Monday, October 3, 2011

கொஞ்சி விளையாடும் தமிழ் -23




இன்றைய கேரளாவின் பகுதிகள் சேரநாடாய் இருந்ததை நாம் அறிவோம்...
அந்நாடு  பற்றி முத்தொள்ளாயிரத்தில் கவிஞர் ஒருவர் சொல்லியுள்ள பாடல்..
அந்த கவிஞர் சேர அரசனைப் பார்க்க வருகிறார்.அவரை அரண்மனை வாயிலிலேயே வந்து வரவேற்றான் மன்னன்.மகிழ்ந்த கவிஞர் மாமன்னனை வணங்கி, 'மன்னா! உயர்ந்த செங்கொலை பிடித்து ஆட்சி செய்யும் உம் நாட்டில் எல்லோரும் பயமின்றி வாழவேண்டியது தானே..ஆனால் உன் நாட்டில் உயிரினங்களின் வாழ்வில் பயம் குடி கொண்டிருப்பதை நான் வரும் வழியில் கண்டேன்..' என்று நிறுத்தினார்.
மன்னனும்..மற்ற அமைச்சர்களும், கவிஞர்களும்..இக்கவிஞரின் கூற்று கேட்டு திகைத்தனர்..ஆனால் கவிஞர் தொடர்ந்தார்..
'ஆனால்..உன் நாடு நீரோடு சேறு நிறைந்த கழனிகளைக் கொண்டது.அதில் சிவந்த செவ்வாம்பல் பூக்கள் பூத்து மலர்ந்து எங்கு பார்த்தாலும் சிவப்பாகக் காட்சியளிப்பதைக் கண்டு, புள்ளினங்கள், தீப்பற்றி விட்டதோ எனப் பயந்து தங்கள் குஞ்சுகளைக் காப்பாற்ற தாய்ப்பறவைகள் முனைந்ததைக் கண்டேன்.இத்தகைய பயத்தை உடையதாய் உள்ளது உன் நாடு.இதைத்தவிர எந்த பயத்தையும் நான் காணவில்லை...என முடித்தார்.

அள்ளற் பழனத்
தரகாம்பல் வாய் அவிழ
வெள்ளந்தீப் பட்ட
தெனவெரீ இப்-புள்ளினம்தங்
கைச்சிறகார் பார்பொடுக்கும்
கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேற் கோகோதை
நாடு..

(முத்தொள்ளாயிரம் பாடல்-14 .சேரநாடு)

'நஞ்சு தோய்ந்த அச்சத்தை விளைவிக்கக்கூடிய இலை போன்ற வேலையுடைய மன்னர் மன்னன் சேரன்,அவனுடைய நாடு,சேறு நிறைந்த நல்ல களியோடு கூடிய நீர் நிறைந்த பெறும் கழனிகளை உடையது.அதில் சிவந்த செவ்வாம்பல் பூக்கள் பூத்து, இதழ் விரித்து, ஒரே சிவப்பாய் காட்சி தந்தன.அதைக்கண்ட தாய்ப்பறவை இனங்கள். நீரில் தீப்பிடித்து விட்டதோ என பயந்து தங்கள் தங்கள் குஞ்சுகளை இறக்கையாகிய  கைகளால் அணைத்துக் கொள்கின்றன.இப்படிப்பட்ட பயத்தோடு கூடிய ஆரவாரத்தை உடையதாய் உள்ளது சேரனது நாடு'


8 comments:

சமுத்ரா said...

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சமுத்ரா .

பால கணேஷ் said...

நற்றமிழ் கொஞ்சி விளையாடுகிறது. மேலும் விளையாட்டு தொடரவும் நாங்கள் ரசிக்கவும் வாழ்த்துக்கள்.

goma said...

இது போல் அச்சமென்றால் நாம் அனைவரும் அஞ்சிடத் தயங்கமாட்டோம்...இல்லையா தமிழா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கணேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோமா..
உங்கள் கூற்று உண்மை..
அஞ்சுவது அஞ்சாமை பேதமை அல்லவா?

aotspr said...

நல்ல தமிழ் பகிர்வுக்கு நன்றி..........


நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Kannan