிறார் ‘சாம்பு’ என்.எஸ். நடராஜன். அவர் 1972-இல் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: 

திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் கிளப் மிகச் சிறந்த முறையில்  நாடகங்கள் நடத்திப் பேரும், புகழும் அடைந்ததற்கு முக்கிய காரணம் திரு.தேவன் எழுதிக் கொடுத்த ‘மைதிலி’, ‘கோமதியின் காதலன்’, மிஸ் ஜானகி’, ‘துப்பறியும் சாம்பு’, ‘கல்யாணி’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘பார்வதியின் சங்கல்பம்’ நாடகங்கள் தாம். இந்த நாடகங்கள் சுமார் 500 தடவைகள் நடிக்கப்பட்டு ரசிகர்களால்  வெகுவாகப் பாராட்டப்பட்டவை. 

  அவர் எழுதிய உன்னதப் படைப்பான ‘துப்பறியும் சாம்பு’ தொடர்கதையை நாடகமாக்க முடியுமா என்ற ஐயம் தேவனுக்கு ஏற்பட்டு அவர் என்னிடம் யோசனை கேட்டார். நாங்கள் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, அதை நாடகமாக்க முடியும் என்று முடிவெடுத்தோம். ஆனால் அவர் எனக்கு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, ‘சாம்பு’ பாத்திரத்தை நானே ஏற்று நடிக்க வேண்டுமென்பதுதான் . அதற்கு முதலில் நான் சம்மதிக்கவில்லை. காரணம், அந்த நாடகத்தை நல்ல முறையில் அரங்கேற்ற வேண்டுமானால், பயிற்சியாளன் என்ற முறையில் நான் அவர் எழுத்தோவியத்திற்கு உயிர் ஊட்டவேண்டும். அப்படியிருக்க, நானே பயிற்சியாளனாகவும், கதாநாயகனாகவும் பணியாற்ற முடியுமா என்று திகைத்தேன் ஆனால் அவர் என்னை ஊக்குவித்து அவர் விருப்பத்தைச் சாதித்துக் கொண்டார். எனக்குச் ‘சாம்பு’ என்ற பட்டமும் பெறக் காரணமாக இருந்து, நான் ‘சாம்பு’ நடராஜன் ஆனேன்

(நன்றி - http://s-pasupathy.blogspot.com)

அடுத்தவீட்டு ஜன்னல் - 5 (பகுதி -1)



நாகராஜனுடன் இணைந்து திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் ஆரம்பித்த சாம்பு நடராஜ ஐயர், ஒரு காலகட்டத்தில்
என் எஸ் என் தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு குழுவினை ஆரம்பித்தார்,

இவரது குழுவில் ஜெயசங்கர், வீரராகவன் ஆகியோர் நடித்தனர்.

பின்னர் வீரராகவன், தன் உறவினர் சுந்தரராஜன் என்பவரை நடராஜனுக்கு அறிமுகப்படுத்த, அவரும் இக்குழுவில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த சுந்தரராஜன் தான் கே பாலசந்தரின் ராகினி ரெக்ரியேஷன்ஸ் குழுவில் மேஜர் சந்திரகாந்த்..நாடகத்தில் மேஜராக நடித்தவர்.பின்னாளில் மேஜர் என்ற அடைமொழி அவர் பெயருடன் சேர்ந்து "மேஜர்" சுந்தர்ராஜன் என அழைக்கப்பட்டு, திரையுலகிலும் புகழ் பெற்றவர் ஆவார் .

என் எஸ் என் தியேட்டரில் மேஜர் சுந்தரராஜன் நடிக்க ஆரம்பித்தார்.இவர் நடித்த "டைகர் தாததாச்சாரி" நாடகம் பெரிதும் பேசப்பட்ட நாடகம் ஆனது

நடராஜன் , மூப்பின் காரணமாக  நாடகத்துறையில் இருந்து ஓய்வு பெற அக்குழுவின் பொறுப்பை சுந்தரராஜன் ஏற்றார்.குழுவின் பெயரையும் "பத்மம் ஸ்டேஜ்" என்று மாற்றினார்.இவரது குழுவில் ஸ்ரீகாந்த், சிவகுமார் ஆகியோர் நடித்தனர்

அப்பாவி,சந்ததி,சொந்தம், கல்தூண்,அச்சாணி, தீர்ப்பு ஆகியவை இவர்கள் மேடையேற்றிய சில நாடகங்கள்

பின்னர் வியட்நாம்வீடு சுந்தரம் இக்குழுவிற்காக "ஞானஒளி" நாடகத்தை எழுதினார்.

இந்நாடகமே , பின்னர் மேஜர் ஏற்ற வேடத்தை சிவாஜி ஏற்க திரைப்படமானது (வீரராகவன் ஏற்ற இன்ஸ்பெக்டர் வேடத்தை மேஜர் திரையில் ஏற்றார்)

நாகராஜனும், நடராஜனும் நாடக உலகிற்கு பல திறமையுள்ள நடிகர்களை உருவாக்கித் தந்தனர் எனலாம் 

Tuesday, October 30, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 4 (பகுதி -2)



------------------------------
கே எஸ் நாகராஜன்
______________________

பின்னர் கலாநிலையம் சார்பில் கிட்டத்தட்ட  70 நாடகங்களை நாகராஜன் மேடையேற்றினார்.இவரது "குறிஞ்சி மலர்" (நா.பார்த்தசாரதி எழுதியது) நாடகத்தில் 113 கலைஞர்கள் நடித்தது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

அனுராதா ரமணனின் இம்சைகள் என்ற நாடகம்,
கல்கிதாசனின் "அம்பிகையின் கல்யாணம்" நாடகம் இவர்களின் வெற்றி நாடகங்களாகும்.

பல பிரபலங்களின் நாவல்கள், சிறுகதைகளை மேடைநாடகமாக்கி மேடையேற்றிய  குழு கலாநிலையம் என்றால் மிகையல்ல.

இவர்கள் மேடையேற்றிய ஹனிமூன் இன் ஹைதராபாத் என்ற நாடகத்தியே பின்ன எஸ் வி சேகர் வாங்கி சின்ன மாப்பிள்ளை/பெரிய மாப்பிள்ளிய எனும் நாடகமாக்கினார்.

1996க்குப் பிறகு நாகராஜனின் மகன் கே எஸ் என் சுந்தர் கலாநிலையம் பொறுப்பினை ஏற்றார்

சுந்தர், 1958ஆம் ஆண்டே ,அவருக்கு பத்து வயதாய் இருந்த போதே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.தேவனின் துப்பறியும் சாம்பு நாடகத்தை நடராஜன் போட்டபோது அவர் சாம்புவாய் நடிக்க, சுந்தர் சாம்புவின் மகன் சுந்துவாய் நடித்தார்.

சுந்தர் கலாநிலையத்திற்காக எழுதியுள்ள சில நாடகங்கள், "காதல் கல்யாண வைபோகமே", வி ஆர் எஸ் ஸோ வி ஆர் எஸ், ஆயிரம் காலத்துப் பயிர், யார் பையன், அனுபவ ஆராதனை.

தவிர்த்து வேறு சில குழுக்களுக்கும் இவர் நாடகங்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.

கே எஸ் நாகராஜன் அவர்களின் நூறு வயது பூர்த்தியானதை  சென்னையில் சபாக்களும், நாடகக் கலைஞர்களும் பிரம்மாண்டமாய்க் கொண்டாடினர்.இன்றும் அவர் தன் 106 வயதிலும் நாடகங்களில் ஆரவ்ம் காட்டி வருவருவது எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைக்காத வாய்ப்பு இது.

இந்த நேரத்தில் மற்றொன்றும் கூற ஆசைப்படுகிறேன்.1973ல் நான் எழுதி மேடையேறிய "தேவை ஒரு மாப்பிள்ளை" எனும் என் முதல் நாடகத்தில் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் குடியிருந்த அவர் வீடு தேடிச் சென்று வாய்ஸ்த்துக் காட்டி..அவர் சொன்ன மாற்ரங்களை செய்து மேடையேற்றினேன்.நான் நாடக ஆசிரியராய் ஆக பிள்ளையார் சுழி அவர்தான்.

Monday, October 29, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 4 (பகுதி-1)



---------------------------------------------------
சாம்பு நடராஜன்/ கே எஸ் நாகராஜன்
-----------------------------------------------------------


சாம்பு நடராஜ ஐயர், கே எஸ் நாகராஜன் மற்றும் ஒய் ஜி பார்த்தசாரதி ஆகிய மூவரும் சென்ற நூற்றாண்டில் 1950க்கு பிறகு நாடக வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டு சிறப்பானது.

அதில், சாம்பு நடராஜ்ன மற்றும் கே எஸ் நாகராரான் ஆகியோர்..
திருவல்லிக்கேணி இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து 1946ல் Triplicane Fine Arts  என்ற குழுவைத் தொடங்கினர்.

இருவரும் சேர்ந்து பல நாடகங்களைத் தயாரித்தனர்.முன்னதாக கே எஸ் நாகராஜன் பம்மல் சம்பந்த முதலியாரின் "வேதாள உலகம்""மனோகரா" ஆகிய நாடகங்களில் நடித்தவர்.அரசுப்பணியில் இருந்தபடியே நாடகப்பணியும் ஆற்றினார்,

தேவன், சாண்டில்யன், சாவி, வித்துவான் லட்சுமணன்.மெரினா, கல்கிதாசன், அனுராதா ரமணன்,சுஜாதா ஆகியோர் எழுதிய நாடகங்களை இருவரும் மேடையேற்றினர்.மெரினாவின் தனிக்குடித்தனம், ஊர் வம்பு,கால்கட்டு, வடபழனியி வால்மீகி, ஆகிய நாடகங்களும், சாவியின் வாஷிங்டனில் திருமணம் நாடகம் இன்றளவும் பேசப்படும் நாடகங்களாக உள்ளன.

வீரராகவன், (மேஜர்) சுந்தரராஜன், பூர்ணம் விஸ்வநாதன்.ஜெமினி மகாலிங்கம், மணக்கால் மணி, கூத்தபிரான், சந்திரசேகரன்(சந்துரு) ஆகியோர் இவர்களால் உருவாக்கப்பட்ட சில பிரபல நடிகர்களாவர்கள் .(கூத்தபிரான் பற்றி தனியாக பதிவு வருவதால்..இதில் அதிகம் குறிப்பிடவில்லை)

(அடுத்த வீட்டு ஜன்னல் 4 (பகுதி 2) தொடரும்.  

Sunday, October 28, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 3 (பகுதி-2)



நாடகங்கள் மீது தணியாத மோகம் கொண்டவர் வரதராஜன்

1994ல் யுனைடெட் விசுவல்ஸ் எனும் குழுவினைத் தொடங்கி கிட்டத்தட்ட 23 நாடகங்களைத் தயாரித்துள்ளார்

நடுத்தர வர்க்கத்தின் பிரச்னைகளை அழகாக அதேசமயம் விரசமில்லா நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்லும் நாடகங்கள் இவரின் தனி முத்திரை எனலாம்

இவரது குழுவின் முதல் எழுத்தாளர் சிறகு ரவிசந்திரன்."ஜோடி பொருத்தம்" இவர் எழுதியதே.வேதம்புதிது கண்ணன் இவருக்காக 8 நாடகங்களை எழுதியுள்ளார்.அடுத்து இவருக்கு அதிக நாடகம் எழுதியவர் சந்திரமோகன் ஆவார்

 எல்கேஜி ஆசை, மற்றும் பலர், ஆசைக்கும் ஆஸ்திக்கும்,மெகா சீரியல்,வாஸ்து வாசு,பிளாஸ்டிக் கடவுள்,ரீல் (ரியல்) எஸ்டேட், காசளவு நேசம்,
ஐபிஎல் குடும்பம். நேரடி ஒளிபரப்பு  ஆகியவை இவரின் நாடகங்களில் சில

சோ அவர்கள் வரதராஜனின் கலை ஆர்வத்தைக் கண்டு, "என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்' என்ற தன் பிரபல நாடகத்தை மீண்டும் இவர் அரங்கேற்றம் செய்ய அனுமதித்தார்.சோ தனது நாடகத்தில் ஏற்ற நாரதர் வேடத்தை வரதராஜனும் ஏற்று பிரமாதப்படுத்தினார்.

பின்னர் "துக்ளக்" சத்யா இவருக்காக "இது நம்ம நாடு" என்ற முழுநீள அரசியல் நையாண்டி நாடகத்தை எழுதினார்.

பிரபல பத்திரிகையாளரும், விமர்சகருமான வீஎஸ்வீ அவர்கள் எழுதிய ஸ்ரீதியாகராஜரை இவர் நாடகமாக்கினார்.பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் இசையமைக்க வரதராஜன் தியாகராஜராக நடிக்க "ஸ்ரீதியாகராஜர்" நாடகம் மாபெரும் வெற்றி நாடகமாக அமைந்தது.சந்திரமோகனும் இந்நாடகத்திற்கு வசனம் எழுதுவதில் உதவினார்

இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இந்நாடகம் அமைந்தது.

அடுத்து "துக்ளக் தர்பார்" எனும் நாடகத்தை அரங்கேற்றி..அந்நாடகத்தில் "சோ" அவர்கள் வருவது போல ஒரு பாத்திரத்தைப் படைத்து அமர்க்களப் படுத்தினார்..(துக்ளக் சத்யா..கதை,வசனம்).நாடகம் பார்த்தோர் மீண்டும் சோ உயிர் பெற்று வந்து விட்டாரோ என் எண்ணும்படி ரமேஷ் என்பவர்க்கு அப்பாத்திரத்தை வழங்கினார்.அந்நடிகர் இப்போது.."சோ" ரமேஷ் எனும் பட்டப்பெயருடன் நடித்து வருகிறார்.
 
தன் மனைவி உஷா நினைவாக ஒரு டிரஸ்ட் அமைத்து..இவர் மற்ற கலைஞர்களின் நாடகங்களுக்கும் அதன் மூலம் ஆதரவு அளித்து வருவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய செயல்

இவர் டிவி செய்தி வாசிப்பில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியை சொல்லலாம்.1983ல் கபில்தேவ் தலைமையில் இந்தியா கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்ற நிகழ்ச்சியை செய்தியில் வாசித்தவர் இவர்.தவிர்த்து அப்போட்டியில் இவர் செய்தி வாசித்த நாட்களில் எல்லாம் இந்தியா வென்றது.இவர் வாசிக்காத இரண்டு நாட்கள் போட்டியில் இந்தியா தோற்றது.

தொலைக்காட்சியில் "கல்யாணத்துக்கு கல்யாணம்"."சொல்லடி சிவசக்தி" ஆகிய தொடர்களை தயாரித்து இயக்கியுள்ளார் இவர்.

பற்பல சாதனைகளை படைத்து வரும் இவர் மேன்மேலும் தமிழ் நாடகமேடைக்கு தொண்டு ஆற்றிட அனைத்து கலைஞர்கள் சார்பிலும் வாழ்த்துகள்   




அடுத்தவீட்டு ஜன்னல் - 3 (பகுதி-1)



பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி புரிந்த வந்த ஸ்ரீனிவாசன் (சீனா) என்பவரின் கிரியேட்டிவ் எண்டெர்டைனெர்ஸ் குழுவில் , "என் கேள்விக்கு என்ன பதில்" நாடகம் மூலம் மகேந்திரன் இயக்கத்தில் அறிமுகம் ஆனார் வரதராஜன்
அடுத்து யூ ஏ ஏ குழுவிற்காக "தேடினேன் வந்த்து" என்ற வெங்கட் நாடகம் மூலம் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
பின்னர் கிரியேட்டிவ் என்டெர்னெயினர்ஸ் குழு மேடையேற்றிய "கிரேசி" மோகன் எழுதிய "36 பீரங்கி லேன்". வேதம் புதிது கண்ணன் எழுதிய "சொல்லடி சிவ சக்தி""அவனுடைய செல்லம்மா" ஆகிய நாடகங்களில் நடித்தார்.
தமிழ்நாடகமேடையேறிய அதே காலகட்டத்திலேயெ டிவியிலும் நுழைந்தார்
1977 தொடங்கி 1996 வரை சென்னைத் தொலைக்காட்சியிலும் பின்னர் எட்டு ஆண்டுகள் சன், விஜய்,ராஜ் போன்ற தனியார் தொலைக்காட்சிகளிலும் பணி புரிந்தார்
1986 முதல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.1994 முதல் இயக்குநர் சிகரம் கே பாலசந்தரின் தொடர்ந்து நடித்து..தன் நடிப்புத் திறமையில் சிகரத்தைத் தொட்டார்.இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து 40 ஆண்டுகளாக டிவியில் தோன்றிவருவதால் டிவி வரதராஜன் என அனைவராலும் அறியப்பட்டவர் ஆனார்.
மேடை நாடகங்களில் தணியாப் பற்றுக் கொண்ட இவர் 1994ல் யுனைடெட் விசுவல்ஸ் என்ற குழுவினைத் தொடங்கினார்.
அக்குழுப் பற்றியும்,அதன் சாதனைகள் பற்றியும் அடுத்த பகுதியில்

Friday, October 26, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் பார்வை -2 (பகுதி 2)



சேகரின், "நாடகப்பிரியா" வின் முதல் நாடகத்தை பிரபல் situation comedy king என்று அழைக்கப்பட்ட கே கே ராமன் எழுதினார் .நாடகம் "கண்ணாமூச்சி:"

 கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்
ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது
ஒன் மோர் எக்சார்சிஸ்ட்  ஆகிய நாடகங்களை கிரேசி மோகன் எழுதினார். இவரால் அறிமுகமானமோகன் இந்நாடகங்களுக்குப் பின்னரே கிரேசி மோகன் என அழைக்கப்பட்டார் என்பது இங்கு பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று

சோ அவர்களின் "சாதல் இல்லையேல் காதல்" நாடகப்பிரியா அரங்கேற்றியது.

தவிர்த்து "மகாபாரதத்தில் மங்காத்தா" "காதுல பூ" காட்டில மழை" "1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி' "எல்லாமே தமாஷ்தான்" "அதிர்ஷ்டக்காரன்" "யாமிருக்க பயமேன்" பெரிய தம்பி, "சி எம்..பி எம்" (இந்நாடகமே ஹனிமூன் இன் ஹைதராபாத் என மீண்டும் அரங்கேறியது) தத்துப்பிள்ளை,"அல்வா" ஆகிய நாடகங்கள் மக்களை மகிழ்வித்த சில.

இவர் நாடகங்களை இவரைத் தவிர்த்து..வெங்கட், ஜிகே, கோபு பாபு ஆகியோரும் எழுதியுள்ளனர்

சபாக்களின் "வசூல் சக்கரவர்த்தி" என்ற பட்டமும் சேகருக்கு உண்டு

அதிர்ஷ்டக்காரன் என்ற நாடகம் கிருஷ்ண கிருஷ்ணா என்ற பெயரில் திரைப்படமானது.

வறுமையின் நிறம் சிவப்பு , நினைத்தாலே இனிக்கும் படங்கள் மூலம் இயக்குநர் கே பாலசந்தர் இவரை வெள்ளித்திரை நடிகனாக்கினார்.

விசுவின் இயக்கத்தில் 15 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தொலைக்காட்சிக்கான இவரது நாடகங்கள் வண்ணக்கோலங்கள் பாகம்-1, பாகம் -2, நம் குடும்பம், டேக்சி ஆகியவை

மத்திய அரசு தணிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் சில காலம் இவரை நியமித்தது

இவரது சில நாடகங்கள் ஆடியோ வடிவிலும், யூ டியூபிலும் கிடைக்கிறது

இவரது நாடகங்களை நூல் வடிவில் அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகர்களுக்காக ஒரு சங்கத்தை வாத்தியார் ராமனுடன் இணைந்து உருவாக்கியவர் இவர்.இன்று அந்த சங்கத்தின் தலைவராக காத்தாடியும், செயலராக தம்பி பார்த்தசாரதியும் உள்ளனர்

இவற்றையெல்லாம் தவிர்த்து..விளம்பரமே இல்லாமல் சேகர்..பல மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கல்லூரி கட்டிணம் செலுத்தி வருகிறார்.

பல ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார்.

அவரும் , நாடகப்பிரியாவும் நீண்ட காலம் கலைச்சேவையும், சமூக சேவையும் செய்ய வாழ்த்துவோம்

(அடுத்த பதிவு அடுத்தவீட்டு ஜன்னல் பார்வை-3 தொடரும்)

(இப்பதிவிற்கு சம்மந்தமில்லா கமென்டுகள் நீக்கப்படும்)

Thursday, October 25, 2018

அடுத்த வீட்டு ஜன்னல் பார்வை - 2 (பகுதி 1)



எஸ் வி சேகர்

நகைச்சுவை நாடகங்கள் என்றாலே மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.
குறிப்பாக கிரேசி மோகன், எஸ் வி சேகர் நாடகங்கள் இதனாலேயே வெற்றியடைகின்றன

நரசிம்ம ராவ்களையும், மன் மோகன் சிங் போன்றவர்களையும் கூட சிரிக்க வைக்கும் இவர்கள் நாடகங்கள்

சேகரின் நாடகங்களில் நகைச்சுவையுடன்..அவ்வப்போது நடைபெறும் அரசியல் நிகழ்வுகளும் நையாண்டியாய் சொல்லப்படும்

சேகரின் குறிக்கோளே..நாடகம் நடக்கும் 100 நிமிட நேரத்தில்  ரசிகர்களை 200 முறை சிரிக்க வைக்க வேண்டும் என்பதே

சேகர், தன் மனதில் நினைப்பதை சொல்வதில் யாருக்கும் பயப்பட மாட்டார்.அதுவே அவர் பலமும், பலஹீனமும் எனலாம்.

அந்த பலம்தான் அவருக்கும் மைலாப்பூர் எம் எல் ஏ பதவியை வாங்கித் தந்தது.அந்த பலஹீனம்தான் கட்சி மேலிடத்தில் அவர்மீது அதிருப்தியை ஏற்படுத்தியது எனலாம்

1960 ஆம் ஆண்டு அவரின் நாடகப்பணி ஆரம்பித்தது எனலாம்.70களில் அவரது தந்தை எஸ் வி வெங்கட்ராமனின் கற்பகம் கலா மந்திர் நாடகக்குழுவில் அவரை மேடை நிர்வாகியாகவும், ஸ்பெஷல் ஒலி பரப்பாளராகவும் ஆக்கியது எனலாம்

பின் வி கோபாலகிருஷ்ணனால் இவர் நடிகராக ஆக்கப்பட்டார்.

1973ல் தன் சொந்த நாடககுழுவான நாடகப்பிரியாவை ஆரம்பித்தார்

1985ஆம் ஆண்டு இவரின் எட்டு நாடகங்கள் காலை 7 47க்குத் தொடங்கி இரவு 1 49 வரை தொடர்ந்து நடந்து லிம்கா புக் ஆஃப் ரிகார்டில் இடம் பெற்று சாதனை புரிந்தது

மைலாப்பூர் அகடெமியில் நகைச்சுவை நடிகருக்கான விருதினை தொடர்ந்து 3 ஆண்டுகள் பெற்றார்

தமிழக அரசின் கலைமாமணி, கலைவாணர் விருதுகளும் இவருக்குக் கிடைத்துள்ளது.

தவிர்த்து பல சபாக்கள் இவருக்கு சிறப்புப் பட்டங்கள் அளித்து கௌரவித்துள்ளனர்

கிட்டத்தட்ட இதுவரை இக்குழு 25 நாடகங்களை அரஙேற்றியுள்ளது. அவை 7000 காட்சிகளுக்கும் மேல் நடைபெற்றுள்ளன

யூ எஸ் ஏ., யூரோப்,சவுத் கொரியா,சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரேப் நாடுகள் என பல நாடுகளிலும் இவரது  நாடகங்கள் நடந்துள்ளன

அடுத்த பதிவில் இவரது நாடகங்கள் பற்றிப் பார்ப்போம்

(அடுத்தவீட்டு ஜன்னல் 2 பார்வை அடுத்த பதிவிலும் தொடரும்)

Wednesday, October 24, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் பார்வை - 1 (பகுதி 3)



காத்தாடியின் குழுவில் அவருடன் நடித்து வந்த, T D சுந்தரராஜன், டெல்லி கணேஷ், ராமபத்ரன், மணக்கால் மணி, சுந்தரராஜன்(ரெயில்வேஸ்), பம்மல் பாச்சா, மேகலா, ஸ்ரீ லலிதா, எஸ் என் பார்வதி என அனைவரும் மிகவும் திறமைசாலிகளாய் திகழ்ந்தனர்

பின்னர்

எஸ்.லட்சுமி நாராயணன் . சென்னை டெலிஃபோன்சில் அதிகாரியாய் பணிபுரிந்து வருபவர்.

அவர், காத்தாடிக்கு  நாடகங்கள் எழுத ஆரம்பித்தார் எஸ் எல் நாணு என்ற பெயரில்..

அவரின் சில நாடகங்கள்..

"நீங்க யார் பக்கம்" 'அப்பா..அப்பப்பா', சூப்பர் குடும்பம், ஐக்கிய முன்னணி, பிள்ளையார் பிடிக்க, வாட்ஸ் அப் வாசு, நினச்சது ஒன்னு,  நீயா நானா,வீடு வரை உறவு ,நன்றி மீண்டும் வாங்க,ஏ டி எம்.,ஜுகல் பந்தி ஆகியவை அவற்றில் சில

நாணுவும் உடன் நடித்தார்.அவரைத் தவிர்த்து எஸ்பி ஐ முரளி, ஸ்ரீனிவாசன், லாவண்யா வேணுகோபால் ஆகியோர் இன்று காத்தடியுடன் நடித்து வருபவர்கள்

இவரது நாடகக்குழு 53 ஆண்டுகளில் 47க்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர்.கிட்டத்தட்ட 7500 முறை இவரது நாடகங்கள் நடந்துள்ளன.

கலைமாமணி, நாடகக் கலா சிரோன்மணி,நாடக சூடாமணி, நாடக ரத்னம் ஆகியவை இவர் வாங்கியுள்ள கணக்கில்லா விருதுகளில் சிலவாகும்

சங்கீத நாடக அகடெமி இவருக்கு சமீபத்தில் அம்ரித் விருது வழ்னகியுள்ளது 

மேடை நாடகங்களைத் தவிர்த்து இதுவரை காத்தாடி 70படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

நட்புக்கு முதலிடம் கொடுப்பவர் காத்தாடி.அதற்கான ஒரே ஒரு உதாரணம்..

இவருடன் இணைந்து ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் குழுவினை ஆரம்பித்த இவர் நண்பர் Bobby  மறைந்தாலும், இன்னமும் அறிவிப்புகளில் நாடகத் தயாரிப்பாளர்கள் பெயர் சொல்லும் போது அவரையும் சேர்த்தே சொல்லுவார்

தன் குழுவினைத் தவிர பிறக் குழுவினருக்கும் அவ்வப்போது ஆபத்பாந்தவனாய் நடித்து உதவுவார் காத்தாடி.

ஸ்ரத்தா குழுவினருடன் இவர் இணைந்துள்ளார்.அந்த நாடகங்களிலும் சிலவற்றில் நடித்துள்ளார்.

ராதுவின், கல்யாணத்தில் கலாட்டா நாடகத்திலும் நடித்துக் கொடுத்துள்ளார்

சமீபத்தில் கோமல் சுவாமிநாதனின் மகள் தாரிணி கோமல் , தன் தந்தை பெயரில் கோமல் தியேட்டர்ஸ் என்ற குழுவினைத் தொடங்கி, பிரபல் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மேடையேற்றினார்

அவற்றில் ஒன்று தி ஜானகிராமனின் "விளையாட்டு பொம்மைகள்" சிறுகதை.அதில் காத்தாடி நடித்துக் கொடுத்தார்.

இமாலய நடிகரான அவரின் நடிப்பு இந்நாடகத்தில் சிகரத்தைத் தொட்டது எனலாம்.

நகைச்சுவை நடிகன் ஒருவனால் எந்த பாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க முடியும் என நான் அடிக்கடி என் குழுவினருக்குக் கூறுவேன்.

அது, எந்த அளவிற்கு உண்மை என்பது இந்நாடகத்தில் காத்தாடியின் நடிப்பைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்

காத்தாடி மேன் மேலும் பறந்திட நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோமாக

(அடுத்த பகுதி..அடுத்தவீட்டு இரண்டாம் ஜன்னல் பார்வை) 

Tuesday, October 23, 2018

அடுத்த வீட்டு ஜன்னல் பார்வை - 1 (பகுதி -2)



(காத்தாடி ராமமூர்த்தி...தொடர்ச்சி)

1965ஆம் ஆண்டில் ஒருநாள், நண்பர்கள் சிவாஜி சதுர்வேதி,T D சுந்தரராஜன்,Bobby ரகுநாதன் ஆகியோருடன் இணைந்து ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் என்ற நாடகக் குழுவினைத் தொடங்கினார் காத்தாடி.

தி ஹிந்து பத்திரிகையில் வேலை செய்து வந்த கோதண்டராமன் என்பவர் நண்பர் ஒருவர் மூலம் காத்தாடிக்கு அறிமுகமானார்.

அந்த கோதண்டராமன்தான் , அனைவராலும் பின்னாளில் அறியப்பட்ட situation comedy மன்னன் கே கே ராமன் ஆவார்.அவர் ஸ்டேஜ் கிரியேஷன்ஸிற்காக ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதிக் கொடுத்தார்.அந்நாடகம் "இணையில்லா ஜோடிகள்" (Matchless Matches)

மாபெரும் வெற்றி நாடகமாக அது அமைய, பின்னர் அவர் எழுத்தில், "Good bye to Love", Runaway Husband" படி தாண்டிய பதி ஆகிய நாடகங்களை ராமமூர்த்தி அரங்கேற்றினார்.

இந்நிலையில் விசுவின் நட்பு கிடைக்க..காத்தாடியின் குழுவிற்கு விசு நாடகங்கள் எழுதினார்.முதல் நாடகம் "டௌரி கல்யாண வைபோகமே".விசு இயக்கிய முதல் நாடகமும் இதுதான்.அடுத்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இருவர் சாம்ராஜ்ஜியம்தான்.

:சிரித்துக் கொண்டே அழுகின்றேன்", சத்தியவான் சாவித்திரி", "பட்டினப்பிரவேசம்" ஆகியவை சில முக்கியமான நாடகங்களாகும்.

பட்டினப்பிரவேசம் நாடகத்தை இயக்குநர் கே பாலசந்தர் பலமுறை சென்று பார்த்தார்.பின்னர் அதை திரைப்படமாக்க எண்ணினார்.

இந்நாடகத்தில் தான் டில்லி கணேசன் நாடக உலகிற்கு அறிமுகமானார்.அவர் மேடையில் ஏற்ற வேடத்தையே திரைப்படத்திலும் அவருக்கு அளித்தார் கேபி.தவிர்த்து அந்நாடகத்தில் இன்னசெண்ட் தண்டபாணியாக நடித்த காத்தாடியும் திரையில் அவ்வேடத்தை ஏற்றார்

பின்னர் காத்தாடி குழுவினருக்காக கிரேசி மோகன் அய்யா அம்மா அம்மம்மா என்ற நாடகத்தை எழுதினார்.

இந்நிலையில் திருவல்லிக்கேணியில் வசித்து வந்த நாடக உலக ஜாம்பவான்களில் ஒருவரான நடராஜன் , காத்தாடியை தொலைபேசியில் அழைத்தார்.

இந்த நடராஜன் , தேவரின் "துப்பறியும் சாம்பு" கதையை நாடகமாக்கி புகழ் பெற்றவர்.மக்களால் "சாம்பு" நடராஜ ஐயர் என ஆழைக்கப்பட்டவர்.அவர் தொலைபேசியில் காத்தாடியிடம் "சாம்பு நாடகத்தை மீண்டும் நடத்த இருப்பதாகவும், மூப்பின் காரணமாக தான் நடிக்க முடியாது என்றும், சாம்பு வேடத்தை காத்தாடி நடத்தித் தர வேண்டும்" என்றும் கூறினார்.

காத்தாடியும் சம்மதித்தார்.நாடகம் நடந்து முடிந்த அன்று நடராஜ ஐயர், காத்தாடியை அன்புடன் அணைத்து, "என்னை விட அருமையாக அப்பாத்திரத்தில் நடித்தாய்" என பாராட்டினார்

பின்னர் அந்த சாம்புவின் மைந்தனாக "Son of Sambu"என்ற நாடகத்திலும் காத்தாடி நடித்து பாராட்டினைப் பெற்றார்.

(ஜன்னல் பார்வை 1 மேலும் தொடரும்)

Monday, October 22, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 1

(நம் வீட்டில் ஆயிரம் குற்றம் ,குறைகளை வைத்துக் கொண்டு..அடுத்தவீட்டு ஜன்னல் வழியே..அந்த வீட்டு வம்புகளை அறியும் ஆவல், சாதாரணமாக அனைவருக்கும் உண்டு.ஆனால்..இத்தொடர்..மற்ற நாடகக் குழுக்களின் சாத்னையாள நண்பர்களைக் குறித்த விவரங்களை அளிப்பது.பல இளைஞர்களுக்கு இது பலனளிக்கும் என்று எண்ணுகின்றேன்)




காத்தாடி ராமமூர்த்தி....

1953ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பாணாத்துறை உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பை முடித்த சுந்தரேச ராமமூர்த்தி, மேலே படிக்க சென்னை வந்தார்.

விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்தார்..

கல்லூரியில், முதலாம் ஆண்டு முடிவில் ஆண்டு விழாவில், அமரர் தேவனின் "கோமதியின் காதலன்" நாடகம் நடந்தது.அதில் வரும் வில்லன் பக்கிரிக்கு அடியாள் வேடத்தில் நடித்தார் ராமமூர்த்தி.

அவருடன், கல்லூரித் தோழர்களான ஜெயஷங்கர், அம்பி (சோ அவர்களின் சகோதரர்) ஆகியோரும் அந்நாடகத்தில் நடித்தனர்


பின் ஒருநாள் ராமமூர்த்தி ஆர் ஆர் சபாவின் செயலாளராய் இருந்த நடேச ஐயரை சந்தித்தார்.அப்போது, பிரபல எழுத்தாளர் பகீரதன் தனது "தேன்மொழியாள்" நாவலைப்பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.பகீரதன்.

உடனே, நடேச ஐயர், ராமமூர்த்தியிடம் "தேன்மொழியாள்' நாவலை நாடகம் ஆக்க முடியுமா? என்று பார்" என்றார்.

ராமமூர்த்தியும், அப்போது ஆல் இந்தியா ரேடியோவில் . குழந்தைகள் நிகழ்ச்சிகள் தயாரித்து, அனைவராலும் "ரேடியோ அண்ணா" என்று அழைக்கப்பட்ட கூத்தபிரானிடம் (இயற்பெயர் நடராஜன்) இதைச் சொல்ல..அவர் இயக்கத்தில் தேன்மொழியாள் மேடை நாடகமாக்கப்பட்டது.

"சோ" இந்நாடகம் மூலமே மேடைக்கு அறிமுகமானார்.தவிர்த்து இந்நாடகத்தில் அவரின் பாத்திரத்திற்குப் பெயர்"சோ'. அதுவே பின்னாளில் அவரின் பெயராகவும் ஆனது

ராமமூர்த்தி, இந்நாடகத்தில் பண்ணையாருக்கு உதவியாளராக நடித்தார்

1959ல் சோவின் "If I Get it"( என்னிடம் கிடைத்தால்) என்ற நாடகம் மேடையேறியது

அதில் வந்த மூன்று பாத்திரங்கள்

இடும்பன் என்ற பத்திரிகை ஆசிரியர்
ஆட்டாம்பாம் என்ற உதவி ஆசிரியர்
கார்ட்டூனிஸ்ட் காத்தாடி

இதில் கார்ட்டூனிஸ்ட் காத்தாடி பாத்திரத்தில் ராமமூர்த்தி நடித்தார்.

இந்நாடகத்திற்குப் பின்னர் அவர் "காத்தாடி"ராமமூர்த்தி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

பின் சம்பவாமியுகே யுகே நாடகத்தில் காசி என்ற பாத்திரத்தில் நடித்தார்

(ஜன்னலின் முதல் பார்வை தொடரும்)

Sunday, October 21, 2018

நாடகபப்ணியில் நான் - 93

எங்கள் நாடகத்திற்கு..நடிகர்களுக்கு கிடைத்த விருதுகள் சில...

சிறந்த நாடகத்திற்கான மயிலாப்பூர் அகடெமி விருது

1)புதியதோர் உலகம் செய்வோம்
2) உயிருள்ள இறந்த காலங்கள் (சான்றிதழ்)
3) குடும்பம் ஒரு சிலம்பம்
4)இறைவன் கொடுத்த வரம் (கருத்துள்ள நாடகம்)

புதியதோர் நாடகத்தில் நடித்த ஏ எஸ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த நடிகருக்கான சான்றிதழ்

உயிருள்ள இறந்த காலங்கள் நாடகத்தில் நடித்த பி டி ரமேஷிற்கு சிறந்த நடிகருக்கான சான்றிதழ்

குடும்பம் ஒரு சிலம்பம் நாடகத்தில் நடித்த காவேரிக்கு சிறந்த நடிகைக்கான விருது

இறைவன் கொடுத்த வரம் நாடகத்தில் நடித்த பி டி ரமேஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது.ஃபாத்திமா பாபுவிற்கு சிறந்த நடிகைக்கான விருது.(இவ்விருவருக்கும் இதே நாடகத்திற்குகோடை நாடக விழாவில் சிறந்த நடிகர்/
நடிகைக்கான விருது)

ரமேஷிற்கு நூல்வேலியில் நடித்ததற்கான கோடை நாடகவிழாவில் சிறந்த நடிகருக்கான பரிசு

சொல்லக் கொதிக்குது நெஞ்சம், என்று தணியும், கறுப்பு ஆடுகள்,காத்தாடி ஆகிய நாடகங்களில் நடித்த ஜெயசூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது நான்கு நாடகங்களுக்கும்

கரூர் ரங்கராஜனுக்கு பாரதரத்னா வில் நடித்தமைக்கான சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சொல்லக் கொதிக்குது நெஞ்சம் நாடகத்தில் நடித்தமைக்கு சிறந்த நடிகருக்கான விருது

எனக்கு..நடிப்பிற்கு..பாரத ரத்னா, மாண்புமிகு நந்திவர்மன்,என்றும் அன்புடன் நாடகங்களுக்கானகோடை நாடக விழா விருதுகள்

பாரதரத்னா,சொல்லக் கொதிக்குது நெஞ்சம், கறுப்பு ஆடுகள், மழையுதிர்காலம் ஆகிய நாடகங்களுக்கு சிறந்த எழுத்தாளர் விருது..கோடை நாடக விழாவில்

சொல்லக்கொதிக்குது நெஞ்சம் சிறந்த நாடகம், இயக்கத்திற்கான விருது

காயத்ரி மந்திரம் நாடகம் சிறந்த நாடகத்திற்கான பாலாஜி ஃபைன் ஆர்ட்ஸ் விருது

சிவகாசி ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் குடும்பம் ஒரு சிலம்பம் நாடகத்திற்கு சிறந்த நாடகத்திற்கான விருது

எனக்கு மைலாப்பூர் அகடெமியினரின் சிறந்த ஆல்ரவுண்டர் விருது கறுப்பு ஆடுகள் நாடகத்திற்கு

வெடெரன் விருது மைலாப்பூர் அகடெமியினரால்

எக்செல்லன்ஸ் விருது ராதுவின் நாடக அகடெமி சார்பில்

டி கே எஸ் கலைவாணன், டி கே ஷ்ண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் அளித்த "நாடகச் செல்வம்" விருது

பாரத ரத்னா நாடகத்திற்கு இலக்கியச் சிந்தனை விருது

கடைசியாக...

சாதாரணமாக ஒர் மேடை நடிகன் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே உயிர் போக வேண்டும் என்பான்..

அதில் எனக்கு உடன்பாடில்லை..

அவன் நேசிக்கும் மேடை ஏன் அப்பழியை ஏற்க வேண்டும்?

ஆகவே..

நான் விரும்புவது..

உடலில் நாடகப்பணியாற்றிடும் தெம்பு இருக்கும் நேரத்திலேயே..முடிவும் வந்துவிட வேண்டும் என்பதே!

இத்தொடரை விரும்பிப் படித்து தொடர்ந்து ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

(முற்றும்)



Saturday, October 20, 2018

நாடகப்பணியில் நான் - 92

1979ல் ஆரம்பித்த என் சௌம்யா குழு அடுத்த ஆகஸ்டில் தனது 40 ஆவது ஆண்டை பூர்த்தி செய்கிறது

என்னுடன் பணியாற்றியவர்கள் கூறித்து இதுவரை எழுதிவிட்டேன்

 இந்நாள் வரை எனது நாடகங்களில் நடித்த  மேலும் சிலநடிகர்கள்..

சக்தி, வாசுதேவன்,மகேஸ்வரி, கற்பகம், ராஜஸ்ரீ, ஸ்ரீராம், ரமணி, கிரீஷ் வெங்கட், அம்பி நாகராஜன், பிரகாஷ், நரேன் பாலாஜி,விஜயஸ்ரீ,நியூக்ளியர் ஸ்ரீனிவாசன், ரவிகுமார்,ராம்பிரசாத்..இப்படி பட்டியல் நீள்கிறது..

ஆபத்பாந்தவனாக உதவிய மற்ற குழுவினைச் சேர்ந்த எம் பி மூர்த்தி, தில்லை ராஜன், ஷங்கர்..(இப்பட்டியலும் நீண்டது)

சௌம்யா குழுவில் நடித்தவர்கள் 40 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானோர்.

எனது ஸ்கிரிப்டை மேடையேற்றிய மற்ற கீதாஞ்சலி, குட்வில் ஸ்டேஜ், ஜெய கீர்த்தனா கிரியேஷன்ஸ், பிரசித்தி கிரியேஷன்ஸ்

ஆகிய அனைவருக்கும் நன்றிகள்

தொழில் நுட்பக் கலைஞர்கள் வரிசையில்..

நாற்பது ஆண்டுகளாக சீன் செட்டிங்க்ஸ் எக்செல்லன்ட் மணியும் அவருக்குப் பின் அவர் பணியைத் தொடர்ந்த சைதி குமார் மற்றும் ஷண்முகம் ஆகியோர்

ஆரம்ப காலங்களில் ஒலி/ஒளி அமைப்பு  கோம்ஸ் அதன் பின்னர் கலைவாணன் (கலைவாணர் எலக்ட்ரிகல்ஸ்)பின் கிச்சா (கிருஷ்ணன்)

ஒப்பனை நேரு,ராதா முதல் சில நாடகங்களுக்கு பின்னர் வேணுவும் அவர் உதவியாளராய் இருந்த பெரம்பூர் குமாரும்.

வேணுவிற்குப் பின் இன்றுவரை தொடர்ந்து பெரம்பூர் குமார் எங்களது குழுவின் ஆஸ்தான ஒப்பனைக் கலைஞராகத் திகழ்கிறார்

இவர்கள் அனைவருக்கும் எனது நன்றி

கடந்த 40 ஆண்டுகளாக எங்கள் குழு நாடகம் நடத்த சந்தர்ப்பம் அளித்து வரும் அனைத்து சபாக்களுக்கும் என் நன்றி

ஊடகங்களில்..எங்களது நாடகங்களை விமர்சனம் செய்த கார்த்திக், சேரா , சாருகேசி(தினமணி), வீயெஸ்வி (விகடன், அமுத சுரபி, தமிழ் இந்து), கீழாம்பூர் (தினமணி, கலைமகள்) பாலகோபால் (தினமலர்)., மக்கள் குரல் (ராம்ஜி), ராமமூர்த்தி (இந்தியன் எக்ஸ்பிரஸ்) , பாலசுப்ரமணியம், கௌசல்யா சந்தானம், கீதா வெங்கட்ரமணன் (தி ஹிந்து) மற்றும் அனைத்து விமர்சகர்களுக்கும் நன்றி

(அடுத்த பதிவுடன் முற்றும்)